CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Wednesday, March 26, 2014

கோமல் ஸ்வாமிநாதனின் - இருட்டுல தேடாதீங்க


மேடை நாடக உலகின் ஜாம்பவான் கோமல் ஸ்வாமிநாதன் 1971 முதல் 1995 வரை தமது சமூகம் சார்ந்த படைப்புகளால் பெரிதும் பேசப்பட்டவர். கோமலின் மறைவு நாடக உலகிற்கு பேரிழப்பாக அமைந்தது. 13 வருடங்களுக்கு பிறகு கோமலின் சில க்ளாச்சிக் நாடகங்களை மீண்டும் மேடையேற்றும் முயற்சியை மேற்கொண்டார் அவரது மகள் லலிதா தாரிணி. அம்முயற்சியின் முதற்கட்டமாக சென்ற ஆண்டு 'தண்ணீர் தண்ணீர்' எனும் பிரபல நாடகம் அரங்கேற்றப்பட்டது. அதன் பிறகு 2013 நவம்பரில் அரங்கேறிய நாடகம்தான் 'இருட்டுல தேடாதீங்க'. அந்நாடகம் 'முத்ரா' சார்பாக நேற்று தி.நகரில் மேடையேறி கணிசமான ரசிகர்களை ஈர்த்தது.

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற மாடசாமி தனது கூட்டாளி முருகப்பனுடன் சேர்ந்து முன்பொரு சமயம் மருத்துவனூர் கோயில் நடராசர் சிலையை கடத்தியதாகவும், அது உத்தண்டியில் புதைக்கப்பட்டு இருப்பதாகவும் கான்ஸ்டபிள் பொம்மையா, செல்வந்தர் சொக்கலிங்கம் மற்றும் அவரது பணியால் முப்பிடாதி ஆகியோரிடம் கூறிவிட்டு இறந்து போகிறான். சொக்கலிங்கத்தின் வீட்டில் வாடகைக்கு இருக்கும் பேராசிரியர் வீட்டடியில் அப்பொற்சிலை புதைந்திருப்பது தெரிய வர அதை எப்படி எடுப்பது என திட்டம் தீட்டுகிறார்கள் மூவரும். ஆனால் அந்த ரகசியம் மேலும் சிலருக்கு தெரிய பங்கின் எண்ணிக்கை அதிகமாகிறது. சிலையை கைப்பற்றப்பட்டதா என்பதை நகைச்சுவை கலந்த சமூகப்பார்வையுடன் படைத்திருக்கிறார் கோமல்  ஸ்வாமிநாதன்.

இந்நாடகத்தில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி மனதில் நிற்பது சொக்கலிங்கமாக வரும் ராஜ் மதன்தான். பிற நடிகர்களுக்கு வசனப்பயிற்சி தந்திருப்பதும் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. அதிர்ஷ்டத்தை நம்பி போலீஸ் வேலையை ராஜினாமா செய்பவராக போத்திலிங்கம் (பொம்மையா). அவ்வப்போது சிரிப்பிற்கு உத்திரவாதம் தருகிறார். ஆனால் 'இந்த கடைப்பாறைய எடுத்து' வசனத்தை ரிப்பீட் செய்யாமல் இருந்திருக்கலாம். இளம் வரவான கார்த்திக் (முப்பிடாதி) சிறப்பு. ஏசி குளிருக்கு நடுங்குவது போல பாவனை செய்வது, சாமியார் காலில் பறந்து வந்து விழுவது என  புருவம் உயர்த்த வைக்கிறார். பதற்றம் இல்லாத யதார்த்த நடிப்பு. பம்பாய் சித்தராக ரவியின் நகைச்சுவை ரசிக்க வைக்கிறது. ஒற்றை காட்சி என்றாலும் சொல்லத்தக்க பெர்பாமன்ஸ் தங்கபாண்டியனுடையது (மாடசாமி). க்ளைமாக்ஸில் தாம்பரம் ஸ்ரீனிவாசன் (பாகவதர்) கலகலக்க வைக்கிறார். இதர நடிகர்களின் நடிப்பு சுமார் ரகம்தான்.

