CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Friday, February 28, 2014

லியோ பிரபுவின் நெருப்பு கோலங்கள்

தமிழ் நாடகத்துறையில் புகழ் பெற்று விளங்கிய கலைஞரான லியோ பிரபு நீண்ட இடைவெளிக்கு பிறகு 'நெருப்பு கோலங்கள்' மூலம் மேடையேறி இருக்கிறார். 1969 ஆம் ஆண்டு ஸ்டேஜ் இமேஜ் எனும் நாடகக்குழுவை துவக்கி மொத்தம் 32 படைப்புகளை வெற்றிகரமாக அரங்கேற்றிய இவர் பொருளாதார பிரச்னை மற்றும் சில சபாக்களின் ஒத்துழைப்பு கிடைக்காத காரணங்களால் நாடகத்துறையை விட்டு சில காலம் விலகி இருக்க வேண்டி இருந்தது. தற்போது தனது மகளுக்காக பிரத்யேக கதையொன்றை எழுதி இயக்கி, நடிக்கவும் செய்துள்ளார் லியோ பிரபு.

கலைகளின் வளர்ச்சிக்காக பெருந்தொண்டு செய்து பெயர் பெற்றவர் தர்மராஜா. செல்வந்தரான இவருக்கு ஒரே மகனாக தூயவன். பெயரில் மட்டும். தந்தையின் தயவில் பரதம் கற்றும் வரும் கயல்விழியை பின் தொடர்கிறது இவனது காம விழி. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க சொல்வேந்தன் எனும் தமிழ்க்கவிஞனுக்கு கயல்விழியை மணமுடித்து வைக்கிறார் தர்மராஜா. சொல்லில் மட்டுமே வேந்தனாக இருக்கும் அக்கவிஞன் தனது நியாயமான கொள்கைகளை விட்டுத்தராததால் போதிய வாய்ப்பு இன்றி குடும்பத்தை வறுமையில் ஆழ்த்துகிறான். பிரச்னைகள் எப்படி தீர்ந்தன என்பதுதான் கதை.

ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்திற்கு பெருமை சேர்த்திருக்கிறது லியோ பிரபுவின் நடிப்பு. ஆனால் அவரது தனித்துவம் வாய்ந்த குரலின் வசீகரம் தோய்ந்து போனதில் வருத்தம்தான். அவருடையை மகள் முருகசங்கரிக்கு  இதுதான் முதல் நாடக மேடை. ஆனால் அந்த தயக்கம் எதுவும் முகத்தில் தெரியவில்லை. பவ்யமான பரத நாட்டியப்பெண், துறு துறு பூக்காரி என காட்சிகளுக்கேற்ப சாரீரத்தில் ஏற்ற இறக்கங்கள் நன்று. பாலச்சந்தர் பட நாயகிகள் உதிர்க்கும் சிறப்பு வார்த்தைகளான 'அச்சா' போன்று  இவர் அடிக்கடி சொல்லும் 'டொய்ங் நானா'வை பெருமளவு தவிர்த்து இருக்கலாம்.

இன்னொரு முக்கிய கேரக்டர் சொல்வேந்தனாக நந்தகுமார். தன் எழுத்தின் மீது கொண்ட நம்பிக்கையை ஈகோவாக தலைக்கேற்றி இயல்பாக நடித்துள்ளார். டீக்கடை நாயராக மூத்த கலைஞர் வெங்கட்ராமன். தூர்தர்சனில் செவ்வாய் கிழமை நாடகங்கள் கோலோச்சிய காலத்தில் சிறந்த துணை நடிகராக வலம் வந்து நகைச்சுவையில் பெயர் வாங்கியவர். லியோ பிரபுவை போல வயது முதிர்ச்சியால் துடிப்பான நடிப்பை வெளிப்படுத்த இயலவில்லை. ஓரிரு இடங்களில் மட்டும் மலையாளம் பேசிவிட்டு தமிழராகவே டீ ஆற்றி இருக்கிறார். போக்கிரி இளைஞன் தூயவனாக ப்ராட்லி கணேசன். சிகையலங்காரம், உடை மற்றும் பேசும் தொனி என பொருத்தங்கள் சிறப்பு.

உடான்ஸ் கவிஞர் பழநியாக விக்னேஷ் செல்லப்பன். 'வெற்றிக்கொடி கட்டு' வடிவேலு பாணியில் நீலக்கலர் ஜிங்குச்சா காஸ்ட்யூம் சகிதம் நாடக உலகிற்கு அறிமுகம் ஆகி இருக்கிறார். மனிதருக்கு நகைச்சுவை உணர்வு சர்வ சாதாரணமாக வெளிப்படுகிறது. ரகுவரன், அஜித் போல தனித்த குரல்வளம் விக்னேஷின் பெரும்பலம். நாடக உலகில் இவருக்கென்று ஓரிடம் காத்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. டீக்கடை குழந்தை தொழிலாளி (!!) பேபி கேரக்டரில் ப்ரவீணா எனும் சிறுமி ஒரு சில காட்சிகளே வந்தாலும் குறும்பான நடிப்பால் கைத்தட்டல்களை அள்ளி விடுகிறாள்.

முருகசங்கரி மற்றும் மோகன் ராமன் பாடிய  'பூ விற்கு பூவிது', 'தமிழே நீ வாழ்க' ஆகிய பாடல்கள் செவிக்கிதம்.

