தனது
சின்னத்திரை சீரியல் நடிப்பு மூலம் பரவலாக அறியப்பட்டவர் சுரேஷ்வர்.
கமல், ரஜினி போன்ற ஸ்டார்களின் சிறு வயது பாத்திரங்கள் பலவற்றில் நடித்த
அனுபவமும் உண்டு. அதுபோக ஒய்.ஜி. மகேந்திரனின் நாடகக்குழுவிலும் அங்கமாக
இருந்தவர். யு.ஏ.ஏ.வின் 60 ஆம் ஆண்டு நிறைவையொட்டி ஒய்.ஜி.எம்.மின் புதல்வி
மதுவந்தி 'தியேட்டர் ஆப் மஹம்' எனும் நாடகக்குழுவை சமீபத்தில்
துவக்கினார். அதன் சார்பாக சுரேஷ்வர் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ள
நாடகம்தான் 'சிவ சம்போ'. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் முதன் முறையாக
மேடை நாடகத்திற்கு இசையமைத்திருப்பது இதன் சிறப்பு.
வேலை
நிமித்தம் நியூயார்க் நகரின் குடியிருப்பொன்றில் நட்பு சகிதம் கூட்டாக
வசிக்கிறாள் காயத்ரி. மேற்கத்திய தாக்கத்திற்கு ஆளாகிவிடக்கூடாது என்பதில்
உறுதியாக இருப்பவர் அவளது தந்தை பட்டாபி. தந்தை சொற்படி நடக்கும் காயத்ரி
சமூக நிர்பந்தங்களால் சற்று சுதந்திரமாகவும் வாழ வேண்டி இருக்கிறது. நல்ல
வேலை கிடைத்தாலும் தங்க இடமின்றி தவிக்கும் ஆகாஷ் எனும் இளைஞனுக்கு
பரிதாபப்பட்டு ஹாலை ஒதுக்குகிறார்கள் காயத்ரி & ப்ரெண்ட்ஸ். ஆனால்
ஜோதிடர்கள் மாநாட்டிற்கு நியூயார்க் வரும் பட்டாபி மகளை பார்க்க
செல்கிறார். ஆகாஷ் உடன் தங்கி இருப்பதை கண்டால் தந்தை பிரச்னை செய்வார்
என்பதால் அந்த இக்கட்டை சமாளிக்க காயத்ரி தீட்டும் திட்டம் என்னவாகிறது
என்பதுதான் கதை.
காயத்ரியாக
மதுவந்தி. சக்தி எனும் நாடகத்தின் மூலம் முக்கிய கேரக்டரில் நடிக்க
ஆரம்பித்தாலும் ஒய்.ஜி. மகேந்திரனின் 'நாடகம்' எனும் நாடகத்தில்
பார்வையற்றவராக சிறு வேடத்தில் நடித்ததும் பாராட்டப்பட்டது. பொதுவாக ஒரு
நாடகத்தை தயாரிப்பவர்/இயக்குபவர் மற்றவர்களை விட அதிக காட்சிகளில் நடித்து
பெயர் வாங்க நினைப்பது வழக்கம். ஆனால் அளவான காட்சிகளில் மட்டுமே வந்து
தனக்கான இடத்தை தக்க வைத்துள்ளார் இவர். உடன் நடிக்கும் மற்றவர்களும்
பேசப்பட வேண்டும் என்பதற்காக விட்டுத்தந்து நடிப்பது என்பது நாடக உலகில்
அபூர்வம்தான்.
