CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Wednesday, April 30, 2014

கோடை நாடக விழா 2014: சுகமான பொய்கள்
கதை: திருச்சி அருகே குழுமணி எனும் ஊரை சேர்ந்த ராகவ் சென்னை தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து தனது திறமையால் விரைவில் முன்னுக்கு வருகிறான். ஒருசமயம் அந்நிறுவனத்தின் விருந்தளிப்பு விழாவில் நண்பன் வற்புறுத்தியும் குடிக்க மறுக்க,  அதற்கான காரணம் என்னவென்பதை அவனது தந்தை மூலம் அறிகிறான் அலுவலக நண்பன். கல்லூரிக்காலத்தில் சொன்ன சில பொய்கள் கெட்டிக்கார மாணவனான ராகவை எப்படி சோதித்தது, அதன் மூலம் அவனுக்கு மனமாற்றம் நிகழ்ந்தது எப்படி என்பதை சொல்கிறது டம்மிஸ் ட்ராமாவின் ‘சுகமான பொய்கள்’

கதையின் நாயகன் ராகவாக ஸ்ரீராம். கல்லூரிக்காலத்தில் தற்செயலாக செய்யும் தவறுக்கு பொய் சொல்லி சிக்கிக்கொள்ளும் கேரக்டர். உற்ற நண்பன் மோகனாக ப்ரசன்னா. கல்லூரி மாணவர்களின் அப்பாவித்தனம் மற்றும் சேட்டைகளை இயல்பாக பிரதிபலித்து இருக்கிறார்கள். ஸ்ரீராமின் தந்தை சேதுராமனாக ஸ்ரீதர். ‘A’ Grade வாங்கிய மகனை ஆப்சன்ட் ஆனதாக எண்ணி திட்டியும், ‘D’ Grade வாங்கிய மோகனை பாராட்டி பேசியும் கைத்தட்டலை பெறுகிறார். கல்லூரி ஆசிரியையாக ப்ரேமா சதாசிவம். கண்டிப்பும், கனிவுத்தன்மையும் கொண்டவராக நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். குரல் வித்யாசம் தெரியாத பெண்ணாக சில நிமிடங்களே மேடையில் வந்தாலும் சிரிக்க வைத்துவிட்டு செல்கிறார் அர்ச்சனா. ப்ரின்சிபல் வேடத்தில் பாந்தமாய் பொருந்துகிறார் ரவிசங்கர்.

சுகமான பொய்களின் கலாட்டா நாயகர் கிரிதரன். ஸ்ரீராம் மற்றும் பிரசன்னாவை வைத்து தனது காரியத்தை சாதித்து கொள்ளும் ராமசாமியாக முதலில் நம்மை மகிழ வைப்பவர், அதன் பிறகு ஸ்ரீராமின் நலனில் அக்கறை உள்ளவராக நடித்து நெகிழவும் வைக்கிறார். ‘யார் அசல் தந்தை?’ என்றொரு குழப்பமான சூழல் வரும்போது ‘எனக்கு ஒரே கேரா கீதுப்பா’ ‘சரக்கடிக்காமயே எனக்கு சுத்துது’ என்று கிரிதரன் கிறுகிறுக்கும்போது கரவொலி காதை பிளக்கிறது. என்றும் நினைவில் நீங்காத ‘காதலிக்க நேரமில்லை ‘படத்தில் ரவிச்சந்திரனின் தந்தையாக வேடமிட்டு முத்துராமன் நடித்த சுவாரஸ்யமான காட்சிகளை நினைவுபடுத்துகின்றன இந்த கல்லூரி கலாட்டா சம்பவங்கள்.

மேடையை மூன்றாக பிரித்து ஹாஸ்டல், பேஸ்கட் பால் மைதானம், கல்லூரி அலுவலக அறை என நேர்த்தியாக அரங்கை அமைத்த கிருஷ்ணமூர்த்தி மற்றும் பத்மா ஸ்டேஜ் கண்ணன், மூன்று இடங்களுக்கும் தகுந்தவாறு சிறப்பான ஒளி அமைத்த பாபு ஆகியோரின் உழைப்பு மெச்சத்தக்கது.

குடிப்பழக்கத்தின் மூலம் நிகழும் சீரழிவை பிரச்சாரம் போல நீட்டி முழக்காமல் ரத்தின சுருக்கமாக சொல்லி தனது முத்திரையை மீண்டும் பதித்து இருக்கிறார் இயக்குனர் ஸ்ரீவத்சன். வழக்கம்போல இந்த டம்மிஸ் நாடகமும் 90 நிமிடத்தில் நிறைவடைவது ஷார்ட் & ஸ்வீட்.

written for tamil.jillmore.com

........................................................


Tuesday, April 29, 2014

கோடை நாடக விழா 2014: ஒரு ரோபோவின் டைரி

கோடை நாடக விழாவின் இரண்டாம் நாடகம் சென்னை நவபாரத் தியேட்டர்ஸ் வழங்கிய ‘ஒரு ரோபோவின் டைரி’.

கதை: மகன் குடும்பத்துடன் அமெரிக்காவில் இருக்க, தனிமையில் தந்தை படும் இன்னல்களை சொல்கிறது இந்நாடகம். அமெரிக்கா வந்துவிடுங்கள் என அழைத்தும் போக விருப்பமின்றி, இந்தியாவில் 22 ஆண்டுகள் தனிமையின் வெறுமையை தாங்க முடியாமல் தவிக்கும் தந்தையின் உதவிக்கு ஒரு ரோபாவை வாங்கித்தருகிறான் மகன். அந்த ரோபாவால் கிடைத்த பலன் என்ன?

