CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Monday, December 9, 2013

ஆளும் வர்க்கத்திற்கு ஆப்படித்த AAP                                                                     

முதல்வன் அர்ஜுன்களும், ஆயுத எழுத்து சூர்யாக்களும் செல்வாக்கு மிக்க அரசியல் கட்சிகளை வீழ்த்தி விஸ்வரூபமெடுப்பதெல்லாம் திரைக்கதைக்காகும் ஆனால் நிஜக்கதைக்காது என கதைத்தவர்கள் பலர்.  அதெல்லாம் டெல்லி சட்டசபை தேர்தல் எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்புவரைதான். கட்சி துவக்கி ஓராண்டுதான் ஆகியிருக்கிறது. அதற்குள் அதன் தலைவர் மும்முறை முதல்வராக இருந்தவரை அகற்றிப்போட அவரது சேனையோ இதர பெருந்தலைகளை வீழ்த்தி வெற்றி வாகை சூடி இருக்கிறது. ஆம். ஆம் ஆத்மியின் ஆட்டம் ஆரம்பம்!!

தலைநகரில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம், அராஜக விலைவாசி ஏற்றம், மூன்று முறை நகராண்டு ஷீலா  (மௌனம்)  சாதித்ததால் ஏற்பட்ட ஏமாற்றம்...பொங்கி விட்டது டெல்லி. 'நம் ராஜ(குமார) தந்திரங்கள் அனைத்தும் வீணாகி விட்டதே? இன்னும் பயிற்சி வேண்டுமோ?' என ராகுல் குமுறலாம். நண்பா...பயிற்சியை நீங்கள் துவக்கவே இல்லை என்பதே உண்மை. இதற்கு முன்பு நாட்டில் நடந்த மாநில தேர்தல்களில் ஊத்தி மூடிக்கொண்டபோது கூட சவடால் பேசிய காங்கிரஸ் நேத்தாக்கள் இம்முறை மன்மோகன் மந்திரத்தை பின்பற்றி ஆக வேண்டிய கட்டாயம்.

மாய்ந்து மாய்ந்து சோனியாவும், ராகுலும் செய்த சுரத்தில்லா சூறாவளி பிரச்சாரங்கள் அளப்பரியது.  நேரு, இந்திரா குடும்பக்கொழுந்துகள் எனும் ஒரே காரணத்திற்காக மட்டுமே ஓட்டளித்து ஓய்ந்து போன பாமர பாபுக்களும் சூதானமாகிவிட்டார்கள். என்னதான் நையப்புடைக்கப்பட்டாலும் 'தற்போது பா.ஜ.க.விற்கு கிடைத்திருக்கும் வெற்றி மோடி அலையால் அல்ல' என்று மீடியா தோறும் கொக்கரிக்கிறார்கள் இரண்டாம் 'மட்ட' காங். தலைவர்கள். இவர்கள்தான் பிரச்சார நேரத்தில் 'மோடி அலை வெறும் மாயை. நான்கு மாநில சட்டசபை தேர்தல்களில் இவை ஓட்டுக்களாக மாறாது' என ஆரூடம் சொன்னவர்கள். ஆவி பறக்க கொதிநீரை பின்னால் ஊற்றிக்கொண்ட பிறகும் காயத்திற்கு மருந்து தடவாமல் வீராப்பு பேசுவதும் தனிக்கலைதான்.
 
காங்கிரஸ், பா.ஜ.க வுக்கு ஆதரவு தரவோ கேட்கவோ போவதில்லை. எதிர்க்கட்சியாக அமரப்போகிறோம் என உறுதியாக சொல்லிவிட்டார் அர்விந்த். 'ஜனாதிபதி ஆட்சி எனும் நிலை வந்தால்..?' என்று முன்வைக்கப்பட்ட கேள்விக்கு இவர் தந்த பதில்: 'ஏன் காங் மற்றும் பா.ஜ.க. ஒன்றிணைந்து டில்லியில் ஆட்சி செய்யலாமே'. சபாஷ் கேஜ்ரி.
 
