CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Monday, March 31, 2014

ஸ்பெஷல் மீல்ஸ் (31/03/14)வியாபாரி:


நாலணாக்கள் காலாவதியாகி யுகங்கள் ஆகிவிட்டன. அடுத்ததாக எட்டணாக்களுக்கும் அந்த கதி நேர்ந்தது. நைந்து போன ஐந்து ரூபாயை யார் தலையில் கட்டலாம் என்று பலரும் மண்டை காய்ந்து கொண்டிருக்க, அந்த லிஸ்ட்டில் எட்டணாக்களும் சேர்ந்து விட்டன. தற்போது மாநகரப்பேருந்து நடத்துனர்கள் எட்டணாக்களை கைமாற்றும் வேலையை ஜரூராக செய்து வருகிறார்கள். இன்னொரு பக்கம் 'நம்மிடம் மலையென கொட்டிக்கிடக்கும் 50 பைசாக்களை எப்படி டிஸ்போஸ் செய்யலாம்' என யோசித்து அதற்கு ஒரு அருமையான தீர்வையும் கண்டிருக்கிறது போத்தீஸ் ஜவுளிக்கடை. பில் போட்ட பிறகு தரும் பணத்தில் சில்லறைகளை மட்டும் 'பீடா' டைப் கவரில் தனியாக தருகிறார்கள். ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் நாணயங்களுடன் ஏகப்பட்ட எட்டாணக்களும் ஆம் ஆத்மி தலையில் கட்டப்படுகிறது. என்ன ஒரு புத்திசாலித்தனம்.
...........................................................................

பிரம்மன்:
வயலின், மிருந்தங்கம், குழல் என பல்வேறு வாத்தியங்களை வாசித்து வான்புகழ் பெற்றவர்கள் நம் தேசத்தில் கணிசமாக உண்டு என சொல்லித்தெரிய வேண்டியதில்லை. மார்கழி இசை நிகழ்ச்சிகள் சென்னையின் சபாக்களில் நடக்கும்போது ஒரு எட்டு கூட போய் பார்க்க வேண்டும் என தோன்றியதில்லை. ஆனால் பல ஆண்டுகளாக 'டூயட்' சாக்ஸபோன் மீது மட்டும் ஒரு அதீத ஈர்ப்பு இருந்து வந்தது. சிலமுறை கதிரி கோபால்நாத்தின் கச்சேரிகளை டி.வி.யில் பார்த்ததோடு சரி. அதை நேரில் காணும் வாய்ப்பு சென்ற டிசம்பரில் அமைந்தது. முதல் ஒரு மணிநேரம் மெல்லிய நீரோடை போல சாக்ஸபோன் ஒலி தவழ ஆரம்பிக்க வயலின், மிருதங்கம் உள்ளிட்ட பக்க வாத்தியங்களும் உடன் சேர்ந்தன. பொறுமை இழந்த அயல்நாட்டவர் சுமார் 20 பேர் வெளியேற ஆரம்பித்தனர்.

எவர்சில்வர் டம்ளரில் இருந்த நீரை அவ்வப்போது அருந்தி கொண்டே சக கலைஞர்களின் வாசிப்பில் லயித்த வண்ணம் இருந்தார் கதிரி. பெரிய எதிர்பார்ப்புடன் சென்ற எனக்கும் 'அவ்வளவுதானா?' என்றெண்ண தோன்றியது. ஆனால் அதற்குப்பிறகுதான் அவரது சாக்ஸபோன் இசை விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்தது. கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் பொழிந்த இசைமழை இன்னும் மனதில் நிற்கிறது. இடையில் சென்ற அயல்நாட்டவர் எவ்வளவு துரதிர்ஷ்ட சாலிகள் என பரிதாபப்படத்தான் முடிந்தது. நிகழ்ச்சி முடிந்த பிறகு கதிரியின் கரங்களை பற்றி வாழ்த்து தெரிவித்துவிட்டு வந்தேன். சென்னையில் மீண்டும் ஒரு கதிரியக்கம் வரும் நாளுக்காக வைட்டிங்.
...............................................................

தீயா வேலை செய்யணும் குமாரு:
வியாபாரத்திற்கு வண்டியில் பணம் எடுத்து செல்வோரை சோதனை செய்வதில் ஆரம்பித்து தற்போது கேப்டன் கொந்தளித்ததன் விளைவாக அம்மாவின் ஹெலிகாப்டரை கூட சோதனை போட தயாராகி விட்டது தேர்தல் ஆணையம். இரவு 10 மணிக்குள் பிரச்சாரம் ஓய வேண்டும், பொது இடங்களில் சின்னங்கள் மறைக்கப்பட வேண்டும் என்று கட்டாய கட்டளைகள் பல. ஆனால் எத்தனுக்கு எத்தனாயிற்றே நம்மாட்கள். பல்வேறு ரூபங்களில் நூதன பிரச்சாரத்தை செய்து வருகிறார்கள். அவர்களில் சென்னை மாநகரப்பேருந்துகளின் அம்மா கட்சி நடத்துனர்கள் சிலரும் அடக்கம். முன்பெல்லாம் டிக்கட் எடுக்க 10 ரூபாய் நீட்டினால் எரிந்து விழுந்தவர்கள் தற்போது அனைவருக்கும் அமைதியாக சில்லறை தருகிறார்கள். அத்தோடு 'மறக்காம இ.இ.க்கு ஓட்டு போடச்சொல்கிறார்கள். குறிப்பு: இந்த 'சில்லறை' சலுகை தாய்மார்களுக்கு மட்டுமே!!
.................................................................. 

சுதேசி:
நீண்ட நாட்களுக்கு பிறகு திருவல்லிக்கேணி பாரதி மெஸ்ஸில் சாப்பிடும் சந்தர்ப்பம் அமைந்தது. மதியம் மீல்ஸ் மட்டுமே அங்கு சாப்பிட்ட அனுபவம். இம்முறை டின்னருக்கு ஆர்டர் செய்தது பொடி தோசை. வாசலில் பில் போட்டபிறகுதான் உள்ளே நுழைய முடியும். தோசையின் வரவிற்கு காத்திருந்த நேரத்தில் அங்கிருந்து சிறு கண்ணாடி அலமாரி ஒன்று கவனத்தை ஈர்த்தது. உள்ளே மகாகவி பாரதி பற்றி எழுதப்பட்ட புத்தகங்கள். 'மகாகவி குறித்த நூல்கள் அனைத்தையும் சேமித்து பெருங்களஞ்சியமாக உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும், அம்மாதிரி நூல்களின் ஒரு பிரதியை வாடிக்கையாளர்கள் தந்தால் மகிழ்ச்சி' என்றும் குறிப்பிட்டு இருந்தனர்.

சமையலறை ஓரம் பார்வையை திருப்பியபோது அங்கொரு குறிப்பு தென்பட்டது. மற்ற உணவகங்களை போல தோசைகளுக்கு 'மேல் மாவு' பயன்படுத்துவதில்லை என்பதுதான் அது. சில நிமிடங்கள் கழித்து தோசை மேசையில். மொறுமொறுவென உயர் ரக பொடி கலந்த தோசை வொண்டர். வொண்டர். வெறும் 35 ரூபாய்க்கு சென்னையில் இப்படி ஒரு தரமான பொடி தோசை கிடைப்பதரிது மக்களே.
.....................................................................

டிஷ்யூம்:
200 எம்.எல். குளிர்பானங்களை சில கடைகள் 10 ரூபாய்க்கும், வேறு சிலர் 12 ரூபாய்க்கும் விற்கிறார்கள். 'உங்களுக்கு கூல் ட்ரிங் கூலா வேணுமில்ல சார். அதுக்கு ப்ரிட்ஜ் வாங்கணும், கரண்ட் பில் கட்டணும். அதுக்குத்தான் எக்ஸ்ட்ரா ரெண்டு ரூபாய்' என 'எவனோ ஒருவன்' பெட்டிக்கடைக்காரர் போல லந்து செய்வோரை கொஞ்சுவதற்கு ஒரு கிரிக்கெட் மட்டை வாங்க வைத்து விடுவார்கள் போல.
..................................................................... 

ரகளைபுரம்:
தேர்தல் பிரச்சார களத்தில் முன்பை விட தலைவர்கள் சிலரின் பேச்சில் வேகமும், நையாண்டியும் ரசிக்க வைக்கிறது. முதல்வர் ஜெயலலிதாவையும் வெகுவாக கலாய்க்க ஆரம்பித்து விட்டார்கள். தற்போதைக்கு ஜெ.வின் பிரச்சார யுக்திதான் ஜனரஞ்சக முத்திரை இல்லாமல் இருக்கிறது. வரும் சட்டசபை தேர்தல் நேரத்திலாவது தற்போதைய ஸ்டைலை மாற்றி மற்றவர்களை முந்துவாரா என்று பார்க்கலாம். 
.................................................................. 

தகராறு:
மேற்கு மாம்பலம் ஸ்ரீனிவாசா தியேட்டர் அருகே நடந்த சம்பவமிது. தள்ளு வண்டியில் மதிய நேரம் சாப்பாடு விற்றுக்கொண்டிருந்தார் ஒரு பெண்மணி. இரு இளைஞர்கள் சாப்பிட வந்ததும் முதலில் பணம் தர சொல்லி இருக்கிறார் அவர். 'ஏன் எங்கள நம்ப மாட்டீங்களா?' என்று டென்சன் ஆனார் ஒருவர். வாய்த்தகராறு முற்றியது. 'எனக்கு சாப்பாடே வேண்டாம்' என ஆன் தி ஸ்பாட் தம்பி ஹசாரே ஆனார் அந்த இளைஞர். கூட வந்த நண்பரோ அதை கண்டுகொள்ளாமல் சாம்பாரை சாதத்தில் பினைந்து அடித்துக்கொண்டு இருந்தார். 'குடிமகன்கள் சிலர் சாப்பிட்டுவிட்டு பணம் தராமல் தகராறு செய்வதால்தான் இப்படி செய்ய வேண்டி உள்ளது' என அப்பெண்மணி விளக்கம் அளித்த பிறகே அந்த இளைஞருக்கு உரைத்தது. ஆனாலும் 'ப்ரெஸ்டீஜ் போய் விடுமே' என நினைத்து என்று விரதத்தை தொடர்ந்தார்.