 
தனது தம்பி எப்படி விடுதலையானான் என்று நாயர் பழனியிடன் சொல்வதாக ஒரு காட்சி. 'அடிக்கடி கோர்ட்டுக்கு வர்றியே வெக்கமா இல்ல?' என நீதிபதி கேட்க 'நீங்க கூடத்தான் நித்தம் வர்றீங்க' என்று குற்றவாளி எதிர்க்கேள்வி விடுக்க தொல்லை தாங்காமல் விடுவிக்கிறாராம். என்னதான் காமடி என்றாலும் இப்படியா? அதுபோல கூலிங் கிளாஸ் அணிந்திருக்கும் பழனியிடம் 'உனக்கு கண்ணாடி போடலன்னாலே கண்ணு தெரியாது. இதுல இது வேறயா?' என்கிறார் நாயர். இது எழுத்துப்பிழையா அல்லது உச்சரிப்பு பிழையா என்று தெரியவில்லை. கவனம் செலுத்தி இருக்கலாம்.

மற்றபடி சமூகப்பார்வை மிக்க நாடகமொன்றை நல்ல நடிகர்களின் துணையுடன் மேடையேற்றி இருக்கும் லியோ பிரபுவிற்கு பாராட்டுகளை அவசியம் சொல்லலாம்.
..........................................................Thursday, February 20, 2014

ஸ்பெஷல் மீல்ஸ் (20/02/14)சிங்கம் 2:


சில நாட்களுக்கு முன்பு நடந்த சினிமா நிகழ்ச்சி ஒன்றில் நமது தங்கத் தலைவன் பவர் ஸ்டாரை காணும் பாக்கியம் கிட்டியது. ஒருசேர இரு சிங்கங்களை கண்ட பதற்றத்தில் சுற்றத்தார் இருக்க புன்முறுவலுடன் கை குலுக்கி விடை பெற்றோம். வாட் எ மெமரப்ள் முமென்ட் தட் வாஸ்!! 
........................................................

மும்பை எக்ஸ்ப்ரஸ்:
'வடா பாவ்' என்றொரு வஸ்து இருப்பதே எனக்கு சில ஆண்டுகளுக்கு முன்புதான் தெரியும். அலுவல் நிமித்தம் மும்பைக்கு ஒருநாள் விசிட் அடிக்க விமானத்தில் செல்ல வேண்டி இருந்தது. 'அங்கே ஏதேனும் ஒரு கடையில் வடா பாவ் பார்சல் ப்ளீஸ்' என்றார் நண்பர். அந்த அளவிற்கு அதில் என்ன ஸ்பெஷல் என வியந்தவாறே யோசித்த மறுகணம் மும்பை வந்துவிட்டது. நம்மூர் பஜ்ஜி போல தள்ளுவண்டி முதல் நட்சத்திர ஹோட்டல் வரை வடா பாவ் கோலோச்சிக்கொண்டிருந்தது. நண்பருக்கு பார்சல் வாங்கி வந்தேன். 

சில வாரங்கள் கழித்து வடா பாவுக்கென்றெ பிரத்யேக கடை மயிலை சாந்தோம் பள்ளி அருகே உள்ளதென சொன்னார் அதே பார்சல் நண்பர். அடுத்ததாக வேளச்சேரி பைபாஸ் ரோட்டில் உள்ள கிளைக்கு இரண்டு ட்ரிப் அடித்து எல்லா ரக வடா பாவையும் ருசி பார்த்தாகி விட்டது. நான்கு பேருக்கு மேல் அமர்ந்து சாப்பிட இடமில்லை. பெரும்பாலும் பார்சல்தான். மொறு மொறுவென ஜவ்வரிசி, கலவை காய்கறி, கீரை பாவ்களை சுடச்சுட தந்தாலும், மும்பையை ஒப்பிடுகையில் இங்கே சைஸ் குறைவு. அங்கே இரண்டு சாப்பிட்டால் அடுத்த வேலைக்கு பசிக்காது. இங்கே நான்கு உட்கொண்டாலும் முக்கால் வயிறுதான் நிரம்புகிறது. 20 முதல் 40 ரூபாய்க்குள் விலை இருப்பது நியாயமாக படுகிறது. காலத்திற்கும் பஜ்ஜி, சமோசாவிற்கு வாக்கப்பட்ட எனதருமை சென்னைவாசிகளே... கொஞ்சம் வடா பாவையும் உண்டு நாக்கிற்கு விமோச்சனம் தந்தால்தான் என்ன?
....................................................................... 

ஆரம்பம்:
பதிவுலக நண்பர்கள் கே.ஆர்.பி. செந்தில், பிரபு கிருஷ்ணா மற்றும் எனது கூட்டணியில், இயக்குனர் கேபிள் சங்கரின் ஆதரவுடன் சினிமா சார்ந்த இரு இணைய தளங்கள் உதயமாகியுள்ளன. சினிமா செய்திகள், விமர்சனங்கள், புகைப்படங்கள், காணொளிகள் போன்றவை அதில் இடம் பெற்று வருகிறது. ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் இயங்கும் அத்தளங்களில் தமிழ், ஹிந்தி, மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிப்படங்கள் குறித்த செய்திகள் பகிரப்படுகின்றன. தளங்களின் முகவரி:சினிமா பிரியர்களை கவரும் பொழுதுபோக்கு மையங்களாக இவை இருக்குமென நம்புவதோடு, தங்களின் மேலான ஆதரவையும் நல்குகிறோம். 
...................................................................

சட்டம் ஒரு இருட்டறை:
தகவல் அறியும் உரிமை சட்டத்தை நாங்கள்தான் கொண்டு வந்தோம் என்று பிரச்சார மேடைகளில் மார் தட்டி வரும் ராகுல் காந்தியாரே. அப்சல் குருவை ராவோடு ராவாக தூக்கிலேற்றிய பிறகு 'தூக்கில் இடுவதற்கு முன்பு அவரது குடும்பத்தாரிடம் ஒரு தகவல் சொன்னால் என்ன?' என்று கேட்டதற்கு 'ஸ்பீட் குரியர்' அனுப்பி உள்ளோம் என்றது உங்கள் அரசு. தெலங்கானா மசோதா தாக்கல் செய்கையில் லோக் சபா டி.வி. நேரலையை முடக்கி மக்களுக்கு தகவல் அறியும் உரிமையை மறுத்ததும் உங்கள் அரசுதான். எத்தனை நாளைக்கிதான் காத்துல பேட்டை வீசுவீங்க? ஒரே ஒரு சிங்கிளாவது அடிங்க வைஸ் கேப்டன். 
.......................................................................
 
