CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Saturday, March 15, 2014

ஊருக்கு எளச்சவன் டைடல் பார்க் ஆண்டிதோழர் ஆரூர் முனாவின் பதிவு: சென்னையில் வாடகை வீடுகளின் அவலங்கள்

                                                                    


மேற்கண்ட பதிவிற்கு கணினித்துறை நண்பர்கள் சார்பாக எதிர் கருத்தை வைத்தே ஆக வேண்டி இருப்பதால் இப்பதிவை எழுத வேண்டி இருக்கிறது.

அதென்னவோ தெரியவில்லை உலகின் எந்தப்பகுதியிலும் (குறிப்பாக இந்தியாவில் கணினித்துறை வளர்ச்சி பெற்றுள்ள நகரங்களில்) இல்லாத அளவிற்கு தமிழகத்தில்தான் சாப்ட்வேரில் வேலை பார்க்கும் இளைய சமூகத்தின் மீது வெறுப்பெனும் விஷத்தை கக்குகிறார்கள். என்னவோ இவர்கள் எல்லாம் ஆதிமுதல் இன்று வரை பரம ஏழைகளாக இருப்பது போலவும், சாப்ட்வேர் துறையில் இருப்பவர்கள் எல்லாமே குபேரனின் சொந்தக்காரன் போலவும் படம் காட்டுகிறார்கள். இதையே கணினித்துறையில் வேலை பார்க்கும் ஒருவர் 'அவன், இவன்' என்று ஏக வசனத்தில் மற்ற துறை ஆட்களை பற்றி எழுதி இருந்தால் மொத்தமாக வரிந்து கட்டிக்கொண்டு வந்திருப்பார்கள். அதையே வேற்றுத்துறை மாப்பிள்ளைகள் எழுதினால் 'சமூக எழுச்சி' போன்ற மாயை உண்டாகும். அருமை. சபாஷ். பலே. பிரமாதம். 

என்னமோ இத்துறையில் வேலை செய்பவர்கள் எல்லாருமே சென்னைவாசிகள் என்பது போன்ற பிம்பத்தை வேறு வடிவமைத்து விட்டனர். ஆனால் நிஜத்தில் கிட்டத்தட்ட 75% சதம் பேர் சென்னை தாண்டி வேறு இடங்களில் இருந்து வந்து இங்கு வேலை செய்பவர்கள்தான் என்பதே உண்மை. தயவு செய்து திருவல்லிக்கேணி மேன்சன், மகளிர் விடுதிகள் (குறிப்பாக ரங்கநாதன் தெருவிற்கு பின்பக்கம் இருப்பவை) மற்றும் இதர குடியிருப்பு பகுதிகள் அனைத்திலும் ஒரு சர்வே எடுத்து பாருங்கள். எத்தனை பேர் சென்னை மைந்தர்கள், எத்தனை பேர் வெளியூர் ஆட்கள் என்பது புரிந்துவிடும்.

தந்தையின் சொற்ப வருமானத்தில் குடும்ப தொழில் செய்து முன்னேற முடியாமல், கடனில் மூழ்கி இருக்கும் விவசாய நிலங்களை வைத்துக்கொண்டு பரிதவிக்கும் குடும்பத்தை மீட்டெடுக்க, சகோதரிகளின் திருமணத்தை முடிக்க இப்படி பல்வேறு சோதனைகளுக்கு தீர்வு தேட  கனவுகளை சுமந்து கொண்டு சென்னையில் கணினி வேலை பார்க்க வரும் சகோதர, சகோதரிகள் எல்லாம் உங்கள் இனம்தான் என்பதில் எப்போது புத்தியில் உரைக்க போகிறது?

கடந்த 15 ஆண்டுகளாக எத்தனை பெற்றோர்கள் 'தமிழ் ஆசிரியர்கள் மணமகன்/மணமகளாக வர வேண்டும்' என்று ஆசைப்பட்டு இருக்கிறார்கள். எந்த விளம்பரத்தை பார்த்தாலும் 'சாப்ட்வேர் மாப்பிள்ளை' வேண்டும் என்றுதானே ஆளாய் பறந்தார்கள். இப்போதும் பறக்கிறார்கள். அப்போது எங்கே போயிற்று உங்கள் இத்துப்போன அறச்சீற்றம்? 

'கம்ப்யூட்டர் துறையில் வேலை பார்ப்பவர்கள் எல்லாரும் 80,000 அல்லது லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குகிறார்கள்' என்று உளறுவதை முதலில் நிறுத்துங்கள். இன்றைய பொருளாதார சூழலில் கூட வெறும் 10,000 முதல் 20,000 ரூபாய் வரை மட்டுமே வாங்கிக்கொண்டு சென்னையில் வேலை பார்க்கும் வெளியூர் தோழர்கள் எத்தனை ஆயிரம் பேர் என்று தெரியுமா? அதை எப்போது வேண்டுமானால் நான் நிரூபிக்க தயார். கழுத்தை நெரிக்கும் விலைவாசியில் ஒரு சிங்கிள் பெட்ரூம் வீட்டை வாடகைக்கு எடுத்து மற்ற செலவுகளை கணக்கிட்டால் அவர்கள் கடன் வாங்கிதான் காலத்தை ஓட்ட முடியும் (மற்ற துறைகளில் இருப்பது போல மேலதிகாரிகள் இதற்கு விதிவிலக்கு. அவர்கள் சொற்ப எண்ணிக்கையில் தான் இருப்பார்கள். இங்கே குறிப்பிட்டு சொல்வது பெரும்பாலான ஊழியர்களை). அதனால்தான் நான்கைந்து நண்பர்கள்/ தோழிகள் சேர்ந்து ஒரே வீட்டில் வாடகைக்கு இருக்கிறார்கள். அதில் மிச்சமாகும் பணத்தை ஊருக்கு அனுப்புகிறார்கள் அல்லது அவர்கள் விருப்பத்திற்கு செலவு செய்கிறார்கள்? அதில் உங்களுக்கு எங்கே வலிக்கிறது?    