அடுத்து நடந்ததுதான் ஆக்சன் கலாட்டா. சற்று மெலிந்த தேகத்துடன் மத்திய வயது நபர் ஒருவர் அங்கு வந்தார். சாப்பாட்டை வாங்கியவர் 'என்ன ஒரே ஒரு பொரியல்தான் இருக்கு' என்று கடுப்பானார். ஏற்கனவே ஒரு பஞ்சாயத்து முடிந்த சூட்டில் இருந்த அப்பெண்மணி 'நீ குடுக்குற 30 ரூபாய்க்கு எத்தனை வகை பொரியல் வப்பாங்க %$#@@@" என்று அவரை தாளிக்க ஆரம்பித்து விட்டார். அவரோ 'எனக்கு இந்த சோறே வேணாம். பக்கத்து தெரு கடைலயே சாப்புட்டுக்கறேன்' எனச்சொல்லி வம்பை விலைக்கு வாங்க, அப்பெண்மணிக்கு வக்காலத்து வாங்கிய நபர் ஒருவர் அவரை செம காட்டு காட்டினார். 'அடுத்த அடி நமக்குத்தானா?' என உதற ஆரம்பித்த தர்ணா தம்பி 'விடுங்கண்ணே அந்த ஆளை' என சமாதானம் பேசிவிட்டு சட்டென இடத்தை காலி செய்து நடக்க ஆரம்பித்தார். உடன் வந்த நண்பர் எந்த சலனமும் இன்றி 'மோர்' ரவுண்டு வரை பொறுமையாக ருசித்துவிட்டு 'இருடா நானும் வரேன்' என ஸ்லோ மோஷனில் நடக்க துவங்கினார்.

எனக்கென்னவோ அப்பெண்மணி பக்கம் தான் நியாயம் இருந்ததாக பட்டது. எத்தனையோ ஹோட்டல்களில் டோக்கன் வாங்கினால்தான் மீல்ஸ் கிடைக்கிறது. தள்ளுவண்டி ஆட்கள் என்றால் மட்டும் சட்டம் பேசுவது என்ன நியாயம்? அதுபோல தற்போதைய விலைவாசியில் 30 ரூபாய்க்கு சாப்பாடு விற்பதே கடினம். அதில் கூட ஒரு பொரியல்தானா என்று அங்கலாய்ப்பது  ஓவர்தான்.
..............................................................................
 
ஆரம்பம்: 
தற்போது ஆந்திராவை அதிர வைத்துக்கொண்டு இருப்பது பாலகிருஷ்ணா நடித்த 'லெஜன்ட்' தான். காதல், சென்டிமென்ட், ஆக்சன் என மசாலா பொட்டலங்கள் அல்ல.. மூட்டைகளே கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றன. ஜில் மோர்.காம் தளத்திற்காக எனது 'லெஜன்ட்' வீடியோ விமர்சனம்:


 


சினிமா சார்ந்த செய்திகள், விமர்சனங்கள், ட்ரைலர்கள் மற்றும் பல்வேறு தகவல்களுக்கு வருகை புரிக: .....................................................................
                        
சமீபத்தில் எழுதியது:

இனம் - விமர்சனம் 

நெடுஞ்சாலை - விமர்சனம்

.......................................................................
     
 

Sunday, March 30, 2014

இனம்

உச்சக்கட்ட போர் நடந்தபோது ஈழத்தமிழர்கள் அனுபவித்த சித்ரவதைகளை எந்த லாப நோக்கமும் இன்றி ஆதரித்த மக்களுக்கு மத்தியில் அதை வைத்து சிலர் இன்றுவரை பணம் பண்ணிக்கொண்டும் இருக்கத்தான் செய்கிறார்கள். அரசியல், புத்தகம், சினிமா என களங்கள்தான் வேறு. அதிலும் அப்பிரச்னை குறித்து தமிழில் ஒரு 'மனசாட்சி' உள்ள  சினிமா வருகிறதென்றால் பல்வேறு சோதனைகளை கடந்தாக வேண்டும். ஆனால் மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசுக்கும், சிங்கள அரசுக்கும் ஜால்ரா அடித்து தமிழர்களை மட்டுப்படுத்தி படமெடுத்தால் தடைகள் தவிடு பொடியாகிவிடும். இனி இந்தியாவின் முன்னணி ஒளிப்பதிவாளரும், வித்யாசமான படங்களை இயக்குவதில் பெயர் பெற்றவருமான சந்தோஷ் சிவனின் புதிய படமான 'இனம்' பற்றி பார்க்கலாம்.

இறுதிப்போர் கால கட்டத்தில் சுனாமி அக்கா (சரிதா) என்பவரால் காக்கப்பட்டு வரும் அநாதை சிறுவர், சிறுமிகள் சந்திக்கும் பிரச்னைகளை சொல்கிறது இனம். டவுன்ஸ் சின்ட்ரோம் எனும் மனநிலை குறைபாட்டால் பாதிக்கப்பட்டு இருக்கும் சிறுவன் நந்தன் (கரண்) மற்றும் ரஜினி எனும் 18 வயது பெண் ஆகிய இருவரை வைத்து போர் நிகழ்வுகள் மற்றும் அது சார்ந்த சில விஷயங்களை சொல்ல முயற்சித்து (மட்டும்) இருக்கிறார் இயக்குனர்.

இலங்கையில் நடந்த போரின் வீரியம், அரசியல், அப்பாவி தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம் குறித்த அடிப்படை புரிதல் கொண்ட அனைவருக்கும் எவ்வளவு புத்திசாலித்தனமாக வெல்லத்தில் விஷம் தடவி தந்திருக்கிறார் சந்தோஷ் சிவன் என்பது தெளிவாகும். மேம்போக்காக பார்த்தால் 'அட நம் சகோதர, சகோதரிகள் பட்ட அவலங்களை எவ்வளவு துணிச்சலாக சொல்லி இருக்கிறார்' என்று எண்ணத்தோன்றும். அந்த அளவிற்கு கலைநேர்த்தி பொதிந்து கிடக்கிறது படம் நெடுக.  டைட்டில் கார்டில் இருந்தே செப்படி வித்தைகள் துவங்கி விடுகின்றன. 'இனம்' எனும் தமிழ் சொல்லுக்கு கீழே 'the mob' என்றொரு ஆங்கில மொழிபெயர்ப்பு. ஒரு இனத்தை சித்தரிக்க இதைவிட வேறு வார்த்தையே சிக்கவில்லையா? 'mob' என்றால் கூட்டம். வெறும் கூட்டம்தானா தமிழ் மக்கள்?

போர் முடிந்த பிறகு உதவி செய்த அயல் நாட்டவர்கள் தம் நாட்டிற்கு செல்கையில் 'எங்களை விட்டு விடாதீர்கள்' என்று ஸ்டான்லி (கருணாஸ்) கெஞ்சுகையில் பிளாஸ்டிக் கவரினுள் துடிக்கும் மீன்கள், குண்டுகள் விழும்போது பதறி ஓடும் கோழிக்குஞ்சு, பள்ளத்தில் ஒளிய வேகமாய் செல்லும் பூச்சி என சந்தோஷ் சிவனின் கேமரா அபாரம். இவற்றைத்தவிர மற்ற அனைத்தும் அபத்தங்களின் உச்சம்.

சிங்கள ராணுவம் பெண்களை சோதனை எனும் பெயரில் மானபங்கம் செய்வது, கற்பழிப்பது ஆகிய இரண்டு காட்சிகள் நியாயத்தை சொல்லி இருக்கிறாரே என்று இயக்குனரை பாராட்ட நினைத்தால், அக்காட்சிகள் முடியும் நேரத்தில் தனது பக்கா 'சார்புத்தன்மை'யை நிலை நாட்டி இருக்கிறார். சிங்கள ராணுவத்தினர் பெண்களை இழிவாக நடத்துவதை கண்டு பொறுக்காத மற்ற இரு தமிழ் பெண்கள் துப்பாக்கியால் அவர்களை சுட ஆரம்பிப்பது போலவும், தங்களை தற்காத்து கொள்ள சிங்கள 'வீரர்கள்' எதிர் தாக்குதல் நடத்துவது  போல முடியும் காட்சி, ரஜினி எனும் இளம்பெண்ணை சிங்கள 'வீரன்' கற்பழிக்கையில் அவனது சகா செல்போனில் வீடியோ பதிவு செய்கிறான். அப்போது அருகில் இருக்கும் சிங்கள கேப்டன் பிரசன்னா அது தவறு என்று வாதிடுவதாக முடியும் காட்சி, நந்தனை பார்த்து 'தப்பித்து போ' என்று அந்த கேப்டன் சொல்வது, சிறுவனின் பிணத்தை கண்டு சரிதா அழுகையில் அதே கேப்டன் கண் கலங்குவது. அடேங்கப்பா. எப்பேர்ப்பட்ட கருணை உள்ளம் கொண்டவர்களாக சிங்கள ராணுவத்தினரை சித்தரித்து இருக்கிறார் இயக்குனர்???