நவீன சரஸ்வதி சபதம்:
பதிவர்கள் படிக்கும் நூல்கள் பற்றிய விமர்சனங்களை எழுதுவதற்கென்றே ஒரு ப்ரத்யேக தளத்தை சமீபத்தில் உருவாக்கி இருக்கிறார்கள் பாலகணேஷ், சீனு மற்றும் நண்பர்கள். இப்படி ஒரு முயற்சியை எடுத்துள்ள நண்பர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள். 'வாசகர் கூடம்' என்று பெயரிடப்பட்டு 'புத்தகம் சரணம் கச்சாமி' எனும் பஞ்ச் லைனுடன் களமிறங்கி இருக்கும் இந்த வலைப்பூ பெரும் வெற்றி பெற வாழ்த்துகள்:

http://www.vasagarkoodam.blogspot.com/

.......................................................................

மூடர் கூடம்:
இந்திய பாராளுமன்ற மற்றும் சட்டசபைகளில் 'கடமை, கண்ணியம், கட்டுப்பாடு' நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக வளர்ந்து வருவது பஹுத் அச்சா. மிளகு தெளிப்பான் அடிப்பது, விஷம் குடிப்பது, சபாநாயகரின் மைக்கை உடைப்பது என்று ஆந்திர எம்.பி.க்கள் ஒருபுறம். அதைவிட மேலும் ஒரு படி போய் தற்போது காஷ்மீர் சட்டசபையில் மூத்த எம்.பி. ஒருவர் மார்ஷலை கன்னத்தில் அறைந்துள்ளார். உ.பி. 'சட்ட' சபையில் சட்டையை கழற்றி அரை நிர்வாணமாக நின்றுள்ளார் ஒரு எம்.எல்.ஏ. 'பத்தாது. கீழ இருக்கறதையும் கழட்டு' என்று அமைச்சர் ஒருவர் ஊக்கம் தர, அகிலேஷ் யாதவ் ஏதோ காமடி படம் பார்ப்பது போல சிரிப்பதை ஊடகங்கள் ஒளிபரப்பின. 

அனைத்தையும் விட உச்சகட்ட கொடுமை என்னவென்றால் த்ரிணமூல் காங். எம்.பி. டெரெக் ஓ ப்ரையன் சொன்ன செய்திதான். மிளகு தெளிப்பான் சம்பவம் நடந்தபோது இவரது காதருகே ஆந்திர எம்.பி. சொன்னாராம்: "தெலங்கானா விஷயத்துல நாங்க சொன்னத சென்ட்ரல் கேக்கலன்னா பைல பாம்பை கொண்டு வந்து உள்ள விட்ருவேன்'. ஆத்தாடி!! அந்த 'ஸ்நேக்' பாபு நீதானாய்யா??? யப்பா தமிழக எம்.பி.க்களே கொஞ்ச நாளைக்கி வேட்டி வேண்டாம். பேன்ட் போட்டுட்டே போங்க.
......................................................................   

சக்கர கட்டி: 
அம்மா உணவகம் ஹிட் ஆனதை தொடர்ந்து அம்மா பெயரில் தியேட்டர், வாரச்சந்தை, மருந்தகம், 20 லிட்டர் குடிநீர் கேன் என சரமாரியாக திட்டங்களை அறிவித்து இருக்கிறார் மேயர் துரைசாமி. இருக்கிற விலைவாசியை குறைப்பது, பொதுவான அரசு திட்டங்கள் மற்றும் துறைகளை மேலும் சிறப்பாக செயல்படுத்துவது, தனியார் நிறுவனங்களின் அராஜகங்களுக்கு கடிவாளம் போடுவது என ஏழை, நடுத்தர மக்களின் வாழ்வை சற்றேனும் மேம்படுத்த பல வழிகள் இருக்கையில் அரசே அனைத்து சேவைகளையும் செய்வது எங்கே போய் முடியும் என்று தெரியவில்லை. அடுத்து தி.மு.க. வந்தால் இவரது திட்டங்கள் அனைத்தும் கிடப்பில் போடப்படும். ஏற்கனவே இப்படி மக்களின் வரிப்பணத்தை நாசம் செய்தது போதாதா? 

இனி தனியார் தியேட்டர், மருந்தகம், உணவகம் எல்லாம் சகட்டு மேனிக்கு விலையை ஏற்றினாலும் யாரும் கேட்க இயலாது. 'அதான் உங்களுக்கு அம்மா திட்டம்' இருக்கே என்று எள்ளி நகையாடுவார்கள். 'நடுத்தர வர்க்கம்' என்று சொல்லிக்கொள்ள மிச்சம் இருக்கும் கொஞ்ச பேரின் கதி இனி 'சுத்தம்' தான்.
...............................................................................

நந்தி:எங்க தெரு கூத்துதான் இது. ஸ்டாலின் மேயராக இருந்தபோது ஸ்பீட் ப்ரேக்கர் ரேஞ்சுக்கு பாலம் போட்டால் நம்ம கரண்ட் மேயர் சைதை துரைசாமி மேம்பாலம் ரேஞ்சுக்கு சின்ன சின்ன தெருக்களில் ஸ்பீட் பிரேக்கர் எனும் பெயரில் ஜூனியர் மேம்பாலங்களை கட்டி வருகிறார். வர்ண பகவான் லேசாக ஸ்ப்ரே அடித்தாலே இந்த வேகத்தடைகளின் இருபுறமும் தண்ணீர் கோர்த்துக்கொண்டு நிற்கிறது. இரவு நேரத்தில் பிளாட்பாரம் வழியே நடந்து இதைக்கடந்து போய் விடலாம் என்று எண்ணினாலும்,  எங்கே கருப்பு கலர் தெருநாயின் வாலை மிதித்து இருவரும் அலறி விடுவோமோ எனும் பீதியும் வாட்டி எடுக்கிறது. ஜெய் (ராகு) கால பைரவா. நீயே துணை!!
......................................................................... 