தந்தை நடராஜன் ஐயராக கூத்தபிரான். ரோபோவை எப்படி இயக்குவது என்று பரிதவிக்கும்போது தனக்கே உரித்தான நகைச்சுவை உணர்வுடன் அனைவரையும் சிரிக்க வைக்கிறார் கூத்தபிரான். ‘இந்த ரோபோ என்னை அடித்து விடுமோ?’ என்று அவர் பதறும் இடத்தில் சிரிக்காமல் இருக்க முடியாது. காமடி மற்றும் தேசபக்தி சார்ந்த நடிப்பில் வழக்கம்போல மிளிர்கிறார்.

ரோபோவாக என். ரத்னம். கதை, வசனம் மற்றும் இயக்கமும் இவரே. ரோபோ கேரக்டரில் இவர் தோன்றும் போதெல்லாம் நாடகம் பார்க்கும் சிறு வயது பிள்ளைகளுக்கு குதூகலம்தான். தலை முதல் பாதம் வரை பிரத்யேக உடை அணிந்து நடிப்பது போன்ற சிரமமான காரியம் எதுவுமில்லை. முதல் காட்சியில் ரத்னம் நடித்த பிறகு லைட்ஸ் ஆப் செய்யப்பட்ட பிறகு கூட ரோபோ போன்றே பின்னோக்கி நடந்து செல்வது அந்த கேரக்டருடன் அவர் ஒன்றி இருப்பதை காட்டுகிறது. அதே வேளையில் அடுத்தடுத்த காட்சிகளில் வரும்போது ரோபோவை போல இன்னும் கச்சிதமாக உடலினை அசைத்து நடித்திருக்கலாம். நாடகம் முடிந்த பிறகு ‘ரோபோவாக நடித்தது யார் என்று பார்க்க வேண்டும்?’ என ரசிகர்கள் ஆர்ப்பரிப்பது ரத்னத்தின் கேரக்டருக்கு கிடைத்த வெற்றி.

மகன் ராம்குமாராக விக்னேஷ் ரத்னம்.தந்தை மீது அதிக அன்பு கொண்டிருப்பினும், நல்ல வாழ்க்கை வாழ வெளிநாட்டில் வேலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம். அதை முழுதாக தந்தை புரிந்து கொள்ளவில்லையே எனும் மன வருத்தம். தனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நன்றாக நடித்துள்ளார் விக்னேஷ். ‘நான் பேசாம இருக்கறேன். நீ பேசிட்டே இரு’ என மனைவியை நொந்து கொள்வது இயல்பு. குறிப்பாக இறுதிக்காட்சியில் தந்தை இருக்குமிடம் தெரியாமல் தவிப்பதும், தந்தையிடம் மன்னிப்பு கேட்கும்போதும் மனதை நெகிழ வைக்கிறார். ராம்குமாரின் மனைவி சாருவாக அனுராதா கண்ணன். கொஞ்ச நேரமே மேடையில் தோன்றினாலும், மாமனார் மீது வெறுப்பை காட்டி நன்றாக நடித்துள்ளார்.

ரத்னத்தின் வசனங்கள் இந்நாடகத்தின் சிறப்பம்சங்களில் ஒன்று. ‘எனக்கு காரியம் செய்யவும் இந்த ரோபோவை ப்ரோக்ராம் பண்ணிடு’, ‘என்னைபோல ஏமாந்த சோனகிரிகள் முகத்தை பாத்தாலே தெரியறது’ என்று கூத்தபிரான் ரசிகர்களை பார்த்து சொல்லும் வார்த்தைகளில் சோகமும், யதார்த்தமும் நிறைந்திருக்கிறது. ‘உனது சொத்துக்களை வாங்கி விற்கும் ரியல் எஸ்டேட் ப்ரோக்கர் ஆகத்தானே இத்தனை காலம் நான் இருந்திருக்கிறேன்’ என கூத்தபிரான் விக்னேஷை பார்த்து வருந்திப்பேசுமிடம் மனதை தைக்கிறது. அதிகமாக கைத்தட்டலை கிடைத்ததும் இந்த வசனத்திற்குத்தான். அதே சமயம் இறுதிக்காட்சியில் தந்தை எங்கே இருக்கிறார் என்று ராம்குமார் மன உளைச்சலில் இருக்கும்போது ரங்குடு (கணேசன்) ‘ஒரு வேளை அவர் லைட் ஹவுஸில் இருந்து குதித்திருப்பாரோ, எம்.ஜி.எம். தீம் பார்க்கில் எஞ்சாய் செய்து கொண்டிருப்பாரோ’ என்று பேசுவது நகைச்சுவைக்கு என்றாலும்,  சீரியசான கட்டத்தில் இவ்வசனத்தை தவிர்த்து இருக்கலாம்.


இந்நாடகத்திற்கு ஸ்பெஷல் எபக்ட்ஸ் அமைத்த நிகிலுக்கு ஸ்பெஷல் பாராட்டுகள். சில மேடை நாடகங்களில் தேவையற்ற இடங்களில் அதிகமாக சப்தம் எழுப்பியும், கதாபாத்திரங்கள் வசனம் பேசும்போது அதை கேட்கவிடாமல் இடையூறு செய்தும் பின்னணி இசை தொல்லை செய்யும். ஆனால் அப்படி ஏதுமின்றி நதியின் சன்னமான ஒலியை போல சஞ்சனா ரத்னத்தின் பின்னணி இசை நாடகம் முழுக்க வலம் வருவது சிறப்பு.

