உச்சக்கட்ட
போர் நடந்தபோது ஈழத்தமிழர்கள் அனுபவித்த சித்ரவதைகளை எந்த லாப நோக்கமும்
இன்றி ஆதரித்த மக்களுக்கு மத்தியில் அதை வைத்து சிலர் இன்றுவரை பணம்
பண்ணிக்கொண்டும் இருக்கத்தான் செய்கிறார்கள். அரசியல், புத்தகம், சினிமா என
களங்கள்தான் வேறு. அதிலும் அப்பிரச்னை குறித்து தமிழில் ஒரு 'மனசாட்சி'
உள்ள சினிமா வருகிறதென்றால் பல்வேறு சோதனைகளை கடந்தாக வேண்டும். ஆனால்
மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசுக்கும், சிங்கள அரசுக்கும் ஜால்ரா அடித்து
தமிழர்களை மட்டுப்படுத்தி படமெடுத்தால் தடைகள் தவிடு பொடியாகிவிடும். இனி
இந்தியாவின் முன்னணி ஒளிப்பதிவாளரும், வித்யாசமான படங்களை இயக்குவதில்
பெயர் பெற்றவருமான சந்தோஷ் சிவனின் புதிய படமான 'இனம்' பற்றி பார்க்கலாம்.
இறுதிப்போர்
கால கட்டத்தில் சுனாமி அக்கா (சரிதா) என்பவரால் காக்கப்பட்டு வரும் அநாதை
சிறுவர், சிறுமிகள் சந்திக்கும் பிரச்னைகளை சொல்கிறது இனம். டவுன்ஸ்
சின்ட்ரோம் எனும் மனநிலை குறைபாட்டால் பாதிக்கப்பட்டு இருக்கும் சிறுவன்
நந்தன் (கரண்) மற்றும் ரஜினி எனும் 18 வயது பெண் ஆகிய இருவரை வைத்து போர்
நிகழ்வுகள் மற்றும் அது சார்ந்த சில விஷயங்களை சொல்ல முயற்சித்து (மட்டும்)
இருக்கிறார் இயக்குனர்.
இலங்கையில்
நடந்த போரின் வீரியம், அரசியல், அப்பாவி தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட
துரோகம் குறித்த அடிப்படை புரிதல் கொண்ட அனைவருக்கும் எவ்வளவு
புத்திசாலித்தனமாக வெல்லத்தில் விஷம் தடவி தந்திருக்கிறார் சந்தோஷ் சிவன்
என்பது தெளிவாகும். மேம்போக்காக பார்த்தால் 'அட நம் சகோதர, சகோதரிகள் பட்ட
அவலங்களை எவ்வளவு துணிச்சலாக சொல்லி இருக்கிறார்' என்று எண்ணத்தோன்றும்.
அந்த அளவிற்கு கலைநேர்த்தி பொதிந்து கிடக்கிறது படம் நெடுக. டைட்டில்
கார்டில் இருந்தே செப்படி வித்தைகள் துவங்கி விடுகின்றன. 'இனம்' எனும்
தமிழ் சொல்லுக்கு கீழே 'the mob' என்றொரு ஆங்கில மொழிபெயர்ப்பு. ஒரு இனத்தை
சித்தரிக்க இதைவிட வேறு வார்த்தையே சிக்கவில்லையா? 'mob' என்றால் கூட்டம்.
வெறும் கூட்டம்தானா தமிழ் மக்கள்?
போர்
முடிந்த பிறகு உதவி செய்த அயல் நாட்டவர்கள் தம் நாட்டிற்கு செல்கையில்
'எங்களை விட்டு விடாதீர்கள்' என்று ஸ்டான்லி (கருணாஸ்) கெஞ்சுகையில்
பிளாஸ்டிக் கவரினுள் துடிக்கும் மீன்கள், குண்டுகள் விழும்போது பதறி ஓடும்
கோழிக்குஞ்சு, பள்ளத்தில் ஒளிய வேகமாய் செல்லும் பூச்சி என சந்தோஷ் சிவனின்
கேமரா அபாரம். இவற்றைத்தவிர மற்ற அனைத்தும் அபத்தங்களின் உச்சம்.
சிங்கள
ராணுவம் பெண்களை சோதனை எனும் பெயரில் மானபங்கம் செய்வது, கற்பழிப்பது ஆகிய
இரண்டு காட்சிகள் நியாயத்தை சொல்லி இருக்கிறாரே என்று இயக்குனரை பாராட்ட
நினைத்தால், அக்காட்சிகள் முடியும் நேரத்தில் தனது பக்கா 'சார்புத்தன்மை'யை
நிலை நாட்டி இருக்கிறார். சிங்கள ராணுவத்தினர் பெண்களை இழிவாக நடத்துவதை
கண்டு பொறுக்காத மற்ற இரு தமிழ் பெண்கள் துப்பாக்கியால் அவர்களை சுட
ஆரம்பிப்பது போலவும், தங்களை தற்காத்து கொள்ள சிங்கள 'வீரர்கள்' எதிர்
தாக்குதல் நடத்துவது போல முடியும் காட்சி, ரஜினி எனும் இளம்பெண்ணை சிங்கள
'வீரன்' கற்பழிக்கையில் அவனது சகா செல்போனில் வீடியோ பதிவு செய்கிறான்.
