CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Thursday, December 19, 2013

ஷ்ரத்தாவின் மூன்று குறு நாடகங்கள்இரண்டு மணிநேர நாடகங்கள் எல்லாம் சுருங்கி தற்போது பெரும்பாலும் ஒன்றரை மணி நேரங்களுக்குள் முடிந்து விடுகின்றன. ஒருநாள் போட்டிகளுக்கு நேரம் செலவழிக்க தயாராக இல்லாத மக்களுக்கு எப்படி T20 க்ரிக்கட் ஒரு மாற்றாக அமைந்ததோ அதே பாணியில் மூன்று அரை மணிநேர நாடகங்களை தொடர்ச்சியாக நடத்தும் யுக்தியும் அரிதாக அரங்கேறுவதுண்டு. புதிய கதைகளை நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் ரசிகர்களுக்கு விருந்தாக படைப்பதில் வித்தகர்கள் ஷ்ரத்தா குழுவினர். 2012 ஆகஸ்டில் மடி நெருப்பு, அந்தரங்கம், இரண்டாவது மரணம் எனும் மூன்று குறு நாடகங்களை தயாரித்து வழங்கியவர்கள் 2013 நவம்பரில் படைத்த குறுநாடகங்கள்தான் ஆழ்வார், சிலிக்கான் வாசல் மற்றும் எழுத்துக்காரர். அரங்கேறிய இடம்: நாரத கான சபா, ஆழ்வார்பேட்டை. 

இந்நாடகங்கள் பற்றி பார்ப்பதற்கு முன்பாக ஷ்ரத்தா குறித்த சில தகவல்கள் உங்கள் பார்வைக்கு. மூன்று ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் ஷ்ரத்தா இதுவரை மொத்தம் 12 படைப்புகளை நமக்கு தந்திருக்கிறது. ஒவ்வொன்றும் முற்றிலும் மாறுபட்ட களங்கள். மழையின் உக்கிரத்தை கண் முன் கொண்டுவரும் தனுஷ்கோடி முதல் க்ரிக்கட் பின்னணி கொண்ட தூஸ்ரா வரை. காத்தாடி ராமமூர்த்தி, ப்ரேமா சதாசிவம், சிவாஜி சதுர்வேதி மற்றும் T D சுந்தரராஜன் ஆகியோரால் 2010 இல் துவங்கப்பட்டது ஷ்ரத்தா. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை புதுப்புது நாடகங்களை மேடைக்கு கொண்டு வருவது இதன் தனிச்சிறப்பு.

'நேற்று இன்று நாளை' கான்சப்டில் முறையே இவர்கள் அளித்த நாடகங்கள்: ஆழ்வார், சிலிக்கான் வாசல் மற்றும் எழுத்துக்காரர். மூன்று கதைகளையும் எழுதி இருப்பது இரா.முருகன்.

ஆழ்வார் - இயக்கம்: T D  சுந்தரராஜன்
எண்பதுகளில் இருந்த திருவல்லிக்கேணி சாலையொன்றை அப்படியே கண்முன் நிறுத்தும் முதல் காட்சியின்போதே  போதே ஆச்சர்யம் கலந்த கைத்தட்டல்கள் ஓங்கி ஒலிக்க, என்னை ஆட்கொண்ட பிரமிப்பு அடங்கவும் சில நிமிடங்களானது. இவ்வளவு தத்ரூபமாக செட் போடுவது எப்படி சாத்தியம் என பெருத்த ஐயத்துடன் மேடையின் கீழே உற்று நோக்குகையில்தான் அதற்கான விடை கிடைத்தது. மடிக்கணினி மற்றும் ப்ரொஜக்டர் துணையுடன் ஒளியை மேடையின் பின்புறம் நேர்த்தியாக பாய்ச்சி இருந்தனர். மேன்ஷனுக்கு  மட்டும் செட் போடப்பட்டு இருந்தது. 

