CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Monday, March 31, 2014

ஸ்பெஷல் மீல்ஸ் (31/03/14)வியாபாரி:


நாலணாக்கள் காலாவதியாகி யுகங்கள் ஆகிவிட்டன. அடுத்ததாக எட்டணாக்களுக்கும் அந்த கதி நேர்ந்தது. நைந்து போன ஐந்து ரூபாயை யார் தலையில் கட்டலாம் என்று பலரும் மண்டை காய்ந்து கொண்டிருக்க, அந்த லிஸ்ட்டில் எட்டணாக்களும் சேர்ந்து விட்டன. தற்போது மாநகரப்பேருந்து நடத்துனர்கள் எட்டணாக்களை கைமாற்றும் வேலையை ஜரூராக செய்து வருகிறார்கள். இன்னொரு பக்கம் 'நம்மிடம் மலையென கொட்டிக்கிடக்கும் 50 பைசாக்களை எப்படி டிஸ்போஸ் செய்யலாம்' என யோசித்து அதற்கு ஒரு அருமையான தீர்வையும் கண்டிருக்கிறது போத்தீஸ் ஜவுளிக்கடை. பில் போட்ட பிறகு தரும் பணத்தில் சில்லறைகளை மட்டும் 'பீடா' டைப் கவரில் தனியாக தருகிறார்கள். ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் நாணயங்களுடன் ஏகப்பட்ட எட்டாணக்களும் ஆம் ஆத்மி தலையில் கட்டப்படுகிறது. என்ன ஒரு புத்திசாலித்தனம்.
...........................................................................

பிரம்மன்:
வயலின், மிருந்தங்கம், குழல் என பல்வேறு வாத்தியங்களை வாசித்து வான்புகழ் பெற்றவர்கள் நம் தேசத்தில் கணிசமாக உண்டு என சொல்லித்தெரிய வேண்டியதில்லை. மார்கழி இசை நிகழ்ச்சிகள் சென்னையின் சபாக்களில் நடக்கும்போது ஒரு எட்டு கூட போய் பார்க்க வேண்டும் என தோன்றியதில்லை. ஆனால் பல ஆண்டுகளாக 'டூயட்' சாக்ஸபோன் மீது மட்டும் ஒரு அதீத ஈர்ப்பு இருந்து வந்தது. சிலமுறை கதிரி கோபால்நாத்தின் கச்சேரிகளை டி.வி.யில் பார்த்ததோடு சரி. அதை நேரில் காணும் வாய்ப்பு சென்ற டிசம்பரில் அமைந்தது. முதல் ஒரு மணிநேரம் மெல்லிய நீரோடை போல சாக்ஸபோன் ஒலி தவழ ஆரம்பிக்க வயலின், மிருதங்கம் உள்ளிட்ட பக்க வாத்தியங்களும் உடன் சேர்ந்தன. பொறுமை இழந்த அயல்நாட்டவர் சுமார் 20 பேர் வெளியேற ஆரம்பித்தனர்.

எவர்சில்வர் டம்ளரில் இருந்த நீரை அவ்வப்போது அருந்தி கொண்டே சக கலைஞர்களின் வாசிப்பில் லயித்த வண்ணம் இருந்தார் கதிரி. பெரிய எதிர்பார்ப்புடன் சென்ற எனக்கும் 'அவ்வளவுதானா?' என்றெண்ண தோன்றியது. ஆனால் அதற்குப்பிறகுதான் அவரது சாக்ஸபோன் இசை விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்தது. கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் பொழிந்த இசைமழை இன்னும் மனதில் நிற்கிறது. இடையில் சென்ற அயல்நாட்டவர் எவ்வளவு துரதிர்ஷ்ட சாலிகள் என பரிதாபப்படத்தான் முடிந்தது. நிகழ்ச்சி முடிந்த பிறகு கதிரியின் கரங்களை பற்றி வாழ்த்து தெரிவித்துவிட்டு வந்தேன். சென்னையில் மீண்டும் ஒரு கதிரியக்கம் வரும் நாளுக்காக வைட்டிங்.
...............................................................