 
லூட்டி:
அர்னாப் கோஸ்வாமியின் ராகுல் காந்தி பேட்டி டி.ஆர்.பி. ரேட்டிங்கில் சாதனை படைக்க அதை கிண்டலடித்து இணையத்தில் ஆங்காங்கே லொள்ளு சபாக்கள் அரங்கேறி வருகின்றன. அவற்றுள் நான் பார்த்த பெஸ்ட் இதுதான். அர்னாப் ஆக நடித்திருப்பவர் பிஸ்வபதி சர்கார். அர்னாபின் தோற்றம் மற்றும் குரல் சற்று மாறுபட்டு இருந்தாலும் பாடி லாங்வேஜ் மற்றும் வசன உச்சரிப்பில் பின்னி இருக்கிறார் பிஸ்வபதி. எங்கே இருந்து பிடித்தார்கள் இந்த ஜிதேந்திர குமாரை?  அச்சு அசல் அரவிந்த் கேஜ்ரிவாலைப்போலவே வாழ்ந்திருக்கிறார் மனிதர்.

மற்றவர்களைப்போல அரசியல் நையாண்டி செய்யாமல் சினிமாவை தேர்ந்தெடுத்து செம ரவுசு செய்திருக்கிறார்கள். ஸ்பூப் என்பது எப்படி இருக்க வேண்டுமென்பதற்கு சாலச்சிறந்த உதாரணம். எஞ்சாய்!!   
  
                                                                     
........................................................................
Tuesday, February 18, 2014

1983
அவ்வப்போது இந்திய சினிமாவில் விளையாட்டு சார்ந்த படங்கள் வருவதுண்டு. ஆனால் மலையாள திரை உலகிற்கு அப்படி ஒரு சப்ஜக்ட் வாய்ப்பது அபூர்வம் அல்லது இல்லை என்றே கூட சொல்லலாம். அக்குறையை போக்க வந்திருக்கும் 'அவுட் அன்ட் அவுட்' க்ரிக்கட் படம்தான் 1983.

ரிமோட் இல்லாத தூர்தர்ஷன் காலத்தில் 1983 உலகக்கோப்பை க்ரிக்கெட் பார்த்து அவ்விளையாட்டின் மீது மோகம் கொள்ளும் ரமேஷனின் 1983 டு 2013 வாழ்வை படம் பிடிக்கிறது இப்படம்.  ரிமோட் கிராமமான பிரம்ம மங்களத்தில் வாழும் ரமேஷன் பத்தாம் வகுப்பில் சோடை போக 'மோட்டார் மெக்கானிக்' வேலையையாவது உருப்படியாக செய் என தந்தையால் நிர்பந்திக்கப்படுகிறான். அப்போது கூட கிடைக்கிற கேப்பில் தோழர்களுடன் உள்ளூர் க்ரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று கோப்பைகளை வெல்ல தோள் கொடுக்கிறான். பள்ளியில் தொடங்கிய மஞ்சுளா சிநேகம் காதலாக மாறுகிறது. அடுத்தடுத்து ரமெஷனின் வாழ்வில் நடக்கும் 'சீரியஸான' விளையாட்டுகள் என்ன என்பதை சுவாரஸ்யம் குன்றாமல் சொல்லி இருக்கும் சித்திரம் இது.

வழக்கமான ஸ்போர்ட்ஸ்(குறிப்பாக க்ரிக்கெட்) படங்களில் இருக்கும் பல க்ளிஷேக்களை கவனமாக தவிர்த்து இருக்கிறார் அறிமுக இயக்குனர் அப்ரித் சைனி. வலுவான அணியிடம் தோற்றுப்போகும் உள்ளூர் இளைஞர் அணி, அவர்களுக்கு வழிகாட்டும் கோச், மள மளவென எதிரிகளை வீழ்த்தி க்ளைமாக்ஸில் கோப்பையை வெல்வது, வில்லன் பட்டாளம், ப்ராக்டீஸ் கூட செய்யாமல் காதலியுடன் டூயட் பாடிவிட்டு மேன் ஆப் தி மேட்ச் வாங்கும் ஹீரோ என பல 'முடியல'களை ஓரங்கட்டி வித்யாசமான களத்தில் பயணப்பட்டு இருக்கிறது இந்த பிரம்மமங்களம் அணி.

கேரளாவின் மாதவன் போல பெரும்பாலும் பளிச் சிரிப்புடன் மட்டுமே வண்டி ஓட்டி வந்த நிவினுக்கு ஈடன் கார்டனையே திறந்து விட்டு விளையாட சொல்லி இருக்கிறார் இயக்குனர். ஆரம்பத்தில் பத்தாம் வகுப்பு மாணவனாக வந்து பயமுறுத்தினாலும் அதற்குப்பிறகு அருமையாக ஸ்கோர் செய்துள்ளார். தந்தைக்கு கீழ்ப்படியும் மகன், மனைவியின் அபார அறிவாற்றலை கண்டு புலம்பும் கணவன், பாசமிக்க 40 வயது தந்தையென நிவின் தன் நடிப்பாற்றலால் மனதில் நிற்கிறார். இடைவேளைக்கு முன்னும் பின்னுமான காட்சிகளில் இவரது முகபாவம் கலாட்டா கதக்களி. இவரது மனைவியாக ஸ்ரிந்தா அஷாப் 'சச்சின்' குறித்த நுட்பமான புள்ளிவிவரங்கள் தருமிடத்தில் சிரிப்பை அடக்க முடியாது.

