CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Sunday, March 2, 2014

வல்லினம்
தப்பும் தவறுமாக தமிழ் பேசி சினிமா ரசிகர்களை  இம்சைக்கு ஆளாக்கும் இளம் நாயகர்கள் லிஸ்டில் நம்பர் ஒன் இடத்தில் இருந்து வந்தவர் நகுலன். 'காதலில் விழுந்தேன்' படத்திற்கு பிறகு எழுந்தேன் என்று சொல்லிக்கொள்ள ஒரு  சந்தர்ப்பமும் அமையவில்லை. 'ஈரம்' இயக்குனர் அறிவழனும் நான்காண்டுகள் கழித்து தனது படைப்பை கொண்டுவந்துள்ளார்.

திருச்சி கல்லூரி ஒன்றில் சிறந்த கூடைப்பந்து வீரனாக திகழும் கிருஷ்ணா தனது உற்ற நண்பன் சிவா மீது தற்செயலாக பந்தை எறிய அது அவனது உயிரை பறிக்கிறது. நண்பனை இழந்த சோகத்தை மறக்க சென்னை கல்லூரிக்கு இடம் மாறுகிறான். விருப்ப விளையாட்டான கூடைப்பந்து தவிர்க்கிறான். ஆனால் அங்கிருக்கும் இறுதியாண்டு மாணவர்கள் கிரிக்கெட் சாம்பியன்கள் என்பதால் இவர்களை இளப்பமாக பார்த்து நையாண்டி செய்கிறார்கள். கல்லூரி வளாகத்தில் நடக்கும் அகில இந்திய கல்லூரிகளுக்கான கூடைப்பந்து போட்டியில் வென்று தங்கள் பலத்தை நிரூபிக்க கிருஷ்ணா தலைமையிலான அணி எப்படி போராடுகிறது என்பதுதான் வல்லினத்தின் கதை.

அளவாக பேச வைத்தும், கூடைப்பந்து வீரனுக்கான பயிற்சிகளை மேற்கொள்ள வைத்தும் நகுலனை மெருகேற்றி இருக்கிறார் இயக்குனர். அவ்வகையில் நகுலனுக்கு வல்லினம் உருப்படியான முதல் படம் என சொல்லலாம். சக கல்லூரி மாணவர்களையும் இயல்பாக நடிக்க வைத்திருக்கிறார்கள். ஜெகனின் காமடி பெரிய உறுத்தல். மிக சீரியசான கட்டங்களில் கூட ரம்பம் போட்டு தள்ளுகிறார். நாயகி மிருதுளா. சொல்ல எதுவுமில்லை. அவருடைய தோழியாக வரும் பெண் அத்தனை அம்சம். பேசாமல் அந்தப்பெண்ணை ஹீரோயினாக போட்டிருக்கலாம். எல்லா விளையாட்டு படங்களிலும் வரும் 'பகவத் கீதை கிருஷ்ணன்' கோச் இங்கும் உண்டு. அதுல் குல்கர்னி வடிவில். ஆனால் கோபக்கார கோச்சாக மனதில் நிற்கிறார். தொழிலதிபராக ஜெயப்ரகாஷ் எப்போதும் போல் சிறப்பு.

'வல்லினம் வல்லினம்' தவிர்த்து மற்ற பாடல்கள் அனைத்தும் படு சுமார். பாடல்களை பெரிய அக்கறையின்றி காட்சிப்படுத்தி இருப்பது போல் தெரிகிறது. க்ராபிக்ஸ் உதவி பெரிதாக இன்றி சில்வாவின் சண்டைக்காட்சிகள் நன்று.

நல்லவர்கள் தோற்கும் அணிக்கு ஆபத்பாந்தவனாக வரும் கோச், இறுதிப்போட்டியில் கிட்டத்தட்ட தோற்கும் நிலையில் 'செய் அல்லது செத்துமடி' வசனம் பேசி சர சரவென முன்னேறி ஓரிரு பாய்ன்ட் அதிகம் பெற்று ஜெயிப்பது, இடையே கொஞ்சம் காதல் போன்ற அலுத்துப்போன சமாச்சாரங்கள் இங்கும் உண்டு. ஆனால் அவற்றையும் தாண்டி இப்படம் சில சிறப்புகளை பெற்றுள்ளது.

சிறந்த துணை நடிகர்கள் (குறிப்பாக கல்லூரி மாணவர்கள்), கூடைப்பந்து விளையாட்டு குறித்து இயக்குனருக்கும், நடிகர்களுக்கும் இருக்கும் அடிப்படை புரிதல், இறுதிப்போட்டியில் நிஜமான கூடைப்பந்து போட்டியில் காணும் விறுவிறுப்பு, கிரிக்கெட்டால் மற்ற விளையாட்டுகள் புறக்கணிக்கப்படுவதன் பின்னணி போன்ற முக்கிய அம்சங்கள் சிறப்பாக கையாளப்பட்டு இருப்பது வல்லினத்தின் பலம்.  கோப்பையை வாங்காமல் சிறுவன் ஒருவனுக்கு பந்தை கூடையில் போட நகுலன் உதவும் இறுதிக்காட்சிக்கு பலமாக கை தட்டலாம்.

கமர்சியல் படங்களுக்கான சமரசங்களை செய்து நம்மை சோதித்தாலும் கூடுமானவரை கூடைப்பந்து விளையாட்டை சுற்றியே கதையை நகர்த்திய அறிவழகனை பாராட்டலாம். விளையாட்டு படங்களின் வரிசையில்  இன்னொரு உருப்படியான சேர்க்கை இந்த வல்லினம்.

........................................................

written for tamil.jillmore.com


சமீபத்தில் எழுதியது:

4 comments:

Devils protege said...

நகுல் நடிச்ச படம் பாக்கறது கொஞ்சம் பயமா தான் இருக்கு பாஸ் ..மூஞ்சில நவ ரசம் காட்டுறேன்னு நம்மள காட்டு காட்டுன்னு காட்டி விடுமே தம்பி !

MANO நாஞ்சில் மனோ said...

மாசிலாமனியில நகுலனை பார்த்துட்டு எழும்பி ஓடினவந்தான் நானு...

அதுபோல நகுலனும் ஓடிட்டாரு, இப்போதான் மறுபடியும் வாறாரா ?

பால கணேஷ் said...

அட... கதாநாயகியை விட அவ கூட வர்ற தோழி அழகா இருக்கான்னு ஏகதேசம் எல்லாரும் எழுதியாச்சு. அவசியம் பாத்துறணும்பா... ஹி... ஹி... ஹி... தோழியை!

வெங்கட் நாகராஜ் said...

நகுல்.... எனக்கு என்னமோ இவரைப் பார்த்தாலே பிடிப்பதில்லை.....

நேற்று ஏதோ ஒரு தொலைக்காட்சியில் இவரது நேர்காணல். அலறி அடித்து சேனலை மாற்றினேன்.....

Related Posts Plugin for WordPress, Blogger...