இது போக அநாதை சிறுவர்கள் நடந்து செல்லும் வழியில் ஒரு சிங்கள புத்த பிட்சுவையும் கருணையின் வடிவாக காட்டுகிறார் சந்தோஷ் சிவன். சிறிய நீரோட்டம்  ஒன்றின் அருகே தத்தளிக்கும் மீன்களை நீரில் விடுகிறார் அந்த பிச்சு. எதிரே தென்படும் நந்தனை அன்புள்ளத்துடன் பார்த்து பழம் ஒன்றையும் தருகிறார். இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக புத்த பிட்சுகள் செய்த அராஜகங்கள் என்னவென்பது யாருக்கும் தெரியாதா என்ன?

'இருக்கட்டுமே. சிங்கள ராணுவம் மற்றும் புத்த பிட்சுக்களில் இரக்க மனம் கொண்டவர்கள் இருக்க மாட்டார்களா என்ன? அதைத்தான் சொல்லி இருக்கிறார்கள்' என்று நினைத்தால் அது பெரும் நகைச்சுவையாக இருக்கும். ஏனெனில் ஈழத்தமிழர்களை படம் நெடுக காட்டிய விதம் அவ்வாறு.

நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருக்கும்போது  கூட பிகினி உடையில் இருக்கும் பெண்கள் படம் தாங்கிய ஆல்பத்தை மனநலம் குன்றிய நந்தனை பார்க்க சொல்லி மகிழும் பெரியவர், அதிகபட்சம் 13 வயது கூட இல்லாத நந்தனின் தம்பி ஜீவன் 'இந்தக்கத்தி இனி எனக்கு தேவைப்படாது. நீ வைத்துக்கொள்' என்று சொல்லுமிடம் (அதாவது இதற்கு முன்பு அவன் தீவிரவாதியாம். இனிமேல் மனநலம் சரியற்ற அண்ணனை வன்முறை செய்ய தூண்டுகிறானாம்), 20 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் சிலர் கையில் AK 47 உள்ளிட்ட ஆயுதங்கள் (அது உண்மை என்றே வைத்துக்கொண்டாலும் அவர்களிடமும் மனிதம், நியாயம் இருக்கிறது என்பதை ஒரு இடத்திலும் சொல்லாமல் தவிர்த்தது இயக்குனரின் வஞ்சத்தை காட்டுகிறது.

20 வயது கூட நிரம்பாத இளசுகளை மணம் முடித்து வைக்கும் சுனாமி அக்கா, 'கிஸ் கொடு கிஸ் கொடு' என்று அலையும் நந்தன், சண்டையில் இறந்து கிடக்கும் இலங்கை ராணுவ வீரனின் கையில் அவனது குழந்தை போட்டோவை காண்பித்து அனுதாபம் தேடுவது (இதே போன்று ஒரு காட்சி கூட போராளிகள் இறக்கும் காட்சியில் இல்லை), ரஜினி கற்பழிக்கப்படுகையில் செல்போனில் படம் பிடிக்கும் சிங்கள சகாவும், கேப்டனும் அந்த காமக்கொடூரனை நந்தன் கத்தியால் குத்தும்போது மட்டும் காணாமல் போகிறார்கள்... இப்படி பலவிதத்தில்  ஈழத்தமிழர்களை, குறிப்பாக தமிழின சிறுவர்களை, அதிலும் குறிப்பாக மனநலம் குன்றிய தமிழ்ச்சிறுவனை தீவிரவாதிகள் போல சித்தரித்து இருக்கிறார்கள்.

இப்படத்தின் மூலம் என்ன சொல்ல வருகிறார் சந்தோஷ் சிவன் என்ற தெளிவு எங்குமே இல்லை. இலங்கையில் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்தது என்று பலருக்கு தெரியும். அதை தவிர்த்து புதிதாக எதை சொல்ல வருகிறார்? இரு பக்க நியாயங்கள் என்ன என்பதையாவது அலசி இருக்கிறாரா என்றார் அதுவும் இல்லை. தமிழ் இனத்தை மிகத்தவறான விதத்தில் காட்டவும், சிங்கள ராணுவத்தில் 'யோக்ய புருஷர்கள்' நிரம்ப இருக்கிறார்கள் என்று அபத்தமான துதி பாடவும் மட்டுமே இப்படைப்பு எடுக்கப்பட்டு இருக்கிறது.

written for tamil.jillmore.com 
..........................................................


இனம் - வீடியோ விமர்சனம்: 

  
.............................................................

சமீபத்தில் எழுதியது:
Wednesday, March 26, 2014

கோமல் ஸ்வாமிநாதனின் - இருட்டுல தேடாதீங்க


மேடை நாடக உலகின் ஜாம்பவான் கோமல் ஸ்வாமிநாதன் 1971 முதல் 1995 வரை தமது சமூகம் சார்ந்த படைப்புகளால் பெரிதும் பேசப்பட்டவர். கோமலின் மறைவு நாடக உலகிற்கு பேரிழப்பாக அமைந்தது. 13 வருடங்களுக்கு பிறகு கோமலின் சில க்ளாச்சிக் நாடகங்களை மீண்டும் மேடையேற்றும் முயற்சியை மேற்கொண்டார் அவரது மகள் லலிதா தாரிணி. அம்முயற்சியின் முதற்கட்டமாக சென்ற ஆண்டு 'தண்ணீர் தண்ணீர்' எனும் பிரபல நாடகம் அரங்கேற்றப்பட்டது. அதன் பிறகு 2013 நவம்பரில் அரங்கேறிய நாடகம்தான் 'இருட்டுல தேடாதீங்க'. அந்நாடகம் 'முத்ரா' சார்பாக நேற்று தி.நகரில் மேடையேறி கணிசமான ரசிகர்களை ஈர்த்தது.

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற மாடசாமி தனது கூட்டாளி முருகப்பனுடன் சேர்ந்து முன்பொரு சமயம் மருத்துவனூர் கோயில் நடராசர் சிலையை கடத்தியதாகவும், அது உத்தண்டியில் புதைக்கப்பட்டு இருப்பதாகவும் கான்ஸ்டபிள் பொம்மையா, செல்வந்தர் சொக்கலிங்கம் மற்றும் அவரது பணியால் முப்பிடாதி ஆகியோரிடம் கூறிவிட்டு இறந்து போகிறான். சொக்கலிங்கத்தின் வீட்டில் வாடகைக்கு இருக்கும் பேராசிரியர் வீட்டடியில் அப்பொற்சிலை புதைந்திருப்பது தெரிய வர அதை எப்படி எடுப்பது என திட்டம் தீட்டுகிறார்கள் மூவரும். ஆனால் அந்த ரகசியம் மேலும் சிலருக்கு தெரிய பங்கின் எண்ணிக்கை அதிகமாகிறது. சிலையை கைப்பற்றப்பட்டதா என்பதை நகைச்சுவை கலந்த சமூகப்பார்வையுடன் படைத்திருக்கிறார் கோமல்  ஸ்வாமிநாதன்.

இந்நாடகத்தில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி மனதில் நிற்பது சொக்கலிங்கமாக வரும் ராஜ் மதன்தான். பிற நடிகர்களுக்கு வசனப்பயிற்சி தந்திருப்பதும் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. அதிர்ஷ்டத்தை நம்பி போலீஸ் வேலையை ராஜினாமா செய்பவராக போத்திலிங்கம் (பொம்மையா). அவ்வப்போது சிரிப்பிற்கு உத்திரவாதம் தருகிறார். ஆனால் 'இந்த கடைப்பாறைய எடுத்து' வசனத்தை ரிப்பீட் செய்யாமல் இருந்திருக்கலாம். இளம் வரவான கார்த்திக் (முப்பிடாதி) சிறப்பு. ஏசி குளிருக்கு நடுங்குவது போல பாவனை செய்வது, சாமியார் காலில் பறந்து வந்து விழுவது என  புருவம் உயர்த்த வைக்கிறார். பதற்றம் இல்லாத யதார்த்த நடிப்பு. பம்பாய் சித்தராக ரவியின் நகைச்சுவை ரசிக்க வைக்கிறது. ஒற்றை காட்சி என்றாலும் சொல்லத்தக்க பெர்பாமன்ஸ் தங்கபாண்டியனுடையது (மாடசாமி). க்ளைமாக்ஸில் தாம்பரம் ஸ்ரீனிவாசன் (பாகவதர்) கலகலக்க வைக்கிறார். இதர நடிகர்களின் நடிப்பு சுமார் ரகம்தான்.

சீரான வேகத்தில் திரைக்கதை சென்றாலும் சில நீண்ட வசனங்கள் தடைக்கற்களாக நிற்கின்றன. சாமியார் பற்றி அதிகம் சுராஜ் (சுந்தரம்/குப்புசாமி) நீண்ட நேரம் விவரிப்பது, மஞ்சுளாவின் (ஸ்ரீ லக்ஷ்மி) சமையல் ட்ராக் போன்றவற்றை சுருக்கி இருந்தால் இன்னும் விறுவிறுப்பு கூடியிருக்கும். 'உத்தண்டியில் மெட்ரோ ட்ரெயின் திட்டம்' என்று வரும் வசனத்தை இயக்குனர் லலிதா கவனத்தில் கொண்டிருக்கலாம். அவ்வளவு தூரம் மெட்ரோ ஏன் நீட்டிக்கப்பட வேண்டும்?

குக பிரசாத்தின் பின்னணி இசை ரசிகர்களை சோர்வடையாமல் வைத்திருக்க உதவி இருக்கிறது. மோகன் பாபுவின் அரங்க அமைப்பு நன்று. ஃபோகஸ் வெளிச்சம் போடுமிடத்தில் கலைவாணன் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம். தேவையான இடத்தில் இருந்து சற்று தாண்டி விழுகிறது வெளிச்சம்.