சென்னை போன்ற பெருநகரங்கள் ராட்சச வளர்ச்சி பெற்று வரும்போது வீட்டு வாடகை, பொருட்களின் விலை இத்யாதிகள் ஏறத்தான் செய்யும். என்னமோ தனக்கு கிடைக்கும் ஒரு லட்சத்தில் சிங்கிள் பெட்ரூம் வீட்டிற்கு மட்டும் 50,000 வாடகை தந்துவிட்டு மீதிப்பணத்தை டிப்ஸாக வீட்டு ஓனருக்கு தருவதுபோல சாப்ட்வேர் நபர்களை பார்த்து பொங்குகிறீர்களே? 

கோயம்பேட்டில் பேருந்து நிலையம் வரவுள்ளதாக அறிவிப்பு வந்தபோது அங்கு கூட ரியல் எஸ்டேட் விலை அநியாயத்திற்கு எகிறியது. அதற்கும் சாப்ட்வேர் ஆட்கள்தான் காரணமா? மெட்ரோ ரெயில் முழுமையாக செயல்பட ஆரம்பித்ததும் அவ்வழி தடத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் வாடகை வெகுவாக உயரும் என்று பிரபல ஊடகங்களின் ஆய்வுகள் சொல்கின்றன. இது உலகளாவிய நகரங்களில் இருக்கும் யதார்த்தம். எதற்கெடுத்தாலும் சாப்ட்வேர் ஆட்களை நொட்டை சொல்வது பெரிய தமாசு.  
         

'தலப்பாகட்டிக்கும், போலி 'தலப்பாகட்டுகளுக்கு'மான வித்யாசத்தை சற்று விவரம் தெரிந்த பாமரர் கூட எழுதில் கண்டுபிடித்துவிடுவார். ஆனால் சாப்ட்வேர் இஞ்சினியர் எனும் வார்த்தைக்கான அர்த்தத்தை சுத்தமாக புரிந்துகொள்ளாமல் தினசரிகளும், சில சமூக தீப்பந்தங்களும் செய்யும் கூத்து இருக்கிறதே? அடங்கப்பா. அதாவது கம்ப்யூட்டர் டிப்ளமா படித்தாலே சாப்ட்வேர் இஞ்சினியர் என்று அர்த்தமாம். என்ன கொடும சார் இது? அடித்தட்டு மற்றும் நடுத்தர வர்க்க இளைஞர்களுக்கு பல்லாயிரக்கணக்கில் வேலைகளை தருவது ஐ.டி.யை விட BPO துறைதான் என்பதை நினைவில் கொள்க மகராசாக்களே. அதில் வேலை செய்யும் எவரையும் சாப்ட்வேர் இஞ்சினியர் என்று சொல்வதில்லை. அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.

அப்படியே ஐ.டி. அல்லது BPO வில் வேலை பார்ப்பவர் பெரும் சம்பளம் பெறுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். சில ஆண்டுகளுக்கு ஒரு முறை 'ரிசசன்' எனும் கடும் பொருளாதார வீழ்ச்சி உலகை சுழற்றி அடிப்பது வழக்கம். அதனால் பெரும் பாதிப்பை அடைவது கணினித்துறை என்பது பலருக்கும் தெரிந்ததே. அப்போது கூட 'இவங்களுக்கு நல்லா வேணும்' என்று எள்ளி நகையாடிய சமூகமிது. அச்சமயம் அவர்களுக்கு உங்கள் பாக்கெட்டில் இருந்து எத்தனை ரூபாய் தர்மம் செய்துள்ளீர்கள்?. 'ஏன் செய்ய வேண்டும்?' எனக்கேட்பீர்கள். அதைத்தான் கேட்கிறோம். அவர்கள் நன்றாக வாழ்ந்தால் மட்டும் ஏன் எரிய வேண்டும்? நீங்கள் மட்டும் வாழ்நாள் முழுக்க ஏழையாகவே இருக்க வேண்டும் என்று விரும்புவீர்களா? இல்லை உங்கள் வீட்டு பெண்ணுக்கு ஒரு ரூபாய் வரதட்சணை வாங்காமல் மாதம் ஒரு லட்சம் சம்பாதிக்கும் சாப்ட்வேர் மாப்பிள்ளை வந்தால் வேண்டாம் என்று நிராகரிப்பீர்களா? 

வேளச்சேரியில் வீடு, கார் என்று வாங்கிவிட்டு கடனை வாங்கி சிரமப்படுகிறானாம் 'கொழுப்பெடுத்த' சாப்ட்வேர் காரன். அது அவன் விருப்பம்/தலையெழுத்து. உங்களுக்கு என்ன வந்தது? நீங்கள் அந்த கடனை அடைக்க போகிறீர்களா? அல்லது சாப்ட்வேர் நண்பர்களை தவிர வேறு எவருமே தனியார் வங்கியில் கடன் வாங்கி சிரமப்படவில்லை என்று சொல்கிறீர்களா? உங்கள் துறைக்கு தேசிய வங்கியில் லோன் தராவிட்டால் யூனியனை கிளப்பிக்கொண்டு அந்த வங்கி வாசலில் போராடுங்கள். அதற்கு எ துக்கய்யா எங்களை வம்புக்கு இழுக்க வேண்டும்? 