தீயா வேலை செய்யணும் குமாரு:
வியாபாரத்திற்கு வண்டியில் பணம் எடுத்து செல்வோரை சோதனை செய்வதில் ஆரம்பித்து தற்போது கேப்டன் கொந்தளித்ததன் விளைவாக அம்மாவின் ஹெலிகாப்டரை கூட சோதனை போட தயாராகி விட்டது தேர்தல் ஆணையம். இரவு 10 மணிக்குள் பிரச்சாரம் ஓய வேண்டும், பொது இடங்களில் சின்னங்கள் மறைக்கப்பட வேண்டும் என்று கட்டாய கட்டளைகள் பல. ஆனால் எத்தனுக்கு எத்தனாயிற்றே நம்மாட்கள். பல்வேறு ரூபங்களில் நூதன பிரச்சாரத்தை செய்து வருகிறார்கள். அவர்களில் சென்னை மாநகரப்பேருந்துகளின் அம்மா கட்சி நடத்துனர்கள் சிலரும் அடக்கம். முன்பெல்லாம் டிக்கட் எடுக்க 10 ரூபாய் நீட்டினால் எரிந்து விழுந்தவர்கள் தற்போது அனைவருக்கும் அமைதியாக சில்லறை தருகிறார்கள். அத்தோடு 'மறக்காம இ.இ.க்கு ஓட்டு போடச்சொல்கிறார்கள். குறிப்பு: இந்த 'சில்லறை' சலுகை தாய்மார்களுக்கு மட்டுமே!!
.................................................................. 

சுதேசி:
நீண்ட நாட்களுக்கு பிறகு திருவல்லிக்கேணி பாரதி மெஸ்ஸில் சாப்பிடும் சந்தர்ப்பம் அமைந்தது. மதியம் மீல்ஸ் மட்டுமே அங்கு சாப்பிட்ட அனுபவம். இம்முறை டின்னருக்கு ஆர்டர் செய்தது பொடி தோசை. வாசலில் பில் போட்டபிறகுதான் உள்ளே நுழைய முடியும். தோசையின் வரவிற்கு காத்திருந்த நேரத்தில் அங்கிருந்து சிறு கண்ணாடி அலமாரி ஒன்று கவனத்தை ஈர்த்தது. உள்ளே மகாகவி பாரதி பற்றி எழுதப்பட்ட புத்தகங்கள். 'மகாகவி குறித்த நூல்கள் அனைத்தையும் சேமித்து பெருங்களஞ்சியமாக உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும், அம்மாதிரி நூல்களின் ஒரு பிரதியை வாடிக்கையாளர்கள் தந்தால் மகிழ்ச்சி' என்றும் குறிப்பிட்டு இருந்தனர்.

சமையலறை ஓரம் பார்வையை திருப்பியபோது அங்கொரு குறிப்பு தென்பட்டது. மற்ற உணவகங்களை போல தோசைகளுக்கு 'மேல் மாவு' பயன்படுத்துவதில்லை என்பதுதான் அது. சில நிமிடங்கள் கழித்து தோசை மேசையில். மொறுமொறுவென உயர் ரக பொடி கலந்த தோசை வொண்டர். வொண்டர். வெறும் 35 ரூபாய்க்கு சென்னையில் இப்படி ஒரு தரமான பொடி தோசை கிடைப்பதரிது மக்களே.
.....................................................................

டிஷ்யூம்:
200 எம்.எல். குளிர்பானங்களை சில கடைகள் 10 ரூபாய்க்கும், வேறு சிலர் 12 ரூபாய்க்கும் விற்கிறார்கள். 'உங்களுக்கு கூல் ட்ரிங் கூலா வேணுமில்ல சார். அதுக்கு ப்ரிட்ஜ் வாங்கணும், கரண்ட் பில் கட்டணும். அதுக்குத்தான் எக்ஸ்ட்ரா ரெண்டு ரூபாய்' என 'எவனோ ஒருவன்' பெட்டிக்கடைக்காரர் போல லந்து செய்வோரை கொஞ்சுவதற்கு ஒரு கிரிக்கெட் மட்டை வாங்க வைத்து விடுவார்கள் போல.
..................................................................... 

