CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Tuesday, March 11, 2014

எஸ்கேப் - சுரேகா

க்ரிக்கெட்டில் 'ஆல் ரவுண்டர்' என்று சிலரை குறிப்பிடுவார்கள். பேட்டிங், பௌலிங் மற்றும் பீல்டிங் என எல்லா தளத்திலும் இயங்குபவர்களை அல்ல. அவையனைத்திலும் சிறப்பாக இயங்குபவர்களுக்குத்தான் அப்பட்டம் பொருந்தும். அப்படி 'பன்முகத்திறமை ' எனும் சொல்லுக்கு பொருத்தமானவர் சுரேகா சுந்தர். நிகழ்ச்சி தொகுப்பு, தொலைக்காட்சி பேட்டி, தன்னம்பிக்கை பேச்சுகள், பதிவர், நூலாசிரியர் என பல்வேறு தளங்களில் சிறப்பாக செயல்பட்டு வருபவர். அவருடைய படைப்புகளில் ஒன்றுதான் எஸ்கேப் எனும் நூல். 'தலைவா வா' விற்கு பிறகு களம் கண்டிருக்கும் இந்நூல் பற்றிய பார்வை இனி.

பெரும் கட்டுமான நிறுவனம் ஒன்றில் எட்டு ஆண்டுகள் கடும் உழைப்பை கொட்டியும் ஒற்றை பதவி உயர்வைத்தவிர வேறெதையும் பெறாதவன் நரேந்திரன். வேலைக்கு சேர்ந்த மூன்றே வருடங்களில் அடுக்கடுக்காக ப்ரமோஷன் வாங்கி தன்னை பின்னுக்கு தள்ளிய சத்யா எனும் பெண்ணைக்கண்டு குமுறுகிறான். சரியான அங்கீகாரம் கிடைக்காத மன உளைச்சலில் ராஜினாமா செய்ய எத்தனிக்கும் நரேந்திரனின் வாழ்வில் ஏற்படும் திருப்பம் அவனை எப்படி மேம்படுத்துகிறது என்பதுதான் எஸ்கேப்பின் லான்ட் ஸ்கேப்.

சுரேகாவின் 'தலைவா வா' மீது ஒரு சில மாற்றுக்கருத்துகள் எனக்கிருந்தன. அதனை செவிமடுத்து கேட்ட பிறகு 'எஸ்கேப் நீங்கள் நினைக்கும் குறைகளை பூர்த்தி செய்த படைப்பாக இருக்கும்' என்றார். எனினும் வழக்கம்போல் சுய முன்னேற்ற புத்தகங்களின் பால் ஏற்படும் கிலியுடனே வாசிப்பு துவங்கியது. நரேந்திரனின் ஆற்றொண்ணா கோபத்தை சரசரவென வாசகன் மீது திணிக்காமல் அவனது இல்ல சூழலில் நடக்கும் விஷயங்களை இயல்பாக வர்ணித்து இருப்பது நல்ல தொடக்கம். புரிதலுடன் பேசும் மனைவி, தெளிவான பார்வையுடன் கருத்துகளை பரிமாறும் சக ஊழியர் சத்யா என முதல் சில பக்கங்கள் வலுவான அடித்தளத்தை அமைக்கின்றன. அடுத்தடுத்த பக்கங்களை புரட்ட வேண்டும் எனும் ஆவலை தூண்டுவதும் இத்துவக்க கட்டங்களே. 

விக்னேஷ் எனும் இளைஞரிடம் சுய முன்னேற்ற பயிற்சி எடுக்க நரேந்திரன் செல்வதுதான் நூலின் பிரதான பகுதி. ஆண்டுக்கணக்கில் மாங்கு மாங்கென்று உழைத்தும் பதவி/சம்பள உயர்வு இல்லையே என்று சீனியர் அசோசியேட்கள் சிலர் அப்ரைசல் நேரத்தில் முகாரி ராகம் பாடி கேட்ட அனுபவம் எனக்குண்டு. அவர்களை பொறுத்தவரை கடிவாளம் போட்டது போல் நிர்வாகம் சொல்லும் வேலைகளை முடிப்பது, மேலதிகாரி மீட்டிங் போட்டு எது சொன்னாலும் ஆமாம் போடுவது, வீட்டுக்கு செல்வது, வார இறுதியில் டி.வி., சினிமா, பார் என ஏதேனும் ஒன்றில் லயித்துவிட்டு திங்களன்று மீண்டும் வேலைக்கு வந்துவிடுவார்கள். கண்ணை மூடி திறப்பதற்குள் அப்ரைசல் காலம் வந்துவிடும். சொற்பமான சம்பள உயர்வு அல்லது அதுவும் இல்லாமலும் போகும். இனி அடுத்த ஒரு வருசத்துக்கு புகாரி பக்கம் தல வச்சி படுக்க கூடாது' முகாரி மீண்டும் நம் காதுகளை குடைந்து கண்ணாடி கதவுகளை அதிர வைத்து விட்டு மாற்று வழி தெரியாமல் அறையையே சுற்றும். அந்த ஊழியரைப்போல. 

