CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Saturday, March 1, 2014

தெகிடி
வில்லாவில் விலா முறிந்ததால் அடுத்த படத்திலாவது வெற்றி விழா கொண்டாடட்டுமே என்று நாயகன் அசோக் செல்வனுக்கு முட்டுக்குடுத்துள்ளார் தயாரிப்பாளர் சி.வி.குமார். விஜய சேதுபதி போல 'நமக்கு எதுக்குங்க ஹீரோயிசம் (அது வராதுங்கறது ஒரு பக்கம்). கதைக்கு எது தேவையோ...' என்று பணியும் இள ரத்தம்தான் நம்ம நல்ல தம்பி அசோக்கு. தெகிடி ஏணியில் ஏற்றியதா? வாருங்கள் பார்க்கலாம்.

தஞ்சையிலிருந்து சென்னைக்கு துப்பறியும் நிறுவனத்தில் வேலை பார்க்க வருகிறான் வெற்றி. பிறகென்ன? சட்டு புட்டென காதலிலும் விழுகிறான். யாரையெல்லாம் இவன் துப்பறிகிறானோ அவர்கள் ஒருவர் பின் ஒருவராக இறக்கின்றனர். அதில் ஏதோ மர்மம் உள்ளதென சரியாக யூகித்து தனிப்பட்ட முறையில் அதன் பின்னணியை ஆராய ஆரம்பிக்கிறான். சில அதிர்வுகள், சில சிக்கல்கள். அவற்றை எப்படி கையாள்கிறான். இதுதான் தெகிடி/பகடை/தாயம்.

டிடக்டிவ் படமென்றால் தலைவர் ஜெய்சங்கர் பாணியில் ஜனரஞ்சகம் மேலோங்கி இருக்க வேண்டும் அல்லது பீட்சா ரகத்தில் விறு விறு காட்சி அமைப்புகளை பின்னி 'இந்த சீன்ல ஏதோ ஒதைக்குதே' என்று ரசிகன் சுதாரிப்பதற்குள் ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் அடித்து என்ட் கார்ட் போட்டு விட வேண்டும். இரண்டும் இல்லையென்றால்? இங்கே அதுதான் நடந்திருக்கிறது. மணிரத்னம்/கௌதம் பட கேரக்டர்களைப்போல அனைவரும் அவுன்ஸில் அளந்து பேசுகிறார்கள். கான்ஸ்டபிள் உட்பட. அடக்கம் ஆனாலும் அநியாயத்திற்கு உய்த்திருக்கிறது.

படத்தின் நீளமே மொத்தம் 2 மணி 2 நிமிடங்கள் தான். ஆனால் முதல் முக்கால் மணி நேரம் நான்கு பாடல்கள்(டைட்டில் பாடலுட்பட). மிகச்சுமாரான பட்டர் நான் போல தோற்றமளிக்கிறார் ஜனனி. காதலும் செய்யாமல், கதைக்கும் வழிவிடாமல் அசோக்குடன் தர்ணா செய்து நம்மை பழிவாங்குவதில் என்ன ஆத்ம திருப்தியோ?

அசோக் செல்வன்... நீங்கள்தானே  டிடக்டிவ்? பிறகு எதற்கு பாஸ் படம் முழுக்க உங்களை யாரோ துரத்துவது போன்றே முழிக்க வேண்டும்? தயவு செய்து எம்.ஏ. குற்றவியல் படித்த சான்றிதழை தகவல் அறியும் உரிமை சட்டத்தில் நாங்களாக கேட்பதற்குள் தந்து விடுங்கள். அப்படி செய்தால் அடுத்த படத்திலும் 'கதை' நாயகனாக நடிக்க சி.வி. குமாரிடம் சிபாரிசு செய்கிறோம்.

அசோக்கின் நண்பராக காளி. பாவம். இயல்பான நடிப்பை ஒளித்து வைத்து தவணை முறையில் வார்த்தைகளை பேச மெனக்கெட்டு இருக்கிறார். ஜெயப்ரகாஷ் வந்த பிறகு சற்று சுறுசுறுப்படையும் திரைக்கதை இடையிடையே ப்ரேக் டவுன் ஆகி மீண்டும் வேகமெடுக்க முயற்சிக்கிறது. வல்லபா எனும் மர்ம மனிதர் கேரக்டர் அந்தக்கால 'ஓகே பாஸ்' நம்பியாரை நினைவு படுத்துகிறது.

நிவாஸின் பின்னணி இசை சுமார். சத்யப்ரகாஷின் குரலில் 'யார் எழுதியதோ' பாடல் மனதிற்கு இதம். மற்ற பாடல்கள் ஒலி வடிவில் கேட்க நன்றாக இருந்தாலும் திரையில் பெரிதாக கவரவில்லை.

ஜெய்சங்கரின் டெம்ப்ளேட் துப்பறியும் படங்களை நேக்காக பாலீஷ் செய்து மல்டிப்ளெக்ஸ் ரசிகர்களுக்காக கொலைப்பின்னணியுடன் படு டீசன்ட்டான கலைப்படத்தை பரிமாறி இருக்கிறார்கள். ஆனால் அதற்கெல்லாம் தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட் ரசிகர்கள் அசருவார்கள் என கண்டிப்பாக நம்ப முடியாது.

.................................................................
 
written for tamil.jillmore.com
3 comments:

Unknown said...

விமர்சனம் நன்று!குறை,நிறைகளை விலாவாரியாக சொல்லியிருக்கிறீர்கள்.இங்கு,வரட்டும் பார்ப்போம்.('வல்லினம்' என்று ஓர் அருமையான படம்,பாருங்கள்.)

Devils protege said...

ஜி
அப்போ இந்த படமும் பப்படம் ஆகிடுச்சா தம்பிக்கு ?

வெங்கட் நாகராஜ் said...

நல்ல விமர்சனம்......

Related Posts Plugin for WordPress, Blogger...