CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Monday, December 30, 2013

திரை விரு(ந்)து 2013 - தமிழ் படங்கள்

1000 வாட்ஸ் பவர் ஸ்டார் பிரகாசம் தாங்கி வசூலில் (கும்மாங்)குத்து விளக்கேற்றத்துடன் அமோகமாக துவங்கியது 2013. அடுத்த  சில நாட்களில் விஸ்வரூப வசூலும் பின்தொடர்ந்தது. சூது கவ்வும், எதிர்நீச்சல் போன்ற ஓரிரு கன்டன்ட் உள்ள படங்கள் சரக்கிற்கேற்ற பலனைப்பெற, அலெக்ஸ் பாண்டியன் முதல் நையாண்டி வரையான பேரிம்சைகள் ஒதுக்கி தள்ளப்பட்டன. மணிரத்னம், பாரதிராஜா, செல்வராகவன், அமீர், மணிவண்ணன் மற்றும் பாலுமகேந்திரா போன்றோரின் அவுட் டேடட்/மண்டை காய்ச்சல் படைப்புகளும் மண்ணை கவ்வின. 

சென்ற ஆண்டை தொடர்ந்து இம்முறையும் முழு நீள தமாசு காவியங்கள் படைக்க ஒரு படையே கிளம்பியது. ஆனால் சொகுசாக கரை சேர்ந்தது வருத்தப்படாத வாலிபர் சங்கம் மட்டுமே. மேலும் ஒரு சில காமடிப்படங்கள் எப்படி ஓடின எனும் ஆச்சர்யம் நீங்குவதற்கு முன்பாவே கல்லா கட்டி விட்டன. அழகுராஜாவில் இயக்குனர் ராஜேஷுக்கு விழுந்த தர்ம அடி சகட்டு மேனிக்கு தமாசு செய்ய நினைக்கும் படைப்பாளிகளுக்கு ஊதப்பட்ட அபாய சங்கு. 'என்னடா இது இப்படி ஒரு வித்யாசமான படமா?' என மூக்கில் விரல் வைத்தால் 'அதெல்லாம் சுட்ட கதைகள் பாஸ்' என்று ஆதாரத்துடன் அலறினார்கள் இணைய தோழர்கள். உதாரணம்: 6 மெழுகுவர்த்திகள், விடியும் முன், மூடர் கூடம். இவற்றுடன் சேர்ந்து அசல் 'சுட்ட கதை'யும் ஊக்கு வாங்கி மூலையில் படுத்துக்கொண்டது. 'ராவண தேசம்' வசூல் ரீதியாக தோற்றாலும் உருப்படியான முயற்சி எனச்சொல்லலாம்.

இனி எனக்குப் பிடித்த பட்டியல் உங்கள் பார்வைக்கு:

பாடலாசிரியர் - வைரமுத்து:  பரதேசி, விஸ்வரூபம்.

'உயிரோடு வாழ்வது கூட  சிறு துன்பமே, வயிறோடு வாழ்வது தானே பெருந்துன்பமே'(செங்காடே), 'தேகத்தில் உள்ள எலும்புக்கு ஒரு வெறி நாயும், தொர நாயும் மோதுதே. வானத்தில் வாழும் நெஞ்சமோ தன் மாராப்பை தாராமல் ஓடுதே...'(செந்நீர் தானா), 'புயலை சுவாசிக்க நுரையீரல் கேட்கின்றோம். எட்டு திசைகளால் ஒரு இமயம் கேட்கின்றோம்'(துப்பாக்கி எங்கள் தோளிலே) பாடல் வரிகளில் தேசத்தின் தேநீர் அவலமும், சர்வ தேச எல்லையின் ஓலமும்...கவிஞரின் ஆறாம் விரல் வித்தை!!


பாடகர்(பெண்) - ஸ்ரேயா கோஷல்: எதிர்நீச்சல், என்றென்றும் புன்னகை.
'மின்வெட்டு நாளில்' ஒரு மின்சாரம் போல வந்து மயிலிறகு சாரீரத்தால் 'என்னை சாய்த்தாயே'!! 

பாடகர்(ஆண்) -  ஸ்ரீராம் பார்த்தசாரதி: 'ஆனந்த யாழை' தங்க மீன்கள்.
குழலினிது, யாழினிது. யாழாய் நெஞ்சில் தவழும் ஸ்ரீராமின் குரலும் இனிது. 

இசையமைப்பாளர்(பாடல்கள்​) - அனிருத்: எதிர்நீச்சல்.   
இவ்வருடம் எதிர் நீச்சலடித்து டாப் கியரில் பறந்த இளம் சென்ஷேசன். 

இசையமைப்பாளர்(பின்னணி) - இளையராஜா: ஓநாயும் ஆட்டுக்குட்டியும்.
பின்னணி இசைக்காகவே இவ்வருடம் இரண்டு முறை பார்த்த ஒரே திரைப்படம். முதன் முறை திரையரங்கில் பார்த்த பிறகு அடுத்ததாக விஜய் டி.வி.யில். மீண்டும் ஒரு முறை பார்க்கும் ஆவலைத்தூண்டும் அற்புதமான பின்னணி இசை.

நகைச்சுவை நடிகர் - சந்தானம்: தீயா வேலை செய்யணும் குமாரு, ராஜா ராணி, என்றென்றும் புன்னகை.
                                                                    

படம் பார்ப்போரின் கபாலம் கலங்கும் அளவிற்கு சரக்கு சமாச்சாரங்களை ஏகத்தும் இறக்கி நகைச்சுவை செய்ததால் சந்தானத்தின் சரக்கு குடோனே கிட்டத்தட்ட காலியாகி விட்டது என்று சொல்லலாம். ஆனால் போட்டிக்கு வந்த சூரி இவருக்கு சமமாக தாக்கு பிடிக்க முடியாமல் போனதால் இவ்வருடமும் ரேஸில் வென்றிருக்கிறார். சக நடிகர்களை கவுண்டர் பாணியில் கலாய்த்து காலம் தள்ளுவது, சரக்கு சைட் டிஷ்களை ஓவர் சப்ளை செய்வது போன்ற புளித்த மேட்டர்களை மாற்றினால் அடுத்த வருடமும் ஆளலாம். 'என்றென்றும் புன்னகை'யில் சாய்ந்து சாய்ந்து நடக்கும் காட்சி ஒன்று போதும். பார்த்தாவை நிமிர்த்தி விட்டது.


திரை விரு(ந்)து 2013 - தமிழ் படங்கள் - நாளை தொடரும்...
..............................................................


தொடர்புடைய பதிவுகள்:


          

2 comments:

MANO நாஞ்சில் மனோ said...

சந்தானத்தின் வெற்றியே மற்றவர்களை கலாயிப்பதுதானே ?

Unknown said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர்&நண்பர்கள்&உறவினர்கள் அனைவருக்கும்,இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!பிறக்கும் ஆண்டில் தொல்லைகள் நீங்கி நலமே வாழ இறைவன் துணை வேண்டுகிறேன்!

Related Posts Plugin for WordPress, Blogger...