நிவினின் தந்தையாக ஜாய் மேத்யூ மற்றும் கோச்சாக வரும் அனூப் மேனன் ஆகியோரின் நேர்த்தியான நடிப்பு படத்தின் பலம். சச்சினின் ஜெராக்ஸ் ஜேகப் க்ரகரி வரும் சில நிமிடங்கள் காமடிக்கு உத்திரவாதம். தங்கை கேரக்டருக்கு ஏற்ற நிக்கி கல்ரானி நாயகனின் காதலியாக ஜஸ்ட் பாஸ் தான். சாய்ஜூ குருப் உள்ளிட்ட தோழர் பட்டாளத்தின் நடிப்பும் இயல்பு.

கோபி சுந்தரின் இசையில் பாடல்கள் இதம். கிராம வாழ்வை மண்ணின் ஈரத்துடன் படம் பிடித்து நம் மனதில் பதிய வைத்திருக்கிறது ப்ரதீஷின் கேமரா.
fff
முக்கால்வாசி படம் முடிந்த பிறகும் நிவின், அவரது மகன் சம்மந்தப்பட்ட காட்சிகள் விடாமல் தொடர்வது சற்று தொய்வு. அதுபோல முதல் அரைமணி நேரத்திற்குள் அடிக்கடி பாடல்கள் வருவது வேகத்தடை. மற்றபடி குறையென்று சொல்ல பெரிதாக ஏதுமில்லை.

'சச்சினின் தீவிர ரசிகன்' எனும் பெருமிதத்துடன் லிட்டில் மாஸ்டருக்கு சமர்ப்பணம் செய்து என்ட் கார்ட் போட்டிருக்கிறார் இயக்குனர். ஆனால் அதைத்தாண்டி மலையாள சினிமா வரலாற்றில் முற்றிலும் விளையாட்டு சார்ந்த படமொன்றை இவ்வளவு நேர்த்தியாக எடுத்த படைப்பாளி எனும் பெருமையையும் பெற்றிருப்பது உண்மை.

க்ரிக்கெட் ரசிகர்கள் எனும் பவுண்டரியை தாண்டி அனைவரும் ரசிக்கும் படைப்பாக வந்திருக்கும் 1983 சந்தேகமின்றி கேரளாவின் உலக (சினிமா) கோப்பைதான்!!
..........................................................

Sunday, February 16, 2014

குண்டே


பாகிஸ்தானிடம் போரிட்டு பங்களாதேஷ் எனும் தனி நாட்டை இந்தியா உருவாக்கிய சமயமது(1971). அப்போது அகதிகள் முகாமில் அனாதைகளாக அடைக்கலம் புகும் சிறுவர்கள்தான் பிக்ரம் மற்றும் பாலா. ராணுவ அதிகாரி தரும் பாலியல் இம்சையில் இருந்து தப்பித்து கல்கத்தா வந்து சேருகிறார்கள் இருவரும். துப்பாக்கி, நிலக்கரி கடத்தல் என  சட்டத்திற்கு புறம்பான தொழில்களை பல செய்து இளம் வயதிலேயே கல்கத்தாவின் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுக்கும் உற்ற நண்பர்கள் வாழ்வில் காதல் விளையாடுகிறது. மறுபக்கம் காவல் துறையும். காதலையும், காவலையும் எப்படி எதிர்கொள்கிறார்கள்?

அமிதாப், ராஜேஷ் கண்ணா உள்ளிட்ட மாஸ் மகாராஜாக்கள் ஆட்சி செய்த எண்பதுகளின் டெம்ப்ளேட் ப்ளேட்டை மாற்றாமல் மீண்டும் திரையாக்கம் செய்திருக்கிறார் அலி அப்பாஸ். பங்களாதேஷ் அகதிகள் பிரச்னையை நொடிகளில் கடந்துவிட்டு 'கதைக்கு' வருகிறார். மினி மிளகாய் பஜ்ஜிகளாக ஜெயேஷ் மற்றும் தர்ஷனின் ஆரம்ப காட்சிகள் ஆர்ப்பாட்டம். அதன் பின் வாலிப வஸ்தாதுகளாக ரன்வீரும், அர்ஜுனும். அர்ஜுனை விட சற்று முரட்டுத்தனமான முக அமைப்பு இருந்தாலும் என்ன பயன்? ராம் லீலா நாயகன் இந்த ராவண லீலா கேரக்டரில் தம் கட்ட தடுமாறி இருப்பது சறுக்கல்.

 (ஆறு) கட்டு மஸ்தான சிக்ஸ் பேக்ஸ் சண்டையில் வெளிப்படும் ஆக்ரோஷம் மட்டுமே ரன்வீர் மற்றும் அர்ஜுனின் ப்ளஸ் என சொல்லலாம். அது தவிர்த்து சொல்வதற்கு ஒன்றுமில்லை. 'ரெட்டைச்சூரியன் வருகுதம்மா. ஒற்றைத்தாமரை கருகுதம்மா' கேரக்டரில் ப்ரியங்கா. கிளாமரில் வஞ்சம் இல்லை. ஆனால் காதலில் இரு நாயகர்களும் சொதப்ப இவரும் சிக்கித்தவிக்க வேண்டி இருக்கிறது. 'புதிய பறவை' ட்விஸ்ட் தந்தாலும் ப்ரியங்கா பெரிதாக ஆச்சர்யப்படுத்தவில்லை.