பணத்தாசை இச்சமூகத்தை எப்படி ஆட்டுவிக்கிறது என்பதை தமது பாணியில் ரசிக்கும்படி சொல்லி இருக்கிறார் கோமல் ஸ்வாமிநாதன். அவர் படைத்த மற்ற சிறந்த நாடகங்களும் விரைவில் மேடையேற்றப்படும் என நம்பலாம்.


Monday, March 24, 2014

ப்ரெய்ஸ் தி லார்ட்


பால் ஜசாரியாவின் ப்ரெய்ஸ் தி லார்ட் எனும் நாவலை படமாக்கி இருக்கிறார் அறிமுக இயக்குனர் ஷிபு கங்காதரன். கோட்டயம் அருகே வசிக்கும் செழிப்பான விவசாயி ஜாய். மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் வாழ்வை சந்தோசமாக நகர்த்தி வருபவரிடம் அவரது வக்கீல் நண்பர் மூலம் ஒரு சோதனை வருகிறது. குடும்பத்தாரிடம் சொல்லாமல் திருமணம் செய்து கொண்ட ஜோடிகளை இரு தினங்களுக்கு அடைக்கலம் தந்தால் வழக்கை தன் வசம் கொண்டு செல்ல ஏதுவாக இருக்கும் என நிர்பந்திக்கிறார். முதலில் மறுத்தாலும் பிறகு சம்மதிக்கிறார் ஜாய். அதனால் ஏற்படும் பிரச்னைகளை அவர் எப்படி சமாளிக்கிறார்?

தப்பித்தவறி ஒரு நல்ல படத்தில் நடித்துவிட்டால் உடனே ஒரு கர்ண கொடூர படைப்பில் நடித்து திருஷ்டி சுத்தி போட்டுக்கொள்ளாவிட்டால் மோகன் லாலுக்கும், மம்முட்டிக்கும் தூக்கம் வராது போல. கோப்ரா எனும் கொலகுத்து சினிமாவிற்கு பிறகு மம்முட்டியிடமிருந்து வந்திருக்கும் பேரிம்சை தரிசனம்தான் இந்த ப்ரெய்ஸ் தி லார்ட். இரண்டாம் சீனில் கோவாவில் இவர் நண்பர்களுடன் குதூகலமாக இருக்கும் காட்சி படமாக்கப்பட்ட விதத்திலேயே அடுத்து நடைபெறவுள்ள விபரீதங்களை நம்மால் உணர முடிகிறது. 'இம்மானுவேல்' படத்தில் இயல்பான தம்பதிகளாக வந்து சென்ற மம்முட்டியும், ரீனுவும் இங்கே கடனுக்கென்று சேர்ந்து வாழ்கிறார்கள்.

சர்ச் ஃபாதர், மம்முட்டியின் ட்ரைவர் என ஆளாளுக்கு எதையோ பேசுகிறார்கள். என்னதான் சொல்ல வருகிறார்கள்? அட்லீஸ்ட் அந்த புது ஜோடிகளாவது உருப்படியாக நடிப்பார்களா? அப்போதாவது 'கதை' கண்ணில் படுமா என நினைத்தது குற்றமா?  சாம்குட்டியாக அஹமத் சித்திக் மற்றும் ஆனியாக அகங்ஷா வருகைக்கு பிறகுதான் 'ரத்தக்காவு' தீவிரமடைகிறது. இருவரின் வசன உச்சரிப்பும் படு அபத்தம். ஆல்மோஸ்ட் ஆன்ட்டி போலிருக்கும் அகங்ஷா என்னதான் க்ளாமராக வந்தாலும் ரசிக்க முடியவில்லை. ஆனால் மம்முட்டி மட்டும் கள்ளப்பார்வை பார்க்கிறார்.

'ப்ரெய்ஸ் தி லார்ட்' என்று கத்தி அஹமத் துவம்சம் செய்ய, மறுபுறம் 'காமுகன் காமுகி' என்று அடிக்கடி உச்சரித்து உசிரெடுக்கிறார் மம்முட்டி. போதாக்குறைக்கு ஏகப்பட்ட டைட் க்ளோஸ் அப் காட்சிகள் வேறு பயமுறுத்துகின்றன. ஒற்றை வீடு, ரப்பர் தோட்டம், சில வெளிப்புற காட்சிகள். அவ்வளவுதான் லொக்கேஷன். ஷான் ரஹ்மானின் இசையில் 'இன்னலேயோலம்' பாடல் மட்டும் சுமார்.  பிஜிபாலின் பின்னணி இசை 'சுத்தம்'.

'குடிப்பழக்கம் கூடாது' என அறிவுரை சொல்லிவிட்டு மம்முட்டியுடன் சேர்ந்து குடிக்கும் ஃபாதர், 'அல்லேலூயா' வழிபடுதல் முறையையும், டிஸ்கோதிக் கொண்டாட்டத்தையும் ஒன்றுபடுத்தி காட்டுமிடத்தில் மட்டும் இயக்குனரின் நையாண்டி ரசிக்க வைக்கிறது. ஆனால் இதுபோன்ற நக்கல்கள் மலையாள படத்தில் சாதாரணமாக வலம் வருவதால் பெரிதாக சபாஷ் போட முடியவில்லை.

இடைவேளை வரைக்குமே பொறுமை தாளாமல் கிடக்க, அதன் பிறகு இன்னும் அதள பாதாள வீழ்ச்சியை சந்திக்கிறது படம். வாட்சை பார்ப்பது, செல்போனை நோண்டுவது, தூங்குவது என திரையை பார்க்காமல் தவிர்க்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையும் செய்த பிறகும் இன்னும் அரை மணிநேர படமிருக்கிறது என்று தெரியும்போது...எத்தனை ஆயிரம் செலவானாலும் பரவாயில்லை, உயர் ரக மாட்டு தோலினால் செய்த சாட்டைகள் இரண்டை வாங்கி என்னை நானே விடிய விடிய  அடித்துக்கொள்ளலாம் எனத்தோன்றியது.

இப்படிப்பட்ட படங்களில் நடிப்பதற்கு பதில் சும்மா இருந்தால்தான் என்ன மம்முக்கா?


Saturday, March 15, 2014

ஊருக்கு எளச்சவன் டைடல் பார்க் ஆண்டிதோழர் ஆரூர் முனாவின் பதிவு: சென்னையில் வாடகை வீடுகளின் அவலங்கள்

                                                                    


மேற்கண்ட பதிவிற்கு கணினித்துறை நண்பர்கள் சார்பாக எதிர் கருத்தை வைத்தே ஆக வேண்டி இருப்பதால் இப்பதிவை எழுத வேண்டி இருக்கிறது.

அதென்னவோ தெரியவில்லை உலகின் எந்தப்பகுதியிலும் (குறிப்பாக இந்தியாவில் கணினித்துறை வளர்ச்சி பெற்றுள்ள நகரங்களில்) இல்லாத அளவிற்கு தமிழகத்தில்தான் சாப்ட்வேரில் வேலை பார்க்கும் இளைய சமூகத்தின் மீது வெறுப்பெனும் விஷத்தை கக்குகிறார்கள். என்னவோ இவர்கள் எல்லாம் ஆதிமுதல் இன்று வரை பரம ஏழைகளாக இருப்பது போலவும், சாப்ட்வேர் துறையில் இருப்பவர்கள் எல்லாமே குபேரனின் சொந்தக்காரன் போலவும் படம் காட்டுகிறார்கள். இதையே கணினித்துறையில் வேலை பார்க்கும் ஒருவர் 'அவன், இவன்' என்று ஏக வசனத்தில் மற்ற துறை ஆட்களை பற்றி எழுதி இருந்தால் மொத்தமாக வரிந்து கட்டிக்கொண்டு வந்திருப்பார்கள். அதையே வேற்றுத்துறை மாப்பிள்ளைகள் எழுதினால் 'சமூக எழுச்சி' போன்ற மாயை உண்டாகும். அருமை. சபாஷ். பலே. பிரமாதம். 

என்னமோ இத்துறையில் வேலை செய்பவர்கள் எல்லாருமே சென்னைவாசிகள் என்பது போன்ற பிம்பத்தை வேறு வடிவமைத்து விட்டனர். ஆனால் நிஜத்தில் கிட்டத்தட்ட 75% சதம் பேர் சென்னை தாண்டி வேறு இடங்களில் இருந்து வந்து இங்கு வேலை செய்பவர்கள்தான் என்பதே உண்மை. தயவு செய்து திருவல்லிக்கேணி மேன்சன், மகளிர் விடுதிகள் (குறிப்பாக ரங்கநாதன் தெருவிற்கு பின்பக்கம் இருப்பவை) மற்றும் இதர குடியிருப்பு பகுதிகள் அனைத்திலும் ஒரு சர்வே எடுத்து பாருங்கள். எத்தனை பேர் சென்னை மைந்தர்கள், எத்தனை பேர் வெளியூர் ஆட்கள் என்பது புரிந்துவிடும்.

தந்தையின் சொற்ப வருமானத்தில் குடும்ப தொழில் செய்து முன்னேற முடியாமல், கடனில் மூழ்கி இருக்கும் விவசாய நிலங்களை வைத்துக்கொண்டு பரிதவிக்கும் குடும்பத்தை மீட்டெடுக்க, சகோதரிகளின் திருமணத்தை முடிக்க இப்படி பல்வேறு சோதனைகளுக்கு தீர்வு தேட  கனவுகளை சுமந்து கொண்டு சென்னையில் கணினி வேலை பார்க்க வரும் சகோதர, சகோதரிகள் எல்லாம் உங்கள் இனம்தான் என்பதில் எப்போது புத்தியில் உரைக்க போகிறது?

