CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Thursday, January 23, 2014

2014 சென்னை புத்தகக்காட்சி - 4


சென்ற வார இறுதியில் 'இணைய அரசியல் சாணக்யர்' ரஹீம் கஸாலியிடமிருந்து  அழைப்பு வர மீண்டும் புத்தகக்காட்சி பக்கம் ஆஜர். இருவருமாக இணைந்து பல்வேறு கடைகளை சுற்றிப்பார்த்தோம். 'ஒரு சாமானியனின் கதை' எனும் அரசியல் நூலை கஸாலி கரம் பிடிக்க அடுத்து எம்.ஜி. ஆர். பற்றி எழுதப்பட்ட 'நான் ஏன் பிறந்தேன்?' புத்தகத்திற்கான பெருந்தேடலை நடத்தினார். பலனில்லை. 

பயணத்தினூடே பதிவர் ஜாக்கி சேகர் கண்ணில் பட அவரிடம் சற்று உரையாடிய பிறகு புதுகை அப்துல்லாவும், டாக்டர் ப்ரூனோவும் எதிர்பட 30 நிமிடங்களுக்கு அரசியல் கருத்துகள் பரிமாறப்பட்டன. வழக்கம்போல விலைமதிப்பில்லா டீயை ஸ்பான்சர் செய்தார் அப்துல்லா அண்ணன். அவர்களிடம் உரையாடிய பிற்பாடு கலைஞர் ஸ்டாலில் புகுந்தார் 'தி.மு.க. வின் மறைமுக அனுதாபி' கஸாலி. நேராக இருந்த கலைஞர் புத்தகமொன்றை தலைகீழாக வைத்துவிட்டு சட்டென வெளியேறினார். காரணம் பிடிபடவில்லை.  

சனி மற்றும் ஞாயிறன்று பிலாசபி, ஆரூர், அஞ்சாசிங்கம் ஆகியோருடன் உலாத்தல். இம்முறை ஓரளவு உஷார் ஆன ஆரூர் மகுடிக்கு மயங்காமல் தனக்கு பிடித்த புத்தகங்களை மட்டுமே வாங்கினார். குறிப்பாக கல்யாண ஆல்பம் சைசில் ரூ. 500 தந்து பிலிம் நியூஸ் ஆனந்தன் புத்தகத்தை வாங்கியது  டிஸ்கவரி வேடியப்பனாரை அகம் மகிழ செய்தது. புலவர் ராமானுஜம், சுகுமார் சுவாமிநாதன், சிராஜுதீன், கவியாழி, செல்லப்பா, பாலகணேஷ், ஸ்கூல் பையன், சீனு, ரூபக் உள்ளிட்ட பதிவர்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. இணைய வாசகர் ஷரவ்வுடன் நடந்த உரையாடலும் அடக்கம். புத்தகம் போட்ட குற்றத்திற்காக ஆளுக்கொன்றாக மொத்தம் 14 குல்பி ஐஸ் வாங்கித்தந்த குடந்தை சரவணன் புகழ் வாழ்க.

ஆன் தி வேயில் நாங்கள் சந்தித்த முக்கியமான இலக்கியவாதி நாகராஜ சோழன்( எம்.ஏ., எம். எல். ஏ). சில ஒளிவட்ட நூல்களின் பெயர்களை சொல்லி திணறடித்தார் மனிதர். காலச்சுவடி ஸ்டாலில் கிருஷ்ண பிரபு என்பவர் பிரச்சார பீரங்கியாக முழங்கி பெருமாள் முருகனின் புத்தகங்களை தலையில் கட்ட பெரும் முயற்சி எடுத்துகொண்டிருந்தார். 

                                                             'இணைய அரசியல் சாணக்யர்' ரஹீம் கஸாலி

கண்காட்சியின்  இறுதி நாள் நெருங்கியதால் 22 ஆம் தேதியன்றும் தொடர்ந்தது எனது சிற்றுலா. சீமான், கோபண்ணா, பழ. கருப்பையா போன்ற அரசியல் பிரமுகர்கள் பேச்சரங்க வாசலில் தென்பட்டனர். தோழர் நிஜந்தன் இணையத்தில் குறிப்பிட்ட 'போர்க்குதிரை' புத்தகத்தை அகநாழிகையில் வாங்கினேன்.