போலீஸ் அதிகாரியாக இர்ஃபான் கான். ஒட்டுமொத்த படத்தில் நடித்த ஒரே நபர் இவர்தான். ஆனால் இந்த சிங்கம் தயிர் சாதம் மட்டுமே சாப்பிட வேண்டிய கட்டாயம். எல்லா 'டான்' படங்களிலும் இருக்கும் மூத்த ஆலோசகர்/ நலம் விரும்பி கேரக்டரில் சவுரப் சுக்லா. ஹீரோக்கள் போடும் சத்தத்தில் சைலன்ட் ஆகி விடுகிறார் பாவம். முதல் சில வினாடிகள் மட்டும் வந்து தியாகியாகி விடுவது 'கேங்க்ஸ் ஆப் வாசெபூர்' பங்கஜ் த்ரிபாதி.

ப்ரியங்காவின் கவர்ச்சியையும் தாண்டி மனதில் நிற்கிறது 'ஜியா' பாடலில் ஒலிக்கும் அரிஜித் சிங்கின் குரல். 'துனே மாரி'யில் 'என்னடி முனியம்மா உன் கண்ணுல மையி' ட்யூனை திருடி போட்ட சொஹைல் சென்னின் கலைநேர்த்தி அபாரம். சண்டைக்காட்சிகளில் முக்கால்வாசி வேலையை ரிலையன்ஸ் விசுவல் எபக்ட்ஸ் டீம் பார்த்துக்கொண்டதால், பெங்காலி ஸ்வீட்டை ருசித்தவாறே 'ஆக்சன்' சொன்னது மட்டுமே ஸ்டன்ட் மாஸ்டர் ஷாம் கவுசலின் வேலையாக இருந்திருக்கும் போல.


எதிரிகள் சூழும்போது ரன்பீரும், அர்ஜுனும் ஒருவருக்கொருவர் புன்முறுவல் பூத்து சிரித்துக்கொள்ள, அடுத்து அருகில் ஓடும் ரயில் மீது பறந்து போய் ஏறுவது ஒரு (கால) கட்டத்திற்கு மேல் டபுள் ட்ரபுள். 11 வயது முதல் கல்யாண வயது வரை இப்படியேவா? வெறும் 40 அடிப்பொடிகளை வைத்துக்கொண்டு மிகப்பெரிய நகரான கல்கத்தாவை ஆட்டிப்படைப்பது அமிதாப் பச்சனுக்கே அடுக்காது. அட ஒற்றை ஆளாக வூடு கட்டி அடித்த அண்ணன்மார்களும் அப்போது இருக்கத்தான் செய்தார்கள். ஆனால்  அத்தகைய காட்சிகளில் நம்மை 'நம்ப' வைக்கும் தந்திரம் அவர்களிடம் இருந்ததே. அது!!!

ஒன்று எண்பதுகளின் ஹீரோக்கள் போல மசாலா இமேஜ், 'கலங்கடிக்கும்' வசனங்கள் கொண்டு நம்மை வசியம் செய்ய வேண்டும் அல்லது வலுவான திரைக்கதை யுக்தி இருக்க வேண்டும். சரக்கில்லா கூட்ஸ் ட்ரெயின் ஆக வலம் வந்தால்? 'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ் முகத்தில் கரி பூசியவாறு ரன்பீரும், அர்ஜுனும் போஸ்டர்களில் போஸ் தருவது சிறப்பான குறியீடு. வேறென்ன சொல்ல?f

Saturday, February 15, 2014

இது கதிர்வேலன் காதல்

ஓகே ஓகே வில் நயன்தான் நாயகியாக இருக்க வேண்டும் என விரும்பினார் உதயநிதி. ஆனால் இறுதியில் ஹன்சிகாவுடன் தான் ஹாஸ்யம் செய்ய வேண்டி இருந்தது. ஒருவகையில் அந்த ஜோடியின் அப்பாவித்தனமும் படத்தின் அமோக வெற்றிக்கு ஒத்தாசை செய்தது என சொல்லலாம். ஆனால் இம்முறை மன்மத அம்பு விட மனோகரி நயனை அழைத்து வராமல் இழுத்தே வந்து விட்டார் இளஞ்சூரியன்.

ஹன்சிகா தவிர்த்து ஓகே ஓகே பட்டாளம் மீண்டும் ஆஜர். மதுரையில் மினிபஸ் விட்டு கௌரவமாக வாழ்பவர் கதிர்வேலனின் தந்தை. பெற்றோரின் சம்மதம் திருமணத்திற்கு அவசியம் என ஊருக்கு உணர்த்துபவர். ஆனால் அவரது மகளே காதல் திருமணம் செய்து கொள்வதால் தன் கௌரவத்தை காப்பாற்ற ஊரை விட்டு ஒதுங்கி ஆளரவமற்ற சிறுவீட்டில் குடும்பத்துடன் வசிக்கிறார். ஆஞ்சநேய பக்தனான தன் மகனும் காதலில் விழ மனம் கனத்து நிற்கிறார் அப்பெரியவர். கதிரின் காதல் கை கூடியது எப்படி என்பதை காமடி கலந்த குடும்ப சித்திரமாக சொல்லி இருக்கிறார் 'சுந்தரபாண்டியன்' இயக்குனர் பிரபாகரன்.

இரண்டாம் படத்தில் புதிதாக/சிறப்பாக என்ன செய்வது என்பதை விட அசட்டுத்தனமாக எதையெல்லாம் செய்யக்கூடாது என்பதில் உஷாராக இருக்கிறார் உதய். அதுவே அவரது பலவீனமாகவும் போய் விடுகிறது. நடிப்பில் பெரிய முன்னேற்றம் இல்லை. 'மேலே மேலே' பாடலில் மட்டும் நடனத்தில் இரண்டு ஸ்டெப் மேலே. சந்தானம் சொல்வது போல 'உன்கிட்ட எக்ஸ்ப்ரசன் எதிர்பாத்தது என் தப்புடா?'. நயன்தாராவிடம் ஆட்டோக்ராப் வாங்க ஆவலுடன் தயங்கி நிற்கும் அப்பாவி ரசிகனின் முகபாவத்துடன் படம் முழுக்க ஹீரோ இருந்தால் எப்படி? ராஜா ராணி போன்ற உணர்ச்சி ததும்பும் படத்தில் நடித்த நயனுக்கு இந்த கேரக்டர் டேக் இட் ஈசி ஊர்வசி.