இதுபோல எத்தனையோ பேர். பணிக்கப்பட்ட வேலை தாண்டி தனது நிறுவனம் எப்படி செயல்படுகிறது, தேச/சர்வதேச சந்தையில் அதன் மதிப்பென்ன.....எதைப்பற்றிய எண்ணமும் இருக்காது. குறைந்தபட்சம் நாளேடு, ஊடகங்களில் தனது நிறுவனம் அல்லது தான் செய்யும் பணி குறித்து வரும் செய்திகளைக்கூட பார்த்திருக்க மாட்டார்கள். சினிமா, சீரியல், 'ஆட்டோ அப்பளம் போல நொறுங்கியது'...அவ்வளவுதான் அவர்களது சமூகம்(!) சார்ந்த விருப்பங்கள். அந்த காலகட்டத்தில் சில வருடங்கள்/மாதங்களுக்கு முன்பு வந்த புத்திசாலி ஊழியர் (அதாவது கல் உடைத்து/பொட்டி தட்டி சோர்வடையாமல் 'ஸ்மார்ட் வொர்க்' செய்யும் நபர்) வேகமாக முன்னேறி விடுவார். பெரும்பாலான தனியார் நிறுவனங்களில் நடக்கும் இந்த முக்கியமான நடைமுறை யதார்த்தத்தை வார்த்தை அலங்காரமின்றி இயல்பாக கையாண்டதன் மூலம் வெற்றிக்கொடி நாட்டி இருக்கிறது எஸ்கேப்.   

 
பொதுவாக மற்ற தன்னம்பிக்கை நூல்களில் இருப்பது போல 'அண்ணாமலை ரஜினி' பாணியில் அதிரடி முன்னேற்றங்கள் இந்நூலில் இல்லாதது பெரிய ஆறுதல். பயிற்சிக்கு பிறகு நரேந்திரன் அலுவகத்தில் பயன்படுத்தும் அணுகுமுறைகள் நம்பும்படி இருப்பது சிறப்பு. மின்னஞ்சல் மூலம் உள் அலுவலக தொடர்பு, வாடிக்கையாளர்களிடம் தொடர் தகவல் பரிமாற்றம் என எளிதில் நடைமுறை படுத்தத்தக்க விஷயங்களை பகிர்ந்திருக்கிறார் ஆசிரியர்.  

ரஜினி படம் சிலவற்றில் அவரே தன்னுடைய முந்தைய பட கேரக்டரை சில நொடிகள் உலவ விட்டு கைதட்டலை பெறுவார். உதாரணம்: பாட்ஷா 'நீ நடந்தால் நடையழகு' பாடலில் வரும் முந்தைய பட ரஜினிகள், பாபாவில் வரும் நீலாம்பரி. என்னதான் விளம்பர யுக்தியாக இருந்தாலும் குறிப்பிட்ட நடிகரின் விசிறியாக இல்லாமல் படைப்பை மட்டுமே ரசிப்பவர்களுக்கு 'அதான பாத்தேன்' என நாக்கை சற்று கடிக்க தோன்றும். அதை நினைவுபடுத்துகின்றன 40 ஆம் பக்க வரிகள்: 'சார் நான் அந்த 'தலைவா வா' புத்தகத்தை படிச்சிருக்கேன். ஆனா அந்த விக்னேஷ் நீங்கதான்னு தெரியாது'.

'பொன்னான வாழ்வு மண்ணாகி போனால் துயரம் நிலைதானா? உலகம் இதுதானா?' என்று புலம்பி தீர்க்கும் சீனியர் அசோசியேட் உள்ளிட்ட இதர அலுவலக வாழ் மக்களே. பதவி உயர்வுக்கான மேஜிக்கை லாஜிக்குடன் சொல்லும் எஸ்கேப் உங்களுக்கானதுதான். அடுத்த அப்ரைசலுக்குள் வெற்றிக்கான கதவு திறக்கட்டும். பொது நூலகங்கள் மற்றும் அலுவலக படிப்பறைகளில் பத்தோடு பதினொன்றாக இல்லாமல் கம்பீரமாக முன் வரிசையில் அமரும் தகுதியை கொண்டிருக்கும் வெகு சில சுய முன்னேற்ற நூல்களில் எஸ்கேப்பும் ஒன்று. 