உங்களுக்கு 30,000 ஆயிரம் சம்பளம் என்றாலும் 60 வயது வரை வேலை நிரந்தரம். அதுபோக அரசாங்கத்தின் இதர சலுகைகள் உண்டு. பென்சன், இலவச பிரயாண வசதி. மேலதிகாரி பிரச்னை செய்தால் யூனியன் எனும் பெயரில் போராட்டம் செய்வீர்கள். இத்தனை மணிநேரத்தில் இவ்வளவு வேலைகள் நடந்தாக வேண்டும் என்று நித்தம் உங்கள் கழுத்தில் அடித்து வேலை வாங்கி விட முடியாது. 

ஆனால் இங்கே எப்போது வேலையில் இருந்து துரத்தப்படுவோம் என்று தெரியாது. சாமான்ய ஊழியனோ அல்லது மேனேஜரோ.. சட்டென வெளியே அனுப்பப்பட்டால் யூனியன் வந்து நிற்காது. அதிகப்படி வேலை இருந்தாலும் அதை முடிக்காமல் வீட்டிற்கு சென்று விட முடியாது. இக்கரைக்கு அக்கரை பச்சை. அவ்வளவே. 

மற்ற துறையினரை கணினித்துறை நண்பர்கள் வம்புக்கு இழுப்பதை விட உங்களை போன்ற போராளிகள் அவர்களை சீண்டுவதுதான் பேஷன் ஆகிவிட்டது. உங்களை 'ஆயிரத்தில் ஒருவன்' மணிமாறனாக காட்டிக்கொள்ள நாங்களா கிடைத்தோம்? போங்க பாஸ். 

பல்வேறு நவீன கண்டுபிடிப்புகள் மூலம் உலக மக்களின் நேரத்தை சேமித்து, வியாபாரத்தை பெருக்கி கணினி மூலம் பெரும் புரட்சி செய்த நண்பர்களுக்கு கிடைத்த பெரும் பரிசாக இது போன்ற வசவுகளை ஏற்றுக்கொள்கிறோம். 

அடுத்த டார்கெட்/ப்ராஜக்ட்டில் கவனத்தை செலுத்த ஆரம்பிப்போம் தோழர்களே. இவர்கள் பேசி/ஏசிக்கொண்டு இருக்கட்டும். அவர்களின் வசதிக்காக இன்னொரு மென்பொருளை உருவாக்க... Let us start our duty!!

.........................................................................
33 comments:

simon anandhraj said...

superji superji...

aavee said...

இவர் சொல்றதும் சரியாத்தான் இருக்கு.. இதுக்கு அவர் பதில் சொல்வாரா?

சீனு said...
This comment has been removed by the author.
சீனு said...

வழக்கமாகவே ஐ.டி துறை குறித்து யாரேனும் பதிவு செய்தால் முதல் ஆளாக உங்கள் கருத்துக்களை பதிவு செய்வதற்கு முதல் நன்றி மற்றும் வந்தனம்...

இது தற்காலத்தில் இருக்கும் ஒரு பெரும்பான்மைக் கருத்தாக மாறியுள்ளது.. அண்ணன் ஆரூராரின் பதிவைப் படித்தேன்.. எல்லாருமே ஒரு மேலோட்டமான கணினித்துறை ஊழியணைக் காண்கிறார்களே தவிர அவனது சமூக சூழ்நிலைகளைப் பார்ப்பதில்லை.. அதுவும் என்னை விட ஏழு வருடங்கள் முந்தையவர்கள் மனதில் கணினித்துறை பற்றி இருக்கும் பிம்பம் பிரம்மாண்டமாக உள்ளது.. அவர்களுடைய சம காலத்தில் அவர்கள் சொற்ப வருமானம் பெற்றபோது செழித்து ஓங்கியிருந்தது கணினித்துறை..ஆனால் இன்றளவிலும் தங்கள் கருத்துக்களை மாற்றாமல் தாங்கிப் பிடித்துக் கொண்டுள்ளார்கள்...

இன்றோ நிலைமை தலைகீழ்.. மூணு மாசம் சம்பளம் பெறாமல் வேலை பார்க்கும் ஐடி ஊழியனைப் பற்றி மற்ற படிப்பு படித்தவர்களுக்கு தெரியாது.. அதுதான் சாபக்கேடு.. தற்சமயம் கணினித் துறையில் வேலையில் இருப்பவர்கள் அனைவரும் தப்பிப் பிழைத்தவர்கள் மட்டுமல்ல, எப்போது வேலை போகுமோ என்பதறியாமல் தத்தளிப்பவர்களும் கூட...

Unknown said...

சிவா நான் சொன்ன கருத்தில் நான் எந்த அளவுக்கும் பின்வாங்கப் போவது கிடையாது. நான் சொன்னதில் எள்ளளவு கூட பொய் கிடையாது. அனைத்தும் நான் சொன்னது, ஆனால் நான் தெளிவுபடுத்த மறந்த விஷயம் இரண்டு, முதலாவது, நான் குறிப்ட்டது வெளிமாநிலத்தில் இருந்து வந்த சாப்ட்வேர் இஞ்சினியர்களை. உள்ளூர்க்காரன் எதுக்கய்யா வெளியில வீடு எடுக்கப் போறான்

இரண்டாவது நான் சொன்ன காலக்கட்டம் 2003 முதல் 2009 வரை, அந்த காலத்தில்சாப்ட்வேர் துறையில் இணைந்தவர்கள் இன்று இருக்கும் நிலை.

