ஓகே
ஓகே வில் நயன்தான் நாயகியாக இருக்க வேண்டும் என விரும்பினார் உதயநிதி.
ஆனால் இறுதியில் ஹன்சிகாவுடன் தான் ஹாஸ்யம் செய்ய வேண்டி இருந்தது.
ஒருவகையில் அந்த ஜோடியின் அப்பாவித்தனமும் படத்தின் அமோக வெற்றிக்கு
ஒத்தாசை செய்தது என சொல்லலாம். ஆனால் இம்முறை மன்மத அம்பு விட மனோகரி நயனை
அழைத்து வராமல் இழுத்தே வந்து விட்டார் இளஞ்சூரியன்.
ஹன்சிகா
தவிர்த்து ஓகே ஓகே பட்டாளம் மீண்டும் ஆஜர். மதுரையில் மினிபஸ் விட்டு
கௌரவமாக வாழ்பவர் கதிர்வேலனின் தந்தை. பெற்றோரின் சம்மதம் திருமணத்திற்கு
அவசியம் என ஊருக்கு உணர்த்துபவர். ஆனால் அவரது மகளே காதல் திருமணம் செய்து
கொள்வதால் தன் கௌரவத்தை காப்பாற்ற ஊரை விட்டு ஒதுங்கி ஆளரவமற்ற
சிறுவீட்டில் குடும்பத்துடன் வசிக்கிறார். ஆஞ்சநேய பக்தனான தன் மகனும்
காதலில் விழ மனம் கனத்து நிற்கிறார் அப்பெரியவர். கதிரின் காதல் கை கூடியது
எப்படி என்பதை காமடி கலந்த குடும்ப சித்திரமாக சொல்லி இருக்கிறார்
'சுந்தரபாண்டியன்' இயக்குனர் பிரபாகரன்.
இரண்டாம்
படத்தில் புதிதாக/சிறப்பாக என்ன செய்வது என்பதை விட அசட்டுத்தனமாக
எதையெல்லாம் செய்யக்கூடாது என்பதில் உஷாராக இருக்கிறார் உதய். அதுவே அவரது
பலவீனமாகவும் போய் விடுகிறது. நடிப்பில் பெரிய முன்னேற்றம் இல்லை. 'மேலே
மேலே' பாடலில் மட்டும் நடனத்தில் இரண்டு ஸ்டெப் மேலே. சந்தானம் சொல்வது போல
'உன்கிட்ட எக்ஸ்ப்ரசன் எதிர்பாத்தது என் தப்புடா?'. நயன்தாராவிடம்
ஆட்டோக்ராப் வாங்க ஆவலுடன் தயங்கி நிற்கும் அப்பாவி ரசிகனின் முகபாவத்துடன்
படம் முழுக்க ஹீரோ இருந்தால் எப்படி? ராஜா ராணி போன்ற உணர்ச்சி ததும்பும்
படத்தில் நடித்த நயனுக்கு இந்த கேரக்டர் டேக் இட் ஈசி ஊர்வசி.
ஊட்டச்சத்து
டாக்டராக தன்னை சொல்லிக்கொள்ளும் மயில்வாகனம் கேரக்டரில் சந்தானம். சில
இடங்களில் சரவெடி. படத்தின் சுமாரான திரைக்கதை வேகத்திற்கு கூட தடையாக
இல்லாமல் அளவோடு வந்து செல்கிறார். 'சத்தம் போடாம ஹோட்டல்ல சாப்புடணுமா?
அப்பறம் எப்டி சட்னி, சாம்பார் கேப்பீங்க?', 'அந்த ஆள் ஏன் உன்ன அப்படி
மொரைக்கறாரு? உன்னோட பழைய ட்யூசன் மாஸ்டரா?' என சந்தானத்தின் ரகளை அமோகம்.
குறிப்பாக க்ளைமாக்ஸ் பதற்ற காட்சியில் முருகதாஸ் குடங்களின் மீது விழ,
சந்தானம் மாத்திரை போட்டுக்கொண்டு ஐ.சி.யு.வில் அட்மிட் ஆகும் காட்சியில்
தியேட்டர் குலுங்குகிறது. 'பலகுரல் மன்னன்' பலராமனாக மயில்சாமி சில
நிமிடங்கள் வந்தாலும் காமடியில் தூள்!!