ஊட்டச்சத்து டாக்டராக தன்னை சொல்லிக்கொள்ளும் மயில்வாகனம் கேரக்டரில் சந்தானம். சில இடங்களில் சரவெடி. படத்தின் சுமாரான திரைக்கதை வேகத்திற்கு கூட தடையாக இல்லாமல் அளவோடு வந்து செல்கிறார். 'சத்தம் போடாம ஹோட்டல்ல சாப்புடணுமா? அப்பறம் எப்டி சட்னி, சாம்பார் கேப்பீங்க?', 'அந்த ஆள் ஏன் உன்ன அப்படி மொரைக்கறாரு? உன்னோட பழைய ட்யூசன் மாஸ்டரா?' என சந்தானத்தின் ரகளை அமோகம். குறிப்பாக க்ளைமாக்ஸ் பதற்ற காட்சியில் முருகதாஸ் குடங்களின் மீது விழ, சந்தானம் மாத்திரை போட்டுக்கொண்டு ஐ.சி.யு.வில் அட்மிட் ஆகும் காட்சியில் தியேட்டர் குலுங்குகிறது. 'பலகுரல் மன்னன்' பலராமனாக மயில்சாமி சில நிமிடங்கள் வந்தாலும் காமடியில் தூள்!!

உதயநிதியின் பெற்றோர்களான ஆடுகளம் நரேன் மற்றும் சரண்யா. யானைப்பசிக்கு சோளப்பொறி போட்டிருக்கிறார் இயக்குனர். சாயா சிங் நடிப்பில் Cold Tea. இன்னொரு முக்கிய கேரக்டரில் 'மயக்கம் என்ன' சுந்தர் ராமு. அதில் தனுசிடம் ரிச்சாவை பறிதந்தவர் இம்முறை நயனை தாரை வார்த்திருக்கிறார். உப்பு சப்பற்ற வில்லனாக வந்து காணாமல் போகிறார். கௌரவ வேடத்தில் வந்தாலும் அண்ணன் மகனிடம் சண்டை போட்டு சேரும் சீனில் ஜெயப்ரகாஷ் முத்திரை பதித்துள்ளார்.

ஹாரிஸ் இசையில் 'மேலே மேலே' மற்றும் 'அன்பே அன்பே' கொஞ்சம் ஹம்ம வைக்கிறது. நன்றி தாமரை, கார்த்திக், ஹரீஷ் மற்றும் ஹரிணி. 'லுங்கி புகழ்' தினேஷ் மாஸ்டர் ஸ்பெஷல் எதுவும் நடன அமைப்பில் இல்லை. உதய்யை இன்னும் கொஞ்சம் நன்றாக ஸ்டெப் போட வைத்ததை தவிர. ஸ்டன்ட் மாஸ்டர் திலிப் சுப்பராயன் எதற்கு தேவைப்பட்டார் என்பது புலப்படவில்லை.


 'இது ஓகே ஓகே மற்றும் சுந்தரபாண்டியனின் கலவையாக இருக்கும்' என முன்பொரு முறை சொன்னார் இயக்குனர். உண்மைதான். இருதரப்பும் இனைந்து செய்திருக்கும் படம் என்பது வரை. ஆனால் அதை பக்குவமாக வார்த்து பரிமாறுவதில்தான் தடுமாற்றம் நிகழ்ந்திருக்கிறது. காமடி, காதல், குடும்பக்கதை என மூன்றையும் பேலன்ஸ் செய்யும் நேர்த்தி வசப்படவில்லை இயக்குனருக்கு. லொக்கேஷன், வசனங்கள் போற்றவற்றில் டி.வி. சீரியல் சாயல் எட்டிப்பார்க்கிறது.

மொத்த ஹோட்டலும் கேட்கும்படி பெண்களை பற்றி கொச்சையாக சுந்தர் பேசுவது, டூயட் காட்சிகளுக்கு வழிவிடும் அவசரத்தில் அவசரமாக ஹீரோவுக்கு காதல் பூப்பது, காதலுக்கு ஐடியா கேட்டு சந்தானத்தின் உசுருடன் நம் உசுரையும் வாங்குவது, குறைந்தபட்சம் இரண்டு பேர் கூட சிறந்த நடிப்பை வெளிப்படுத்தாதது என குறைகள் ஆங்காங்கே.

பவ்யமான குடும்ப காதல் சித்திரம் பார்க்க விரும்பும் காதலர்களுக்கு கதிர்வேலனின் காதல் ச்சோ ச்வீட் ஆக படலாம். ஆனால் ரெகுலர் திரை ரசிகர்களுக்கு கிடைத்திருப்பது வெறும் ப்ளாஸ்டிக் பூங்கொத்துதான்!!
Saturday, February 1, 2014

ரம்மி


'ரம்மி சீட்டாட்டத்தைப்போல அடுத்து என்ன நடக்கும் என்பதை  யூகிக்க முடியாத அளவிற்கு திரைக்கதையில் ஒரு மேஜிக்கை அமைத்திருக்கிறேன்' என இப்படம் குறித்து பெருமிதம் பொங்க கூறி இருந்தார் அறிமுக இயக்குனர் பாலகிருஷ்ணன். மூன்று முக்கிய கேரக்டர்களில் ஒன்றாக விஜய சேதுபதியையும் நுழைத்த தெம்புடன்  1987 முதல் 1990 கால கட்டத்திலான காதல் கதையை சமர்ப்பித்து இருக்கிறார்.

