CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Monday, December 23, 2013

தலைமுறைகள்


நான்காண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஒரு பாலுமகேந்திரா படம். மணிரத்னத்தின் கடல், பாரதிராஜாவின் அன்னக்கொடியெல்லாம் காற்றாற்றில் அடித்துக்கொண்டு போக வருடம் நிறைவடையும் தருவாயில் இன்னொரு பிதாமகரின் படைப்பு. செயற்கைப்பூச்சில்லா ஒளி ஓவியம், இளையராஜாவின் இசைத்தாலாட்டு, முதன்முறை தொப்பியற்ற பாலுமகேந்திராவை நடிகராக காணும் வாய்ப்பு. இத்திரைப்படம் பார்க்க போதுமான காரணங்கள் இவையன்றி வேறெதுவாக இருக்கக்கூடும்?

காவேரிக்கரை எனும் ஊரில் வசிக்கும் முதியவராக பாலு மகேந்திரா. தன்னிடம் கூறாமல் திடீரென ஒரு கிறிஸ்துவ பெண்ணை மணமுடிக்கும் மகனை வீட்டை விட்டு வெளியேற்றுகிறார். காலம் கடக்கிறது. அவரது மகனும், மருமகளும் சென்னையில் சொந்தமாக மருத்துவமனை கட்டி முன்னேறி விட பூர்வீக இல்லத்தில் நாட்களை நகர்த்துகிறார் அப்பெரியவர். பல வருடங்களுக்கு பிறகு குடும்பத்துடன் தந்தையை சந்திக்க வரும் மகனிடம் முதலில் வெறுப்பை உமிழ்ந்தாலும் அதன் பின் சமாதானக்கொடி பறக்க விடுகிறார். பேரன் ஆதித்யாவுடன் வலுப்படும் உறவு இறுதியில் என்ன ஆனது என்பதை தனது பாணியில் சொல்ல முயற்சித்து இருக்கிறார் இயக்குனர்.

ஆரம்பக்கட்ட விளம்பரங்களில் முதுகை மட்டுமே காட்டும் அப்பெரியவர் யாராக இருக்கக்கூடும் எனும் ஆவல் மேலோங்கி இருந்தது உண்மைதான். ஆனால் அது பாலு மகேந்திரா என அறிந்தபோது லேசாக மூர்ச்சையானதும் முன் சொன்னதற்கு எவ்விதத்திலும் குறைவற்ற உண்மை. எதிர்பார்த்தது போல் நம் மனதில் அழுத்தத்தை பதிவு செய்ய மறுத்திருக்கிறது அவரது நடிப்பு. குறும்படங்களில் சில நொடிகள் வந்தாலும் அருமையாக பெர்பாமன்ஸ் செய்யும் பெரியவர்கள் எத்தனையோ பேர். இக்கதாபாத்திரத்தை செவ்வனே செய்ய கலைஞர்கள் இருப்பினும்,  பாலு அவர்களுக்கு ஏன் இந்த விபரீத முயற்சி என்றெண்ணி சலிப்பதை விட பரிதாபப்படவே முடிகிறது.  

பேரன் ஆதித்யாவாக சிறுவன் கார்த்திக். புஷ்டியான தேகம். லட்சணமான முகம். சொன்னதை செய்திருக்கிறான். அவ்வளவே. இயக்குனரின் செல்லப்பிள்ளை ‘தாடி வைத்த’ சசி(இயக்குனர் அல்ல), வினோதினி இருவரின் நடிப்பும் தேவைக்கேற்ப.

 நகர்ப்புற வாழ்க்கையையும், ஆங்கில மொழியையுமே கற்று வாழ்ந்த ஆதித்யா தன் தாயிடம் ‘ரிவர்’ என்றால் என்னவென்று கேட்கிறான். ‘உன் தாத்தாவிடம் கேள்’ எனக்கூறிவிட்டு மகன் கேட்ட கேள்வியை தனக்குத்தானே ஒரு முறை கேட்டுக்கொள்வதும், அடைமழையில் பேரனுடம் தாத்தா ஆட்டம் போடுவதும், வளர்ந்த பேரனாக இயக்குனர் சசிகுமார் சிறந்த எழுத்தாளருக்கான விருது வாங்கும்போது ஒட்டுமொத்த அரங்கும் இடைவிடாமல் கரவொலி எழுப்புவதும் எவ்வகையான யதார்த்தத்தில் சேர்த்தி என புலம்பித்தீர்க்க வேண்டி இருக்கிறது.