‘இந்த ரோபா பிற்காலத்துல உனக்கு தேவைப்படலாம்’ என தந்தையை பார்த்து அபராஜித் (மாஸ்டர் அம்ரித் ராம் கிருஷ்ணன்) சொல்வது நடைமுறை யதார்த்தத்தை வெளிப்படுத்துகிறது.

தன் குடும்பம், தன் தேசம் என வாழ்வதே சிறந்தது என்பதை உணர்த்துகிறது இந்த ரோபோவின் டைரி. இந்நாடகம் வெறும் ரோபோ பற்றிய டைரி குறிப்பு மட்டுமல்ல. ரோபோ போன்று ஏதோ ஒரு தேசத்தில் பணத்திற்காக இயங்கிக்கொண்டே இருக்கும் இக்கால தலைமுறை, எவர் துணையுமின்றி இயந்திரம் போல தனியாய் வாடும் மூத்த தலைமுறை எனும் மேலும் இரு ரோபோக்களின் டைரி குறிப்பும் கூடத்தான்.

written for tamil.jillmore.com
.................................................................
 Monday, April 28, 2014

கோடை நாடக விழா 2014: அட கடவுளே


வருடா வருடம் கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் சென்னையில் நடத்தும் கோடை நாடக விழா குறித்து அறியாத நாடக ரசிகர்கள் இருப்பதரிது. இவ்வருடம் 22/04/2014 முதல் 05/05/2014 வரை நாரதகான சபாவில் தொடர்ந்து புதிய நாடகங்கள் அரங்கேறுவது குறிப்பிடத்தக்கது. கோடை நாடக விழாவின் 25 ஆம் ஆண்டு இது என்பது கூடுதல் சிறப்பு. அதே வேளையில் மேடை நாடகங்களை பல ஆண்டுகள் ஊக்குவித்தும், அதற்கு தோள் கொடுத்தும் வந்த ‘கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ்’ கார்த்திக் ராஜகோபால் அவர்கள் சமீபத்தில் காலமானது வருந்தத்தக்க செய்தி. அதே சமயம் அவரது இழப்பு தமிழ் நாடக உலகில் தேக்கத்தை ஏற்படுத்திடாத வண்ணம், கார்த்திக் அவர்களின் நாடகப்பணியை தொடர்ந்திட அவரது புதல்வர் சேகர் ராஜகோபால் முன்வந்திருப்பது தமிழ் நாடக உலகிற்கு ஆரோக்யமான விஷயம்.

கோடை நாடக விழாவில் முதல் நாடகமாக அரங்கேறியது  ஸ்ரீ சத்ய சாய் கிரியேஷன்ஸின் ‘அட கடவுளே’.

கதை: கருத்த தேகம். அழகற்ற முகம். அதனால் தாய், மனைவி மற்றும் சகோதரன் ஆகியோர் உமிழும் வெறுப்பு. அலுவலகத்தில் ஏற்படும் நெருக்கடி. வாழ்வே சூன்யமாகி போகிறது அருணாச்சலத்திற்கு. இதற்கு தற்கொலைதான் தீர்வு என முடிவு செய்து பிள்ளையாரிடம் புலம்பிக்கொண்டிருக்கும் வேளையில் அவனுக்கு தரிசனம் தருகிறார் கடவுள்.  பிறந்தது முதற்கொண்டு அவனது வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகள் சிலவற்றை காலக்கண்ணாடி மூலம் உணர்த்துகிறார் கடவுள். தனக்கு தெரியாத ரகசியங்களை இறைவன் சொல்லும்போது அதிர்ச்சி அடைகிறான் அருணாச்சலம். ‘இனி நான் விடை பெறும் நேரம் வந்துவிட்டது. உனக்கு இன்னும் ஏழு நாட்கள் மட்டுமே பூலோக வாழ்க்கை. உன் கண்ணெதிரே ஏதேனும் ஒரு ரூபத்தில் வருவேன். அது கடவுளாகிய நான்தான் என நீ கண்டுபிடிப்பாயா?’ என்றொரு சவாலை முன்வைக்கிறார் கடவுள். சவாலில் வென்றானா அருணாச்சலம்?

அருணாச்சலமாக ‘மாப்பிள்ளை’ கணேஷ். இந்நாடகத்தின் பிரதான பாத்திரதை ஏற்றிருக்கிறார். ‘சபாஷ் மாப்ளே’ போன்ற படைப்புகளில் ரசிகர்களை சிரிக்க வைத்தவருக்கு, இம்முறை நெகிழ்ச்சியாக நடிக்கும் சந்தர்ப்பம். நெருங்கிய உறவுகளே ஒதுக்கி தள்ளும்போது, அந்த வலியை தாங்கிக்கொண்டு வெள்ளந்தியாக நடித்து மனதில் நிற்கிறார் கணேஷ். அடிப்படையில் உணர்வுபூர்வமாக இவரது கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டு இருப்பினும், அதனுடன் சேர்த்து அவ்வப்போது நகைச்சுவை நடிப்பு மூலமும்  மிளிர்கிறார். சபாஷ் மாப்ளே!!

கடவுளாக கிரீஷ் அயபத். வெள்ளை உடை. தெய்வீகம் மிளிரும் முகம். ‘ஆஹா கடவுளே’ என கரம் கூப்பத்தோன்றும் உருவ அமைப்பு. அப்பாவி ஒருவனுக்கு தனது மகத்துவத்தை பொறுமையுடன் விவரிக்கும் தன்மையின் மூலம் நம் மனதில் குடி கொள்கிறார். அழகான கொம்புகள்  மற்றும் அசிங்கமான கால்களையுடைய மான் பற்றிய குட்டிக்கதையொன்றின் மூலம் எது உண்மையான அழகு என்று எடுத்துச்சொல்லும்போது ‘தெய்வம் இருப்பது எங்கே? அது இங்கே’ என நம்மையறியாமலே நமது ஆள்காட்டி விரல் கிரீஷ் இருக்கும் திசை நோக்கி நீள்கிறது.