ஆம் ஆத்மியின் இந்த புலிப்பாய்ச்சல் தேசத்தை சுரண்டிக்கொண்டு இருக்கும் கட்சிகளின் வயிற்றில் தேவையான அளவு புளியை கரைத்திருக்கும். 'இதெல்லாம் தமிழ்நாட்ல நடக்காதா' முணுமுணுப்புகள் கேட்கத்துவங்கி விட்டன. மனமிருந்தால் மார்க்க பந்து. ஆனால் ஏற்காட்டில் போட்டியிடாமல் எகிறி ஓடிய கட்சிகளை வைத்துக்கொண்டு ஒற்றை ஆணியைக்கூட புடுங்க இயலாது. நமக்கு வாய்த்திருப்பதோ நிரந்தர ஹீரோ வில்லன் காம்பினேஷன் தான். அந்தப்பக்கம் எம்.ஜி.ஆர். (அ.தி.மு.க), இந்தப்பக்கம் நம்பியார்(தி.மு.க.). இந்நாள் வரை என்னதான் பெர்பாமன்ஸ் செய்தாலும் மற்ற கட்சித்தலைவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும்/அவர்களே தேர்ந்தெடுத்திருக்கும் கேரக்டர்கள்...... எஸ்.வி.சுப்பையா, பக்கோடா காதர், மனோகர் அல்லது கள்ளபார்ட் நடராஜன்களைத்தான்!!
                                                                         
     
'ஓட்டு போட்டா ரெட்ட எலைக்குத்தான்' என்று பல்லாண்டுகளாக அடம் பிடிக்கும் ஆயாக்கள், 'என்னது எம்.ஜி.ஆர்.செத்துட்டாரா?' ஜெர்க்கடிக்கும் தாத்தன்மார்கள், 'நான் ஒருத்தன் அந்த மூணாவது கட்சிக்கு ஓட்டு போட்டா மட்டும் ஜெயிச்சிருவாங்களா?' என வினவி தேர்தல் தினத்தில் குண்டியை தேய்த்துக்கொண்டு டி.வி.பார்க்கும் மேதாவிகள் இருக்கையில் இரு பெரும் கழகத்தின் தலைவர்கள்தான் சுழற்சி முறையில் அமர்வார்கள் போல இருக்கையில்.

'காங்கிரஸுடன் கூட்டணி சேரலாமா?'...யோசித்தவாறே இலங்கைத்தமிழர் பிரச்னையில் பொத்தி வாசித்து, கூரையேறி கோழி பிடிக்க வக்கில்லாமல் டெல்லி ஏறி வைகுண்டம் போக எத்தனித்த கேப்டன், 'பெரியப்பா, மாமா, கொழுந்தியா' உறவு முறை கொண்டாடி முஷ்டியை ஓங்கினாலும் ஆளுங்கட்சிக்கு எதிராக பம்மோ பம்மென்று பம்மும் சீமான், அறிவார்ந்த அரசியலை விட உணர்வுபூர்வ அரசியலுக்கே வாக்கப்பட்டு விட்ட வைகோ...இன்னும் எத்தனை வருடங்களுக்குத்தான் 'தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக' கோஷம் போட்டுக்கொண்டே இருக்கப்போவதாக உத்தேசம்?

தேர்தல் புறக்கணிப்புகளை விட பங்கேற்பதன் மூலமே மாற்றத்திற்கான விதையை தூவ முடியுமென்பதை அறிந்தும் இன்னும் கூட்டணி லாப நஷ்டம் பார்க்கும் 'கணக்குப்பிள்ளைகளாகவே வலம் வந்தால் இருக்கும் முகவரியும் தொலைந்து போகலாம். இருபெரும் தேசிய அல்லது திராவிய கட்சிகளின் முதுகில் தொற்றிக்கொண்டே 'இது தேர்தலுக்கான கூட்டணி மட்டுமே. கொள்கை ரீதியாக அவர்களிடம் நாங்கள் ஒத்துப்போக வாய்ப்பில்லை' போன்ற மாயாஜால மந்திரங்கள் நீண்ட காலம் கை கொடுக்காது சாமி. 2016, 2021 என்று உங்கள் இலக்குகளை சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு இலகுவாக தள்ளிப்போட்டுக்கொண்டே போனால் ஆம் ஆத்மி வகையறா கட்சிகள் உங்கள் ஓட்டு வங்கிகளை அள்ளிப்போடும் காலம் வந்தாலும் ஆச்சர்யமில்லை.
 