இன்று சம்பளமில்லாமல் சாப்ட்வேர் துறையில் வேலை பார்க்கும் பல சின்னப்பசங்களை எனக்கு தெரியும், ஆனால் அவர்கள் எல்லாம் தமிழ்கார பசங்க, தாம்பரத்தில் நிறைய கம்பெனிகள் சம்பளமில்லாமல் ஆட்களை தேர்வு செய்து வேலையில் பிழிந்து வருகிறார்கள்

இன்னும் நிறைய இருக்கு. இறங்கியாச்சி, இப்பத்தான் ரொம்ப நாளைக்கு பிறகு பதிவுலகம் களை கட்டியிருக்கு, இதை அப்படியே விட வேண்டாம். நான் எந்தளவுக்கு பஞ்சாயத்துக்கும் தயார். வாங்கடே மோதிப் பாத்துருவோம்.


திண்டுக்கல் தனபாலன் said...

y2k பிரச்சனை வந்து, சில வருடங்கள் கழித்து வந்திருக்க வேண்டிய பதிவு... பத்தே வருடங்கள் IT கம்பெனிகளில் பணி செய்து விட்டு, இன்று படுத்த படுக்கையாய் உள்ளவர்களும் இங்கு உண்டு... சம்பாதித்ததெல்லாம் மருத்துவ செலவிற்கு செல்கிறது...

எதுவும் அளவோடு இருந்தால் தான் ஆசை...!

! சிவகுமார் ! said...

@ சைமன், சீனு, கோவை ஆவி, திண்டுக்கனல் தனபாலன். வருகைக்கு நன்றி.

! சிவகுமார் ! said...

@ ஆரூர் முனா


/நான் குறிப்ட்டது வெளிமாநிலத்தில் இருந்து வந்த சாப்ட்வேர் இஞ்சினியர்களை. உள்ளூர்க்காரன் எதுக்கய்யா வெளியில வீடு எடுக்கப் போறான்/

அருமை. நண்பரே, பெரும்பாலான ஐ.டி., BPO நிறுவனங்கள் தென் சென்னை அல்லது அதை ஒட்டிய புறநகர் பகுதிகளில் தான் உள்ளது. வட சென்னையில் இருந்து அங்கு வேலைக்கு செல்வதால் நேர மற்றும் பண விரயம், உடற்சோர்வு ஏற்படுகிறது. பகலில் வாகன நெரிசல், இரவு நேரமென்றால் பெண்களுக்கு பாதுகாப்பு குறைப்பாடு. எனவே கூடுமானவரை வேலை செய்யும் நிறுவனத்திற்கு அருகே வாடகை வீடு பார்க்கும் ஊழியர்கள் கணிசமான அளவில் இருக்கிறார்கள் என்பதை மறந்து விடாதீர்கள். சொந்த வீடு வைத்திருக்கும் உள்ளூர் வாசிகள் நிலை வேறு. ஆனால் வாடகை வீட்டில் இருப்பவர்கள் உள்ளூர் ஆட்களாக இருந்தாலும் வேலை பார்க்கும் இடத்திற்கு பக்கம் இடம் மாறவே விரும்புகிறார்கள்.


/இரண்டாவது நான் சொன்ன காலக்கட்டம் 2003 முதல் 2009 வரை, அந்த காலத்தில் சாப்ட்வேர் துறையில் இணைந்தவர்கள் இன்று இருக்கும் நிலை./


நீங்கள் சொன்ன பல விஷயங்களுக்கு நேரடியாக பதில் சொல்லி விட்டேன். இவ்வரியின் மூலம் நீங்கள் எதை குறிப்பிட விரும்புகிறீர்கள் என்று முதலில் விளக்கவும். பிறகு பதில் சொல்கிறேன்.

குறிப்பு: பேஸ்புக், பதிவு இரண்டிலும் ஒரே கருத்தை போடுங்கள். இரு பக்கமும் ஓடிப்பிடித்து விளையாட இயலவில்லை. முக்கியமான களம் இதுதான். மொத்தமாக தங்கள் கருத்துகளை சொல்லி விட்டு 'டாட்' வையுங்கள். அதற்கும் இங்கேயே பதில் சொல்கிறேன்.

Unknown said...

நான் என் கட்டுரையின் மூலம் சொல்லியது சென்னையில் வாடகை வீடுகளில் வாடகை கன்னாபின்னாவென்று ஏறியதற்கு காரணம் இந்த சாப்ட்வேர் இஞ்சினியர்கள் தான். இதில் மாற்றுக் கருத்தே இல்லை. நான் சம்பள பேதம் பற்றி பெரிதாக குறைபட்டுக் கொள்ளவில்லை.

நான் இப்பவும் சொல்கிறேன், நான் டிப்ளமோ முடித்த காலகட்டத்தில் சாப்ட்வேர் துறையில் நுழைந்தவன் எல்லாம் லட்சத்தை நெருக்கி தான் சம்பளம் வாங்குகிறான். சென்னையில் இரண்டு வீடுகளுக்காவது ஈஎம்ஐ கட்டுகிறான்.

கேம்பஸ் இன்டர்வியுவிலும் செலக்ட் ஆகாமல், மொன்னை காலேஜில் பிஈ படித்து விட்டு சென்னையில் வேலை தேடுபவர்கள் தான் சம்பளம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை எக்பீரியன்ஸ் தான் முக்கியம் என்று வேலை செய்கிறார்கள். இவர்கள் தான் பரிதாபத்துக்கு உரியவர்கள்.

மற்றபடி சாப்ட்வேர் துறைக்கும் பிபிஓவுக்கும், ட்ரெயினிக்கும் புரோகிராமருக்கும், புரோகிராமருக்கும் டிஎல்லுக்கும் வித்தியாசம் தெரியாமல் போற போக்கில் அள்ளிவிட்டு செல்லவில்லை.