தனியுலா தொடர...டிஸ்கவரி புக் பேலஸ் வாசலில் எதிர்பாராத சந்திப்பொன்று நிகழ்ந்தது. அங்கே நான் கண்டது அபி அப்பா மற்றும் அவரது சகோதரர் கொக்கரக்கோ சௌம்யன் ஆகியோரை. கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் முழுக்க அரசியல் சார்ந்த கருத்து பரிமாற்றங்கள் நிகழ்ந்தன. தி.மு.க.வின் கீழ்மட்ட தொண்டர்கள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள், கருணாநிதி ஸ்டாலின் ஆகியோரின் அரசியல் பண்பு உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அள்ளித்தந்தனர் இருவரும். 'தி.மு.க.வை மட்டும் கடுமையாக சாடுபவன்' எனும் பிம்பத்தை உடைக்க சௌம்யன் அவர்களிடம் சற்று பாடு பட வேண்டியிருந்தது எனக்கு. அரசியலைத்தாண்டி அன்பான சகோதரர்கள் எனும் முறையில் பொறாமைப்பட வேண்டி இருந்தது எனக்கு. மறக்க முடியாத சந்திப்பு!! 

இனி நான் வாங்கிய புத்தகங்கள்...

கார்த்திக் ஸ்ரீநிவாஸின் 'மர்மயோகி நாஸ்டிரடாமஸ்'.
வெளியீடு: வானவில் புத்தகாலயம். பக்கங்கள் 252. ரூ.160

சசி வாரியாரின் 'தூக்கிலிடுபவரின் குறிப்புகள்'
வெளியீடு: எதிர். பக்கங்கள் 271. ரூ.220

சோவின் 'அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள்' 
வெளியீடு: அல்லையன்ஸ் பக்கங்கள் 452. ரூ.200

மாட் விக்டோரியா பார்லோவின் 'நீராதிபத்தியம்'
வெளியீடு: எதிர். பக்கங்கள் 248 ரூ.200

மனோகர் தேவதாஸின் 'எனது மதுரை அனுபவங்கள்'
வெளியீடு: கண்ணதாசன் பதிப்பகம். பக்கங்கள் 368 ரூ.200

தஸ்லிமா நஸ்ரினின் 'லஜ்ஜா'
வெளியீடு: கிழக்கு பதிப்பகம் பக்கங்கள் 231 ரூ.200 

ரகோத்தமனின் 'ராஜீவ் கொலை வழக்கு'
வெளியீடு: கிழக்கு பதிப்பகம் பக்கங்கள் 221 ரூ.200 

பக்கத்திற்கு எட்டணா என்று பட்ஜெட் ஒதுக்கியே புத்தகங்கள் வாங்கி வந்தேன். ஆனால் சென்ற ஆண்டு நிலவரம் 75 பைசா என்றாகி தற்போது கிட்டத்தட்ட ஒரு பக்கம் ஒரு ரூபாய் என்று கலவரமாகும் அளவிற்கு தரமான புத்தகங்களின் விலைகள் ஏறிவிட்டன. எனவே அடுத்த புத்தக கண்காட்சியில் அதிகபட்சம் 5 புத்தகங்கள் வாங்கினாலே சாதனைதான். கேட்டால் ப்ரிண்டிங் செலவுகள் அதிகமாகிவிட்டன என்கிறார்கள். அது உண்மை என்றாலும், சில ஆண்டுகளுக்கு முன்பு வந்த புத்தகங்களை கூட ஸ்டிக்கர் ஒட்டி அல்லது கவர் போட்டு வாசகன் தலையில் கட்டுவது கேவலமான செயலாக படுகிறது. 