ரகளைபுரம்:
தேர்தல் பிரச்சார களத்தில் முன்பை விட தலைவர்கள் சிலரின் பேச்சில் வேகமும், நையாண்டியும் ரசிக்க வைக்கிறது. முதல்வர் ஜெயலலிதாவையும் வெகுவாக கலாய்க்க ஆரம்பித்து விட்டார்கள். தற்போதைக்கு ஜெ.வின் பிரச்சார யுக்திதான் ஜனரஞ்சக முத்திரை இல்லாமல் இருக்கிறது. வரும் சட்டசபை தேர்தல் நேரத்திலாவது தற்போதைய ஸ்டைலை மாற்றி மற்றவர்களை முந்துவாரா என்று பார்க்கலாம். 
.................................................................. 

தகராறு:
மேற்கு மாம்பலம் ஸ்ரீனிவாசா தியேட்டர் அருகே நடந்த சம்பவமிது. தள்ளு வண்டியில் மதிய நேரம் சாப்பாடு விற்றுக்கொண்டிருந்தார் ஒரு பெண்மணி. இரு இளைஞர்கள் சாப்பிட வந்ததும் முதலில் பணம் தர சொல்லி இருக்கிறார் அவர். 'ஏன் எங்கள நம்ப மாட்டீங்களா?' என்று டென்சன் ஆனார் ஒருவர். வாய்த்தகராறு முற்றியது. 'எனக்கு சாப்பாடே வேண்டாம்' என ஆன் தி ஸ்பாட் தம்பி ஹசாரே ஆனார் அந்த இளைஞர். கூட வந்த நண்பரோ அதை கண்டுகொள்ளாமல் சாம்பாரை சாதத்தில் பினைந்து அடித்துக்கொண்டு இருந்தார். 'குடிமகன்கள் சிலர் சாப்பிட்டுவிட்டு பணம் தராமல் தகராறு செய்வதால்தான் இப்படி செய்ய வேண்டி உள்ளது' என அப்பெண்மணி விளக்கம் அளித்த பிறகே அந்த இளைஞருக்கு உரைத்தது. ஆனாலும் 'ப்ரெஸ்டீஜ் போய் விடுமே' என நினைத்து என்று விரதத்தை தொடர்ந்தார்.

அடுத்து நடந்ததுதான் ஆக்சன் கலாட்டா. சற்று மெலிந்த தேகத்துடன் மத்திய வயது நபர் ஒருவர் அங்கு வந்தார். சாப்பாட்டை வாங்கியவர் 'என்ன ஒரே ஒரு பொரியல்தான் இருக்கு' என்று கடுப்பானார். ஏற்கனவே ஒரு பஞ்சாயத்து முடிந்த சூட்டில் இருந்த அப்பெண்மணி 'நீ குடுக்குற 30 ரூபாய்க்கு எத்தனை வகை பொரியல் வப்பாங்க %$#@@@" என்று அவரை தாளிக்க ஆரம்பித்து விட்டார். அவரோ 'எனக்கு இந்த சோறே வேணாம். பக்கத்து தெரு கடைலயே சாப்புட்டுக்கறேன்' எனச்சொல்லி வம்பை விலைக்கு வாங்க, அப்பெண்மணிக்கு வக்காலத்து வாங்கிய நபர் ஒருவர் அவரை செம காட்டு காட்டினார். 'அடுத்த அடி நமக்குத்தானா?' என உதற ஆரம்பித்த தர்ணா தம்பி 'விடுங்கண்ணே அந்த ஆளை' என சமாதானம் பேசிவிட்டு சட்டென இடத்தை காலி செய்து நடக்க ஆரம்பித்தார். உடன் வந்த நண்பர் எந்த சலனமும் இன்றி 'மோர்' ரவுண்டு வரை பொறுமையாக ருசித்துவிட்டு 'இருடா நானும் வரேன்' என ஸ்லோ மோஷனில் நடக்க துவங்கினார்.