இனி நான் இங்கு உக்காந்து விளக்கம் சொல்லவேண்டியதில்லை, எதுவாக இருந்தாலும் இனி இன்னும் ராவாக என் பதிவிலேயே போட்டுக் கொள்கிறேன். விளக்கத்தை அங்கு வந்து கோரவும்.

! சிவகுமார் ! said...

//ஆரூர் மூனா said...


/நான் என் கட்டுரையின் மூலம் சொல்லியது சென்னையில் வாடகை வீடுகளில் வாடகை கன்னாபின்னாவென்று ஏறியதற்கு காரணம் இந்த சாப்ட்வேர் இஞ்சினியர்கள் தான். இதில் மாற்றுக் கருத்தே இல்லை. நான் சம்பள பேதம் பற்றி பெரிதாக குறைபட்டுக் கொள்ளவில்லை./

அதைத்தான் நான்கைந்து பேர் இணைந்து வாடகை தருவதால் அவர்களுக்கு லாபம் என்று சொல்லி ஆயிற்று. திரும்பவும் கைய புடிச்சி இழுத்தியா என்றால்? நீங்கள் கடையில் வாங்கும் பொருளை உங்களை விட கம்மி விலைக்கு பேரம் பேசி வாங்குபவனை திட்டுவீர்களா அல்லது விற்பவனை திட்டுவீர்களா. உங்கள் சம்பத்தை வாடகை ஏற்றிய வீட்டுக்காரர்களிடம் காட்ட மாட்டீர்கள்.அப்படித்தானே?

/நான் இப்பவும் சொல்கிறேன், நான் டிப்ளமோ முடித்த காலகட்டத்தில் சாப்ட்வேர் துறையில் நுழைந்தவன் எல்லாம் லட்சத்தை நெருக்கி தான் சம்பளம் வாங்குகிறான். சென்னையில் இரண்டு வீடுகளுக்காவது ஈஎம்ஐ கட்டுகிறான். /


சாப்ட்வேர் துறையில் நுழைந்தவன் எல்லாம் லட்ச ரூபாயை அப்போது மாதம் வாங்கியதாக கூறுவது பச்சை பொய். அபாண்டம். ஒரு சிலர் வாங்கி இருக்கலாம்.

/கேம்பஸ் இன்டர்வியுவிலும் செலக்ட் ஆகாமல், மொன்னை காலேஜில் பிஈ படித்து விட்டு சென்னையில் வேலை தேடுபவர்கள் தான் சம்பளம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை எக்பீரியன்ஸ் தான் முக்கியம் என்று வேலை செய்கிறார்கள். இவர்கள் தான் பரிதாபத்துக்கு உரியவர்கள்./

அது அவரவர் சாமர்த்தியம். ஏன் அவர்களுக்கு வேலை இல்லை என்று அரசாங்கத்தை கேளுங்கள். முடிந்தால் உங்கள் துறையில் 60 ஆண்டுவரை வேலை வாங்கி தாருங்கள். எதற்கு சாப்ட்வேர் ஆளை திட்ட வேண்டும்.

/மற்றபடி சாப்ட்வேர் துறைக்கும் பிபிஓவுக்கும், ட்ரெயினிக்கும் புரோகிராமருக்கும், புரோகிராமருக்கும் டிஎல்லுக்கும் வித்தியாசம் தெரியாமல் போற போக்கில் அள்ளிவிட்டு செல்லவில்லை. /

சத்தியமாக இல்லை. நீங்கள் அள்ளி விட்டதற்குத்தான் தெளிவான எதிர் கருத்து தரப்பட்டுள்ளது.


/இனி நான் இங்கு உக்காந்து விளக்கம் சொல்லவேண்டியதில்லை, எதுவாக இருந்தாலும் இனி இன்னும் ராவாக என் பதிவிலேயே போட்டுக் கொள்கிறேன். விளக்கத்தை அங்கு வந்து கோரவும்./


விவாதத்தில் யார் ஜெயித்தார் என்று போட்டி போட ஆரம்பித்தால் தொடர்ந்து கொண்டே இருக்கும். உங்கள் பதிவிற்கு உங்கள் வாசகர்கள் சிலரே எதிர்கருத்து கூறி இருக்கிறார்கள். என் துறை பற்றி எனக்கு தெரியும்போது நான் எதற்கு விளக்கம் கோர வேண்டும்? நீங்கள் ராவாக போட்டாலும் சரி, 'ஷோ'வாக போட்டாலும் சரி. அது உங்கள் விருப்பம். வாழ்த்துகள்.

”தளிர் சுரேஷ்” said...

ஆரூர்மூனாவின் இந்த வாதத்தை ஏற்றுக்கொள்ளலாம். சாப்ட்வேர் துறையினரால்தான் வாடகை ஏறியது என்பது உண்மை. ஆனால் இன்று அதே ஐ.டி யில் பணியாற்றுவோர் குறைவான சம்பளமே பெற்று உழைக்கின்றனர் என்பதும் உண்மை. ஆரூராரின் தளம் சென்று வருகிறேன்! நன்றி!

செங்கோவி said...

எதற்கெடுத்தாலும் ஐ.டி.காரனை குறை சொல்வதை கண்டிப்பது சரி தான். ஆனாலும் ஆரூர் சொல்வதை முழுக்க ஒதுக்கிவிட முடியாது சிவா. அன்றைய சாஃப்ட்வேர் ஆட்கள் ஆரம்பித்து வைத்த விளையாட்டுக்கு, இன்றைய சாஃப்ட்வேர் ஆட்களே பலிகடா ஆகிக்கொண்டிருக்கிறார்கள்.