தரமான தாள்கள், கண்களை உறுத்தாத எழுத்தளவுகள், படங்களை போட்டு பக்கங்களை நிரப்பாதது, சரியான இடைவெளியில் துவங்கும் பத்திகள் என தேவையான நிறைகளை கொண்டிருப்பது நூலின் ப்ளஸ். விலை 90 ரூபாய்.

சுய முன்னேற்ற நூல்கள் எனும் பெயரில் நடுத்தர அப்பிராணிகளின் பர்ஸை சுரண்டி பிழைக்கும் எழுத்தாளர் கூட்டம் சந்தையில் தொடர்ந்து நடமாடுவதைக்கண்டு நான் எரிச்சல் அடைந்ததுண்டு. இவர்களுக்கு மரத்தடி ஜோசியன், போலி வாக்குறுதி தந்து ஏமாற்றும் அரசியல்வாதிகள் மேல் என எண்ணி இருக்கிறேன். 'எதைத்தின்றால் பித்தம் தெளியும்' என்பது போல் ஏதேனும் ஒரு தன்னம்பிக்கை புத்தகம் தன்னை மாற்றி விடாதா? நாளை காலையே இந்த அம்பாசமுத்திரம் ஆறுமுகம் அம்பானி ஆகி விட மாட்டேனா என ஏங்கும் அப்பாவிகள் ஆயிரம். அவர்களை மற்ற மோடிமஸ்தான் எழுத்தாளர்களை போல ஏமாற்றாமல் நேர்மையான படைப்பை தந்திருக்கும் சுரேகா சார்....ஹாட்ஸ் ஆஃப்.

தங்கள் சுய முன்னேற்ற நூல்களில் எஸ்கேப் ஒரு பெஞ்ச் மார்க் என்பது எனது அசைக்க முடியாத கருத்து. இனி தங்கள் வசமிருந்து வரவுள்ள தன்னம்பிக்கை  நூல்கள் எஸ்கேப்பில் உள்ளது போன்ற நேர்மையான அம்சங்களை தாங்கி வந்தால் சிறப்பாக இருக்கும். விக்னேஷை நம்பிய நரேந்திரன் போல நம்பிக்கையுடன் காத்திருக்கும் வாசகர்களில் ஒருவன். நன்றி.

..................................................................

6 comments:

சுரேகா.. said...

மிக்க நன்றி சிவா!

ஜோதிஜி said...

வாழ்த்துகள். சுந்தருக்கும் உங்கள் தெளிவான விமர்சனத்திற்கும்.

சீனு said...

சூப்பர் விமர்சனம் சிவா.. தலைவா வா உங்கள் விமர்சனம் படித்த பின்பு வாங்கிப் படித்த புத்தகம்.. நாவல் வடிவில் நான் வாசித்த முதல் சுய முன்னேற்றப் புத்தகம் அது.. அவருடைய கதை சொல்லும் பாணியே பிடித்திருந்தது.. நிச்சயம் இதையும் படிக்க வேண்டும்...

aavee said...

சிவா சர்டிபைடு ன்னா தாராளமா வாங்கலாம். கூடவே சுரேகா சார் புக்குன்னா சொல்லவே வேண்டாம்.. தொகுப்புரைகளையே திரும்ப திரும்ப கேட்கும்படி வைத்தவர் புத்தகத்தில் சுவாரஸ்யத்துக்கு குறை இருக்குமா என்ன!! சீக்கிரம் வாங்கிடறேன்..

திண்டுக்கல் தனபாலன் said...

சுய முன்னேற்ற நூல், அதுவும் சுரேகா அவர்கள் என்றால் சொல்லவா வேண்டும்...? "ஆழ்ந்த" விமர்சனம் நன்றி...

திரு. சுரேகா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...

”தளிர் சுரேஷ்” said...

பதிவர் சந்திப்பின் போது கடைசி நிமிடத்தில் வெளியிட்ட புத்தகம்தானே எஸ்கேப். அன்று வாங்க முடியவில்லை! விரைவில் வாங்கி படிக்கிறேன்! நூல் அறிமுகம் சிறப்பு! நன்றி!

Related Posts Plugin for WordPress, Blogger...