எனக்கென்னவோ அப்பெண்மணி பக்கம் தான் நியாயம் இருந்ததாக பட்டது. எத்தனையோ ஹோட்டல்களில் டோக்கன் வாங்கினால்தான் மீல்ஸ் கிடைக்கிறது. தள்ளுவண்டி ஆட்கள் என்றால் மட்டும் சட்டம் பேசுவது என்ன நியாயம்? அதுபோல தற்போதைய விலைவாசியில் 30 ரூபாய்க்கு சாப்பாடு விற்பதே கடினம். அதில் கூட ஒரு பொரியல்தானா என்று அங்கலாய்ப்பது  ஓவர்தான்.
..............................................................................
 
ஆரம்பம்: 
தற்போது ஆந்திராவை அதிர வைத்துக்கொண்டு இருப்பது பாலகிருஷ்ணா நடித்த 'லெஜன்ட்' தான். காதல், சென்டிமென்ட், ஆக்சன் என மசாலா பொட்டலங்கள் அல்ல.. மூட்டைகளே கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றன. ஜில் மோர்.காம் தளத்திற்காக எனது 'லெஜன்ட்' வீடியோ விமர்சனம்:


 


சினிமா சார்ந்த செய்திகள், விமர்சனங்கள், ட்ரைலர்கள் மற்றும் பல்வேறு தகவல்களுக்கு வருகை புரிக: .....................................................................
                        
சமீபத்தில் எழுதியது:

இனம் - விமர்சனம் 

நெடுஞ்சாலை - விமர்சனம்

.......................................................................
     
 

11 comments:

aavee said...

செம்ம.

ஜீவன் சுப்பு said...

மேல் மாவுன்னா என்னது சிவா ..

பால கணேஷ் said...

சமீபத்துல ஒரு கடையில ரெண்டு அம்பது பைசா நான் கொடுத்தப்ப வாங்க மறுத்தான். சண்டை போட வேண்டியதாய்டுச்சு. டிஷ்யூம், தகராறு, ரகளபுரம் எல்லாமெ செம.

மிஸ்டர் ஜீவன்... ஆண்கள் கிரைண்டர்ல போட்டு ஹோட்டல்ல ஆட்டற மாவுக்கு பேர்தான் மேல்மாவு. ஹி... ஹி... ஹி...

Unknown said...

ஸ்பெஷல் மீல்' ஸ் அருமை.///தள்ளு வண்டி ன்னா இளக்காரமா?///ஜீவன் சுப்பு said...
மேல் மாவுன்னா என்னது சிவா ..///ஆம்பள(MALE ) மாவு!ஹ!ஹ!!ஹா!!!

”தளிர் சுரேஷ்” said...

சுவையான மீல்ஸ்! தள்ளுவண்டிக்காரர்களிடம்தான் இப்படி வீம்பு பேசிக்கொண்டு இருப்பார்கள் சிலர்! 50 பைசா நாணயங்களை எங்க ஊரில் பெட்டிக்கடையில் கூட வாங்க மறுக்கிறார்கள்! பகிர்வுக்கு நன்றி!

ஜீவன் சுப்பு said...

பாலண்ணா ..!

அப்ப, பெண்கள் கிரைண்டர்ன்னு தனியா இருக்கா ... ? சத்த விம் போடுங்கோண்ணா .. நீங்க கலாய்க்கிறீகளா இல்ல நெசமான்னே புரியல ..

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

ஜில்லென்று தகவல்கள் தந்தமைக்கு நன்றி!

MANO நாஞ்சில் மனோ said...

முதல்வரை கலாயிக்கிறவங்களுக்கு கஞ்சா ரெண்டு பொட்டலம் பார்சல்...

பல்சுவை அருமை !

வெங்கட் நாகராஜ் said...

Special Meals - ஒரு ஃபுல் கட்டு கட்டின உணர்வு....

ஐம்பது பைசா நாணயங்களை பல வருடங்களாகவே தில்லியில் வாங்குவதில்லை சிவா. தமிழகத்திலிருந்து வரும்போது பர்சில் தங்கிவிடும் சில 50 பைசா நாணயங்கள் வைத்துக் கொண்டு திண்டாடியிருக்கிறேன்!

சென்னை பேருந்தில் நடத்துனர்கள் நிதானமாக பேசுவது வரவேற்கத் தக்க விஷயம் - தேர்தல் முடிந்ததும் வேதாளம் முருங்கை மரம் ஏறிவிடலாம் :(

வவ்வால் said...

