தமிழ்
நாடகத்துறையில் புகழ் பெற்று விளங்கிய கலைஞரான லியோ பிரபு நீண்ட
இடைவெளிக்கு பிறகு 'நெருப்பு கோலங்கள்' மூலம் மேடையேறி இருக்கிறார். 1969
ஆம் ஆண்டு ஸ்டேஜ் இமேஜ் எனும் நாடகக்குழுவை துவக்கி மொத்தம் 32 படைப்புகளை
வெற்றிகரமாக அரங்கேற்றிய இவர் பொருளாதார பிரச்னை மற்றும் சில சபாக்களின்
ஒத்துழைப்பு கிடைக்காத காரணங்களால் நாடகத்துறையை விட்டு சில காலம் விலகி
இருக்க வேண்டி இருந்தது. தற்போது தனது மகளுக்காக பிரத்யேக கதையொன்றை எழுதி
இயக்கி, நடிக்கவும் செய்துள்ளார் லியோ பிரபு.
கலைகளின்
வளர்ச்சிக்காக பெருந்தொண்டு செய்து பெயர் பெற்றவர் தர்மராஜா. செல்வந்தரான
இவருக்கு ஒரே மகனாக தூயவன். பெயரில் மட்டும். தந்தையின் தயவில் பரதம்
கற்றும் வரும் கயல்விழியை பின் தொடர்கிறது இவனது காம விழி. இதற்கு
முற்றுப்புள்ளி வைக்க சொல்வேந்தன் எனும் தமிழ்க்கவிஞனுக்கு கயல்விழியை
மணமுடித்து வைக்கிறார் தர்மராஜா. சொல்லில் மட்டுமே வேந்தனாக இருக்கும்
அக்கவிஞன் தனது நியாயமான கொள்கைகளை விட்டுத்தராததால் போதிய வாய்ப்பு இன்றி
குடும்பத்தை வறுமையில் ஆழ்த்துகிறான். பிரச்னைகள் எப்படி தீர்ந்தன
என்பதுதான் கதை.
ஏற்றுக்கொண்ட
கதாபாத்திரத்திற்கு பெருமை சேர்த்திருக்கிறது லியோ பிரபுவின் நடிப்பு.
ஆனால் அவரது தனித்துவம் வாய்ந்த குரலின் வசீகரம் தோய்ந்து போனதில்
வருத்தம்தான். அவருடையை மகள் முருகசங்கரிக்கு இதுதான் முதல் நாடக மேடை.
ஆனால் அந்த தயக்கம் எதுவும் முகத்தில் தெரியவில்லை. பவ்யமான பரத
நாட்டியப்பெண், துறு துறு பூக்காரி என காட்சிகளுக்கேற்ப சாரீரத்தில் ஏற்ற
இறக்கங்கள் நன்று. பாலச்சந்தர் பட நாயகிகள் உதிர்க்கும் சிறப்பு
வார்த்தைகளான 'அச்சா' போன்று இவர் அடிக்கடி சொல்லும் 'டொய்ங் நானா'வை
பெருமளவு தவிர்த்து இருக்கலாம்.
இன்னொரு
முக்கிய கேரக்டர் சொல்வேந்தனாக நந்தகுமார். தன் எழுத்தின் மீது கொண்ட
நம்பிக்கையை ஈகோவாக தலைக்கேற்றி இயல்பாக நடித்துள்ளார். டீக்கடை நாயராக
மூத்த கலைஞர் வெங்கட்ராமன். தூர்தர்சனில் செவ்வாய் கிழமை நாடகங்கள்
கோலோச்சிய காலத்தில் சிறந்த துணை நடிகராக வலம் வந்து நகைச்சுவையில் பெயர்
வாங்கியவர். லியோ பிரபுவை போல வயது முதிர்ச்சியால் துடிப்பான நடிப்பை
வெளிப்படுத்த இயலவில்லை. ஓரிரு இடங்களில் மட்டும் மலையாளம் பேசிவிட்டு
தமிழராகவே டீ ஆற்றி இருக்கிறார். போக்கிரி இளைஞன் தூயவனாக ப்ராட்லி கணேசன்.
சிகையலங்காரம், உடை மற்றும் பேசும் தொனி என பொருத்தங்கள் சிறப்பு.
உடான்ஸ்
கவிஞர் பழநியாக விக்னேஷ் செல்லப்பன். 'வெற்றிக்கொடி கட்டு' வடிவேலு
பாணியில் நீலக்கலர் ஜிங்குச்சா காஸ்ட்யூம் சகிதம் நாடக உலகிற்கு அறிமுகம்
ஆகி இருக்கிறார். மனிதருக்கு நகைச்சுவை உணர்வு சர்வ சாதாரணமாக
வெளிப்படுகிறது. ரகுவரன், அஜித் போல தனித்த குரல்வளம் விக்னேஷின்
பெரும்பலம். நாடக உலகில் இவருக்கென்று ஓரிடம் காத்திருக்கிறது என்பதில்
சந்தேகமில்லை. டீக்கடை குழந்தை தொழிலாளி (!!) பேபி கேரக்டரில் ப்ரவீணா
எனும் சிறுமி ஒரு சில காட்சிகளே வந்தாலும் குறும்பான நடிப்பால்
கைத்தட்டல்களை அள்ளி விடுகிறாள்.
முருகசங்கரி மற்றும் மோகன் ராமன் பாடிய 'பூ விற்கு பூவிது', 'தமிழே நீ வாழ்க' ஆகிய பாடல்கள் செவிக்கிதம்.
தனது
தம்பி எப்படி விடுதலையானான் என்று நாயர் பழனியிடன் சொல்வதாக ஒரு காட்சி.
'அடிக்கடி கோர்ட்டுக்கு வர்றியே வெக்கமா இல்ல?' என நீதிபதி கேட்க 'நீங்க
கூடத்தான் நித்தம் வர்றீங்க' என்று குற்றவாளி எதிர்க்கேள்வி விடுக்க தொல்லை
தாங்காமல் விடுவிக்கிறாராம். என்னதான் காமடி என்றாலும் இப்படியா? அதுபோல
கூலிங் கிளாஸ் அணிந்திருக்கும் பழனியிடம் 'உனக்கு கண்ணாடி போடலன்னாலே கண்ணு
தெரியாது. இதுல இது வேறயா?' என்கிறார் நாயர். இது எழுத்துப்பிழையா அல்லது
உச்சரிப்பு பிழையா என்று தெரியவில்லை. கவனம் செலுத்தி இருக்கலாம்.
மற்றபடி சமூகப்பார்வை
மிக்க நாடகமொன்றை நல்ல நடிகர்களின் துணையுடன் மேடையேற்றி இருக்கும் லியோ
பிரபுவிற்கு பாராட்டுகளை அவசியம் சொல்லலாம்.
..........................................................
2 comments:
பொருளாதார பிரச்சனையால் குரலின் வசீகரம் குறைந்திருக்குமோ...? லியோ பிரபு அவர்கள் சிறக்க வாழ்த்துக்கள்...
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...
மீண்டும் உயிர்த்து வந்திருக்கும் 'லியோ பிரபு' அவர்களுக்கு வாழ்த்துக்களும்,வணக்கங்களும்!பகிர்ந்த உங்களுக்கு நன்றிகள்!///இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!!!
Post a Comment