அவ்வப்போது
இந்திய சினிமாவில் விளையாட்டு சார்ந்த படங்கள் வருவதுண்டு. ஆனால் மலையாள
திரை உலகிற்கு அப்படி ஒரு சப்ஜக்ட் வாய்ப்பது அபூர்வம் அல்லது இல்லை என்றே
கூட சொல்லலாம். அக்குறையை போக்க வந்திருக்கும் 'அவுட் அன்ட் அவுட்'
க்ரிக்கட் படம்தான் 1983.
ரிமோட்
இல்லாத தூர்தர்ஷன் காலத்தில் 1983 உலகக்கோப்பை க்ரிக்கெட் பார்த்து
அவ்விளையாட்டின் மீது மோகம் கொள்ளும் ரமேஷனின் 1983 டு 2013 வாழ்வை படம்
பிடிக்கிறது இப்படம். ரிமோட் கிராமமான பிரம்ம மங்களத்தில் வாழும் ரமேஷன்
பத்தாம் வகுப்பில் சோடை போக 'மோட்டார் மெக்கானிக்' வேலையையாவது உருப்படியாக
செய் என தந்தையால் நிர்பந்திக்கப்படுகிறான். அப்போது கூட கிடைக்கிற
கேப்பில் தோழர்களுடன் உள்ளூர் க்ரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று கோப்பைகளை
வெல்ல தோள் கொடுக்கிறான். பள்ளியில் தொடங்கிய மஞ்சுளா சிநேகம் காதலாக
மாறுகிறது. அடுத்தடுத்து ரமெஷனின் வாழ்வில் நடக்கும் 'சீரியஸான'
விளையாட்டுகள் என்ன என்பதை சுவாரஸ்யம் குன்றாமல் சொல்லி இருக்கும்
சித்திரம் இது.
வழக்கமான
ஸ்போர்ட்ஸ்(குறிப்பாக க்ரிக்கெட்) படங்களில் இருக்கும் பல க்ளிஷேக்களை
கவனமாக தவிர்த்து இருக்கிறார் அறிமுக இயக்குனர் அப்ரித் சைனி. வலுவான
அணியிடம் தோற்றுப்போகும் உள்ளூர் இளைஞர் அணி, அவர்களுக்கு வழிகாட்டும்
கோச், மள மளவென எதிரிகளை வீழ்த்தி க்ளைமாக்ஸில் கோப்பையை வெல்வது, வில்லன்
பட்டாளம், ப்ராக்டீஸ் கூட செய்யாமல் காதலியுடன் டூயட் பாடிவிட்டு மேன் ஆப்
தி மேட்ச் வாங்கும் ஹீரோ என பல 'முடியல'களை ஓரங்கட்டி வித்யாசமான களத்தில்
பயணப்பட்டு இருக்கிறது இந்த பிரம்மமங்களம் அணி.
கேரளாவின்
மாதவன் போல பெரும்பாலும் பளிச் சிரிப்புடன் மட்டுமே வண்டி ஓட்டி வந்த
நிவினுக்கு ஈடன் கார்டனையே திறந்து விட்டு விளையாட சொல்லி இருக்கிறார்
இயக்குனர். ஆரம்பத்தில் பத்தாம் வகுப்பு மாணவனாக வந்து பயமுறுத்தினாலும்
அதற்குப்பிறகு அருமையாக ஸ்கோர் செய்துள்ளார். தந்தைக்கு கீழ்ப்படியும்
மகன், மனைவியின் அபார அறிவாற்றலை கண்டு புலம்பும் கணவன், பாசமிக்க 40 வயது
தந்தையென நிவின் தன் நடிப்பாற்றலால் மனதில் நிற்கிறார். இடைவேளைக்கு
முன்னும் பின்னுமான காட்சிகளில் இவரது முகபாவம் கலாட்டா கதக்களி. இவரது
மனைவியாக ஸ்ரிந்தா அஷாப் 'சச்சின்' குறித்த நுட்பமான புள்ளிவிவரங்கள்
தருமிடத்தில் சிரிப்பை அடக்க முடியாது.
நிவினின்
தந்தையாக ஜாய் மேத்யூ மற்றும் கோச்சாக வரும் அனூப் மேனன் ஆகியோரின்
நேர்த்தியான நடிப்பு படத்தின் பலம். சச்சினின் ஜெராக்ஸ் ஜேகப் க்ரகரி வரும்
சில நிமிடங்கள் காமடிக்கு உத்திரவாதம். தங்கை கேரக்டருக்கு ஏற்ற நிக்கி
கல்ரானி நாயகனின் காதலியாக ஜஸ்ட் பாஸ் தான். சாய்ஜூ குருப் உள்ளிட்ட தோழர்
பட்டாளத்தின் நடிப்பும் இயல்பு.
கோபி
சுந்தரின் இசையில் பாடல்கள் இதம். கிராம வாழ்வை மண்ணின் ஈரத்துடன் படம்
பிடித்து நம் மனதில் பதிய வைத்திருக்கிறது ப்ரதீஷின் கேமரா.
fff
fff
முக்கால்வாசி
படம் முடிந்த பிறகும் நிவின், அவரது மகன் சம்மந்தப்பட்ட காட்சிகள் விடாமல்
தொடர்வது சற்று தொய்வு. அதுபோல முதல் அரைமணி நேரத்திற்குள் அடிக்கடி
பாடல்கள் வருவது வேகத்தடை. மற்றபடி குறையென்று சொல்ல பெரிதாக ஏதுமில்லை.
'சச்சினின்
தீவிர ரசிகன்' எனும் பெருமிதத்துடன் லிட்டில் மாஸ்டருக்கு சமர்ப்பணம்
செய்து என்ட் கார்ட் போட்டிருக்கிறார் இயக்குனர். ஆனால் அதைத்தாண்டி மலையாள
சினிமா வரலாற்றில் முற்றிலும் விளையாட்டு சார்ந்த படமொன்றை இவ்வளவு
நேர்த்தியாக எடுத்த படைப்பாளி எனும் பெருமையையும் பெற்றிருப்பது உண்மை.
க்ரிக்கெட்
ரசிகர்கள் எனும் பவுண்டரியை தாண்டி அனைவரும் ரசிக்கும் படைப்பாக
வந்திருக்கும் 1983 சந்தேகமின்றி கேரளாவின் உலக (சினிமா) கோப்பைதான்!!
..........................................................
2 comments:
அப்ப பாத்துருவோம்.
பார்க்கலாம்னு சொல்றீங்க!.... பார்க்கலாம்.... :)))
Post a Comment