CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Thursday, February 20, 2014

ஸ்பெஷல் மீல்ஸ் (20/02/14)சிங்கம் 2:


சில நாட்களுக்கு முன்பு நடந்த சினிமா நிகழ்ச்சி ஒன்றில் நமது தங்கத் தலைவன் பவர் ஸ்டாரை காணும் பாக்கியம் கிட்டியது. ஒருசேர இரு சிங்கங்களை கண்ட பதற்றத்தில் சுற்றத்தார் இருக்க புன்முறுவலுடன் கை குலுக்கி விடை பெற்றோம். வாட் எ மெமரப்ள் முமென்ட் தட் வாஸ்!! 
........................................................

மும்பை எக்ஸ்ப்ரஸ்:
'வடா பாவ்' என்றொரு வஸ்து இருப்பதே எனக்கு சில ஆண்டுகளுக்கு முன்புதான் தெரியும். அலுவல் நிமித்தம் மும்பைக்கு ஒருநாள் விசிட் அடிக்க விமானத்தில் செல்ல வேண்டி இருந்தது. 'அங்கே ஏதேனும் ஒரு கடையில் வடா பாவ் பார்சல் ப்ளீஸ்' என்றார் நண்பர். அந்த அளவிற்கு அதில் என்ன ஸ்பெஷல் என வியந்தவாறே யோசித்த மறுகணம் மும்பை வந்துவிட்டது. நம்மூர் பஜ்ஜி போல தள்ளுவண்டி முதல் நட்சத்திர ஹோட்டல் வரை வடா பாவ் கோலோச்சிக்கொண்டிருந்தது. நண்பருக்கு பார்சல் வாங்கி வந்தேன். 

சில வாரங்கள் கழித்து வடா பாவுக்கென்றெ பிரத்யேக கடை மயிலை சாந்தோம் பள்ளி அருகே உள்ளதென சொன்னார் அதே பார்சல் நண்பர். அடுத்ததாக வேளச்சேரி பைபாஸ் ரோட்டில் உள்ள கிளைக்கு இரண்டு ட்ரிப் அடித்து எல்லா ரக வடா பாவையும் ருசி பார்த்தாகி விட்டது. நான்கு பேருக்கு மேல் அமர்ந்து சாப்பிட இடமில்லை. பெரும்பாலும் பார்சல்தான். மொறு மொறுவென ஜவ்வரிசி, கலவை காய்கறி, கீரை பாவ்களை சுடச்சுட தந்தாலும், மும்பையை ஒப்பிடுகையில் இங்கே சைஸ் குறைவு. அங்கே இரண்டு சாப்பிட்டால் அடுத்த வேலைக்கு பசிக்காது. இங்கே நான்கு உட்கொண்டாலும் முக்கால் வயிறுதான் நிரம்புகிறது. 20 முதல் 40 ரூபாய்க்குள் விலை இருப்பது நியாயமாக படுகிறது. காலத்திற்கும் பஜ்ஜி, சமோசாவிற்கு வாக்கப்பட்ட எனதருமை சென்னைவாசிகளே... கொஞ்சம் வடா பாவையும் உண்டு நாக்கிற்கு விமோச்சனம் தந்தால்தான் என்ன?
....................................................................... 

ஆரம்பம்:
பதிவுலக நண்பர்கள் கே.ஆர்.பி. செந்தில், பிரபு கிருஷ்ணா மற்றும் எனது கூட்டணியில், இயக்குனர் கேபிள் சங்கரின் ஆதரவுடன் சினிமா சார்ந்த இரு இணைய தளங்கள் உதயமாகியுள்ளன. சினிமா செய்திகள், விமர்சனங்கள், புகைப்படங்கள், காணொளிகள் போன்றவை அதில் இடம் பெற்று வருகிறது. ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் இயங்கும் அத்தளங்களில் தமிழ், ஹிந்தி, மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிப்படங்கள் குறித்த செய்திகள் பகிரப்படுகின்றன. தளங்களின் முகவரி:சினிமா பிரியர்களை கவரும் பொழுதுபோக்கு மையங்களாக இவை இருக்குமென நம்புவதோடு, தங்களின் மேலான ஆதரவையும் நல்குகிறோம். 
...................................................................