கடந்த 15 ஆண்டுகளாக எத்தனை பெற்றோர்கள் 'தமிழ் ஆசிரியர்கள் மணமகன்/மணமகளாக வர வேண்டும்' என்று ஆசைப்பட்டு இருக்கிறார்கள். எந்த விளம்பரத்தை பார்த்தாலும் 'சாப்ட்வேர் மாப்பிள்ளை' வேண்டும் என்றுதானே ஆளாய் பறந்தார்கள். இப்போதும் பறக்கிறார்கள். அப்போது எங்கே போயிற்று உங்கள் இத்துப்போன அறச்சீற்றம்? 

'கம்ப்யூட்டர் துறையில் வேலை பார்ப்பவர்கள் எல்லாரும் 80,000 அல்லது லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குகிறார்கள்' என்று உளறுவதை முதலில் நிறுத்துங்கள். இன்றைய பொருளாதார சூழலில் கூட வெறும் 10,000 முதல் 20,000 ரூபாய் வரை மட்டுமே வாங்கிக்கொண்டு சென்னையில் வேலை பார்க்கும் வெளியூர் தோழர்கள் எத்தனை ஆயிரம் பேர் என்று தெரியுமா? அதை எப்போது வேண்டுமானால் நான் நிரூபிக்க தயார். கழுத்தை நெரிக்கும் விலைவாசியில் ஒரு சிங்கிள் பெட்ரூம் வீட்டை வாடகைக்கு எடுத்து மற்ற செலவுகளை கணக்கிட்டால் அவர்கள் கடன் வாங்கிதான் காலத்தை ஓட்ட முடியும் (மற்ற துறைகளில் இருப்பது போல மேலதிகாரிகள் இதற்கு விதிவிலக்கு. அவர்கள் சொற்ப எண்ணிக்கையில் தான் இருப்பார்கள். இங்கே குறிப்பிட்டு சொல்வது பெரும்பாலான ஊழியர்களை). அதனால்தான் நான்கைந்து நண்பர்கள்/ தோழிகள் சேர்ந்து ஒரே வீட்டில் வாடகைக்கு இருக்கிறார்கள். அதில் மிச்சமாகும் பணத்தை ஊருக்கு அனுப்புகிறார்கள் அல்லது அவர்கள் விருப்பத்திற்கு செலவு செய்கிறார்கள்? அதில் உங்களுக்கு எங்கே வலிக்கிறது?    

சென்னை போன்ற பெருநகரங்கள் ராட்சச வளர்ச்சி பெற்று வரும்போது வீட்டு வாடகை, பொருட்களின் விலை இத்யாதிகள் ஏறத்தான் செய்யும். என்னமோ தனக்கு கிடைக்கும் ஒரு லட்சத்தில் சிங்கிள் பெட்ரூம் வீட்டிற்கு மட்டும் 50,000 வாடகை தந்துவிட்டு மீதிப்பணத்தை டிப்ஸாக வீட்டு ஓனருக்கு தருவதுபோல சாப்ட்வேர் நபர்களை பார்த்து பொங்குகிறீர்களே? 

கோயம்பேட்டில் பேருந்து நிலையம் வரவுள்ளதாக அறிவிப்பு வந்தபோது அங்கு கூட ரியல் எஸ்டேட் விலை அநியாயத்திற்கு எகிறியது. அதற்கும் சாப்ட்வேர் ஆட்கள்தான் காரணமா? மெட்ரோ ரெயில் முழுமையாக செயல்பட ஆரம்பித்ததும் அவ்வழி தடத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் வாடகை வெகுவாக உயரும் என்று பிரபல ஊடகங்களின் ஆய்வுகள் சொல்கின்றன. இது உலகளாவிய நகரங்களில் இருக்கும் யதார்த்தம். எதற்கெடுத்தாலும் சாப்ட்வேர் ஆட்களை நொட்டை சொல்வது பெரிய தமாசு.  
         

'தலப்பாகட்டிக்கும், போலி 'தலப்பாகட்டுகளுக்கு'மான வித்யாசத்தை சற்று விவரம் தெரிந்த பாமரர் கூட எழுதில் கண்டுபிடித்துவிடுவார். ஆனால் சாப்ட்வேர் இஞ்சினியர் எனும் வார்த்தைக்கான அர்த்தத்தை சுத்தமாக புரிந்துகொள்ளாமல் தினசரிகளும், சில சமூக தீப்பந்தங்களும் செய்யும் கூத்து இருக்கிறதே? அடங்கப்பா. அதாவது கம்ப்யூட்டர் டிப்ளமா படித்தாலே சாப்ட்வேர் இஞ்சினியர் என்று அர்த்தமாம். என்ன கொடும சார் இது? அடித்தட்டு மற்றும் நடுத்தர வர்க்க இளைஞர்களுக்கு பல்லாயிரக்கணக்கில் வேலைகளை தருவது ஐ.டி.யை விட BPO துறைதான் என்பதை நினைவில் கொள்க மகராசாக்களே. அதில் வேலை செய்யும் எவரையும் சாப்ட்வேர் இஞ்சினியர் என்று சொல்வதில்லை. அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.

அப்படியே ஐ.டி. அல்லது BPO வில் வேலை பார்ப்பவர் பெரும் சம்பளம் பெறுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். சில ஆண்டுகளுக்கு ஒரு முறை 'ரிசசன்' எனும் கடும் பொருளாதார வீழ்ச்சி உலகை சுழற்றி அடிப்பது வழக்கம். அதனால் பெரும் பாதிப்பை அடைவது கணினித்துறை என்பது பலருக்கும் தெரிந்ததே. அப்போது கூட 'இவங்களுக்கு நல்லா வேணும்' என்று எள்ளி நகையாடிய சமூகமிது. அச்சமயம் அவர்களுக்கு உங்கள் பாக்கெட்டில் இருந்து எத்தனை ரூபாய் தர்மம் செய்துள்ளீர்கள்?. 'ஏன் செய்ய வேண்டும்?' எனக்கேட்பீர்கள். அதைத்தான் கேட்கிறோம். அவர்கள் நன்றாக வாழ்ந்தால் மட்டும் ஏன் எரிய வேண்டும்? நீங்கள் மட்டும் வாழ்நாள் முழுக்க ஏழையாகவே இருக்க வேண்டும் என்று விரும்புவீர்களா? இல்லை உங்கள் வீட்டு பெண்ணுக்கு ஒரு ரூபாய் வரதட்சணை வாங்காமல் மாதம் ஒரு லட்சம் சம்பாதிக்கும் சாப்ட்வேர் மாப்பிள்ளை வந்தால் வேண்டாம் என்று நிராகரிப்பீர்களா? 

வேளச்சேரியில் வீடு, கார் என்று வாங்கிவிட்டு கடனை வாங்கி சிரமப்படுகிறானாம் 'கொழுப்பெடுத்த' சாப்ட்வேர் காரன். அது அவன் விருப்பம்/தலையெழுத்து. உங்களுக்கு என்ன வந்தது? நீங்கள் அந்த கடனை அடைக்க போகிறீர்களா? அல்லது சாப்ட்வேர் நண்பர்களை தவிர வேறு எவருமே தனியார் வங்கியில் கடன் வாங்கி சிரமப்படவில்லை என்று சொல்கிறீர்களா? உங்கள் துறைக்கு தேசிய வங்கியில் லோன் தராவிட்டால் யூனியனை கிளப்பிக்கொண்டு அந்த வங்கி வாசலில் போராடுங்கள். அதற்கு எ துக்கய்யா எங்களை வம்புக்கு இழுக்க வேண்டும்? 

உங்களுக்கு 30,000 ஆயிரம் சம்பளம் என்றாலும் 60 வயது வரை வேலை நிரந்தரம். அதுபோக அரசாங்கத்தின் இதர சலுகைகள் உண்டு. பென்சன், இலவச பிரயாண வசதி. மேலதிகாரி பிரச்னை செய்தால் யூனியன் எனும் பெயரில் போராட்டம் செய்வீர்கள். இத்தனை மணிநேரத்தில் இவ்வளவு வேலைகள் நடந்தாக வேண்டும் என்று நித்தம் உங்கள் கழுத்தில் அடித்து வேலை வாங்கி விட முடியாது. 

ஆனால் இங்கே எப்போது வேலையில் இருந்து துரத்தப்படுவோம் என்று தெரியாது. சாமான்ய ஊழியனோ அல்லது மேனேஜரோ.. சட்டென வெளியே அனுப்பப்பட்டால் யூனியன் வந்து நிற்காது. அதிகப்படி வேலை இருந்தாலும் அதை முடிக்காமல் வீட்டிற்கு சென்று விட முடியாது. இக்கரைக்கு அக்கரை பச்சை. அவ்வளவே. 

மற்ற துறையினரை கணினித்துறை நண்பர்கள் வம்புக்கு இழுப்பதை விட உங்களை போன்ற போராளிகள் அவர்களை சீண்டுவதுதான் பேஷன் ஆகிவிட்டது. உங்களை 'ஆயிரத்தில் ஒருவன்' மணிமாறனாக காட்டிக்கொள்ள நாங்களா கிடைத்தோம்? போங்க பாஸ். 

பல்வேறு நவீன கண்டுபிடிப்புகள் மூலம் உலக மக்களின் நேரத்தை சேமித்து, வியாபாரத்தை பெருக்கி கணினி மூலம் பெரும் புரட்சி செய்த நண்பர்களுக்கு கிடைத்த பெரும் பரிசாக இது போன்ற வசவுகளை ஏற்றுக்கொள்கிறோம். 

அடுத்த டார்கெட்/ப்ராஜக்ட்டில் கவனத்தை செலுத்த ஆரம்பிப்போம் தோழர்களே. இவர்கள் பேசி/ஏசிக்கொண்டு இருக்கட்டும். அவர்களின் வசதிக்காக இன்னொரு மென்பொருளை உருவாக்க... Let us start our duty!!

