CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Thursday, December 26, 2013

திரை விரு(ந்)து 2013 - மலையாள படங்கள்


ஒவ்வொரு வருட இறுதியிலும் வெளியாகும் மெட்ராஸ் பவன் திரை விரு(ந்)து தொகுப்பில் 'சிறந்த' என்பதை விட நான் பார்த்த சித்திரங்களில் எனக்கு பிடித்தவற்றை பற்றி குறிப்பிடுவது வழக்கம். அதனடிப்படையில் முதலில் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த மலையாள திரைப்படங்கள் பற்றிய பதிவுடன் துவங்குகிறேன்.

சென்ற ஆண்டைக்காட்டிலும் அதிகமான மலையாளப்படங்களை காணும் வாய்ப்பு 2013 இல் கிட்டியது. கேரள மண்ணில் புதிய தலைமுறையின் எழுச்சி மேலும் வலுப்பெற்ற ஆண்டாக இதைக்கருதலாம். ஏப்ப சாப்பையான படங்களை சற்று மூட்டை கட்டிவிட்டு இளைஞர்களுடன் கடும் போட்டி போட்டாக வேண்டிய நிர்ப்பந்தம் மம்முட்டி, லால் மற்றும் திலீப் உள்ளிட்டோருக்கு. இம்முறை சீனியர்கள் கிட்டத்தட்ட சமபலத்துடனே களமாடி இருக்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தேசிய அளவில் ஹிந்தி, தமிழ் சினிமா மற்றும் அவற்றின் கலைஞர்கள் வெகுவாக கவன ஈர்ப்பை பெற்றிருப்பினும் இம்முறை அச்சிம்மாசனத்தை கைப்பற்றி இருக்கிறது கேரள திரையுலகம்.


பல்வேறு கதைக்களங்கள், சிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள், பாராட்டத்தக்க நடிப்பு என மலையாள சினிமா ரசிகர்களுக்கு அருமையான விருந்து படைக்கப்பட்டது இவ்வருடம். லோக்பால், லேடிஸ் & ஜென்டில்மேன், கீதாஞ்சலி போன்ற  கொடுமையான படங்களை தந்த மோகன்லால் த்ரிஷ்யம் மூலம் இழந்த பெயரை மீட்டெடுத்தார். மம்முட்டிக்கு கை கொடுத்தது இம்மானுவேலும், குஞ்சனன்தன்டே கதாவும்தான். ஜெயராமுக்கு லக்கியாக அமைந்தது லக்கி ஸ்டார்.

சத்தமின்றி அழுத்தமான காதலை சொன்ன அன்னயும் ரசூலும், மலையாள சினிமாவின் முன்னோடி ஜே.சி.டேனியலின் வாழ்க்கை வரலாற்றை சித்தரித்த செல்லுலாய்ட் என வெற்றிகரமாகவே வருடத்தை துவக்கியது கேரள திரையுலகம். ஷட்டர், மெமரிஸ் மற்றும் திரா போன்ற த்ரில்லர்கள் ஏகோபித்த ஆதரவை பெற்றன. குடும்பச்சித்திரங்கள் வரிசையில் லக்கி ஸ்டார், இம்மானுவேல், இங்கிலீஷ் உள்ளிட்ட சில படங்கள் பிரகாசிக்க இவ்விரண்டு வகையையும் கலந்து வருட இறுதியில் ரிலீசாகி வாகை சூடியது மோகன்லால் நடித்த த்ரிஷ்யம்.


இதுபோக தனி ட்ராக்கில் பயணித்து பலரையும் திரும்பிப்பார்க்க வைத்த படங்களும் உண்டு. அதிரடி அரசியல் பேசிய லெஃப்ட் ரைட் லெஃப்ட், சமீப  இந்திய ரோட் மூவிக்களில் குறிப்பிடத்தக்க  ஒன்றாக கருதப்படும் நீலாகாசம் பச்ச கடல் சுவ்வன பூமி, பந்த்தால் பந்தாடப்படும் கேரளா மாநில அவலத்தை சுவைபட விளக்கிய நார்த் 24 காதம் மற்றும் புன்யலன் அகர்பத்திஸ், பெண்களின் பெருமையை எடுத்துரைத்த 5 சுந்தரிகள் என நீள்கிறது பட்டியல்.

இனி எனக்குப்பிடித்த திரைப்பட்டியல் உங்கள் பார்வைக்கு:

பிடித்த....

ஒளிப்பதிவாளர்: கிரீஷ் கங்காதரன்(நீலாகாசம் பச்ச கடல் சுவ்வன பூமி)

ஒளிப்பதிவிற்கென்றே படம் பார்க்க எண்ணுபவர்கள் கிரீஷின் கேமரா ஜாலத்தை இந்த நீலாகாசத்தில் பார்க்கலாம்.  

பாடகர்கள்:  வைக்கம் விஜயலட்சுமி, சித்தாரா. முறையே 'காட்டே காட்டே' மற்றும் 'ஏனுன்டோடி' (செல்லுலாய்ட் படத்தின்)  பாடல்களுக்காக. கிராமத்து தென்றலுடன் கலந்து மீண்டும் மீண்டும் மனதை இலகுவாக்கும் இனிய சாரீரம் கொண்ட இருவருக்கும் வந்தனங்கள்.

காட்சி(வசனமின்றி) - சேதுலட்சுமி(5 சுந்தரிகள்): பாலியல் தொந்தரவிற்கு ஆளாகும் சிறுமி அனிகா வீட்டில் நள்ளிரவு நேரத்தில் அச்சத்துடன் பெற்றோருக்கு நடுவே துயில் கொள்ள செல்வது.

காட்சி(வசனத்துடன்) - லெஃப்ட் ரைட் லெஃப்ட்:  ஊர்ப்பக்கம் இருக்கும் சாலை அருகே காரை நிறுத்தி அரசியல்வாதி சகாதேவனாக ஹரீஷ் பரேடி முரளி கோபியிடம் பேசும் அனல் பறக்கும் வசனம். 
    
துணை நடிகர் - வினய் ஃபோர்ட்: ஷட்டர் படத்தில் (இயக்குனர்) லாலை ஆன்ட்டி ஹீரோவாக்க முயற்சித்த ஒரே குற்றத்திற்காக அல்லல்படும் ஆட்டோக்காரராக வினய்யின் பெர்பாமன்ஸ் அதகளம்.

துணை நடிகை - சாந்தினி: ஒடுக்கப்பட்ட இனத்தை சேர்ந்த பெண் ரோசி கேரக்டர் மூலம் மனதில் நின்றவர். ஆதிக்க சமூகத்தாரை காணும்போது பதைபதைப்பதும், சினிமாவில் நடிக்கும் மகிழ்ச்சியை கண்களால் வெளிப்படுத்துவதும் என மெச்சத்தக்க நடிப்பு.


பிடித்த மலையாள நடிகர், நடிகை, இயக்குனர் மற்றும் திரைப்படங்களிள் பட்டியல் நாளை.

.......................................................................


சமீபத்தில் எழுதியது:

மதயானைக் கூட்டம் - விமர்சனம் 

3 comments:

Unknown said...

நன்று!

உலக சினிமா ரசிகன் said...

ஆஹா...இனி சிவா ‘மண்டை மேல ஒரு கொண்டை’ வச்சு நம்பூதிரி ஆயிருவாரோ!

பல்பு பலவேசம் said...

உங்களுக்கு கட்டிங் பண் றகாசு போய்டுமே

Related Posts Plugin for WordPress, Blogger...