CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Monday, March 24, 2014

ப்ரெய்ஸ் தி லார்ட்


பால் ஜசாரியாவின் ப்ரெய்ஸ் தி லார்ட் எனும் நாவலை படமாக்கி இருக்கிறார் அறிமுக இயக்குனர் ஷிபு கங்காதரன். கோட்டயம் அருகே வசிக்கும் செழிப்பான விவசாயி ஜாய். மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் வாழ்வை சந்தோசமாக நகர்த்தி வருபவரிடம் அவரது வக்கீல் நண்பர் மூலம் ஒரு சோதனை வருகிறது. குடும்பத்தாரிடம் சொல்லாமல் திருமணம் செய்து கொண்ட ஜோடிகளை இரு தினங்களுக்கு அடைக்கலம் தந்தால் வழக்கை தன் வசம் கொண்டு செல்ல ஏதுவாக இருக்கும் என நிர்பந்திக்கிறார். முதலில் மறுத்தாலும் பிறகு சம்மதிக்கிறார் ஜாய். அதனால் ஏற்படும் பிரச்னைகளை அவர் எப்படி சமாளிக்கிறார்?

தப்பித்தவறி ஒரு நல்ல படத்தில் நடித்துவிட்டால் உடனே ஒரு கர்ண கொடூர படைப்பில் நடித்து திருஷ்டி சுத்தி போட்டுக்கொள்ளாவிட்டால் மோகன் லாலுக்கும், மம்முட்டிக்கும் தூக்கம் வராது போல. கோப்ரா எனும் கொலகுத்து சினிமாவிற்கு பிறகு மம்முட்டியிடமிருந்து வந்திருக்கும் பேரிம்சை தரிசனம்தான் இந்த ப்ரெய்ஸ் தி லார்ட். இரண்டாம் சீனில் கோவாவில் இவர் நண்பர்களுடன் குதூகலமாக இருக்கும் காட்சி படமாக்கப்பட்ட விதத்திலேயே அடுத்து நடைபெறவுள்ள விபரீதங்களை நம்மால் உணர முடிகிறது. 'இம்மானுவேல்' படத்தில் இயல்பான தம்பதிகளாக வந்து சென்ற மம்முட்டியும், ரீனுவும் இங்கே கடனுக்கென்று சேர்ந்து வாழ்கிறார்கள்.

சர்ச் ஃபாதர், மம்முட்டியின் ட்ரைவர் என ஆளாளுக்கு எதையோ பேசுகிறார்கள். என்னதான் சொல்ல வருகிறார்கள்? அட்லீஸ்ட் அந்த புது ஜோடிகளாவது உருப்படியாக நடிப்பார்களா? அப்போதாவது 'கதை' கண்ணில் படுமா என நினைத்தது குற்றமா?  சாம்குட்டியாக அஹமத் சித்திக் மற்றும் ஆனியாக அகங்ஷா வருகைக்கு பிறகுதான் 'ரத்தக்காவு' தீவிரமடைகிறது. இருவரின் வசன உச்சரிப்பும் படு அபத்தம். ஆல்மோஸ்ட் ஆன்ட்டி போலிருக்கும் அகங்ஷா என்னதான் க்ளாமராக வந்தாலும் ரசிக்க முடியவில்லை. ஆனால் மம்முட்டி மட்டும் கள்ளப்பார்வை பார்க்கிறார்.

'ப்ரெய்ஸ் தி லார்ட்' என்று கத்தி அஹமத் துவம்சம் செய்ய, மறுபுறம் 'காமுகன் காமுகி' என்று அடிக்கடி உச்சரித்து உசிரெடுக்கிறார் மம்முட்டி. போதாக்குறைக்கு ஏகப்பட்ட டைட் க்ளோஸ் அப் காட்சிகள் வேறு பயமுறுத்துகின்றன. ஒற்றை வீடு, ரப்பர் தோட்டம், சில வெளிப்புற காட்சிகள். அவ்வளவுதான் லொக்கேஷன். ஷான் ரஹ்மானின் இசையில் 'இன்னலேயோலம்' பாடல் மட்டும் சுமார்.  பிஜிபாலின் பின்னணி இசை 'சுத்தம்'.

'குடிப்பழக்கம் கூடாது' என அறிவுரை சொல்லிவிட்டு மம்முட்டியுடன் சேர்ந்து குடிக்கும் ஃபாதர், 'அல்லேலூயா' வழிபடுதல் முறையையும், டிஸ்கோதிக் கொண்டாட்டத்தையும் ஒன்றுபடுத்தி காட்டுமிடத்தில் மட்டும் இயக்குனரின் நையாண்டி ரசிக்க வைக்கிறது. ஆனால் இதுபோன்ற நக்கல்கள் மலையாள படத்தில் சாதாரணமாக வலம் வருவதால் பெரிதாக சபாஷ் போட முடியவில்லை.

இடைவேளை வரைக்குமே பொறுமை தாளாமல் கிடக்க, அதன் பிறகு இன்னும் அதள பாதாள வீழ்ச்சியை சந்திக்கிறது படம். வாட்சை பார்ப்பது, செல்போனை நோண்டுவது, தூங்குவது என திரையை பார்க்காமல் தவிர்க்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையும் செய்த பிறகும் இன்னும் அரை மணிநேர படமிருக்கிறது என்று தெரியும்போது...எத்தனை ஆயிரம் செலவானாலும் பரவாயில்லை, உயர் ரக மாட்டு தோலினால் செய்த சாட்டைகள் இரண்டை வாங்கி என்னை நானே விடிய விடிய  அடித்துக்கொள்ளலாம் எனத்தோன்றியது.

இப்படிப்பட்ட படங்களில் நடிப்பதற்கு பதில் சும்மா இருந்தால்தான் என்ன மம்முக்கா?


2 comments:

ezhil said...

முதலிலேயே நன்றாக இல்லைன்னு சொல்லிட்டீங்க....அப்புறம் எப்படி விமர்சனத்தை முழுமையா படிக்கறது?

! சிவகுமார் ! said...

அந்த அளவுக்கு ஆற்றாமை கொப்பளிச்சிருச்சிங்க.

Related Posts Plugin for WordPress, Blogger...