CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Saturday, December 7, 2013

Punyalan Agarbattis


                        
                                                                               

நாயகன், துணை நாயகன், சிறப்புத்தோற்றம் என பாரபட்சம் பார்க்காமல் நடித்து தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக்கொண்டு வரும் இளம் நடிகர் ஜெயசூர்யா புன்யாலன்(வெள்ளை மனசுக்காரன்) அகர்பத்திஸ் எனும் படத்தை தயாரித்து நாயகனாவும் நடித்திருக்கிறார். தனது முதல் படமான Passenger மூலம் பேசப்பட்ட ரஞ்சித் சங்கர்தான் இதன் இயக்குனர். சனிக்கிழமை முதல் மம்முட்டியின் 'சைலன்ஸ்' படத்திற்கு மவுசு இருக்கும் என்பதால் நேற்றொரு நாள் மட்டும் இவ்வூதுபத்தியை மாலை நேரத்தில் மணக்க விட்டிருந்தது எஸ்கேப்.

தனது புதுப்புது கண்டுபிடிப்புகள் மூலம் வியாபார உலகில் எப்படியும் உயர்ந்த இடத்தை எட்டிவிடலாம் என்று விடாமுயற்சி செய்கிறான் ஜாய் தொக்கல்காரன். ஆனால் அதற்கான நேரம் கை கூட மறுக்கிறது. தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் மனைவியின் வருமானத்தில் காலத்தை கடத்துகிறான். ஜாயின் ஐன்ஸ்டீன் மூலையில் உதிக்கும் அடுத்த விஷயம் யானைச்சாணம் மூலம் ஊதுபத்தி செய்வது. குறைந்த முதலீட்டில்(!) அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தி நிறைய லாபம் பார்க்கலாம் என தேவஸ்தான போர்ட் மற்றும் யானைச்சங்க உயரதிகாரிகளிடம் பேசி சம்மதம் வாங்குகிறான். வியாபாரம் செழிக்க ஆரம்பிக்கும் சில நாட்களுக்குள் கேரளத்தில் நடக்கும் ஹர்த்தால்(முழு அடைப்பு) ஜாயின் வாழ்வை திருப்பிப்போடுகிறது. அரசியல் கட்சிக்கு எதிராக நஷ்ட ஈடு கோரி வழக்கு போடுகிறான். அவ்வழக்கையொட்டி நடக்கும் சம்பவங்கள்தான் கதையின் பெரும்பகுதி.

குறுந்தொழிலதிபராக ஜெயசூர்யா செம பிட். எப்படியும் பிசினஸில் வென்று விடத்துடிக்கும் ஜாயாக யதார்த்த நடிப்பில் பெயர் வாங்குகிறார். ஜெயசூர்யாவின் மனைவியாக நைலா நாயகி அல்ல பொருத்தமான 'துணை' நடிகை. 'மாதச்சம்பளம் வாங்கும் சராசரி கணவன் அல்ல நான். வியாபாரத்தில் நான் வென்றால் அம்பானி மனைவி போல வாழலாம். தோற்றால் பைத்தியக்காரன் மனைவி....' என இவரை பெண் பார்க்க செல்லும் சூர்யா கூறும்போதும், அலுவலக அலுப்பில் சோர்ந்திருக்கும் நைலாவை பார்த்து கர்ப்பமாக இருக்கிறார் என்றெண்ணும் கணவனை நைலா கடிந்து கொள்ளுமிடத்திலும் இயல்பான அன்யோன்யம்.

சூர்யாவின் நண்பராக அஜு வர்கீஸுக்கு காட்சிகள் நிறைய இருந்தாலும் கம்பனியின் 'குட்டி யானை' ஓட்டுனராக வரும் ஸ்ரீஜித் அப்பாவியான முகபாவத்துடன் அப்ளாஸ்களை அள்ளி விடுகிறார். அடுத்ததாக காமடியில் பெயர் வாங்குவது நீதிபதியாக வரும் சுனில் சுகடா. சூர்யா சார்ந்த வழக்குகளை இவர் விசாரிக்கும்போதெல்லாம் சிரிப்பிற்கு உத்தரவாதம். யானையொன்று சாணம் போடும் தருணத்திற்காக ஜாய் & கோ காத்திருத்தல் உச்சகட்ட தமாஷ். 'கண்ணழகி' ரச்சனா,  கௌரவ தோற்றத்தில் இன்னசன்ட், காந்தியவாதியாக டி.ஜி. ரவி என நட்சத்திர பட்டாளத்திற்கு குறைவில்லை. அனைவரையும் சரிவர பயன்படுத்தி இருக்கிறார் இயக்குனர். 
                                                                                

கேரளத்தின் கலாச்சார தலைநகரான திருச்சூரின் புகழ் பாடும் டைட்டில் பாடலில் மண்ணின் பெருமையை கண்ணிற்கு விருந்தாக படைத்திருக்கிறது சுஜித்தின் கேமரா. ஜெயசூர்யா பாடிய 'ஆசிச்சவன்' ஏற்கனவே சேரநாட்டில் மெகா ஹிட்.  பிஜிபால் இசையமைப்பில் சிற்சில பாடல்களே எனினும் அனைத்தும் அமிர்தம். 