ஆம் ஆத்மி கட்சியின் வெற்றிக்களிப்பும், வேகமும் ஒரு சில மாதங்களுக்கு நீடிக்கலாம். எப்படி இங்கே முதலிரண்டு கழகங்களும் மூன்றாவதாக முளைக்க நினைக்கும் தலைவர்களின் வாலில் சமயம் பார்த்து பட்டாசு கொளுத்திப்போடுகிறார்களோ அதுபோல தலைநகரில் கேஜ்ரிவால் தொப்பிக்குள் தீவைக்க காங்கிரஸும், பா.ஜ.க.வும் சிறப்பு பயிற்சிகளை மேற்கொண்டே ஆகும். அதையும் மீறி வெளக்கமாறை எப்படி AAP கையாளப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
                                                                         


முன்னணி தனியார் டி.வி.க்கு கேஜ்ரிவால் நேற்று அளித்த பேட்டி ஒன்றில் கேட்கப்பட்ட கேள்வி: "காங், பா.ஜ.க. போன்ற பெருங்கட்சிகளிடம் பண, அதிகார பலம் இருக்கிறதே. எதிர்காலத்தில் உங்களால் தாக்குப்பிடிக்க இயலுமா? ஆப் கே பாஸ் க்யா ஹை?"

பதில் வந்து விழுந்தது இப்படி: "மேரே பாஸ் சச்சாயி ஹை". அந்நொடிப்பொழுது மட்டும் 'தீவார்' சசி கபூராக கண்களுக்கு தெரிந்தார் கேஜ்ரிவால்!! 

..............................................................6 comments:

ஜீவன் சுப்பு said...

"மேரி பாஸ்...." - Translate pls

ஜோதிஜி said...

ரொம்பவே ரசித்து படிக்கும் அளவிற்கு உங்களின் எழுத்து திறமை பல மடங்கு மெருகேறிவிட்டது.

Muraleedharan U said...

A common man reaction ......

manjoorraja said...

என்னிடம் உண்மை(சத்தியம்) இருக்கிறது (மேரி பாஸ் சச்சாய் ஹை!) என சொன்ன கெஜ்ரிவாலுக்கு நாளுக்கு நாள் இந்தியாவின் மூலை முடுக்கிலெல்லாம் ஆதரவு பெருகுவதை பார்க்கும்போது நிச்சயம் ஒரு மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கை பிறக்கிறது.
சினிமாவில் நடப்பது இன்று நேரடியாவே நடப்பதை பார்க்கும் இது நாள் வரை அரசியலை விட்டு விலகி இருந்தவர்கள் இனி நிச்சயம் வருவார்கள் என தோன்றுகிறது.
நேற்று எனது நண்பர் ஒருவர் தொலைபேசி ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்துவிட்டதாக கூறினார். இது போல இன்னும் எத்தனை பேரோ!

வெங்கட் நாகராஜ் said...

//ஆவி பறக்க கொதிநீரை பின்னால் ஊற்றிக்கொண்ட பிறகும் காயத்திற்கு மருந்து தடவாமல் வீராப்பு பேசுவதும் தனிக்கலைதான்.//

Good One.....

நல்ல பகிர்வு சிவகுமார்.....

Unknown said...

நல்ல சாட்டையடி,சகல அரசியல்(வியா))வாதிகள்+கட்சிகளுக்கு!

Related Posts Plugin for WordPress, Blogger...