தேசிய ஊடகங்களில் 'முதல்வன்' பாணி பேட்டிகளை நான் பார்க்க ஆரம்பித்தது கரன் தாபரின் CNN-IBN டெவில்ஸ் அட்வகேட் நிகழ்ச்சி மூலமாகத்தான். அதிகபட்சம் 20 நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும் பேட்டியில் வீர தீர சூர அரசியல்வாதிகளைக்கூட நாக்கில் நுரை தப்ப வைப்பார். தாபரின் ரேசர் ஷார்ப் பார்வை, கம்பீர குரல் மட்டுமே போதும். எதிரில் அமர்பவரின் பேஸ்மன்ட் கிடுகிடுக்கும். பர்வேஸ் முஷரப், நரேந்திர மோடி ஆகியோரை தாபர் மடக்கியபோது முகம் சிவந்து அவர்கள் க்ளாஸ் டம்ளர் தண்ணீரை பதற்றத்துடன் அருந்திய நிமிடங்கள் இன்னும் நினைவில் இருந்து மறையவில்லை. கபில் சிபல் போன்ற வெகு சிலர் மட்டுமே தாபருக்கு தண்ணி காட்டிய ஜித்தர்கள். பிற்பாடு அதுபோன்ற அதிரடி பேட்டிகள் அரிதாகவே நிகழ்ந்தன என்று சொல்லலாம். நேற்று அர்னாப் மூலமாக அந்த குறையும் தீர்ந்தது.
விளம்பரம்/தம்பட்டம் அடிப்பதில், அதிக சப்தம் போடுவதில் டைம்ஸ் நவ் சேனலுக்கு இணை அதுதான். குறிப்பாக அர்னாப். சென்ற ஆண்டு சில முக்கிய புள்ளிகளை திணற அடிக்கிறேன் பேர்வழி என்று அவர்களிடம் சிக்கி கோல் வாங்கினார் அர்னாப். அதன் பிறகு 'ந்யூஸ் ஹவர்' பார்ப்பதை பெரும்பாலும் குறைத்துக்கொண்டேன். சமீபகாலமாக தந்தி டி.வி. ரங்கராஜ் பாண்டே 'தமிழகத்தின் அர்னாப்' ஆக கடும் முயற்சி எடுத்து வருகிறார். 'கேள்விக்கென்ன பதில்' மூலம் பகிரங்கமாக கேள்விகளை முன்வைத்து பேட்டி எடுத்தது அவரை கவனிக்க வைத்தது. 'ப்ரெஞ்ச் தாடி' அவருடைய பிரம்மாஸ்திர உறை. ஒருமுறை கார்த்திக் சிதம்பரத்திடம் சிக்கி சின்னாபின்னம் ஆனார் பாண்டே. பேட்டி எடுப்பதில் கடக்க வேண்டிய தூரம் அவருக்கு இன்னும் இருக்கிறது என ஊர்ஜிதம் ஆனது.
நேற்று முழுக்க 'இந்திய ஊடகங்களில் மிகப்பெரிய பேட்டி, பார்த்தே ஆக வேண்டும்' என டைம்ஸ் நவ் நம் காதின் மீதமர்ந்து அலறியது. Frankly Speaking with Arnab சிறப்பு பேட்டியில் 'கை'ப்புள்ள ராகுல். மொத்த பேட்டியையும் காணும் வாய்ப்பு கிட்டியது. முதல் கேள்வியிலேயே பட்டாசு கிளப்ப ஆரம்பித்தார் அர்னாப். குஜராத்/சீக்கியர் கலவரம்/படுகொலை, காங்கிரஸ் ஊழல் உள்ளிட்ட எந்த கேள்விக்கும் நேரடி பதில் தரவில்லை ராகுல். 'பெண்கள் முன்னேற வேண்டும், இளைஞர்களை ஒன்று திரட்ட வேண்டும்' ரீதியில் கூச்சமின்றி ஒரு மணிநேரம் சம்மந்தம் இல்லாமலே பதில் அளித்தார் நல்லதம்பி. 'நான் கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் தாருங்கள்' என அர்னாப் பலமுறை சொல்லியும் பயனில்லை.