காலையில் போய் மாலையில் வரும் 8 மணிநேர வேலை இல்லை ஐ.டி. அதனாலேயே ஆபீசுக்குப் பக்கத்தில் வீடு தேடவேண்டிய நிர்ப்பந்தம். அதை மிஸ்யூஸ் செய்யும் புரோக்கர்கள், ஹவுஸ் ஓனர்கள்...என இருதரப்பிலும் நியாயம் உண்டு.

நம்ம ஆரூர் தானே..மணிமாறன் ஆகட்டுமே!

பால கணேஷ் said...

செங்கோவி அண்ணாத்த நாட்டாமை ரேஞ்சில நல்ல தீர்ப்பா சொல்லிக் கீறாரு... அப்புறம்... ஆரூரார் மணிமாறனா,,? நல்ல ஹ்யூமர் சென்ஸ் சிவா உமக்கு..!

! சிவகுமார் ! said...

@ தளிர்

இதே கோவத்தை வீட்டு உரிமையாளர்களிடமும், ரென்ட் கன்ட்ரோல் போர்ட் என்று ஒன்று இருக்கிறதே அங்கும் காட்டினால் என்ன என்பதுதான் கேள்வி.

! சிவகுமார் ! said...

@ செங்கோவி

தளிருக்கு சொன்ன பதிலையே இங்கும் சொல்கிறேன். ப்ரோக்கர், வீட்டு உரிமையாளர் பற்றி எதுவும் குறிப்பிடாமல் மொத்த பழியையும் சாப்ட்வேர் நண்பர்கள் மீது போடுவது வேலைக்கு ஆகாத வாதம்.

! சிவகுமார் ! said...

@ பாலகணேஷ்

நன்றி சார்.

bandhu said...

இது உலகளாவிய பிரச்சனை.. எல்லா தொழிலில் இருப்பவர்களுக்கும் கிட்ட தட்ட ஒரே மாதிரி பணவரவு இருக்கும் வரை தான் இந்த பாலன்ஸ் இருக்கும். எப்போது 90க்களின் கடைசியில் பணத்தை அள்ளி வீசி ஆள் பிடிக்க ஆரம்பித்தார்களோ, அப்போதே கொஞ்சம் கொஞ்சமாக இந்த பிரச்சனை ஆரம்பித்து விட்டது.

கல்லூரியிலிருந்து வெளி வந்தவுடன் கமிட்மென்ட் அதிகம் இல்லாத நாட்களில் அதிக சம்பளம் வாங்க ஆரம்பித்தால் அத்தியாவசிய தேவைகளுக்கு நிறைய செலவு செய்ய ஆரம்பிக்கிறார்கள். அந்த அளவு ப்ரீ மனி இல்லாதவர்களுக்கு பிரச்சனைதான்! எல்லோரும் கொஞ்சம் கொஞ்சமாக ஊரை விட்டு அதிக தூரம் வெளியே செல்ல வேண்டியதுதான்.

இது தான் எல்லா ஊரிலுமே நடக்கிறது. எப்போது காசு ஆளுமை செய்கிறதோ, அப்போது காசுள்ளவன் வைத்தது தான் சட்டம்!

bandhu said...

இது உலகளாவிய பிரச்சனை.. எல்லா தொழிலில் இருப்பவர்களுக்கும் கிட்ட தட்ட ஒரே மாதிரி பணவரவு இருக்கும் வரை தான் இந்த பாலன்ஸ் இருக்கும். எப்போது 90க்களின் கடைசியில் பணத்தை அள்ளி வீசி ஆள் பிடிக்க ஆரம்பித்தார்களோ, அப்போதே கொஞ்சம் கொஞ்சமாக இந்த பிரச்சனை ஆரம்பித்து விட்டது.

கல்லூரியிலிருந்து வெளி வந்தவுடன் கமிட்மென்ட் அதிகம் இல்லாத நாட்களில் அதிக சம்பளம் வாங்க ஆரம்பித்தால் அத்தியாவசிய தேவைகளுக்கு நிறைய செலவு செய்ய ஆரம்பிக்கிறார்கள். அந்த அளவு ப்ரீ மனி இல்லாதவர்களுக்கு பிரச்சனைதான்! எல்லோரும் கொஞ்சம் கொஞ்சமாக ஊரை விட்டு அதிக தூரம் வெளியே செல்ல வேண்டியதுதான்.

இது தான் எல்லா ஊரிலுமே நடக்கிறது. எப்போது காசு ஆளுமை செய்கிறதோ, அப்போது காசுள்ளவன் வைத்தது தான் சட்டம்!

சதீஷ் செல்லதுரை said...

சிவா தல...அருமையான பதிவு...வாழ்த்துக்கள்

Unknown said...

நியாயமான பகிர்வு/ஆதங்கம்.

kannan thiruvonam said...

வேலை பளுவும் , வேலை நிச்சியமற்ற தன்மையும் எல்லா தனியார் , கார்பரேட் கம்பெனிகளிலும் உண்டு, ஆனால் இவ்வளவு பிரச்சனை இருந்தும் அவர்கள் அந்த வேலையில் சேர என்ன காரணமாக இருக்க முடியும் ஊதியத்தை தவிர ...
எங்கள் துறையில் மூன்று மாதமில்லை ஆறுமாதங்கள் வரை சம்பளமே இல்லாமல் வேலை செய்து இறுதியில் வேலையிலிருந்து நிறுத்தப்பட்ட நபர்கள்
நிறைய அதில் நானும் ஒருவன் ..

scenecreator said...

சொந்த தொழில் செய்பவரை தவிர்த்து இன்று சென்னையில் ஒரு காஸ்ட்லி லைப் வாழ்வது யார்?