சடகோபன் எனும் நண்பரைத்தேடி திருவல்லிக்கேணி மேன்ஷன் ஒன்றின்  அருகே உலவும் பெரியவர் ஒருவரை சந்திக்கிறான் வேறொரு நபரை தேடி அலையும் அடைக்கலராஜ். அவனது முயற்சி கைகூடாமல் போக பேருந்து நிறுத்தம் வரை பேசிக்கொண்டே செல்லலாம் என வலுக்கட்டாயமாக அழைத்துச்செல்கிறார் ஆழ்வார். வழிநெடுக பழங்கதைகளை பேசும் பெரியவரிடம் இருந்து அவன் தப்பிக்க முயன்றாலும் சென்று சேர்வதேன்னவோ அவரது வீட்டிற்குத்தான். ஏழ்மையான குடும்ப பின்னணியுடன் சிரமப்படும் ஆழ்வார் மகளுடன் அடைக்கலம் நடத்தும் உரையாடல் எவ்வித  திருப்பத்தை உண்டாக்குகிறது என்பதே மிச்சக்கதை.

ஆழ்வாராக  T D சுந்தரராஜன் கனப்பொருத்தம். கிராமத்து பேச்சு வழக்கில் அடைக்கலமாக நெல்சன் இளங்கோ மற்றும் வைதேகியாக ஷாலினி ஆகியோரின் நடிப்பும் சிறப்பு. அவ்வப்போது கற்பனை உலகில் சஞ்சரிக்கும் தந்தையை வைத்துக்கொண்டு அல்லல்படும் மகளுக்கு அவர் மூலமாகவே நற்காரியம் ஒன்று நடந்தேறுவதை மெச்சும் வண்ணம் ஆக்கமாக்கி இருப்பது அழகு.சுந்தரராஜனும், நெல்சனும் அளவளாவியவாறே திருவல்லிக்கேணி தெருக்களில் நடந்து செல்லும் பின்னணியில் டிஜிட்டல் காட்சிகளும் மாறும் இடம் கண்களுக்கு விருந்து. ரசிகர்களுக்கு புதிய அனுபவமும் கூட.

சிலிக்கான் வாசல் - இயக்கம்: கிருஷ்ணமூர்த்தி


வீட்டில் மனைவியின் புலம்பல், அலுவலகத்தில் மேனேஜர் தரும் குடைச்சல். நிம்மதி இன்றி தவிக்கும் நடுத்தர வர்க்கத்தின் சாப்ட்வேர் பிரதிநிதியாக சோலையப்பன். அதி முக்கியமான ப்ராஜக்ட் ஒன்றை குறுகிய காலத்திற்குள் முடிக்க வேண்டிய நிர்ப்பந்தம். இரவு முழுக்க வேலை பார்க்கும் இடத்திலேயே தங்க வேண்டிய கட்டாயம். 'வாசல் அந்தப்பக்கம்' என அடிக்கடி கரம் நீட்டியவாறு கடந்து செல்லும் உயரதிகாரி. பதட்டத்தில் சோலை எப்படி செயல்படுகிறான் என்பதுதான் கதை.

அடுக்கு மாடியில் நிறுவப்பட்டிருக்கும் சாப்ட்வேர் கம்பனியின் பிரதி அப்படியே கண்முன் வந்து பிரமிக்க வைக்கிறது. வெளிநாட்டு க்ளயன்ட் வருகைக்காக உள்ளூர் ஆட்களுக்கு சிகப்பு சாயம் அடிக்காமல் அசல் அயல்நாட்டு பெண்ணொருவரையே நடிக்க வைத்திருக்கிறார்கள். ஒரு சில நிமிட காட்சி என்றாலும் நம்பகத்தன்மைக்காக சிரத்தை எடுத்து அப்பெண்மணியை தருவித்து இருப்பது பாராட்ட வேண்டிய செயல். மன உளைச்சலால் வாடும் சோலையாக சிராஜ் கவனத்தை பெறுகிறார். எந்திர வாழ்க்கை சமகால இளைஞனை எப்படி புரட்டிப்போடுகிறது என்பதை பெரிதாக பிரச்சாரம் செய்யாமல் எளிமையான வசனங்களால் கையாண்டிருப்பது சிலிக்கான் வாசலின் பலம்.