.........................................................................
Tuesday, March 11, 2014

எஸ்கேப் - சுரேகா

க்ரிக்கெட்டில் 'ஆல் ரவுண்டர்' என்று சிலரை குறிப்பிடுவார்கள். பேட்டிங், பௌலிங் மற்றும் பீல்டிங் என எல்லா தளத்திலும் இயங்குபவர்களை அல்ல. அவையனைத்திலும் சிறப்பாக இயங்குபவர்களுக்குத்தான் அப்பட்டம் பொருந்தும். அப்படி 'பன்முகத்திறமை ' எனும் சொல்லுக்கு பொருத்தமானவர் சுரேகா சுந்தர். நிகழ்ச்சி தொகுப்பு, தொலைக்காட்சி பேட்டி, தன்னம்பிக்கை பேச்சுகள், பதிவர், நூலாசிரியர் என பல்வேறு தளங்களில் சிறப்பாக செயல்பட்டு வருபவர். அவருடைய படைப்புகளில் ஒன்றுதான் எஸ்கேப் எனும் நூல். 'தலைவா வா' விற்கு பிறகு களம் கண்டிருக்கும் இந்நூல் பற்றிய பார்வை இனி.

பெரும் கட்டுமான நிறுவனம் ஒன்றில் எட்டு ஆண்டுகள் கடும் உழைப்பை கொட்டியும் ஒற்றை பதவி உயர்வைத்தவிர வேறெதையும் பெறாதவன் நரேந்திரன். வேலைக்கு சேர்ந்த மூன்றே வருடங்களில் அடுக்கடுக்காக ப்ரமோஷன் வாங்கி தன்னை பின்னுக்கு தள்ளிய சத்யா எனும் பெண்ணைக்கண்டு குமுறுகிறான். சரியான அங்கீகாரம் கிடைக்காத மன உளைச்சலில் ராஜினாமா செய்ய எத்தனிக்கும் நரேந்திரனின் வாழ்வில் ஏற்படும் திருப்பம் அவனை எப்படி மேம்படுத்துகிறது என்பதுதான் எஸ்கேப்பின் லான்ட் ஸ்கேப்.

சுரேகாவின் 'தலைவா வா' மீது ஒரு சில மாற்றுக்கருத்துகள் எனக்கிருந்தன. அதனை செவிமடுத்து கேட்ட பிறகு 'எஸ்கேப் நீங்கள் நினைக்கும் குறைகளை பூர்த்தி செய்த படைப்பாக இருக்கும்' என்றார். எனினும் வழக்கம்போல் சுய முன்னேற்ற புத்தகங்களின் பால் ஏற்படும் கிலியுடனே வாசிப்பு துவங்கியது. நரேந்திரனின் ஆற்றொண்ணா கோபத்தை சரசரவென வாசகன் மீது திணிக்காமல் அவனது இல்ல சூழலில் நடக்கும் விஷயங்களை இயல்பாக வர்ணித்து இருப்பது நல்ல தொடக்கம். புரிதலுடன் பேசும் மனைவி, தெளிவான பார்வையுடன் கருத்துகளை பரிமாறும் சக ஊழியர் சத்யா என முதல் சில பக்கங்கள் வலுவான அடித்தளத்தை அமைக்கின்றன. அடுத்தடுத்த பக்கங்களை புரட்ட வேண்டும் எனும் ஆவலை தூண்டுவதும் இத்துவக்க கட்டங்களே. 

விக்னேஷ் எனும் இளைஞரிடம் சுய முன்னேற்ற பயிற்சி எடுக்க நரேந்திரன் செல்வதுதான் நூலின் பிரதான பகுதி. ஆண்டுக்கணக்கில் மாங்கு மாங்கென்று உழைத்தும் பதவி/சம்பள உயர்வு இல்லையே என்று சீனியர் அசோசியேட்கள் சிலர் அப்ரைசல் நேரத்தில் முகாரி ராகம் பாடி கேட்ட அனுபவம் எனக்குண்டு. அவர்களை பொறுத்தவரை கடிவாளம் போட்டது போல் நிர்வாகம் சொல்லும் வேலைகளை முடிப்பது, மேலதிகாரி மீட்டிங் போட்டு எது சொன்னாலும் ஆமாம் போடுவது, வீட்டுக்கு செல்வது, வார இறுதியில் டி.வி., சினிமா, பார் என ஏதேனும் ஒன்றில் லயித்துவிட்டு திங்களன்று மீண்டும் வேலைக்கு வந்துவிடுவார்கள். கண்ணை மூடி திறப்பதற்குள் அப்ரைசல் காலம் வந்துவிடும். சொற்பமான சம்பள உயர்வு அல்லது அதுவும் இல்லாமலும் போகும். இனி அடுத்த ஒரு வருசத்துக்கு புகாரி பக்கம் தல வச்சி படுக்க கூடாது' முகாரி மீண்டும் நம் காதுகளை குடைந்து கண்ணாடி கதவுகளை அதிர வைத்து விட்டு மாற்று வழி தெரியாமல் அறையையே சுற்றும். அந்த ஊழியரைப்போல. 

இதுபோல எத்தனையோ பேர். பணிக்கப்பட்ட வேலை தாண்டி தனது நிறுவனம் எப்படி செயல்படுகிறது, தேச/சர்வதேச சந்தையில் அதன் மதிப்பென்ன.....எதைப்பற்றிய எண்ணமும் இருக்காது. குறைந்தபட்சம் நாளேடு, ஊடகங்களில் தனது நிறுவனம் அல்லது தான் செய்யும் பணி குறித்து வரும் செய்திகளைக்கூட பார்த்திருக்க மாட்டார்கள். சினிமா, சீரியல், 'ஆட்டோ அப்பளம் போல நொறுங்கியது'...அவ்வளவுதான் அவர்களது சமூகம்(!) சார்ந்த விருப்பங்கள். அந்த காலகட்டத்தில் சில வருடங்கள்/மாதங்களுக்கு முன்பு வந்த புத்திசாலி ஊழியர் (அதாவது கல் உடைத்து/பொட்டி தட்டி சோர்வடையாமல் 'ஸ்மார்ட் வொர்க்' செய்யும் நபர்) வேகமாக முன்னேறி விடுவார். பெரும்பாலான தனியார் நிறுவனங்களில் நடக்கும் இந்த முக்கியமான நடைமுறை யதார்த்தத்தை வார்த்தை அலங்காரமின்றி இயல்பாக கையாண்டதன் மூலம் வெற்றிக்கொடி நாட்டி இருக்கிறது எஸ்கேப்.   

 
பொதுவாக மற்ற தன்னம்பிக்கை நூல்களில் இருப்பது போல 'அண்ணாமலை ரஜினி' பாணியில் அதிரடி முன்னேற்றங்கள் இந்நூலில் இல்லாதது பெரிய ஆறுதல். பயிற்சிக்கு பிறகு நரேந்திரன் அலுவகத்தில் பயன்படுத்தும் அணுகுமுறைகள் நம்பும்படி இருப்பது சிறப்பு. மின்னஞ்சல் மூலம் உள் அலுவலக தொடர்பு, வாடிக்கையாளர்களிடம் தொடர் தகவல் பரிமாற்றம் என எளிதில் நடைமுறை படுத்தத்தக்க விஷயங்களை பகிர்ந்திருக்கிறார் ஆசிரியர்.  

ரஜினி படம் சிலவற்றில் அவரே தன்னுடைய முந்தைய பட கேரக்டரை சில நொடிகள் உலவ விட்டு கைதட்டலை பெறுவார். உதாரணம்: பாட்ஷா 'நீ நடந்தால் நடையழகு' பாடலில் வரும் முந்தைய பட ரஜினிகள், பாபாவில் வரும் நீலாம்பரி. என்னதான் விளம்பர யுக்தியாக இருந்தாலும் குறிப்பிட்ட நடிகரின் விசிறியாக இல்லாமல் படைப்பை மட்டுமே ரசிப்பவர்களுக்கு 'அதான பாத்தேன்' என நாக்கை சற்று கடிக்க தோன்றும். அதை நினைவுபடுத்துகின்றன 40 ஆம் பக்க வரிகள்: 'சார் நான் அந்த 'தலைவா வா' புத்தகத்தை படிச்சிருக்கேன். ஆனா அந்த விக்னேஷ் நீங்கதான்னு தெரியாது'.

'பொன்னான வாழ்வு மண்ணாகி போனால் துயரம் நிலைதானா? உலகம் இதுதானா?' என்று புலம்பி தீர்க்கும் சீனியர் அசோசியேட் உள்ளிட்ட இதர அலுவலக வாழ் மக்களே. பதவி உயர்வுக்கான மேஜிக்கை லாஜிக்குடன் சொல்லும் எஸ்கேப் உங்களுக்கானதுதான். அடுத்த அப்ரைசலுக்குள் வெற்றிக்கான கதவு திறக்கட்டும். பொது நூலகங்கள் மற்றும் அலுவலக படிப்பறைகளில் பத்தோடு பதினொன்றாக இல்லாமல் கம்பீரமாக முன் வரிசையில் அமரும் தகுதியை கொண்டிருக்கும் வெகு சில சுய முன்னேற்ற நூல்களில் எஸ்கேப்பும் ஒன்று. 

தரமான தாள்கள், கண்களை உறுத்தாத எழுத்தளவுகள், படங்களை போட்டு பக்கங்களை நிரப்பாதது, சரியான இடைவெளியில் துவங்கும் பத்திகள் என தேவையான நிறைகளை கொண்டிருப்பது நூலின் ப்ளஸ். விலை 90 ரூபாய்.