ஒரு சாப்பாடு 300 ரூபாய் என்றாலும் தயங்காமல் உள்ளே போகிறவர் யார்?

ஒரு பிரியாணி 200 ருபாய் என்றாலும் உள்ளே தள்ளுபவர் யார்?

உயர்ந்த ரக பிராண்டட் சட்டை பான்ட் மட்டுமே அணிவேன் என்று அடம் பிடிப்பவன் யார்?

ஒரு காப்பி 150 ரூபாய் என்றாலும் காபி ஷாப் போறவன் யார்?

KFC,MC DONALD,SUBWAY போன்றவை யாரை நம்பி நடக்குது ?

படம் பார்த்தால் மல்டிப்ளெக்ஸ் தான் என்று அடம் பிடிப்பவன் யார்?

சாராயம் குடிக்க 5 ஸ்டார் பார் தேடும் ஏழை யார்?

வரபோகிற மனைவி பேரழகியாக மட்டுமே இருக்கவேண்டும் என்று காத்திருப்பவன் யார்?

விலை பிரச்சனை இல்லை .பிடித்தது வேணும் அவ்வளவுதான் .

மொத்தத்தில் எல்லாவற்றிலும் பெஸ்ட் மட்டுமே வேண்டும் என்று உறுதியாக அவனை இருக்க வைப்பது எது?

மேல் சொன்னவற்றை யோசித்து மற்ற துறையில் இருப்பவன் அப்படி இருக்கான இல்ல மென்துறையில் இருப்பவன் அப்படி இருக்கானான்னு உங்க முடிவுக்கே விட்டுடறேன்.

! சிவகுமார் ! said...

@ பந்து

வருகைக்கு நன்றி

! சிவகுமார் ! said...

@ யோகா, சதீஷ்

வருகைக்கு நன்றி

! சிவகுமார் ! said...

@ scenecreator

அவன் உழைப்பு. அவன் செலவழிக்கிறான். நமக்கென்ன பிரச்னை. survival of the fittest என்பதே தற்கால நியதி. முடிந்தால் மோதி முன்னேற வேண்டும். அவ்வளவுதான் நண்பரே.

நாம் நண்பர்கள் said...

உங்கள் இருவரின் பதிவையும் படித்தேன் ,நீங்கள் இருவரும் உங்கள் தரப்பு நியாயத்தை சொல்லி உங்கள் தரப்பு சரி தான் என்று நிருபிக்க முயல்கிறீர்கள் ,ஆனால் நீங்கள் இருவரும் சொல்லாமல் விட்ட ஒன்று முதலாளித்துவம் ,இன்றைய உலகம் இயங்குவது குரோனிகல் காப்பிட்டலிசத்தில் ,சகமனிதனை எதிர் எதிர் நிறுத்தி போர் புரிய வைத்து இந்த ஒரு பக்க தாழ்நிலைமைக்கு சக மனிதன் தான் காரணம் என்று நிறுவி தங்கள் அமைப்பு உடையாமல் காக்கும் அருமயான வேலையை செய்து கொண்டு இருக்கிறது .வீணா சண்டை வேண்டாம் இந்த அமைப்பை மாற்றாமல் எதுவும் மாற போவதுமில்லை இங்கு.பிறகு ஏன் வீண் விவாதம் ???????????????

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

ஒவ்வொரு துறையினருக்கும் மற்ற துறையில் உள்ள கஷ்டங்கள் தெரியாது. ஆனால் ஐ.டி துறையில் பணிபுரிபவர்களின் வாழ்க்கை முறை மற்றவர்களை சலனப்படுத்துகிறது பாதிக்கிறது என்பது உண்மைதான்.
பென்ஷன் 60 வயது வரை பணி என்று ஆரூர் மூனாவின் நிலையைத் தான் ஒப்பிட்டிருகிரீர்கள்.ஆனால் அரசு ஊழியர்கள் அல்லாத நிரந்தரமில்லா பணியில் உள்ளவர்களையே மனதில் கொள்ள வேண்டும். அரசுபணி செய்பவர்கள் ஆடம்பரமாக வாழ இயலாவிட்டாலும் கஷ்டமில்லாத வாழ்க்கை வாழ இயலும். செந்திலை இந்த வகையில்
சேர்க்கலாம்.நிலையற்ற மற்ற வேலைகளில் (ஐ,டி,யின் ஒரு பிரிவினர் உட்பட) உள்ளவர்கள் இந்த வாடகை பிரச்சனையால் பாதிக்கப் படுவதை நடைமுறையில் காண முடிகிறது. பொருளாதாரத்தில் கீழ் நிலையில் உள்ளவர்கள் முன்பெல்லாம் அரசு ஊழியர்கள் மீது ஆதங்கம் கொண்டிருந்தனர்.ஒரு டி.ஏ. உயர்ந்தாலும் எப்போது பார்த்தாலும் அரசாங்கம் இவர்களுக்கே கொடுக்கிறது என்று பாமர மக்கள் கோபத்தோடு பேசிக் கொள்வதை காண முடியும், இப்போது அந்த நிலை சற்று மாறி அந்தக் கோபம் ஐ.டி துறையினர்மீது திரும்பி உள்ளது. இதில் அரசு ஊழியர்களும் சேர்ந்து கொண்டுள்ளனர். பொருளாதார பேதங்கள் இந்த ஆதங்கங்களை உருவாக்குகின்றன. அதை கண்டு கொள்ளாமல் அப்படியே விட்டுவிடுவதுதான் நல்லது. எந்த நிலைக்கு தனிப்பட்ட நியாயங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும்.இதில் அவரவர் நிலையை நியாயப் படுத்துவதால் பலன் ஏதும் விளையைப் போவதில்லை

sarav said...