இதுபோக பெரிய எழுத்துக்களை அச்சிட்டு பக்கங்களை நிரப்புவது, தேவையற்ற புகைப்படங்களை போடுவது, வரிகளுக்கு இடையே பெரிய இடைவெளி விடுவது போன்ற பல்வேறு டக்கால்டி வேலைகளை செய்கிறார்கள். தயவு செய்து இனி புத்தக விற்பனையை சேவை என்று சொல்லி ஊரை ஏமாற்ற வேண்டாம். இது வெறும் வியாபாரம் மட்டுமே. சிலரிடம் மட்டுமே குடிகொண்டிருக்கிறது நேர்மை. இதே கதியில் இவர்கள் இயங்கினால் வாசிப்பை விரும்புவோர் இனி இணையம் மூலம் மின் இதழ்களை வாசித்தாலே நலம் என பரிந்துரைக்கிறேன். அப்புத்தகங்கள் இடத்தை அடிக்காது, பராமரிக்க பாடு பாடவும் வேண்டாம். 

குறிப்பு: தோழர் கஸாலி படிக்க விரும்பிய 'நான் ஏன் பிறந்தேன்?' புத்தகம் எம்.ஜி.ஆரின் பிறந்த தினமான ஜனவரி 17 ஆம் தேதி கண்ணதாசன் பதிப்பகத்தில் விற்பனைக்கு வந்தது. மொத்தம் இரண்டு பாகம். கவர் போடப்பட்டு இருந்தது.  இரண்டின் விலையையும் சேர்த்தால் 960 ரூபாய்!!!

'தம்பி நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று. அதை நான் உனக்கு சொல்லட்டுமா இன்று' என புத்தகம் படித்தவர்கள் கதை சொன்னால் மட்டும் கேட்டுக்கொள்க மக்களே!!
 ...................................................................      

            


4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

தலைவர் நூல் என்றால் சும்மாவா...?

வருங்காலத்தில் மின் நூல்கள் தான்... ஆனாலும் நிம்மதியாக பிடித்த நூலை வாசிக்கும் இனிமை கிடைக்கப் போவதில்லை வரும் தலைமுறையினருக்கு...

ஜோதிஜி said...

கண்ணதாசனுக்கு பாவம் சம்பாரிக்கத் தெரியாமல் சம்பாரித்த பணத்தையும் தொலைத்து விட்டு மறைந்த போனவர் இவர்களைப் பார்த்தால் கொஞ்சம் திருந்தியிருக்கக்கூடும்.

வாய்ப்பிருந்தால் அருகே உள்ள பழைய புத்தகக்கடைகளுக்கு ஒரு முறை செல்லவும். நம்ப முடியாத விலையில் விலை மதிப்பற்ற புத்தகங்கள் கிடைக்கக்கூடும்.

Unknown said...

புத்தகக் கண்காட்சி பற்றிய பகிர்வுக்கு,நன்றி!////தி.மு.க வின் மறைமுக அனுதாபி.///நேராக இருந்த 'கலைஞர்'புத்தகத்தை "கழாகீலைத"....................ஒரு வேளை "அந்த" உலகப் புகழ் உண்ணாவிரதம் பற்றி எழுதியிருக்கவில்லையோ,என்னவோ?

வவ்வால் said...

siva,

பக்கத்துக்கு 50/75 பைசா என்பது நம்ம கணக்காச்சே,

பிரபா பதிவில் சொன்னது,

//என்னைப்பொறுத்த வரையில்முன் முடிவெல்லாம் இல்லாமல் கையில இருக்க காசுக்கு புக்க வாங்க வேண்டியது, புத்தகத்தின் விலையை தீர்மானிக்க நான் கையாளும் வழி என்னவெனில் ஒரு பக்கத்துக்கு 50 காசு என விலை வர்வது போல இருக்கனும் :-))

அதிகப்பட்சம் ஒரு பக்கத்துக்கு 75 பைசா விலை தாண்டக்கூடாது.
//

எப்படியோ நம்ம அலைவரிசையில் இருக்கீர் :))

Related Posts Plugin for WordPress, Blogger...