அருணாச்சலத்தின் தாயாக ராணி, மனைவியாக ஸ்ரீவித்யா, தம்பியாக அஷ்வின், கான்ட்ராக்டர் செங்கல்வராயனாக எழிச்சூர் அரவிந்தன் மற்றும் சினிமா இயக்குனராக பழனி ஆகியோர் முக்கிய துணை நடிகர்கள் வேடத்தில் தமது பங்கினை குறையின்றி ஆற்றி இருக்கிறார்கள்.


‘அட கடவுளே’ நாடகத்திற்கு கிரீஷ் மற்றும் மாப்பிளை கணேஷ் ஆகியோரின் நடிப்புடன் பெரிய பக்க பலமாக இருப்பது அரவிந்தனின் எழுத்து. உதாரணம்: ‘கண்ணுக்கு தெரியற சூரியனையே கல்லெடுத்து அடிக்க முடியாத போது, கண்ணுக்கு தெரியாத கடவுளை எப்படி அடிக்க முடியும்?’, அதே சமயம் ‘இனிமே உங்களுக்கு எல்லா நைட்டுமே பர்ஸ்ட் நைட் தான் மாப்ளே’ என்று அருணாச்சலத்திடம் மாமனார் சொல்கிறார். மகளை கட்டித்தந்த தந்தை இப்படி பேசுவது நெருடல். இதை வசனகர்த்தா அரவிந்தன் தவிர்த்து இருக்கலாம்.

இறுதிக்கட்டத்தில் வழக்கமாக நாடகத்தில் வருவது போல மீண்டும் கடவுளாக கிரீஷ் வந்து தனது திருவிளையாடல்கள் குறித்தும், வாழ்வின் யதார்த்தம் பற்றியும் பேசப்போகிறார் என நாம் யூகிக்கையில் அதனை தவிர்த்து இருப்பதற்கு இயக்குனர் மாப்பிள்ளை கணேஷை பாராட்டலாம்.

இரண்டு தெருக்கள் பிரியுமிடத்தில் கணேஷ், கிரீஷ் மற்றும் சினிமா இயக்குனர் உரையாடுவது போல மேடையின் பின்னணியை திரையில் வரைந்து இருந்தது சிறப்பு. காம்பவுண்ட் சுவர், கட்டிடங்கள் போன்றவை வண்ணமயமாகவும், அழகாகவும் ஓவியமாய் தீட்டப்பட்டு இருந்தன. ‘பத்மா ஸ்டேஜ்’ கண்ணனின் இந்த வேலைப்பாடு மெச்சத்தக்கது.  அதுபோல மாப்பிள்ளை கணேஷிற்கு அளவாகவும், பொருத்தமாகவும் கருமை நிறத்தில் ஒப்பனை செய்த ஜெயகுமாரையும் பாராட்டி ஆக வேண்டும்.

உருவ அமைப்பல்ல. அகத்தூய்வுதான் அசல் அழகு. இறைவனின் உறைவிடமும் அதுதான் என்பதை உணர்வுபூர்வமாகவும், தேவையான இடங்களில் நகைச்சுவை தோரணங்களை கோர்த்தும் சொல்லி இருக்கும் நாடகம் தான் இந்த ‘அட கடவுளே’. நாடக பிரியர்களை நீண்ட நேரம் அமரவைத்து ‘அட கடவுளே’ என்று சொல்ல விடாமல், ஒன்றரை மணி நேரத்தில் நல்லதோர் நாடகத்தை தந்திருக்கும் ஸ்ரீ சத்ய சாய் கிரியேஷன்ஸ் குழுவினருக்கு பாராட்டுகள்.

written for tamil.jillmore.com
...........................................................
 
 
 


Tuesday, April 22, 2014

கூத்துப்பட்டறையின் உந்திச்சுழி


பத்மஸ்ரீ முத்துசாமியால் 1980 ஆம் வருடம் எழுதப்பட்ட நாடக வடிவம்தான் உந்திச்சுழி. அதே காலகட்டத்தில் பசியின் வலி குறித்து உரக்க சொன்ன நாடகம் ராஜசேகரனின் ‘வயிறு’. அந்த தாக்கத்தில் உருவானதுதான் உந்திச்சுழி. பெண்ணொருத்தி முட்டையிட்டு குழந்தை பெறுவதாக கதைக்கருவை அமைத்தார் முத்துசாமி. மியூசியம் தியேட்டரில் ஜூன் மாதம் 1980 ஆம் வருடம் அரங்கேறியது உந்திச்சுழி. ராமசாமியின் ‘ஜே. ஜே. சில குறிப்புகள்’ நாயகனுக்காக இப்படைப்பை உருவாக்கியதாக சொல்கிறார் முத்துசாமி. ‘ஜே.ஜே.’ வில் புதுயுக மனிதனாய் நாயகன் வலம் வந்தாலும் அவனது முடிவு சோகமாய் இருந்தது. ஆனால் உந்திச்சுழியோ பயமெனும் பிசாசை ஒழித்து வீறுநடை போட உருவாக்கப்பட்டிருக்கிறது.

