கிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு
‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு.
அவரது மகளான லாவண்யாவின் ‘லாராவின்ஸ் லைட்ஸ் ஆன்’ தயாரிப்பில் விஷ்வசாந்தி
வழங்கும் இந்நாடகத்திற்கு கதை, வசனம், இயக்கம் விசு. அத்துடன் முக்கிய
வேடத்திலும் நடித்து இருக்கிறார். விசுவின் அடுத்த இன்னிங்ஸ் துவக்கம்
என்பதால் இந்நாடகம் அரங்கேறிய நாளான ஏப்ரல் 2 ஆம் தேதி நாரத கான சபாவில்
குவிந்தனர் நாடக ரசிகர்கள்.
தேசத்தில் நடக்கும் கொடுமைகளை கண்டு மனம்
வெதும்பும் மகாத்மா காந்தி தன்னுடையை புகைப்படங்களை அனைத்து இடங்களில்
இருந்தும் அகற்றக்கோரி நீதிமன்றத்தை நாடுகிறார். நீதிபதியாக அவரது மனைவி
கஸ்தூரிபா (ஆனந்தி). காந்தியின் கோரிக்கை தவறு என்றும், மக்கள் மனதில் அவர்
நிலைத்திருக்கிறார் என்பதை உணர வைக்கவும் வாதாடுகிறார் சாம்பசிவ ஐயர்
(விசு). அதில் வெற்றி யாருக்கு என்பதுதான் கதை.
நாட்டில் நடக்கும் அநியாயங்களுக்கு
பஞ்சபூதங்களும் முக்கிய காரணம் என்பது விசுவின் வாதம். எனவே அந்த ஐவரையும்
அழைத்து பல்வேறு குறுக்கு கேள்விகளை கேட்கிறார். இது ஏற்கனவே ‘பூவும்
பொட்டும்’ திரைப்படத்தில் நாகேஷ் செய்த காமடிதான். இந்திரலோகத்தில்
இந்திரன் மற்றும் பஞ்சபூதங்களை விழி பிதுங்க வைக்கும் வண்ணம் நாகேஷ்
கேட்கும் எடக்கு மடக்கான கேள்விகள் காலத்தால் அழியாதவை. உதாரணத்திற்கு
‘நீங்கள்தான் வர்ண பகவானா?’ என நாகேஷ் கேட்க, அதற்கு ‘எப்படி
கண்டுபிடித்தாய்’ என்பார் அவர். அதற்கு நாகேஷின் பதில் ‘அதான் பேசும்போதே
சாரல் அடிக்குதே’. அதான் நாகேஷ்!! அந்த கான்சப்டை லேசாக ஈயம் பூசி
இந்நாடகத்தின் பிரதான காட்சிகளில் ஒன்றாக இடம் பெற செய்திருப்பது விசுவின்
சாமர்த்தியம்.
கொஞ்சம் புஷ்டியான காந்தியாக சூரஜ். ஓரளவு
நன்றாகவும் நடிக்கிறார். ஆனால் முக்கால்வாசி நேரம் நாற்காலியில்
உட்கார்ந்து கொண்டு சாம்பசிவ ஐயரின் ஒன் மேன் ஷோவை பார்ப்பது பரிதாபம்.
ஆனந்திக்கும் அதே நிலைதான். மொத்த நாடகமும் நீதிமன்ற வழக்கையொட்டி
இருப்பதால் ஒரே செட் தான் உபயோகப்படுத்தப்பட்டு இருக்கிறது. விசுவின்
ரகளையான வசனங்கள் பல்வேறு இடங்களில் சிரிக்க வைக்கிறது. குறிப்பாக
துவக்கத்தில் டவாலி (சிவாஜி முருகன்) சொல்வது ‘கடைசி வரைக்கும் சிங்கிள்
செட் என்பதால் என்னால் நிற்க முடியாது’ எனக்கூறி அவரே ஒரு நாற்காலியையும்
இழுத்து போட்டுக்கொண்டு அமரும்போது கரவொலி அதிர்கிறது. சந்தடி சாக்கில்
மோடி ஆதரவு மற்றும் தி.மு.க.வை உரசிப்பார்க்கும் வார்த்தைகளையும்
கோர்த்திருக்கிறார் இயக்குனர்.