எடுத்ததற்கெல்லாம் ஹர்த்தால் என்று மக்களின் அன்றாட வாழ்வை முடக்கிப்போடும் அரசியல் கட்சிகளுக்கு கடுமையான எதிர்ப்பினை இப்படைப்பின் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார் ரஞ்சித். எந்த அளவிற்கு நகைச்சுவைக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளதோ அதற்கிணையாக ஹர்த்தால் பிரச்னையையும் வலுவாக முன்வைத்திருப்பதற்கு பாராட்டலாம். கதையை முடிக்க மட்டும் சினிமாத்தன முடிவை கையாண்டிருப்பது சிறு சறுக்கல். மற்றபடி இந்த புன்யாலன் அகர்பத்தி மணம் கமழும் மத்தாப்பு.  

                                                                   
...................................................


சமீபத்தில் எழுதியது:

தகராறு - விமர்சனம்
 10 comments:

aavee said...

இப்போல்லாம் நிறைய பாசிடிவ் விமர்சனம் வருதே.. அதுவும் மலையாள படங்களுக்குன்னா ஒரு பெஷல் குஷன் போட வேண்டியது. தல படம்னா கழுவி ஊத்த வேண்டியது.. நல்லா இல்ல சேட்டா.. ஷ்ரத்திக்கு...

! சிவகுமார் ! said...

ஆவி.. இப்படி பொதுவாக சொன்னால் எப்படி? நார்த் 24 காதம் படத்தை நீங்கள் பார்த்து நன்றாக இருந்ததென்றுதான் கூறினீர்கள். திரா, புன்யாலன் அகர்பத்திஸ் ஆகியவற்றை பார்த்துவிட்டு கூறவும்.

எனக்கு பிடிக்காத மலையாள படங்களான கோப்ரா(மம்முட்டி), லேடீஸ் அன்ட் ஜென்டில்மேன்(மோகன்லால்) பற்றியும் எழுதி இருக்கிறேன்.

MANO நாஞ்சில் மனோ said...

மலையாளப்படங்கள் சில படு யதார்த்தமாக இருக்கும் அதில் இதுவும் ஒன்று...!

! சிவகுமார் ! said...

ஆமாம் மனோ அண்ணே. மசாலாத்தனம் இல்லாம இந்த சப்ஜெக்டை தமிழ்ல எடுக்க வாய்ப்பே இல்லை. வித்யாசமான கான்சப்ட். இயல்பான நடிப்பு.

aavee said...

ஹுசூர்.. தல படத்துக்கு நீங்க கொடுத்திருந்த மட்டமான விமர்சனமும், அதைத் தொடர்ந்து வந்த "நல்ல" மலையாளப் படங்களுக்கு நீங்க கொடுத்த சிறப்பான விமர்சனங்களும் அப்படி சொல்ல வைத்து விட்டது.. உண்மைதான் "திர" மற்றும் "புன்யாளன்" பல பேரிடமிருந்தும் பாசிட்டிவாக தான் கேள்விப் பட்டேன்.. :)

Riyas said...

படம் பார்க்கனும் போல இருக்கு சிவா உங்க விமர்சனம்..

டோரண்டில் வரும்வரைக்கும் வெயிட் பண்ண வேண்டியதுதான்.

ஹர்த்தால்/கம்யூனிச பிரச்சினை பற்றி பேசிய மோகன்லாலின் வரவேழ்பு பார்த்திருக்கிறீர்களா.

ஜீவன் சுப்பு said...

ஹர்த்தால் - STRIKE ?

! சிவகுமார் ! said...

@ ஆவி

உங்க தல படத்துக்கு நான் போட்ட விமர்சனத்த முழுசா படிங்க மறுபடியும். அதுக்கும், மலையாள படத்துக்கும் என்ன சம்மந்தம்? முடியல சாமி.

! சிவகுமார் ! said...

@ ரியாஸ்

லால் படம் பார்க்கிறேன் ரியாஸ். நன்றி

! சிவகுமார் ! said...

/ ஜீவன் சுப்பு said...

ஹர்த்தால் - STRIKE ?/

ஆமாம் ஜீவன்.

Related Posts Plugin for WordPress, Blogger...