சுய முன்னேற்ற நூல்கள் எனும் பெயரில் நடுத்தர அப்பிராணிகளின் பர்ஸை சுரண்டி பிழைக்கும் எழுத்தாளர் கூட்டம் சந்தையில் தொடர்ந்து நடமாடுவதைக்கண்டு நான் எரிச்சல் அடைந்ததுண்டு. இவர்களுக்கு மரத்தடி ஜோசியன், போலி வாக்குறுதி தந்து ஏமாற்றும் அரசியல்வாதிகள் மேல் என எண்ணி இருக்கிறேன். 'எதைத்தின்றால் பித்தம் தெளியும்' என்பது போல் ஏதேனும் ஒரு தன்னம்பிக்கை புத்தகம் தன்னை மாற்றி விடாதா? நாளை காலையே இந்த அம்பாசமுத்திரம் ஆறுமுகம் அம்பானி ஆகி விட மாட்டேனா என ஏங்கும் அப்பாவிகள் ஆயிரம். அவர்களை மற்ற மோடிமஸ்தான் எழுத்தாளர்களை போல ஏமாற்றாமல் நேர்மையான படைப்பை தந்திருக்கும் சுரேகா சார்....ஹாட்ஸ் ஆஃப்.

தங்கள் சுய முன்னேற்ற நூல்களில் எஸ்கேப் ஒரு பெஞ்ச் மார்க் என்பது எனது அசைக்க முடியாத கருத்து. இனி தங்கள் வசமிருந்து வரவுள்ள தன்னம்பிக்கை  நூல்கள் எஸ்கேப்பில் உள்ளது போன்ற நேர்மையான அம்சங்களை தாங்கி வந்தால் சிறப்பாக இருக்கும். விக்னேஷை நம்பிய நரேந்திரன் போல நம்பிக்கையுடன் காத்திருக்கும் வாசகர்களில் ஒருவன். நன்றி.

..................................................................

Monday, March 3, 2014

சுரேஷ்வரின் சிவ சம்போதனது சின்னத்திரை சீரியல் நடிப்பு  மூலம் பரவலாக அறியப்பட்டவர் சுரேஷ்வர். கமல், ரஜினி போன்ற ஸ்டார்களின் சிறு வயது பாத்திரங்கள் பலவற்றில் நடித்த அனுபவமும் உண்டு. அதுபோக ஒய்.ஜி. மகேந்திரனின் நாடகக்குழுவிலும் அங்கமாக இருந்தவர். யு.ஏ.ஏ.வின் 60 ஆம் ஆண்டு நிறைவையொட்டி ஒய்.ஜி.எம்.மின் புதல்வி மதுவந்தி 'தியேட்டர் ஆப் மஹம்' எனும் நாடகக்குழுவை சமீபத்தில் துவக்கினார். அதன் சார்பாக சுரேஷ்வர் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ள நாடகம்தான் 'சிவ சம்போ'. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் முதன் முறையாக மேடை நாடகத்திற்கு இசையமைத்திருப்பது இதன் சிறப்பு.

வேலை நிமித்தம் நியூயார்க் நகரின் குடியிருப்பொன்றில் நட்பு சகிதம் கூட்டாக வசிக்கிறாள் காயத்ரி. மேற்கத்திய தாக்கத்திற்கு ஆளாகிவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பவர் அவளது தந்தை பட்டாபி. தந்தை சொற்படி நடக்கும் காயத்ரி சமூக நிர்பந்தங்களால் சற்று சுதந்திரமாகவும் வாழ வேண்டி இருக்கிறது. நல்ல வேலை கிடைத்தாலும் தங்க இடமின்றி தவிக்கும் ஆகாஷ் எனும் இளைஞனுக்கு பரிதாபப்பட்டு ஹாலை ஒதுக்குகிறார்கள் காயத்ரி & ப்ரெண்ட்ஸ். ஆனால் ஜோதிடர்கள் மாநாட்டிற்கு நியூயார்க் வரும் பட்டாபி மகளை பார்க்க செல்கிறார். ஆகாஷ் உடன் தங்கி இருப்பதை கண்டால் தந்தை பிரச்னை செய்வார் என்பதால் அந்த இக்கட்டை சமாளிக்க காயத்ரி தீட்டும் திட்டம் என்னவாகிறது என்பதுதான் கதை.

காயத்ரியாக மதுவந்தி. சக்தி எனும் நாடகத்தின் மூலம் முக்கிய கேரக்டரில் நடிக்க ஆரம்பித்தாலும் ஒய்.ஜி. மகேந்திரனின் 'நாடகம்' எனும் நாடகத்தில் பார்வையற்றவராக சிறு வேடத்தில் நடித்ததும் பாராட்டப்பட்டது. பொதுவாக ஒரு நாடகத்தை தயாரிப்பவர்/இயக்குபவர் மற்றவர்களை விட அதிக காட்சிகளில் நடித்து பெயர் வாங்க நினைப்பது வழக்கம். ஆனால் அளவான காட்சிகளில் மட்டுமே வந்து தனக்கான இடத்தை தக்க வைத்துள்ளார் இவர். உடன் நடிக்கும் மற்றவர்களும் பேசப்பட வேண்டும் என்பதற்காக விட்டுத்தந்து நடிப்பது என்பது நாடக உலகில் அபூர்வம்தான்.
 

ஒவ்வொரு கேரக்டர் பற்றியும் தனது பாணியில் அறிமுகம் செய்கிறது பாஸ்கியின் பின்னணி குரல். 'பரீட்சைல பாஸ் ஆகலன்னா இவங்க அப்பா திரிசூலம் சிவாஜி மாதிரி தன்னை தானே அடிச்சிப்பார்'... பாஸ்கியின் சிறப்பு பஞ்ச். இடைவேளைக்கு சற்று முன்பாக அறிமுகம் ஆகிறார் சுரேஷ்வர் ( பட்டாபி). அந்த நிமிடம் முதல் இறுதி வரை நகைச்சுவை களை கட்டுகிறது. இடைவிடாமல் நீண்ட வசனங்களை பேசி கைத்தட்டல்களை வாங்குகிறார் சுரேஷ்வர். அறிமுக இயக்குனராகவும், நடிகராவும் களம் கண்டிருக்கும் சுரேஷ்வருக்கு 'சிவ சம்போ' புகழை பெற்றுத்தரும் என்பது உறுதி.

காதல் இளவரசனாக ஹரி(ஏக்நாத்). சுரேஷ்வரிடம் திட்டு வாங்கும்போதும், தனது அன்பை காட்ட பூவை ஏந்தியவாறு அறை முழுக்க சுற்றும்போதும் சிரிப்புக்கு உத்திரவாதம் தருகிறார். கோபி (ராசு) என்பவரை எங்கிருந்து பிடித்தார்களோ? நளினமான பாவம் கலந்த நடிப்பு. நாடக உலகிற்கு இன்னொரு நல்வரவு.

சுதர்சன் (ஆகாஷ்), கிரீஷ் ஆயபத் (ஆவி நாயகம்), சிவ சங்கரி (மாயா), சுபாஷினி (சந்தியா) உள்ளிட்டவர்களின் நடிப்பும் தொய்வின்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டில் தங்கி வாழும் இந்தியர்கள், குறிப்பாக இளைய சமூகம் குறித்து இங்குள்ள பெற்றோர்களின் கணிப்பு மற்றும் அதிலுள்ள தவறான பார்வைகளை நெடிய பிரச்சாரமாக இல்லாமல் எளிமையான க்ளைமாக்ஸ் வசனங்களால் நிரப்பி இருக்கிறார் இயக்குனர். இரண்டு மணிநேரம் அமெரிக்காவில் தங்கி இருக்கும் உணர்வை தரும்படி பிரமாதமாக அரங்கத்தின் பின்னணியை அமைத்துள்ளார்கள்.  அதற்கு காரணமான 'எக்ஸலன்ட் ஸ்டேஜ் சர்வீஸ்' பாலாஜி குழுவினரை பாராட்டி ஆக வேண்டும்.

ஆண்டாண்டு காலமாக பெரும்பாலும் முந்தைய தலைமுறையினர் பார்க்கும் பொருட்டே நாடகங்கள் வந்து கொண்டிருந்த சமயத்தில்,  சென்ற ஆண்டு 'குறுக்கு வழியில் ட்ராபிக் ஜாம்' மற்றும் 'இடியுடன் கூடிய அன்பு மழை' போன்ற நாடகங்களால் நவீன யுகத்தினரை திரும்பி பார்க்க வைத்த இளைஞர்  விவேக் ராஜகோபால். அந்த வரிசையில் தற்போது மதுவந்தி, சுரேஷ்வர் ஆகியோரின் சிறந்த தயாரிப்பு மற்றும் கலைத்திறனால் 'சிவ சம்போ' வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

written for tamil.jillmore.com

 ..................................................................

சமீபத்தில் எழுதியது:

வல்லினம் - விமர்சனம்Sunday, March 2, 2014

வல்லினம்
தப்பும் தவறுமாக தமிழ் பேசி சினிமா ரசிகர்களை  இம்சைக்கு ஆளாக்கும் இளம் நாயகர்கள் லிஸ்டில் நம்பர் ஒன் இடத்தில் இருந்து வந்தவர் நகுலன். 'காதலில் விழுந்தேன்' படத்திற்கு பிறகு எழுந்தேன் என்று சொல்லிக்கொள்ள ஒரு  சந்தர்ப்பமும் அமையவில்லை. 'ஈரம்' இயக்குனர் அறிவழனும் நான்காண்டுகள் கழித்து தனது படைப்பை கொண்டுவந்துள்ளார்.

