CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Sunday, February 16, 2014

குண்டே






பாகிஸ்தானிடம் போரிட்டு பங்களாதேஷ் எனும் தனி நாட்டை இந்தியா உருவாக்கிய சமயமது(1971). அப்போது அகதிகள் முகாமில் அனாதைகளாக அடைக்கலம் புகும் சிறுவர்கள்தான் பிக்ரம் மற்றும் பாலா. ராணுவ அதிகாரி தரும் பாலியல் இம்சையில் இருந்து தப்பித்து கல்கத்தா வந்து சேருகிறார்கள் இருவரும். துப்பாக்கி, நிலக்கரி கடத்தல் என  சட்டத்திற்கு புறம்பான தொழில்களை பல செய்து இளம் வயதிலேயே கல்கத்தாவின் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுக்கும் உற்ற நண்பர்கள் வாழ்வில் காதல் விளையாடுகிறது. மறுபக்கம் காவல் துறையும். காதலையும், காவலையும் எப்படி எதிர்கொள்கிறார்கள்?

அமிதாப், ராஜேஷ் கண்ணா உள்ளிட்ட மாஸ் மகாராஜாக்கள் ஆட்சி செய்த எண்பதுகளின் டெம்ப்ளேட் ப்ளேட்டை மாற்றாமல் மீண்டும் திரையாக்கம் செய்திருக்கிறார் அலி அப்பாஸ். பங்களாதேஷ் அகதிகள் பிரச்னையை நொடிகளில் கடந்துவிட்டு 'கதைக்கு' வருகிறார். மினி மிளகாய் பஜ்ஜிகளாக ஜெயேஷ் மற்றும் தர்ஷனின் ஆரம்ப காட்சிகள் ஆர்ப்பாட்டம். அதன் பின் வாலிப வஸ்தாதுகளாக ரன்வீரும், அர்ஜுனும். அர்ஜுனை விட சற்று முரட்டுத்தனமான முக அமைப்பு இருந்தாலும் என்ன பயன்? ராம் லீலா நாயகன் இந்த ராவண லீலா கேரக்டரில் தம் கட்ட தடுமாறி இருப்பது சறுக்கல்.

 (ஆறு) கட்டு மஸ்தான சிக்ஸ் பேக்ஸ் சண்டையில் வெளிப்படும் ஆக்ரோஷம் மட்டுமே ரன்வீர் மற்றும் அர்ஜுனின் ப்ளஸ் என சொல்லலாம். அது தவிர்த்து சொல்வதற்கு ஒன்றுமில்லை. 'ரெட்டைச்சூரியன் வருகுதம்மா. ஒற்றைத்தாமரை கருகுதம்மா' கேரக்டரில் ப்ரியங்கா. கிளாமரில் வஞ்சம் இல்லை. ஆனால் காதலில் இரு நாயகர்களும் சொதப்ப இவரும் சிக்கித்தவிக்க வேண்டி இருக்கிறது. 'புதிய பறவை' ட்விஸ்ட் தந்தாலும் ப்ரியங்கா பெரிதாக ஆச்சர்யப்படுத்தவில்லை.

போலீஸ் அதிகாரியாக இர்ஃபான் கான். ஒட்டுமொத்த படத்தில் நடித்த ஒரே நபர் இவர்தான். ஆனால் இந்த சிங்கம் தயிர் சாதம் மட்டுமே சாப்பிட வேண்டிய கட்டாயம். எல்லா 'டான்' படங்களிலும் இருக்கும் மூத்த ஆலோசகர்/ நலம் விரும்பி கேரக்டரில் சவுரப் சுக்லா. ஹீரோக்கள் போடும் சத்தத்தில் சைலன்ட் ஆகி விடுகிறார் பாவம். முதல் சில வினாடிகள் மட்டும் வந்து தியாகியாகி விடுவது 'கேங்க்ஸ் ஆப் வாசெபூர்' பங்கஜ் த்ரிபாதி.

ப்ரியங்காவின் கவர்ச்சியையும் தாண்டி மனதில் நிற்கிறது 'ஜியா' பாடலில் ஒலிக்கும் அரிஜித் சிங்கின் குரல். 'துனே மாரி'யில் 'என்னடி முனியம்மா உன் கண்ணுல மையி' ட்யூனை திருடி போட்ட சொஹைல் சென்னின் கலைநேர்த்தி அபாரம். சண்டைக்காட்சிகளில் முக்கால்வாசி வேலையை ரிலையன்ஸ் விசுவல் எபக்ட்ஸ் டீம் பார்த்துக்கொண்டதால், பெங்காலி ஸ்வீட்டை ருசித்தவாறே 'ஆக்சன்' சொன்னது மட்டுமே ஸ்டன்ட் மாஸ்டர் ஷாம் கவுசலின் வேலையாக இருந்திருக்கும் போல.


எதிரிகள் சூழும்போது ரன்பீரும், அர்ஜுனும் ஒருவருக்கொருவர் புன்முறுவல் பூத்து சிரித்துக்கொள்ள, அடுத்து அருகில் ஓடும் ரயில் மீது பறந்து போய் ஏறுவது ஒரு (கால) கட்டத்திற்கு மேல் டபுள் ட்ரபுள். 11 வயது முதல் கல்யாண வயது வரை இப்படியேவா? வெறும் 40 அடிப்பொடிகளை வைத்துக்கொண்டு மிகப்பெரிய நகரான கல்கத்தாவை ஆட்டிப்படைப்பது அமிதாப் பச்சனுக்கே அடுக்காது. அட ஒற்றை ஆளாக வூடு கட்டி அடித்த அண்ணன்மார்களும் அப்போது இருக்கத்தான் செய்தார்கள். ஆனால்  அத்தகைய காட்சிகளில் நம்மை 'நம்ப' வைக்கும் தந்திரம் அவர்களிடம் இருந்ததே. அது!!!

ஒன்று எண்பதுகளின் ஹீரோக்கள் போல மசாலா இமேஜ், 'கலங்கடிக்கும்' வசனங்கள் கொண்டு நம்மை வசியம் செய்ய வேண்டும் அல்லது வலுவான திரைக்கதை யுக்தி இருக்க வேண்டும். சரக்கில்லா கூட்ஸ் ட்ரெயின் ஆக வலம் வந்தால்? 'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ் முகத்தில் கரி பூசியவாறு ரன்பீரும், அர்ஜுனும் போஸ்டர்களில் போஸ் தருவது சிறப்பான குறியீடு. வேறென்ன சொல்ல?



f

1 comments:

வெங்கட் நாகராஜ் said...

நல்ல விமர்சனம்....

+ மற்றும் - இரண்டையும் சொல்லும் உங்கள் பாணி நன்று.

Related Posts Plugin for WordPress, Blogger...