மோடி குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு மழுப்பி தள்ளினார் 'நாளைய' காங்கிரஸ் தலைவர். "சீக்கிய கலவரம் நடக்கும்போது நான் சிறுவனாக இருந்தேன். அப்போதைய காங்கிரஸ் ஆட்சியில் எனது பங்கு எதுவும் இல்லை" போன்ற பிரமாதமான பதில்களை சொல்லி அர்னாப்பை மிரள வைத்தார். "லாலு போன்ற ஊழல் கறை படிந்தவரிடம் கூட்டணி வைக்கிறீர்களே?" என கேட்டதற்கு கிடைத்த பதில் "நாங்கள் அவரது கட்சியுடன் தான் கூட்டணி வைத்துள்ளோம். லாலு எனும் தனிநபருடன் அல்ல". 'என் சம்பள பாக்கிய இப்பவே செட்டில் பண்ணுங்க. ஓடிடறேன்' என்று அர்னாப் அலறாத குறைதான்.
"10 வருஷம் One on One பேட்டி குடுக்காம இருந்தது எவ்ளோ பெரிய ராஜதந்திரம். அப்படியே இருந்து இருக்கலாம். என்னா அடி" லெவலுக்கு ராகுல் முகம் பேயறைந்தது போல் ஆகத்தொடங்கியது. ஒரு கட்டத்தில் வெறியாகி (ஆனாலும் நீங்க ரொம்ப தமாசு தம்பி) "நானும் வந்ததுல இருந்து பாக்கறேன். உருப்படியா ஒரு கேள்வி கேட்டியா? பெண்கள் முன்னேற்றம், இளைஞர்கள் இணைப்பு, Funda'mental' பிரச்னைகள் பத்தி பேசாம எதை எதையோ கேக்குற" (இதுக்கு மேல அடிச்ச அழுதுருவேன்). அர்னாப்: "அதுக்கு உங்க பிரச்சார மேடைல வந்து உக்காந்தா போதாது? இது இன்டர்வியூ ராகுல். இப்படித்தான் கேக்க முடியும்". தலைகுனிந்தார் காங்கிரஸ் துணை ஜனா.
அடுத்து: "மோடியுடன் ஒரே மேடையில் விவாதிக்க தயாரா?". நம்ம தம்பி: "பெண்கள் முன்னேற வேண்டும். இளைஞர்கள்....". மண்டை காய்ந்த அர்னாப் "பேசாமல் RTI போட்டு பதில்களை வாங்கினால் என்ன? இந்தாளு நம்மள ராக்கிங் பண்ணிட்டே இருக்காரே?" நிலைக்கு தள்ளப்பட்டார். மூச்சுக்கு முப்பது தரம் "சிஸ்டத்தை மாற்ற வேண்டும். சிஸ்டத்தை மாற்ற வேண்டும்" என்றார் ராகுல். செம அட்டாக். ஒரு வருஷமா ஒரே லாப்டாப்போட டி.வி. ப்ரோக்ராம் பண்ணா? கேக்கத்தான் செய்வாங்க. அட்லீஸ்ட் சிஸ்டம் லேபிளையாவது மாத்துங்க கோஸ்வாமி. சார் சொல்றாருல்ல.
மொத்தத்தில் இப்படி ஒரு 100% மொக்கையான, சம்மந்தமில்லாத, பொறுப்பற்ற பதில்களை எந்த ஒரு இந்திய தலைவரும், ஏன் கட்சியின் கீழ்மட்ட பிரதிநிதி கூட தமது பேட்டிகளில் சொன்னதில்லை. இப்படிப்பட்ட நபரிடம் இந்தியாவை ஆளும் பொறுப்பை தந்தால் மக்கள் என்ன கதிக்கு ஆளாவர்கள் எனும் பேரச்சம் குடிகொள்கிறது. பேசுவதில் கோல்ட் மெடல் வாங்கிய மோடி, லாலு, அருண் ஜெட்லி ஆகியோரையும் அர்னாப் இதுபோன்று வெளுத்து வாங்கினால் அட்டகாசமாய் இருக்கும். பாவம் ராஜா வீட்டு கன்னுக்குட்டியை புலிக்கூண்டுக்குள் அடைத்து மிரண்டோட வைத்து விட்டார். Bad Times Now for the Prince.
எது எப்படியோ கொஞ்சமும் திசை மாறாமல் அனல் பறக்கும் கேள்விகளை கேட்டு பட்டையை கிளப்பிய அர்னாப். ஹாட்ஸ் ஆப்!!
..........................................................................