திருச்சி கல்லூரி ஒன்றில் சிறந்த கூடைப்பந்து வீரனாக திகழும் கிருஷ்ணா தனது உற்ற நண்பன் சிவா மீது தற்செயலாக பந்தை எறிய அது அவனது உயிரை பறிக்கிறது. நண்பனை இழந்த சோகத்தை மறக்க சென்னை கல்லூரிக்கு இடம் மாறுகிறான். விருப்ப விளையாட்டான கூடைப்பந்து தவிர்க்கிறான். ஆனால் அங்கிருக்கும் இறுதியாண்டு மாணவர்கள் கிரிக்கெட் சாம்பியன்கள் என்பதால் இவர்களை இளப்பமாக பார்த்து நையாண்டி செய்கிறார்கள். கல்லூரி வளாகத்தில் நடக்கும் அகில இந்திய கல்லூரிகளுக்கான கூடைப்பந்து போட்டியில் வென்று தங்கள் பலத்தை நிரூபிக்க கிருஷ்ணா தலைமையிலான அணி எப்படி போராடுகிறது என்பதுதான் வல்லினத்தின் கதை.

அளவாக பேச வைத்தும், கூடைப்பந்து வீரனுக்கான பயிற்சிகளை மேற்கொள்ள வைத்தும் நகுலனை மெருகேற்றி இருக்கிறார் இயக்குனர். அவ்வகையில் நகுலனுக்கு வல்லினம் உருப்படியான முதல் படம் என சொல்லலாம். சக கல்லூரி மாணவர்களையும் இயல்பாக நடிக்க வைத்திருக்கிறார்கள். ஜெகனின் காமடி பெரிய உறுத்தல். மிக சீரியசான கட்டங்களில் கூட ரம்பம் போட்டு தள்ளுகிறார். நாயகி மிருதுளா. சொல்ல எதுவுமில்லை. அவருடைய தோழியாக வரும் பெண் அத்தனை அம்சம். பேசாமல் அந்தப்பெண்ணை ஹீரோயினாக போட்டிருக்கலாம். எல்லா விளையாட்டு படங்களிலும் வரும் 'பகவத் கீதை கிருஷ்ணன்' கோச் இங்கும் உண்டு. அதுல் குல்கர்னி வடிவில். ஆனால் கோபக்கார கோச்சாக மனதில் நிற்கிறார். தொழிலதிபராக ஜெயப்ரகாஷ் எப்போதும் போல் சிறப்பு.

'வல்லினம் வல்லினம்' தவிர்த்து மற்ற பாடல்கள் அனைத்தும் படு சுமார். பாடல்களை பெரிய அக்கறையின்றி காட்சிப்படுத்தி இருப்பது போல் தெரிகிறது. க்ராபிக்ஸ் உதவி பெரிதாக இன்றி சில்வாவின் சண்டைக்காட்சிகள் நன்று.

நல்லவர்கள் தோற்கும் அணிக்கு ஆபத்பாந்தவனாக வரும் கோச், இறுதிப்போட்டியில் கிட்டத்தட்ட தோற்கும் நிலையில் 'செய் அல்லது செத்துமடி' வசனம் பேசி சர சரவென முன்னேறி ஓரிரு பாய்ன்ட் அதிகம் பெற்று ஜெயிப்பது, இடையே கொஞ்சம் காதல் போன்ற அலுத்துப்போன சமாச்சாரங்கள் இங்கும் உண்டு. ஆனால் அவற்றையும் தாண்டி இப்படம் சில சிறப்புகளை பெற்றுள்ளது.

சிறந்த துணை நடிகர்கள் (குறிப்பாக கல்லூரி மாணவர்கள்), கூடைப்பந்து விளையாட்டு குறித்து இயக்குனருக்கும், நடிகர்களுக்கும் இருக்கும் அடிப்படை புரிதல், இறுதிப்போட்டியில் நிஜமான கூடைப்பந்து போட்டியில் காணும் விறுவிறுப்பு, கிரிக்கெட்டால் மற்ற விளையாட்டுகள் புறக்கணிக்கப்படுவதன் பின்னணி போன்ற முக்கிய அம்சங்கள் சிறப்பாக கையாளப்பட்டு இருப்பது வல்லினத்தின் பலம்.  கோப்பையை வாங்காமல் சிறுவன் ஒருவனுக்கு பந்தை கூடையில் போட நகுலன் உதவும் இறுதிக்காட்சிக்கு பலமாக கை தட்டலாம்.

கமர்சியல் படங்களுக்கான சமரசங்களை செய்து நம்மை சோதித்தாலும் கூடுமானவரை கூடைப்பந்து விளையாட்டை சுற்றியே கதையை நகர்த்திய அறிவழகனை பாராட்டலாம். விளையாட்டு படங்களின் வரிசையில்  இன்னொரு உருப்படியான சேர்க்கை இந்த வல்லினம்.

........................................................

written for tamil.jillmore.com


சமீபத்தில் எழுதியது:

Saturday, March 1, 2014

தெகிடி
வில்லாவில் விலா முறிந்ததால் அடுத்த படத்திலாவது வெற்றி விழா கொண்டாடட்டுமே என்று நாயகன் அசோக் செல்வனுக்கு முட்டுக்குடுத்துள்ளார் தயாரிப்பாளர் சி.வி.குமார். விஜய சேதுபதி போல 'நமக்கு எதுக்குங்க ஹீரோயிசம் (அது வராதுங்கறது ஒரு பக்கம்). கதைக்கு எது தேவையோ...' என்று பணியும் இள ரத்தம்தான் நம்ம நல்ல தம்பி அசோக்கு. தெகிடி ஏணியில் ஏற்றியதா? வாருங்கள் பார்க்கலாம்.

தஞ்சையிலிருந்து சென்னைக்கு துப்பறியும் நிறுவனத்தில் வேலை பார்க்க வருகிறான் வெற்றி. பிறகென்ன? சட்டு புட்டென காதலிலும் விழுகிறான். யாரையெல்லாம் இவன் துப்பறிகிறானோ அவர்கள் ஒருவர் பின் ஒருவராக இறக்கின்றனர். அதில் ஏதோ மர்மம் உள்ளதென சரியாக யூகித்து தனிப்பட்ட முறையில் அதன் பின்னணியை ஆராய ஆரம்பிக்கிறான். சில அதிர்வுகள், சில சிக்கல்கள். அவற்றை எப்படி கையாள்கிறான். இதுதான் தெகிடி/பகடை/தாயம்.

டிடக்டிவ் படமென்றால் தலைவர் ஜெய்சங்கர் பாணியில் ஜனரஞ்சகம் மேலோங்கி இருக்க வேண்டும் அல்லது பீட்சா ரகத்தில் விறு விறு காட்சி அமைப்புகளை பின்னி 'இந்த சீன்ல ஏதோ ஒதைக்குதே' என்று ரசிகன் சுதாரிப்பதற்குள் ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் அடித்து என்ட் கார்ட் போட்டு விட வேண்டும். இரண்டும் இல்லையென்றால்? இங்கே அதுதான் நடந்திருக்கிறது. மணிரத்னம்/கௌதம் பட கேரக்டர்களைப்போல அனைவரும் அவுன்ஸில் அளந்து பேசுகிறார்கள். கான்ஸ்டபிள் உட்பட. அடக்கம் ஆனாலும் அநியாயத்திற்கு உய்த்திருக்கிறது.

படத்தின் நீளமே மொத்தம் 2 மணி 2 நிமிடங்கள் தான். ஆனால் முதல் முக்கால் மணி நேரம் நான்கு பாடல்கள்(டைட்டில் பாடலுட்பட). மிகச்சுமாரான பட்டர் நான் போல தோற்றமளிக்கிறார் ஜனனி. காதலும் செய்யாமல், கதைக்கும் வழிவிடாமல் அசோக்குடன் தர்ணா செய்து நம்மை பழிவாங்குவதில் என்ன ஆத்ம திருப்தியோ?

அசோக் செல்வன்... நீங்கள்தானே  டிடக்டிவ்? பிறகு எதற்கு பாஸ் படம் முழுக்க உங்களை யாரோ துரத்துவது போன்றே முழிக்க வேண்டும்? தயவு செய்து எம்.ஏ. குற்றவியல் படித்த சான்றிதழை தகவல் அறியும் உரிமை சட்டத்தில் நாங்களாக கேட்பதற்குள் தந்து விடுங்கள். அப்படி செய்தால் அடுத்த படத்திலும் 'கதை' நாயகனாக நடிக்க சி.வி. குமாரிடம் சிபாரிசு செய்கிறோம்.

அசோக்கின் நண்பராக காளி. பாவம். இயல்பான நடிப்பை ஒளித்து வைத்து தவணை முறையில் வார்த்தைகளை பேச மெனக்கெட்டு இருக்கிறார். ஜெயப்ரகாஷ் வந்த பிறகு சற்று சுறுசுறுப்படையும் திரைக்கதை இடையிடையே ப்ரேக் டவுன் ஆகி மீண்டும் வேகமெடுக்க முயற்சிக்கிறது. வல்லபா எனும் மர்ம மனிதர் கேரக்டர் அந்தக்கால 'ஓகே பாஸ்' நம்பியாரை நினைவு படுத்துகிறது.

நிவாஸின் பின்னணி இசை சுமார். சத்யப்ரகாஷின் குரலில் 'யார் எழுதியதோ' பாடல் மனதிற்கு இதம். மற்ற பாடல்கள் ஒலி வடிவில் கேட்க நன்றாக இருந்தாலும் திரையில் பெரிதாக கவரவில்லை.

ஜெய்சங்கரின் டெம்ப்ளேட் துப்பறியும் படங்களை நேக்காக பாலீஷ் செய்து மல்டிப்ளெக்ஸ் ரசிகர்களுக்காக கொலைப்பின்னணியுடன் படு டீசன்ட்டான கலைப்படத்தை பரிமாறி இருக்கிறார்கள். ஆனால் அதற்கெல்லாம் தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட் ரசிகர்கள் அசருவார்கள் என கண்டிப்பாக நம்ப முடியாது.

.................................................................
 
written for tamil.jillmore.com
Related Posts Plugin for WordPress, Blogger...