சட்டம் ஒரு இருட்டறை:
தகவல் அறியும் உரிமை சட்டத்தை நாங்கள்தான் கொண்டு வந்தோம் என்று பிரச்சார மேடைகளில் மார் தட்டி வரும் ராகுல் காந்தியாரே. அப்சல் குருவை ராவோடு ராவாக தூக்கிலேற்றிய பிறகு 'தூக்கில் இடுவதற்கு முன்பு அவரது குடும்பத்தாரிடம் ஒரு தகவல் சொன்னால் என்ன?' என்று கேட்டதற்கு 'ஸ்பீட் குரியர்' அனுப்பி உள்ளோம் என்றது உங்கள் அரசு. தெலங்கானா மசோதா தாக்கல் செய்கையில் லோக் சபா டி.வி. நேரலையை முடக்கி மக்களுக்கு தகவல் அறியும் உரிமையை மறுத்ததும் உங்கள் அரசுதான். எத்தனை நாளைக்கிதான் காத்துல பேட்டை வீசுவீங்க? ஒரே ஒரு சிங்கிளாவது அடிங்க வைஸ் கேப்டன். 
.......................................................................
 
நவீன சரஸ்வதி சபதம்:
பதிவர்கள் படிக்கும் நூல்கள் பற்றிய விமர்சனங்களை எழுதுவதற்கென்றே ஒரு ப்ரத்யேக தளத்தை சமீபத்தில் உருவாக்கி இருக்கிறார்கள் பாலகணேஷ், சீனு மற்றும் நண்பர்கள். இப்படி ஒரு முயற்சியை எடுத்துள்ள நண்பர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள். 'வாசகர் கூடம்' என்று பெயரிடப்பட்டு 'புத்தகம் சரணம் கச்சாமி' எனும் பஞ்ச் லைனுடன் களமிறங்கி இருக்கும் இந்த வலைப்பூ பெரும் வெற்றி பெற வாழ்த்துகள்:

http://www.vasagarkoodam.blogspot.com/

.......................................................................

மூடர் கூடம்:
இந்திய பாராளுமன்ற மற்றும் சட்டசபைகளில் 'கடமை, கண்ணியம், கட்டுப்பாடு' நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக வளர்ந்து வருவது பஹுத் அச்சா. மிளகு தெளிப்பான் அடிப்பது, விஷம் குடிப்பது, சபாநாயகரின் மைக்கை உடைப்பது என்று ஆந்திர எம்.பி.க்கள் ஒருபுறம். அதைவிட மேலும் ஒரு படி போய் தற்போது காஷ்மீர் சட்டசபையில் மூத்த எம்.பி. ஒருவர் மார்ஷலை கன்னத்தில் அறைந்துள்ளார். உ.பி. 'சட்ட' சபையில் சட்டையை கழற்றி அரை நிர்வாணமாக நின்றுள்ளார் ஒரு எம்.எல்.ஏ. 'பத்தாது. கீழ இருக்கறதையும் கழட்டு' என்று அமைச்சர் ஒருவர் ஊக்கம் தர, அகிலேஷ் யாதவ் ஏதோ காமடி படம் பார்ப்பது போல சிரிப்பதை ஊடகங்கள் ஒளிபரப்பின. 

அனைத்தையும் விட உச்சகட்ட கொடுமை என்னவென்றால் த்ரிணமூல் காங். எம்.பி. டெரெக் ஓ ப்ரையன் சொன்ன செய்திதான். மிளகு தெளிப்பான் சம்பவம் நடந்தபோது இவரது காதருகே ஆந்திர எம்.பி. சொன்னாராம்: "தெலங்கானா விஷயத்துல நாங்க சொன்னத சென்ட்ரல் கேக்கலன்னா பைல பாம்பை கொண்டு வந்து உள்ள விட்ருவேன்'. ஆத்தாடி!! அந்த 'ஸ்நேக்' பாபு நீதானாய்யா??? யப்பா தமிழக எம்.பி.க்களே கொஞ்ச நாளைக்கி வேட்டி வேண்டாம். பேன்ட் போட்டுட்டே போங்க.
......................................................................   

சக்கர கட்டி: 
அம்மா உணவகம் ஹிட் ஆனதை தொடர்ந்து அம்மா பெயரில் தியேட்டர், வாரச்சந்தை, மருந்தகம், 20 லிட்டர் குடிநீர் கேன் என சரமாரியாக திட்டங்களை அறிவித்து இருக்கிறார் மேயர் துரைசாமி. இருக்கிற விலைவாசியை குறைப்பது, பொதுவான அரசு திட்டங்கள் மற்றும் துறைகளை மேலும் சிறப்பாக செயல்படுத்துவது, தனியார் நிறுவனங்களின் அராஜகங்களுக்கு கடிவாளம் போடுவது என ஏழை, நடுத்தர மக்களின் வாழ்வை சற்றேனும் மேம்படுத்த பல வழிகள் இருக்கையில் அரசே அனைத்து சேவைகளையும் செய்வது எங்கே போய் முடியும் என்று தெரியவில்லை. அடுத்து தி.மு.க. வந்தால் இவரது திட்டங்கள் அனைத்தும் கிடப்பில் போடப்படும். ஏற்கனவே இப்படி மக்களின் வரிப்பணத்தை நாசம் செய்தது போதாதா? 