பாலு மகேந்திராவின் ஒளியாள்கையை பின்னுக்கு தள்ளி முன் நிற்பது காவேரி ஆற்றங்கரையோர பசுமையும், கேனன் 5டி யும்தான். ஊருக்கு வந்த முதல் நாள் தாத்தாவின் அறையை தேடி ஆதித்யா நடக்கையில் அவனுடனே வீர நடை போடும் ராஜாவின் பின்னணி இசை மற்ற சமயங்களில் எல்லாம் காக்கை, சிட்டுக்குருவி, இரவு நேரப்பூச்சிகளுக்கு வழிவிட்டு வாசற்கதவோரம் ஓய்வெடுக்கிறது.

சில்ட்ரென் ஆப் ஹெவன், கலர் ஆப் பேரடைஸ் போன்ற ஈரானியப்படங்கள் மூலம் மஜீத் மஜிதி தந்த சினிமாக்களில் இருக்கும் ஈரம், அதில் பொதிந்து கிடக்கும் மெல்லிய நகைச்சுவை, ஒருவாரமேனும் நம் தூக்கத்தை தொலைக்க வைக்கும் அத்தேசத்து சிறார்களின் நடிப்பு..!! நாம் கடக்க வேண்டிய தூரம் இன்னும் இருக்கிறது.

‘அ’வன்னாவை தாத்தாவிடம் கற்கும் ஆதித்யா அவ்வெழுத்தை மணற்பரப்பொன்றில் சிறுநீரால் தீட்டுகிறான். அதைக்கண்டு தகிக்கிறார் அவர். அங்கிருந்து பேரன் விலகிய சமயம் அந்த எழுத்தை சிறுநீர் கழித்தே அழிக்கிறார். தாய்மொழியின் அவலத்தை உணர்த்தும் இக்காட்சி ஒன்றே உலகத்தரமானது. ஆனால் அதை ஏதோ ஒரு நகைச்சுவைக்காட்சி என்று நினைத்து சிரிப்பொலி எழுப்புகிறார்கள் சந்தான-விமல்-சூரி காமடிக்கு வாக்கப்பட்டுவிட்ட சமகால ரசிக பெருமக்கள்.  ஆதித்யாவின் தாத்தாவிற்கு  ஸ்ட்ரோக் வந்ததற்கான காரணம் அநேகமாக இதுவாகத்தான் இருக்கக்கூடும்.


பாலுமகேந்திராக்காலம்? அது ஒரு கனாக்காலம்.

............................................................


சமீபத்திய விமர்சனங்கள்:

பிரியாணி 


8 comments:

ezhil said...

எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லைன்னு சொல்றீங்களா?...
விமர்சனத்திற்கு நன்றி

! சிவகுமார் ! said...

ஆம் சகோதரி.

MANO நாஞ்சில் மனோ said...

ஆழமான கதையாக தெரிந்தாலும், சொதப்பி இருக்காங்க போல இல்லையா ?

உலக சினிமா ரசிகன் said...

ஈரான் படங்களுக்கு கற்றுக்கொடுக்கும் தமிழ்ப்படம் என விளம்பரத்தில் அலறியவர்கள்...அதற்கான முயற்சியே செய்யவில்லை.
தயாரிப்பாளரின் பூரண சுதந்திரம் இருந்தும் ‘பழைய செக்கையை’ சுற்றி இருக்கிறார் பா.ம.
பாலா, வெற்றி மாறன் போன்ற சிஷ்யர்களிடம் தோற்று பரிதாபகரமாய் நிற்கிறார் பா.ம.

80 வயதை கடந்தும் மேலை நாட்டு படைப்பளிகள் இன்றைய படைப்பாளிகளுக்கு சவால் விடுகிறார்கள்.
நம் படைப்பாளிகள் மட்டும் ஏன் நாசமாய் போகிறார்கள்?
இந்த கேள்விக்கு விடை தெரியவில்லை...சிவா!

Win Tv said...

Nice Post Wish you all the best By http://wintvindia.com/

சென்னை பித்தன் said...

// ஆதித்யாவின் தாத்தாவிற்கு ஸ்ட்ரோக் வந்ததற்கான காரணம் அநேகமாக இதுவாகத்தான் இருக்கக்கூடும்.//

மொழிக்கும்?!
நேர்மையான விமரிசனம்

Unknown said...

பாலு மகேந்திரா நடிக்கிறாரா?அவருக்கு நடிக்க வைச்சுத்தானே பழக்கம்?அதான் சொதப்பிட்டாரு போல?

வெங்கட் நாகராஜ் said...

நல்ல விமர்சனம். நன்றி சிவக்குமார்.

Related Posts Plugin for WordPress, Blogger...