உதயநிதியின்
பெற்றோர்களான ஆடுகளம் நரேன் மற்றும் சரண்யா. யானைப்பசிக்கு சோளப்பொறி
போட்டிருக்கிறார் இயக்குனர். சாயா சிங் நடிப்பில் Cold Tea. இன்னொரு
முக்கிய கேரக்டரில் 'மயக்கம் என்ன' சுந்தர் ராமு. அதில் தனுசிடம் ரிச்சாவை
பறிதந்தவர் இம்முறை நயனை தாரை வார்த்திருக்கிறார். உப்பு சப்பற்ற வில்லனாக
வந்து காணாமல் போகிறார். கௌரவ வேடத்தில் வந்தாலும் அண்ணன் மகனிடம் சண்டை
போட்டு சேரும் சீனில் ஜெயப்ரகாஷ் முத்திரை பதித்துள்ளார்.
ஹாரிஸ்
இசையில் 'மேலே மேலே' மற்றும் 'அன்பே அன்பே' கொஞ்சம் ஹம்ம வைக்கிறது. நன்றி
தாமரை, கார்த்திக், ஹரீஷ் மற்றும் ஹரிணி. 'லுங்கி புகழ்' தினேஷ் மாஸ்டர்
ஸ்பெஷல் எதுவும் நடன அமைப்பில் இல்லை. உதய்யை இன்னும் கொஞ்சம் நன்றாக
ஸ்டெப் போட வைத்ததை தவிர. ஸ்டன்ட் மாஸ்டர் திலிப் சுப்பராயன் எதற்கு
தேவைப்பட்டார் என்பது புலப்படவில்லை.
'இது
ஓகே ஓகே மற்றும் சுந்தரபாண்டியனின் கலவையாக இருக்கும்' என முன்பொரு முறை
சொன்னார் இயக்குனர். உண்மைதான். இருதரப்பும் இனைந்து செய்திருக்கும் படம்
என்பது வரை. ஆனால் அதை பக்குவமாக வார்த்து பரிமாறுவதில்தான் தடுமாற்றம்
நிகழ்ந்திருக்கிறது. காமடி, காதல், குடும்பக்கதை என மூன்றையும் பேலன்ஸ்
செய்யும் நேர்த்தி வசப்படவில்லை இயக்குனருக்கு. லொக்கேஷன், வசனங்கள்
போற்றவற்றில் டி.வி. சீரியல் சாயல் எட்டிப்பார்க்கிறது.
மொத்த
ஹோட்டலும் கேட்கும்படி பெண்களை பற்றி கொச்சையாக சுந்தர் பேசுவது, டூயட்
காட்சிகளுக்கு வழிவிடும் அவசரத்தில் அவசரமாக ஹீரோவுக்கு காதல் பூப்பது,
காதலுக்கு ஐடியா கேட்டு சந்தானத்தின் உசுருடன் நம் உசுரையும் வாங்குவது,
குறைந்தபட்சம் இரண்டு பேர் கூட சிறந்த நடிப்பை வெளிப்படுத்தாதது என குறைகள்
ஆங்காங்கே.
பவ்யமான குடும்ப காதல் சித்திரம் பார்க்க விரும்பும் காதலர்களுக்கு கதிர்வேலனின்
காதல் ச்சோ ச்வீட் ஆக படலாம். ஆனால் ரெகுலர் திரை ரசிகர்களுக்கு கிடைத்திருப்பது வெறும் ப்ளாஸ்டிக்
பூங்கொத்துதான்!!
2 comments:
நன்று!குட்ட வேண்டிய இடத்தில் குட்டி,குனிய வேண்டிய இடத்தில் குனிந்து...........................ஹி!ஹி!!ஹீ!!!நன்றி!
நல்ல விமர்சனம்.....
பாராட்டுகள் சிவகுமார்.
சென்னையில் உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி..... தொடர்ந்து சந்திப்போம்.
Post a Comment