இனி தனியார் தியேட்டர், மருந்தகம், உணவகம் எல்லாம் சகட்டு மேனிக்கு விலையை ஏற்றினாலும் யாரும் கேட்க இயலாது. 'அதான் உங்களுக்கு அம்மா திட்டம்' இருக்கே என்று எள்ளி நகையாடுவார்கள். 'நடுத்தர வர்க்கம்' என்று சொல்லிக்கொள்ள மிச்சம் இருக்கும் கொஞ்ச பேரின் கதி இனி 'சுத்தம்' தான்.
...............................................................................

நந்தி:எங்க தெரு கூத்துதான் இது. ஸ்டாலின் மேயராக இருந்தபோது ஸ்பீட் ப்ரேக்கர் ரேஞ்சுக்கு பாலம் போட்டால் நம்ம கரண்ட் மேயர் சைதை துரைசாமி மேம்பாலம் ரேஞ்சுக்கு சின்ன சின்ன தெருக்களில் ஸ்பீட் பிரேக்கர் எனும் பெயரில் ஜூனியர் மேம்பாலங்களை கட்டி வருகிறார். வர்ண பகவான் லேசாக ஸ்ப்ரே அடித்தாலே இந்த வேகத்தடைகளின் இருபுறமும் தண்ணீர் கோர்த்துக்கொண்டு நிற்கிறது. இரவு நேரத்தில் பிளாட்பாரம் வழியே நடந்து இதைக்கடந்து போய் விடலாம் என்று எண்ணினாலும்,  எங்கே கருப்பு கலர் தெருநாயின் வாலை மிதித்து இருவரும் அலறி விடுவோமோ எனும் பீதியும் வாட்டி எடுக்கிறது. ஜெய் (ராகு) கால பைரவா. நீயே துணை!!
......................................................................... 

 
லூட்டி:
அர்னாப் கோஸ்வாமியின் ராகுல் காந்தி பேட்டி டி.ஆர்.பி. ரேட்டிங்கில் சாதனை படைக்க அதை கிண்டலடித்து இணையத்தில் ஆங்காங்கே லொள்ளு சபாக்கள் அரங்கேறி வருகின்றன. அவற்றுள் நான் பார்த்த பெஸ்ட் இதுதான். அர்னாப் ஆக நடித்திருப்பவர் பிஸ்வபதி சர்கார். அர்னாபின் தோற்றம் மற்றும் குரல் சற்று மாறுபட்டு இருந்தாலும் பாடி லாங்வேஜ் மற்றும் வசன உச்சரிப்பில் பின்னி இருக்கிறார் பிஸ்வபதி. எங்கே இருந்து பிடித்தார்கள் இந்த ஜிதேந்திர குமாரை?  அச்சு அசல் அரவிந்த் கேஜ்ரிவாலைப்போலவே வாழ்ந்திருக்கிறார் மனிதர்.

மற்றவர்களைப்போல அரசியல் நையாண்டி செய்யாமல் சினிமாவை தேர்ந்தெடுத்து செம ரவுசு செய்திருக்கிறார்கள். ஸ்பூப் என்பது எப்படி இருக்க வேண்டுமென்பதற்கு சாலச்சிறந்த உதாரணம். எஞ்சாய்!!   
  
                                                                     
........................................................................
6 comments:

கோவை நேரம் said...

பவருடன்.....சூப்பர்..

திண்டுக்கல் தனபாலன் said...

தமிழகத்தில் உள்ள அனைவரையும் சர்க்கரை குறைபாடு உள்ளவர்களாக ஆக்கும் திட்டம்... வளமுடன் வாழ்க...

Unknown said...

மீல்'ஸ் செம டேஸ்ட்!////ஜூனியர் மேம் பாலம்கிறீங்க,என்னமோ கோடு போட்ட மாதிரில்ல இருக்குது?

வெளங்காதவன்™ said...

//
சினிமா பிரியர்களை கவரும் பொழுதுபோக்கு மையங்களாக இவை இருக்குமென நம்புவதோடு, தங்களின் மேலான ஆதரவையும் நல்குகிறோம். ///

செக் தி செண்டென்ஸ்

Unknown said...

பவர் ஸ்டாரை கண்ட பாக்கியம் எங்களுக்கு கிடைக்கலையே

வெங்கட் நாகராஜ் said...

நல்ல மீல்ஸ்......

ரசித்தேன்.

காணொளி - செம கலக்கல்.....

Related Posts Plugin for WordPress, Blogger...