ஒவ்வொரு
கேரக்டர் பற்றியும் தனது பாணியில் அறிமுகம் செய்கிறது பாஸ்கியின் பின்னணி
குரல். 'பரீட்சைல பாஸ் ஆகலன்னா இவங்க அப்பா திரிசூலம் சிவாஜி மாதிரி தன்னை
தானே அடிச்சிப்பார்'... பாஸ்கியின் சிறப்பு பஞ்ச். இடைவேளைக்கு சற்று
முன்பாக அறிமுகம் ஆகிறார் சுரேஷ்வர் ( பட்டாபி). அந்த நிமிடம் முதல் இறுதி
வரை நகைச்சுவை களை கட்டுகிறது. இடைவிடாமல் நீண்ட வசனங்களை பேசி
கைத்தட்டல்களை வாங்குகிறார் சுரேஷ்வர். அறிமுக இயக்குனராகவும், நடிகராவும்
களம் கண்டிருக்கும் சுரேஷ்வருக்கு 'சிவ சம்போ' புகழை பெற்றுத்தரும் என்பது
உறுதி.
காதல்
இளவரசனாக ஹரி(ஏக்நாத்). சுரேஷ்வரிடம் திட்டு வாங்கும்போதும், தனது அன்பை
காட்ட பூவை ஏந்தியவாறு அறை முழுக்க சுற்றும்போதும் சிரிப்புக்கு
உத்திரவாதம் தருகிறார். கோபி (ராசு) என்பவரை எங்கிருந்து பிடித்தார்களோ?
நளினமான பாவம் கலந்த நடிப்பு. நாடக உலகிற்கு இன்னொரு நல்வரவு.
சுதர்சன்
(ஆகாஷ்), கிரீஷ் ஆயபத் (ஆவி நாயகம்), சிவ சங்கரி (மாயா), சுபாஷினி
(சந்தியா) உள்ளிட்டவர்களின் நடிப்பும் தொய்வின்றி இருப்பது
குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டில்
தங்கி வாழும் இந்தியர்கள், குறிப்பாக இளைய சமூகம் குறித்து இங்குள்ள
பெற்றோர்களின் கணிப்பு மற்றும் அதிலுள்ள தவறான பார்வைகளை நெடிய பிரச்சாரமாக
இல்லாமல் எளிமையான க்ளைமாக்ஸ் வசனங்களால் நிரப்பி இருக்கிறார் இயக்குனர்.
இரண்டு மணிநேரம் அமெரிக்காவில் தங்கி இருக்கும் உணர்வை தரும்படி பிரமாதமாக
அரங்கத்தின் பின்னணியை அமைத்துள்ளார்கள். அதற்கு காரணமான
'எக்ஸலன்ட் ஸ்டேஜ் சர்வீஸ்' பாலாஜி குழுவினரை பாராட்டி ஆக வேண்டும்.
ஆண்டாண்டு
காலமாக பெரும்பாலும் முந்தைய தலைமுறையினர் பார்க்கும் பொருட்டே நாடகங்கள்
வந்து கொண்டிருந்த சமயத்தில், சென்ற ஆண்டு 'குறுக்கு வழியில் ட்ராபிக்
ஜாம்' மற்றும் 'இடியுடன் கூடிய அன்பு மழை' போன்ற நாடகங்களால் நவீன
யுகத்தினரை திரும்பி பார்க்க வைத்த இளைஞர் விவேக் ராஜகோபால். அந்த
வரிசையில் தற்போது மதுவந்தி, சுரேஷ்வர் ஆகியோரின் சிறந்த தயாரிப்பு மற்றும்
கலைத்திறனால் 'சிவ சம்போ' வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறது என்பதில்
சந்தேகமில்லை.
written for tamil.jillmore.com
..................................................................
சமீபத்தில் எழுதியது:
வல்லினம் - விமர்சனம்
written for tamil.jillmore.com
..................................................................
சமீபத்தில் எழுதியது:
வல்லினம் - விமர்சனம்
2 comments:
சிவா... இந்த மேடை நாடகங்கள் பாக்கணும்னு ரொம்ப நாளா ஆசை.. எப்படி தெரிந்துகொள்வது.. நடைபெறும் இடம், நாடக குழு பற்றி....
bookmyshow.com> events
Post a Comment