சிவா,

மீல்ஸ் நல்லா இருக்கு ,ஆனால் என்னமோ சைவ சாப்பாடு சாப்பிட்டாப்போல இருக்கு , கறிச்சோறு சாப்பிட்டாப்போல "கொஞ்சம் தூக்கலா" மசாலா போட்டிருக்கலாம் அவ்வ்!

# "மேல் மாவு" பயன்ப்படுத்துவதில்லையில் என்ன தீங்கு இருக்குனு "பாரதி" ஹோட்டலில் சொல்லுறாங்கனு தெரியலையே, வீட்டிலவே "மேல் மாவு" எடுத்து தோசை சுடுவாங்களே.

மேல் மாவு என்பது நல்ல நுறைச்ச மாவு ,பொச பொசனு இருக்கும்(நிறைய கர்பன் டையாக்சைடு இருக்கும், தோசை சுட்டால் ஓட்டை வரக்காரணம், அடைந்திருக்கும் வாயுவு சூட்டில் வெளியேறுவதால் வரும் ஓட்டைகளே)

. தோசைக்கு மாவு எடுக்கும் போது பாத்திரத்தில இருந்து மேல இருக்க மாவ மட்டும் எடுப்பாங்க, கலக்கி விட மாட்டாங்க.

கொஞ்சம் கொஞ்சமா மாவு எடுத்து மேல் மாவு தீர்ந்திடுமேனு நினைக்கலாம்,ஆனால் கொஞ்சம் அவ்வப்போது கலக்கிவிட்டு , கொஞ்ச நேரம் செட்டில் ஆகவிட்டு மேல் மாவு எடுப்பாங்க :-))

தோசை மென்மையாக, முறுவலாக ,மெல்லிசா வர இந்த டெக்னிக் என நினைக்கிறேன்.

தோசையில கார்பன்டையாக்சைடு அளவை குறைச்சு "பசுமை" தோசை சுடுறாங்களா ,பாரதி மெஸ்ஸில் அவ்வ்!

அப்படினா சோடா,பெப்சி,கோக்னு எதுவுமே குடிக்க கூடாது ,அதில நிறைய கார்பன்டை ஆக்சைடு இருக்கு அவ்வ்.

இட்லி சுடும் போது மாவை கலக்கிவிட்டு அப்புறமா எடுத்து ஊத்துவாங்க.அப்போத்தான் இட்லி "புஷ்டியா" வரும் மேல் மாவில் இட்லி சுட்டா சப்பையாகிடுமாம்.

உண்மையில் இட்லில எல்லா கார்பன்டை ஆக்சைடும் ,தண்ணில கரைஞ்சு மாவில டிராப் ஆகிடும், அதனால் தான் இட்லில ஓட்டை இல்லை, எனவே அதிக கார்பன்டைஆக்சைடு இட்லில தான் இருக்கு அவ்வ்.

# எனக்கு தெரிஞ்ச மேல் மாவு இதான், ஹோட்டல் காரங்க "பரிப்பாஷையில" எதுனா மேல் மாவு சொல்லுறாங்களா என்னமோ?

வவ்வால் said...

"injera" என ஆப்ரிக்க தோசை சுடும் டெக்னிக் ஒன்னு இருக்கு.

ஒரு முறை மாவு அரைத்து ,மூடி வைத்து புளிக்க வச்சிடுவாங்க ,அதனை ஸ்டாக்" ஆக வைத்துக்கொண்டு ,தினமும் புதிதாக மாவு அரைச்சு அதில் கொஞ்சம் புளிச்ச மாவை சேர்த்து , தோசை சுடும் பதத்திற்கு தயார் செய்துவிடுவார்கள்.

புளிச்ச மாவு , எப்பவும் அப்படியே ஸ்டாக் ஆக இருக்கும்.

இப்படி தோசை சுடுவதை தமிழ் நாட்டிலும் "மேல் மாவு" தோசை என்கிறார்களோ?

இந்த இஞ்சேரா திடீர்னு இப்பத்தான் நினைவுக்கு வந்தது.

Related Posts Plugin for WordPress, Blogger...