அப்போது அருகில் இருக்கும் சிங்கள கேப்டன் பிரசன்னா அது தவறு என்று
வாதிடுவதாக முடியும் காட்சி, நந்தனை பார்த்து 'தப்பித்து போ' என்று அந்த
கேப்டன் சொல்வது, சிறுவனின் பிணத்தை கண்டு சரிதா அழுகையில் அதே கேப்டன் கண்
கலங்குவது. அடேங்கப்பா. எப்பேர்ப்பட்ட கருணை உள்ளம் கொண்டவர்களாக சிங்கள
ராணுவத்தினரை சித்தரித்து இருக்கிறார் இயக்குனர்???
இது
போக அநாதை சிறுவர்கள் நடந்து செல்லும் வழியில் ஒரு சிங்கள புத்த
பிட்சுவையும் கருணையின் வடிவாக காட்டுகிறார் சந்தோஷ் சிவன். சிறிய
நீரோட்டம் ஒன்றின் அருகே தத்தளிக்கும் மீன்களை நீரில் விடுகிறார் அந்த
பிச்சு. எதிரே தென்படும் நந்தனை அன்புள்ளத்துடன் பார்த்து பழம் ஒன்றையும்
தருகிறார். இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக புத்த பிட்சுகள் செய்த
அராஜகங்கள் என்னவென்பது யாருக்கும் தெரியாதா என்ன?
'இருக்கட்டுமே.
சிங்கள ராணுவம் மற்றும் புத்த பிட்சுக்களில் இரக்க மனம் கொண்டவர்கள்
இருக்க மாட்டார்களா என்ன? அதைத்தான் சொல்லி இருக்கிறார்கள்' என்று
நினைத்தால் அது பெரும் நகைச்சுவையாக இருக்கும். ஏனெனில் ஈழத்தமிழர்களை படம்
நெடுக காட்டிய விதம் அவ்வாறு.
நோய்வாய்ப்பட்டு
படுக்கையில் இருக்கும்போது கூட பிகினி உடையில் இருக்கும் பெண்கள் படம்
தாங்கிய ஆல்பத்தை மனநலம் குன்றிய நந்தனை பார்க்க சொல்லி மகிழும் பெரியவர்,
அதிகபட்சம் 13 வயது கூட இல்லாத நந்தனின் தம்பி ஜீவன் 'இந்தக்கத்தி இனி
எனக்கு தேவைப்படாது. நீ வைத்துக்கொள்' என்று சொல்லுமிடம் (அதாவது இதற்கு
முன்பு அவன் தீவிரவாதியாம். இனிமேல் மனநலம் சரியற்ற அண்ணனை வன்முறை செய்ய
தூண்டுகிறானாம்), 20 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் சிலர் கையில் AK 47
உள்ளிட்ட ஆயுதங்கள் (அது உண்மை என்றே வைத்துக்கொண்டாலும் அவர்களிடமும்
மனிதம், நியாயம் இருக்கிறது என்பதை ஒரு இடத்திலும் சொல்லாமல் தவிர்த்தது
இயக்குனரின் வஞ்சத்தை காட்டுகிறது.
20 வயது கூட நிரம்பாத இளசுகளை மணம்
முடித்து வைக்கும் சுனாமி அக்கா, 'கிஸ் கொடு கிஸ் கொடு' என்று அலையும்
நந்தன், சண்டையில் இறந்து கிடக்கும் இலங்கை ராணுவ வீரனின் கையில் அவனது
குழந்தை போட்டோவை காண்பித்து அனுதாபம் தேடுவது (இதே போன்று ஒரு காட்சி கூட
போராளிகள் இறக்கும் காட்சியில் இல்லை), ரஜினி கற்பழிக்கப்படுகையில்
செல்போனில் படம் பிடிக்கும் சிங்கள சகாவும், கேப்டனும் அந்த காமக்கொடூரனை
நந்தன் கத்தியால் குத்தும்போது மட்டும் காணாமல் போகிறார்கள்... இப்படி
பலவிதத்தில் ஈழத்தமிழர்களை, குறிப்பாக தமிழின சிறுவர்களை, அதிலும்
குறிப்பாக மனநலம் குன்றிய தமிழ்ச்சிறுவனை தீவிரவாதிகள் போல சித்தரித்து
இருக்கிறார்கள்.
இப்படத்தின்
மூலம் என்ன சொல்ல வருகிறார் சந்தோஷ் சிவன் என்ற தெளிவு எங்குமே இல்லை.
இலங்கையில் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்தது என்று பலருக்கு தெரியும். அதை
தவிர்த்து புதிதாக எதை சொல்ல வருகிறார்? இரு பக்க நியாயங்கள் என்ன
என்பதையாவது அலசி இருக்கிறாரா என்றார் அதுவும் இல்லை. தமிழ் இனத்தை
மிகத்தவறான விதத்தில் காட்டவும், சிங்கள ராணுவத்தில் 'யோக்ய புருஷர்கள்'
நிரம்ப இருக்கிறார்கள் என்று அபத்தமான துதி பாடவும் மட்டுமே இப்படைப்பு
எடுக்கப்பட்டு இருக்கிறது.
written for tamil.jillmore.com
..........................................................
இனம் - வீடியோ விமர்சனம்:
.............................................................
சமீபத்தில் எழுதியது:
2 comments:
மிக அருமையான விமர்சனம்! நன்றி!
சாட்டையடி!இன்று வரை ஈழப் பிரச்சினையை வைத்துக் காசு தான் பார்த்திருக்கிறார்களே ஒழிய,எவருக்கும் ஈழத் தமிழர்கள் படும் வேதனை எவருக்கும் புரிந்ததாக இல்லை.///இறுதித் தகவலின்படி,காட்சிப்படுத்தல் நிறுத்தப்பட்டதாக தெரிகிறது.
Post a Comment