இந்நாடகத்தில் நடித்திருப்பது மொத்தம் ஆறு பேர். அனைவருக்குமான உடையின் நிறம் வெள்ளை. எவருக்கும் பெயரிடப்படவில்லை. முட்டை ஒன்றினுள் இருந்து குழந்தை சத்தம் கேட்க அதை பிளந்து பார்க்கிறார்கள் இரு நண்பர்கள். ‘முட்டையிலிருந்து பிள்ளையா? அப்படி எனில் அது தனக்கு பிறந்திருக்க வாய்ப்பே இல்லை’ என மறுக்கிறான் மூன்றாமவன் (தந்தை). பெற்றவளோ அவனிடம் மல்லுக்கு நிற்கிறாள். கோபத்தில் அங்கிருந்து வெளியேறுகிறான் அவன். இப்போது அந்த இரு நண்பர்களின் காமப்பார்வையும் அப்பெண்ணின் மேல் விழுகிறது. ‘உன்னையும், உன் மகனையும் நாங்கள் காப்பாற்றுகிறோம்’ என அவர்கள் நிர்பந்திக்க, அவர்களின் வைப்பாட்டியாக இருக்க சம்மதம் தெரிவிக்கிறாள் அவள்.

சில காலம் கழித்து அவளது கணவன் மீண்டும் ஊர் வந்து சேர்கிறான். காமத்திற்காக மட்டுமே மனைவியுடன் சேரத்துடிக்கிறான். அந்நேரம் பருவ மங்கை ஒருத்தியும் அங்கு வருகிறாள் (வேறொருத்தி மூலம் பிறந்த மகள்). முட்டை மூலம் பெண்கள் பிள்ளை பெற ஆரம்பித்தால் சமூகக்கேடு என்றும், வயிற்றில் பிள்ளையின்றி இப்படி முட்டையை அடை காத்தால் பெண்கள் மற்றவனுடன் சல்லாபிக்க வழிவகுக்கும் எனும் வாதம் முற்றுகிறது. ஆண் வர்க்கத்தின் காம வெறிக்கு சாட்டையடி கொடுக்க மகள் எடுக்கும் முடிவு என்ன என்பது உந்திச்சுழியின் முக்கிய கட்டம்.  மனைவியை திரவுபதியாகவும், மகளை கண்ணகியாகவும் சித்தரித்து இருக்கிறார்கள்.

இந்நாடகத்தின் நீளம் அதிகபட்சம் 50 நிமிடங்கள் மட்டுமே. மேடையின் பின்னே வழக்கமாக இருக்கும் அரங்க அமைப்புகள் எதுவும் இல்லை. வெண்திரையில் சில ஓவியங்கள் மட்டும் தீட்டப்பட்டிருந்தன. கதை நடக்கும் சூழல், நடிப்பவர்களின் மனவோட்டம் ஆகியவற்றை பிரதிபலிக்கும்படி வெவ்வேறு வண்ணங்களில் சிறப்பான ஒளி அமைப்பு செய்யப்பட்டு இருந்தது.

முட்டையிலிருந்து பிறக்கும் பிள்ளையாக பாஸ்கர். படுத்த வண்ணமே சில நிமிடங்கள் ஒரே மாதிரி கால்களை உயர்த்தி பாவனை செய்திருப்பது பாராட்டத்தக்கது. இளையராஜா(தாய்​), கணேஷ் குமார்(தந்தை), ரஜிதா(மகள்), நண்பர்களாக சிவசங்கர் மற்றும் சந்திரசேகர் ஆகியோரின் நடிப்பும் கச்சிதம். 


வசனங்கள் அனைத்தும் ‘உம்மில் யார் உத்தமர்?’ என சமூகத்தை சாடும் யதார்த்தங்களால் நிரம்பி இருக்கிறது. சற்று ஆழமான சிந்தனை இருப்பவர்களுக்கு கதையின் தன்மை ஓரளவு புரிந்து விடும். ஆனால் சராசரி ரசிகர்களுக்கு அவ்வளவு எளிதில் பிடிபடுவது சந்தேகமே. ஆனால் அதற்கும் தீர்வுண்டு.

நாடகம் முடிந்த பிறகு அதனை பார்த்தவர்களிடம் கருத்துகளும், கேள்விகளும் வரவேற்கப்பட்டன. ‘இம்மாதிரி குடும்பத்துடன் பார்க்க வெகுவாக யோசிக்க வேண்டும். அந்த அளவிற்கு புணர்தல், முரண் உறவுகள் சார்ந்த வசனங்கள் மேலோங்கி இருக்கின்றன’ என்பது ஒரு பார்வையாளரின் ஆதங்கம். ‘உந்திச்சுழி மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள்? என்றொரு கேள்வி எழ ‘இதன் மூலம் எந்த கருத்தையும் சொல்ல வரவில்லை. எங்களைப்பொறுத்தவரை நாடகம் என்பது படைப்பாளியையும், பார்வையாளர்களையும் Engage செய்யும் விஷயம் மட்டுமே’ என்பது பதிலாய் வந்தது. அதுபோக இந்தியாவில் பிற பகுதிகளில் நடக்கும் நாடகங்களை பார்த்து வரும் நபர்களிடமிருந்தும் வலுவான கேள்விகள் முன்வைக்கப்பட அதற்கும் பதில்களை அளித்தனர் கூத்துப்பட்டறையினர். இதில் நடித்தவர்களிடம் கேள்விகள் முன்வைக்கப்பட்டன. மேடையில் கீழ் இருக்கைகள் இன்றி அமர்ந்தவாறே தமது நடிப்பனுபவங்களை பகிர்ந்து கொண்டனர் அனைவரும்.