அனுபவம் வாய்ந்த நடிகைகளான நித்யா
(சரஸ்வதி, பணியாள் என இரு வேடங்கள்) மற்றும் காவேரி (பூமித்தாய்) ஆகியோரின்
நடிப்பு பக்க பலம். ’24 மணி நேரத்திற்கு ஒரு தரம் தன்னை சுற்றுவதுதான்
பூமி. ஆனால் ஏ.வி.எம் ஸ்டுடியோ வாசலில் 24 மணிநேரமும் பூமி சுற்றுவது என்ன
லாஜிக்?’ என காவேரி கேட்டாரே ஒரு கேள்வி. மேஜிக் செய்வதில் வல்லவரான சிவாஜி
சதுர்வேதி (நெருப்பு) இங்கு நெருப்பை பூவாக மாற்றி கவனத்தை
ஈர்த்துள்ளார். விசுவின் துணைவியார் உமாவின் பின்னணி குரல் ஒலிக்கும்
இடங்களிலும் நகைச்சுவைக்கு பஞ்சமில்லை. வீட்டிற்கு வரும் செய்தியாளர்கள்
பற்றி அவர் விசுவிடம் சொல்லும்போதும், ஷேர் ஆட்டோவில் பயணிப்பதன் அவஸ்தையை
விசு செய்து காட்டுமிடத்திலும் அரங்கம் சிரிப்பொலியில் அதிர்கிறது.
’பத்மா சேஷாத்ரி பள்ளியில் சீட்
வேண்டுமென்றால் பிரணாப் முகர்ஜியிடம் சிபாரிசு கேட்க வேண்டி இருக்கிறது’ என
நித்யா பேசுவதாக ஒரு காட்சி. அச்சமயம் முதல் வரிசையில் அமர்ந்து இருந்தது
திருமதி. ஒய்.ஜி.பி. என்பது குறிப்பிடத்தக்கது. அருகில் இருந்த நடிகர்
சிவகுமார் உள்ளிட்ட சிலர் திருமதி. ஒய்.ஜி.பி.யை திரும்பிப்பார்த்தது
எல்லாம் அபார டைமிங்.
பத்மா ஸ்டேஜ் கண்ணின் கைவண்ணத்தில்
நீதிமன்ற அரங்க அமைப்பு சிறப்பு. காந்தி மற்றும் கஸ்தூரிபா அந்தரத்தில்
இருந்து இறங்கி வரும் தந்திரத்தை லாவகமாக கையாண்டிருக்கிறார்கள்.
பின்பக்கம் கயிறு ஏதேனும் உள்ளதா என கண்களில் விளக்கெண்ணை போட்டு
பார்க்கும் நேரத்திற்குள் அவர்களை தரையிறக்குவது புத்திசாலித்தனம்.
இந்நாடகம் அரங்கேற்றத்தின்போது
கிட்டத்தட்ட இரண்டரை மணி நேர நீளம் இருந்தது. எனவே கதையை காட்டிலும் காமடி
பெருமளவு ஆதிக்கம் செலுத்தியது சற்று நெருடியது. தற்போது ஒரு மணி அம்பது
நிமிடங்களாக குறைத்து இருக்கிறார்கள். எனவே முன்பைவிட விறுவிறுப்பாக
இருக்கும் என நிச்சயம் நம்பலாம்.
விசுவின் சூப்பர் ஹிட் படங்கள் மற்றும்
அரட்டை, மக்கள் அரங்க நிகழ்ச்சிகளை பார்த்த பலருக்கு, அவரது படைப்பை மேடை
நாடகம் வாயிலாக பார்க்க ஒரு சந்தர்ப்பம் அமைந்துள்ளது. தற்போது சென்னையில்
தொடர்ந்து மேடையேறி வருகிறது கொஞ்சம் யோசிங்க பாஸ். பொழுதுபோக்கிற்கு
உத்திரவாதம் தரும் இந்நாடகத்தை பார்க்க கொஞ்சமும் யோசிக்க வேணாம் பாஸ்!!
written for tamil.jillmore.com
...........................................................................
5 comments:
விசுவின் இரண்டாவது இன்னிங்க்ஸ் சிறக்க வாழ்த்துக்கள்! விமரிசனத்திற்கு நன்றி பாஸ்!
அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்!ஐ.பி.எல் வேறு..................ஹ!ஹ!!ஹா!!!
அந்தக்காலத்தில் மோடி மஸ்தான் பார்த்திருக்கிறேன்.இப்போது 2வது இன்னிங்க்ஸ்!
ஒரு தேர்ந்த விமரிசகர் ஆகி விட்டீர்கள்
வணக்கம்,
நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
www.Nikandu.com
நிகண்டு.காம்
கொஞ்சம் யோசிங்க பாஸ்.....
சென்னை பயணத்தின் போது தான் பார்க்க வேண்டும்.
Post a Comment