புதுக்கோட்டை வடகாடு ஊரைச்சேர்ந்த சக்தி, திண்டுக்கல் ஜோசப் இருவரும் அரசுக்கல்லூரி நண்பர்கள். உடன் படிக்கும் மீனாட்சி மனதில் இடம் பிடிக்கும் சக்தி மீது கோபமாய் திரிகிறான் சகா சையத். மறுபக்கம் ஜோசப்பிற்கும் காதல் பூக்கிறது. ஆனால் தங்கள் ஊர்ப்பெண்ணுடன் எந்த இளைஞன் பேசினாலும் அவனை நையப்புடைப்பது அல்லது கொல்வது 'ஐயா'வின் கொள்கை, லட்சியம், சட்டம். அவர் கண்ணிலேயே விரலை விட்டு ஆட்டும் இவ்விரு ஜோடிகளை எப்படி துரத்துகிறார், அக்காதலர்கள் என்ன கதிக்கு ஆளாகிறார்கள் என்பது கதை.

சங்கர், சலீம், சைமன் டைப்பில் சக்தி, சையத், ஜோசப் என மூன்று பெயர் கொண்ட முக்கிய கேரக்டர்கள். சக்தியான இனிகோவிற்கு பிரதான வாய்ப்பு. பாசமும், பயமும் கொண்ட தோழனாக விஜய சேதுபதி. சையத் ஆக நமக்கு பரிச்சயம் இல்லாத ஒரு இளைஞர். பாவம் இறுதிவரை ட்வெல்த் மேனாகவே எட்டிப்பார்த்துவிட்டு காணாமல் போகிறார். 'செகண்ட் இல்ல நீங்கதான் மெயின் ஹீரோ' என்று இனிகோ முகத்தில் கோலி சோடா அடித்து தெளிய வைப்பதற்குள் க்ளைமாக்ஸ் வந்துவிடுகிறது. மறுமுறை நல்வாய்ப்பு உரித்தாகுக நண்பா.

 படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் நண்பன் இனிகோவிற்கு தோள் கொடுத்து உள்ளார்  வி.சேதுபதி. டைட்டில் கார்டில் பெயர் போட்டதுமே விசில் பறக்கிறது. இயல்பிலேயே பரந்த மனது கொண்டவரான கொண்டவர் என்பதால் இதுக்கு மேல விசில் வேண்டாம் என்பது போல் சுமார் பெர்பாமன்ஸ் தந்து தியேட்டரில் உள்ள இதர சாதுக்கள் இனிதே படம் பார்க்க ஒத்தாசை செய்கிறார். கிணற்றில் குதித்து நாயகி குளித்த மஞ்ச தண்ணியில் நீராடிய மறுகணமே இவருக்கு காதல் துளிர் விடுவது அடடே.

காமடியில் சூரி அரைக்கிணறு. மூணாறு ரமேஷ் ஆரம்பம் முதல் இறுதி வரை மூர்க்கமாகவே திரிந்து சூரி விட்ட இடத்தை தட்டிப்பிடித்து இருப்பது அருமை. சென்ட்ராயனும் இருக்கிறார். ரம்மியின் ஒரே மற்றும் ஒன்லி ரம்மியம் காயத்ரி. காயத்ரி. காயத்ரி.

 1987 டு 1990 கால கட்டத்தை பிரதிபலிக்கும் டீடெய்லிங் நன்று.பழங்கால கோவில்களின் பின்னணியில் ஒளிப்பதிவாளர் பிரேம்குமாரின் கையம்சம் கண்களுக்கு இனிமை. ஆனால் கோவில் சார்ந்த பாடல்களுக்கு இசை இமானாமே? எந்தப்பாடலும் மனதில் நிற்கவில்லை.

ஊர்ப்பெரியவர் ஜோ மல்லூரி எதற்கு கண்ணில் படும் இளசுகளை எல்லாம் கொல்ல துடிக்க வேண்டும்? அதற்கான பின்னணி என்ன?  ஊரில் அவருடன் இருக்கும் சில அடியாட்கள் தவிர்த்து மற்ற பொதுமக்கள் எல்லாம் கல்கத்தா காளி கோவில் திருவிழாவிற்கு கிளம்பி போய் விட்டார்களா? ஒன்றும் புரியவில்லை. படம் நெடுக சுந்தர பாண்டியன் வாடை மூக்கை துளைக்கிறது.

மக்கள் எதிர்பார்க்கும் காட்சி இன்றி  வேறொரு ட்விஸ்ட் வைப்பதாக நினைத்துக்கொண்டு காதல் ஜோடிகள் ஓடும் தெருக்களில் உள்ள வளைவுகளை விட அதிகமாக நாலு திருப்பங்களை வைத்திருக்கிறார் இயக்குனர். ஆனால் ஷூட்டிங் நடக்கும்போது ஒளிப்பதிவாளர் பின்னாலேயே ஓடி எல்லா சீனையும் பார்த்ததுபோல தியேட்டரில் சரியாக சொல்கிறான் நம்மூர் கில்லாடி ரசிகன்.

க்ளைமாக்ஸில் பாரதி ராஜாத்தனம் பளிச்சிடுகிறது. 'என் இனிய தமிழ் மக்களே' என கரம் கூப்புவதற்குள் சிறப்பு வணக்கம் போட்டு விட்டு ஓடுகிறான் என் இனிய அப்பாவி ரசிகன்.


Written for tamil.jillmore.com
..................................................................


சமீபத்தில் எழுதியது:

கோலி சோடா - விமர்சனம்
Related Posts Plugin for WordPress, Blogger...