குடும்ப உறவுகள். நகைச்சுவை, இதிகாச புராணங்கள் என வெவ்வேறு களங்களில் மேடை நாடகங்கள் வெளிவருவது ஒரு பக்கமெனில், கூத்துப்பட்டறையின் உந்திச்சுழி போன்ற படைப்புகள் மூலம்  தனக்கென ஒரு பாதையமைத்து வெற்றிகரமாக வலம் வருகிறது கூத்துப்பட்டறை குழு. பல ஆண்டுகள் கழித்து இப்படைப்பை மீண்டும் மேடையேற்றி ஆரோக்யமான விவாதத்திற்கு வழி வகுத்து இருக்கும் இயக்குனர் ஹார்ட்மன் டி சோசா மற்றும் துணை இயக்குனர் ஆண்ட்ரியா பெர்ரெரா ஆகியோருக்கு வாழ்த்துகள்.

written for tamil.jillmore.com
...................................................................


Monday, April 21, 2014

பாஸ் இன் தலைவன் - SYRUP விமர்சன மலர்
தமிழ் சினிமா தத்தளிக்கும் போதெல்லாம் உரிய  நேரத்தில் கைகொடுத்து காப்பாற்ற ஒரு தேவதூதனை புஷ்பக விமான பிஸினஸ் க்ளாலிஸ் ஏற்றி கோடம்பாக்கத்திற்கு அனுப்புவது இறைவனின் வழக்கம். உதாரணம்: பவர் ஸ்டார் சீனு செல்லம், புஜ்ஜிம்மா (லிப்ஸ்டிக் ஸ்டார்) ராஜகுமாரன். அந்த வரிசையில் இப்போது அழகு குட்டி பாஸ்(கரன்). சென்ற ஆண்டே ரிலீஸாகி வெள்ளி விழா கண்டிருக்க வேண்டிய தலைவன் பற்பல பலாப்பழ முட்களை தாண்டி இப்போதுதான் வந்துள்ளது. காரணம்? சென்ற ஆண்டு தலைவன் ஆடியோ ரிலீஸை கோலாகலமாக கொண்டாட அண்ணா சாலையே அலறும் வண்ணம் தொடர் பேனர்கள் வைத்தார் எங்கள்/உங்கள் பாஸ். தமிழில் மேடமுக்கு பிடிக்காத இரண்டே வார்த்தை தலைவா/தலைவன். பிறகென்ன? நமது அம்முகுட்டியை அமுக்கி சிறையில் தள்ளி விட்டார்கள். முதல் சில நாள் கர்ஜித்தாலும், பிறகு குடுத்த குடுப்பில் வழிக்கு வந்தார் பாஸ். அந்த அடக்கத்திற்கு கிடைத்த பலனாக இப்போது தாறு மாறு தக்காளி சோறாக ரிலீஸ் ஆகிவிட்டது 'பாஸ் இன் தலைவன்'.

அம்மாவிற்கு ஒரு பெரிய கும்பிடு போட்டு டைட்டில் போடுகிறார்கள். சற்றே பருத்த தொப்பை, போனவாரம் செய்த உளுந்த வடை போன்ற முகபாவம். வாரே வா!! இதோ பைக்கில் பறந்து வருகிறார் பாஸ். அதுவும் கல்லூரி மாணவனாக. காவல்துறைக்கு தண்ணீர் காட்டும் வண்ணம் அவ்வப்போது ரிமோட் ஹெலிகாப்டர் மூலம் 'இந்த இடத்தில் இத்தனை மணிக்கு கொள்ளை நடக்கும், குண்டு வெடிக்கும். தலைவனின் எச்சரிக்கை'  பாணியில் செய்திகளை அனுப்புகிறார். 'யார் இந்த தலைவன்?' தடுமாறுகிறது தமிழக காவல் துறை. பட ரிலீசுக்கு முன்பே அச்சடிச்ச சோறும், அவுன்ஸ் க்ளாஸ்ல மோரும் தந்து 'கும்பாபிஷேகம்' செய்தோமே? அந்த பாஸின் ஜாடையில் இருக்கிறாரே என்று கூட யோசிக்கவில்லை போலீஸார். பின்ன? ஜெயில் கதவை திறந்து விட்டதுமே முதலில் சலூனுக்கு ஓடிப்போய் கிருதாவை ரெண்டு இன்ச் பெரிதாக வைத்து விட்ட பிறகு எங்கள் தலைவனை எப்படி அடையாளம் தெரியும். ஷேம் ஷேம் பப்பி ஷேம்!! 

'வாழ்ந்துட்டோம்னு சாகலாம். வாழ முடியலன்னு சாகக்கூடாது' என்று புதிய தத்துவம் பத்தாயிரத்தி ஒன்றை நம்மாள் சொன்னதுமே காதலில் விழுகிறார் நிகிஷா. தங்க செல்போன், ராமர் ப்ளூ ஷூ, பீதியை கிளப்பும் க்ளோஸ் அப்கள்..யூத்னா இது!! சூர்யா, ஆர்யா அங்கிள்ஸ். இனி உங்கள் பாச்சா பலிக்காது. போலீஸ் அதிகாரி, வெடிகுண்டு நிபுணர், கல்லூரி மாணவர், கேரவன் கக்கூசை சுத்தம் செய்பவர்...எத்தனை கெட்டப்கள். யாருய்யா அது கமல்? இப்ப வர சொல்லுங்க ஒண்டிக்கு ஒண்டி.

ரிமோட் ஹெலிகாப்டர் மூலம் ஒட்டுமொத்த காவல்துறையை கலங்கடிக்கும் டெக்னிக்கை எங்கள் தலைவன் சென்ற ஆண்டு ஷூட்டிங் நடக்கும்போதே கண்டுபிடித்துவிட்டான். அதை அப்படியே காப்பி அடித்த 'சூது கவ்வும்' நலன் குமாரசாமியே...மன்னிப்பு கேள். மன்னிப்பு கேள். நிபந்தனையற்ற மன்னிப்பு கேள். 
 