Dear Siva,

Disturbance of equilibrium !
This is what happening now. Like Muralidharan said earlier it was govt officers now it pple... but earlier Govt officers were less in numbers while now a days SW people are more in numbers that's why it looks bigger. do we have anything called Rent control board ? The purchasing power has changed the balance. like scenecreator has said and u have replied to him is ok. but when it affects ur other things for ex like senthil has said Rent are too much , with a family we can not pay 20k in the place of 5k whereas SW pple grouped together they can pay that amt is clearly imbalance. either I have to cough up 20k or have to move out of the place disturbing education, travel etc etc... this is bcos of the extra money which they flash creates greediness among all the vendors . These ppl even don't ask for what is right thing... they go to hotels/restaurants which don't serve water bcos they are ready to buy water... where as it is customary and as per rule any eatery has to supply water.. if u and I go to the same restaurant we wont get water .. they don't mind paying extra money instead of the actual rate.. this flashing is what currently the issue this is what senthil is trying to put at... also the tendency to be silent ..
hope I tried to express things properly c u soon

கோவை ராஜா said...

Dear Sarav,
1. Hope you agree that , "Not Only due to SW / IT - Prices are increased".
2. If Diesel Price increase for Rs 1/=, all the prices increases, is it due to SW and IT ?
What is the ratio it is increasing.
3. DA - Not sure all the industries has and changes based on the Price changes. But for all State and Cent. Govt empl gets

It is basically mind set of the "All of us including SW/IT and Govt Empl, business people"

4. My sincere question is , Why "only SW/IT are targeted" for everything

5. My other worry is, Why every one look for something should happen to SW/IT indus, and SW/IT People need to suffer??

Devils protege said...

நல்ல வேலை நம்ம சைடு யாருமே திருப்பி அடிக்க ஆள் இல்லியே என்ற குறை நீங்கியது !
shaabaaaaa இந்த 'IT ' கழுவி ஊதுருவங்க தொல்ல தாங்கல Bossu !
வாடகை ஏறுனா நம்ம தான் காரணம். காய் கறி வேல ஏறுனா நாம தான் காரணம் ... பெட்ரோல் வேல ஏறுனா நாம தான் காரணம் .. MH 370 கானா போனா நாம தான் காரணம் ...! இவங்களுக்கு என்ன தான் பாஸ் பிரச்னை ?
IT மேல அவ்வுளவு காண்டு இருந்தா பேசாம எல்லா IT பசங்கள யும் ஊரை விட்டு தள்ளி வெக்க வேண்டியது தானே ?
இவங்க குடும்பத்துல யாருக்கும் IT ல வேல கெடச்சா 'போங்கடா வெண்ணைகளா' நு சொல்ல வேண்டியது தானே ?

Devils protege said...

இதுல கொடுமை என்னன்னா இவங்க oc train ல போறது இவங்க 'Job Benefits ' ஆனா இவங்க அப்பா அம்மா , மனைவி மற்றும் குழைந்தைகள் எல்லாருமே 'Benefits ' அனுபவிக்கலாம் அது தப்பு இல்லை ! ஆனா இவங்கள விட சம்பளம் அதிகமா வாங்கிட்ட அது தெய்வ குத்தம்!... இவன்க வேலைல செத்து போய்டா அதே வேலைய இவங்க குடும்பத்துல யாருகாவது ' freea ' கெடைக்குமாம் அதுவும் தப்பு இல்ல ... நம்ம 'கலிங்கர்ஜி ' தர்மம் இப்பிடி தான் இருக்கும் ...
கடைசியா ஒரு doubtu பதிவு உலகத்துல இந்த 'IT ' திட்டுறது 'Hits ' வாங்குற இன்னொரு strategy ah ?
* IT இல்லை என்றால் நீங்க எல்லாம் பதிவர் ஆகிருக்க முடியாது பாஸ், Googleluku நன்றி சொல்லுங்க ப்ளாக் கொண்டு வந்ததுற்கு !... இல்லாட்டி சும்மா ரயில்வே canteen ல டீ போண்டா சாப்டுகிட்டு போய்டே இருக்க வேண்டியது தான் ....

ஹுஸைனம்மா said...

எங்கூருப்பக்கங்களில், ரியல் எஸ்டேட் உயர்வுக்குக் காரணம், “துபாய்க்காரர்கள்” என்று பொருமித் தள்ளுவார்கள்!! அதனால் உங்க வருத்தம் புரியுது.

எப்போது வேலையை விட்டு அனுப்புவார்களோ, ஊரைப் பார்க்கப் போக வேண்டியிருக்குமோ என்ற காரணத்தால், வீட்டிற்குத் அத்தியாவசியத் தேவைக்கானப் பொருட்களைக் கூட யோசித்து யோசித்துத்தான் வாங்குவோம்.

அதேசமயம், இங்கே ஒண்டுக்குடித்தனத்தில் அவதிப்பட்டாலும், இந்தியா வரும்போதெல்லாம் ஆடம்பரமாகச் செலவழிப்பவர்களும் இதற்குக் காரணமே.

SNR.தேவதாஸ் said...

ஆரோக்கியமான விவாதம்.
இப்பத்தான் பதிவுலகம் களை கட்டுகிறது.
தேவையுள்ள விவாதமும் கூட.
இரண்டு ஜாம்பவான்கள் மோதிக்கொண்டால் என்னைப்போன்ற வாசகர்களுக்கு படிக்க நிறைய விபரம் கிடைக்குமே.
வாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்

Related Posts Plugin for WordPress, Blogger...