சீரான வேகத்தில் திரைக்கதை சென்றாலும் சில நீண்ட வசனங்கள் தடைக்கற்களாக நிற்கின்றன. சாமியார் பற்றி அதிகம் சுராஜ் (சுந்தரம்/குப்புசாமி) நீண்ட நேரம் விவரிப்பது, மஞ்சுளாவின் (ஸ்ரீ லக்ஷ்மி) சமையல் ட்ராக் போன்றவற்றை சுருக்கி இருந்தால் இன்னும் விறுவிறுப்பு கூடியிருக்கும். 'உத்தண்டியில் மெட்ரோ ட்ரெயின் திட்டம்' என்று வரும் வசனத்தை இயக்குனர் லலிதா கவனத்தில் கொண்டிருக்கலாம். அவ்வளவு தூரம் மெட்ரோ ஏன் நீட்டிக்கப்பட வேண்டும்?

குக பிரசாத்தின் பின்னணி இசை ரசிகர்களை சோர்வடையாமல் வைத்திருக்க உதவி இருக்கிறது. மோகன் பாபுவின் அரங்க அமைப்பு நன்று. ஃபோகஸ் வெளிச்சம் போடுமிடத்தில் கலைவாணன் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம். தேவையான இடத்தில் இருந்து சற்று தாண்டி விழுகிறது வெளிச்சம்.

பணத்தாசை இச்சமூகத்தை எப்படி ஆட்டுவிக்கிறது என்பதை தமது பாணியில் ரசிக்கும்படி சொல்லி இருக்கிறார் கோமல் ஸ்வாமிநாதன். அவர் படைத்த மற்ற சிறந்த நாடகங்களும் விரைவில் மேடையேற்றப்படும் என நம்பலாம்.


7 comments:

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

திரு. கோமல் சுவாமி நாதன் அவர்களுடைய 'இருட்டுல தேடாதீங்க' நாடகம் பற்றிய விமர்சனம் சுவையாக இருந்தது. இந்த மின் வெட்டு நேரத்தில் இந்தத் தலைப்பு என்னை, 'அரசியல் நாடகமோ?' என யோசிக்க வைத்துவிட்டது.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...


சார், சில மாதங்களுக்கு முன் 'தோழன் ம.பா.' பதிவில் நான் கேட்டிருந்த ஒரு கேள்வி, இங்கே தங்களிடமும் கேட்கிறேன்:

.//'தண்ணீர் தண்ணீர்' நாடகம், திரைப்படமாக எடுக்கப்படுவதற்குமுன்னாலேயே அந்த நாடகத்தின் முழு வசனத் தொகுப்பும் முழுமையாக (சுமார் 32 பக்க அளவில்) சிறிய எழுத்துக்களில் 'கல்கி'யில் வெளியிடப்பட்டது இப்போது என் நினைவிற்கு வருகின்றது. [உங்கள் நினைவிற்கு(ம்) வருகிறதா தோழன் ம.பா.?] அவ்வாறான சிறப்பைப் பெற்றது அந்த நாடகம்.//

கல்கி-யில் நீங்கள் படித்ததுண்டா சார்?

திண்டுக்கல் தனபாலன் said...

வாங்க...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்... மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

அறிமுகப்படுத்தியவர் : சீனு என்ற ஸ்ரீனிவாசன் அவர்கள்
அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : திடங்கொண்டு போராடு

வலைச்சர தள இணைப்பு : கற்றுக்கொடுக்கும் பதிவர்கள்

A Simple Man said...

long time back there was a serial in DD in the same name. Vinu chakravarthi also acted in it.

! சிவகுமார் ! said...

வணக்கம் முஹம்மது,

இருட்டுல தேடாதீங்க 'மனதில்' ஏற்படும் கரண்ட் கட் பற்றிய நாடகம். தண்ணீர் தண்ணீர் பற்றி கல்கியில் படித்தது இல்லை. ஆனால் தேடிப்பிடித்து அத்திரைப்படத்தை பார்த்தேன். அதன் பிறகு சென்ற ஆண்டு மேடை நாடகமாக மீண்டும் அரங்கேற்றப்பட்டது. அது பற்றியும் எழுதி உள்ளேன்.

http://www.madrasbhavan.com/2013/04/blog-post_11.html.

! சிவகுமார் ! said...

@ DD

தகவலுக்கு நன்றி சார்.

! சிவகுமார் ! said...

@ A Simple Man

Thanks for the info.

Related Posts Plugin for WordPress, Blogger...