'மன்மதர் வம்சத்துல ஒத்த பேராண்டி. நீ ஒத்துக்கிட்டா பத்து வகை முத்தம் தாரேண்டி' பாடலில் தலைவர் ஆடும்போது நம்முள் உற்சாகம் கரை புரண்டு காட்டாற்று வெள்ளமென கண்டபடி ஓடும் உணர்வை எப்படி விவரிக்க? எதிரிகளை வீழ்த்த 'காக்க காக்க' ஜீப்பில் அண்ணாத்தை பறக்கும்போது கலாசலான மாஸ் சாங் தெறிப்பது பொழுதுபோக்கின் உச்சம். 

'அப்படி என்றால் படத்தில் சென்டிமென்ட் இல்லையா?' என்று கப்பித்தனமாக ஒரு கேள்வி எழலாம். ஏனில்லை? இரண்டாம் பாதி முழுக்க அதற்குத்தானே சமர்ப்பணம். அன்பான பெற்றோர்கள், செல்லத்தங்கை. 'பச்சைக்கிளிகள் தோளோடு', 'எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை' டைப்பில் ஒரு குடும்ப பாடல். அதில் நமது கண்களை குளமாக்கும் ஒரு காட்சி. பாசப்பறவைகள் நால்வரும் கேரம் ஆடிக்கொண்டு இருக்கிறார்கள். அனைத்து காயன்களின் மீதும் குடும்பத்தினரின் படம் பொறிக்கப்பட்டு இருக்கிறது. அவற்றை போர்டின் மையத்தில் வைக்கிறார்கள். இப்போது அவற்றை அடிக்கும் சந்தர்ப்பம் பாஸிற்கு வருகிறது. எல்லோரும் அவரையே குறுகுறுவென பார்க்க அவருக்கோ கை உதறுகிறது. கண்களில் நீர் முட்டுகிறது. விளையாட்டுக்கு கூட குடும்பம் பிரியக்கூடாது எனும் ஈர நெஞ்சுடன் ஆடாமலே எழுந்து விடுகிறார். என்ட கர்த்தாவே...இப்பேர்ப்பட்ட நெஞ்சை உருக்கும், நறுக்கும் சீனை பார்த்து எத்தனை வருடங்கள் ஆகி விட்டது.

படத்தில் பவர் ஸ்டார், சந்தானம் எல்லாம் தமாசு செய்ய முயற்சித்து என்ன பலன்? முடியாதே. இங்க எல்லாமே நாங்கதான். அடுத்த படத்துலயாவது 'கொஞ்சம் நடிங்க பாஸ்' என்று விவரம் தெரியாத அப்பாவிகள் அலறலாம். அதற்கான வாய்ப்பே இல்லை. நாங்கதான் ஒட்டுமொத்த நவரசத்தையும் இங்கயே பிழிஞ்சிட்டமே!!

written for tamil.jillmore.com
..............................................................................


முந்தைய SYRUP விமர்சன மலர்கள் சில:

 .................................................................................
Wednesday, April 16, 2014

விசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'

கிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவின் ‘லாராவின்ஸ் லைட்ஸ் ஆன்’ தயாரிப்பில் விஷ்வசாந்தி வழங்கும் இந்நாடகத்திற்கு கதை, வசனம், இயக்கம் விசு. அத்துடன் முக்கிய வேடத்திலும் நடித்து இருக்கிறார். விசுவின் அடுத்த இன்னிங்ஸ் துவக்கம் என்பதால் இந்நாடகம் அரங்கேறிய நாளான ஏப்ரல் 2 ஆம் தேதி நாரத கான சபாவில் குவிந்தனர் நாடக ரசிகர்கள்.

தேசத்தில் நடக்கும் கொடுமைகளை கண்டு மனம் வெதும்பும் மகாத்மா காந்தி தன்னுடையை புகைப்படங்களை அனைத்து இடங்களில் இருந்தும் அகற்றக்கோரி நீதிமன்றத்தை நாடுகிறார். நீதிபதியாக அவரது மனைவி கஸ்தூரிபா (ஆனந்தி). காந்தியின் கோரிக்கை தவறு என்றும், மக்கள் மனதில் அவர் நிலைத்திருக்கிறார் என்பதை உணர வைக்கவும் வாதாடுகிறார் சாம்பசிவ ஐயர் (விசு). அதில் வெற்றி யாருக்கு என்பதுதான் கதை.

நாட்டில் நடக்கும் அநியாயங்களுக்கு பஞ்சபூதங்களும் முக்கிய காரணம் என்பது விசுவின் வாதம். எனவே அந்த ஐவரையும் அழைத்து பல்வேறு குறுக்கு கேள்விகளை கேட்கிறார். இது ஏற்கனவே ‘பூவும் பொட்டும்’ திரைப்படத்தில் நாகேஷ் செய்த காமடிதான். இந்திரலோகத்தில் இந்திரன் மற்றும் பஞ்சபூதங்களை விழி பிதுங்க வைக்கும் வண்ணம் நாகேஷ் கேட்கும் எடக்கு மடக்கான கேள்விகள் காலத்தால் அழியாதவை. உதாரணத்திற்கு ‘நீங்கள்தான் வர்ண பகவானா?’ என நாகேஷ் கேட்க, அதற்கு ‘எப்படி கண்டுபிடித்தாய்’ என்பார் அவர். அதற்கு நாகேஷின் பதில் ‘அதான் பேசும்போதே சாரல் அடிக்குதே’. அதான் நாகேஷ்!! அந்த கான்சப்டை லேசாக ஈயம் பூசி இந்நாடகத்தின் பிரதான காட்சிகளில் ஒன்றாக இடம் பெற செய்திருப்பது விசுவின் சாமர்த்தியம்.