எழுத்துக்காரர் - இயக்கம்: கிருஷ்ணமூர்த்தி எதிர்காலத்தை மனதில் கொண்டு பின்னப்பட்டிருக்கும் கதையிது. சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் பெரும் சம்பளம் பெறும் தம்பதியர் நந்தினியும், பரனனும். என்னதான் கணினி மூலம் கடிதப்பரிமாற்றங்கள் நடந்தாலும், பேனாவால் கடிதம் எழுதுவதில் உள்ள ஜீவனுக்கு இணையில்லை என ஒரு நாள் எண்ணும் நந்தினி பிழையின்றி தமிழில் கடிதம் எழுதும் வயதான நபர் ஒருவரை வேலைக்கு வைக்கிறார். 

நித்தம் அவளது வீட்டிற்கு வந்து கணினியில் டைப் அடிக்கப்பட்ட மெயில்களை அப்படியே பேனாவால் எழுத துவங்குகிறார் எழுத்துக்காரர். தன் வீட்டில் இருக்கும் பொருட்களை புழங்கக்கூடாது, தன் பிள்ளை மற்றும் அக்கம் பக்கத்தாரிடம் அதிகம் பேசக்கூடாது உள்ளிட்ட ஏராளமான கட்டளைகளை இடும் நந்தினியிடம் அப்பெரியவர் என்ன பாடுபடுகிறார் என்பதை விவரிக்கிறது இந்நாடகம்.

எழுத்துக்காரராக சந்திரசேகர். நந்தினியின் கட்டளைகளால் சிக்கித் தவிக்கும்போது காட்டும் முகபாவங்களே கைத்தட்டல்களை அவருக்கு பெற்றுத்தருகிறது. பொருத்தமான நந்தினி வேடத்தில் கவிதா. செக்யூரிட்டியாக சட்டென வந்து காணாமல் போகிறார் சிவாஜி சதுர்வேதி. 

முதலிரண்டு நாடகங்களில் இருக்கும் அழுத்தம் இதனுள் இல்லாதது குறையாக படுகிறது. எதிர்கால சந்ததியினர் கண்டதுக்கெல்லாம் கண்டிஷன் போடுவார்கள் என்பதைத்தாண்டி புதியதாக வேறேதேனும் சங்கதியை கருவாக கொண்டிருக்கலாமோ எனும் எண்ணம் மேலோங்க செய்கிறது.

ஆக மொத்தம் இக்குறு நாடகங்களில் பெரிதும் பேசப்பட்டது மேடையின் பின்னே கணினி உதவியுடன் உருவாக்கப்பட்ட காட்சி அமைப்புகள்தான். வித்யாசமான களங்கள், தற்கால தொழில்நுட்பத்தை லாவகமாக பயன்படுத்திக்கொள்ளும் பாங்கு என தனக்கான இடத்தை தமிழ் நாடக உலகில் பிடித்திருக்கும் ஷ்ரத்தா குழுவினருக்கு நன்றிகளும், வாழ்த்துகளும்.

...............................................................
3 comments:

rajamelaiyur said...

நாடகங்கள் பார்க்க ஆசை ஆனால் எங்கள் ஊரில் எதுவும் நடப்பதில்லை

வெங்கட் நாகராஜ் said...

நல்ல அறிமுகம் சிவகுமார். தில்லியில் இவர்களது நாடகம் எதுவும் நடந்தால் பார்க்க வேண்டும் எனத் தோன்றுகிறது.

era.murukan said...

came across this review as pointed out to by a friend.

Really damaging.. from the author's perspective

If a stage play is to be remembered for stagecraft and execution techniques rather than for the story and narration, the initiative is a total failure!

And, your understanding of Ezhuththukkaarar is totally wrong

Related Posts Plugin for WordPress, Blogger...