கொஞ்சம் புஷ்டியான காந்தியாக சூரஜ். ஓரளவு நன்றாகவும் நடிக்கிறார். ஆனால் முக்கால்வாசி நேரம் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு சாம்பசிவ ஐயரின் ஒன் மேன் ஷோவை பார்ப்பது பரிதாபம். ஆனந்திக்கும் அதே நிலைதான். மொத்த நாடகமும் நீதிமன்ற வழக்கையொட்டி இருப்பதால் ஒரே செட் தான் உபயோகப்படுத்தப்பட்டு இருக்கிறது. விசுவின் ரகளையான வசனங்கள் பல்வேறு இடங்களில் சிரிக்க வைக்கிறது. குறிப்பாக துவக்கத்தில் டவாலி (சிவாஜி முருகன்) சொல்வது ‘கடைசி வரைக்கும் சிங்கிள் செட் என்பதால் என்னால் நிற்க முடியாது’ எனக்கூறி அவரே ஒரு நாற்காலியையும் இழுத்து போட்டுக்கொண்டு அமரும்போது கரவொலி அதிர்கிறது. சந்தடி சாக்கில் மோடி ஆதரவு மற்றும் தி.மு.க.வை உரசிப்பார்க்கும் வார்த்தைகளையும் கோர்த்திருக்கிறார் இயக்குனர்.

அனுபவம் வாய்ந்த நடிகைகளான நித்யா (சரஸ்வதி, பணியாள் என இரு வேடங்கள்) மற்றும் காவேரி (பூமித்தாய்) ஆகியோரின் நடிப்பு பக்க பலம். ’24 மணி நேரத்திற்கு ஒரு தரம் தன்னை சுற்றுவதுதான் பூமி. ஆனால் ஏ.வி.எம் ஸ்டுடியோ வாசலில் 24 மணிநேரமும் பூமி சுற்றுவது என்ன லாஜிக்?’ என காவேரி கேட்டாரே ஒரு கேள்வி. மேஜிக் செய்வதில் வல்லவரான சிவாஜி சதுர்வேதி (நெருப்பு) இங்கு நெருப்பை பூவாக மாற்றி கவனத்தை ஈர்த்துள்ளார்.  விசுவின் துணைவியார் உமாவின் பின்னணி குரல் ஒலிக்கும் இடங்களிலும் நகைச்சுவைக்கு பஞ்சமில்லை. வீட்டிற்கு வரும் செய்தியாளர்கள் பற்றி அவர் விசுவிடம் சொல்லும்போதும், ஷேர் ஆட்டோவில் பயணிப்பதன் அவஸ்தையை விசு செய்து காட்டுமிடத்திலும் அரங்கம் சிரிப்பொலியில் அதிர்கிறது.

 
 ’பத்மா சேஷாத்ரி பள்ளியில் சீட் வேண்டுமென்றால் பிரணாப் முகர்ஜியிடம் சிபாரிசு கேட்க வேண்டி இருக்கிறது’ என நித்யா பேசுவதாக ஒரு காட்சி.  அச்சமயம் முதல் வரிசையில் அமர்ந்து இருந்தது திருமதி. ஒய்.ஜி.பி. என்பது குறிப்பிடத்தக்கது. அருகில் இருந்த நடிகர் சிவகுமார் உள்ளிட்ட சிலர் திருமதி. ஒய்.ஜி.பி.யை திரும்பிப்பார்த்தது எல்லாம் அபார டைமிங்.

பத்மா ஸ்டேஜ் கண்ணின் கைவண்ணத்தில் நீதிமன்ற அரங்க அமைப்பு சிறப்பு. காந்தி மற்றும் கஸ்தூரிபா அந்தரத்தில் இருந்து இறங்கி வரும் தந்திரத்தை லாவகமாக கையாண்டிருக்கிறார்கள். பின்பக்கம் கயிறு ஏதேனும் உள்ளதா என கண்களில் விளக்கெண்ணை போட்டு பார்க்கும் நேரத்திற்குள் அவர்களை தரையிறக்குவது புத்திசாலித்தனம்.

இந்நாடகம் அரங்கேற்றத்தின்போது கிட்டத்தட்ட இரண்டரை மணி நேர நீளம் இருந்தது. எனவே கதையை காட்டிலும் காமடி பெருமளவு ஆதிக்கம் செலுத்தியது சற்று நெருடியது. தற்போது ஒரு மணி அம்பது நிமிடங்களாக குறைத்து இருக்கிறார்கள். எனவே முன்பைவிட விறுவிறுப்பாக இருக்கும் என நிச்சயம் நம்பலாம்.

விசுவின் சூப்பர் ஹிட் படங்கள் மற்றும் அரட்டை, மக்கள் அரங்க நிகழ்ச்சிகளை பார்த்த பலருக்கு, அவரது படைப்பை மேடை நாடகம் வாயிலாக பார்க்க ஒரு சந்தர்ப்பம் அமைந்துள்ளது. தற்போது சென்னையில் தொடர்ந்து மேடையேறி வருகிறது கொஞ்சம் யோசிங்க பாஸ். பொழுதுபோக்கிற்கு உத்திரவாதம் தரும் இந்நாடகத்தை பார்க்க கொஞ்சமும் யோசிக்க வேணாம் பாஸ்!!

written for tamil.jillmore.com

...........................................................................Related Posts Plugin for WordPress, Blogger...