CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Saturday, December 28, 2013

திரை விரு(ந்)து 2013 - மலையாள படங்கள் 2முந்தைய பதிவு:
திரை விரு(ந்)து 2013 - மலையாள படங்கள் - 1
பிடித்த நடிகை - ரச்சனா:பெற்ற பிள்ளையை மகனை பணத்திற்காக சீமான் வீட்டு தம்பதிகளுக்கு தாரை வார்க்கும் தாயாக லக்கி ஸ்டாரில் ரச்சனா. குறும்பு கொப்பளிக்கும் கண்கள், சிம்ப்ளி ஹோம்லி தோற்றம். பிள்ளைய பிரியும்போது முட்டிக்கொண்டு நிற்கும் சோகம். ப்ரம்மாதமல்லோ. அறிமுகப் படமென்றாலும் ஜெயராமை ஓவர்டேக் செய்து பெயரை தட்டிச்சென்ற ஸ்வீட் ஸ்டார்.

பிடித்த நடிகர் - ப்ரித்விராஜ்:


என்னைப்பொருத்தவரை இம்முறை சிறந்த நடிகருக்கான ரேஸ் ஃபகத் ஃபாசில் மற்றும் ப்ரிதிவிராஜுக்கு இடையேயான ஃபோட்டோ ஃபினிஷ் ஆக முடிந்திருக்கிறது என்றே சொல்லலாம். மென்மை மற்றும் அழுத்தம் மிக்க காதலனாக (அன்னயும் ரசூலும், ஆமென்), கடுகடுக்கும் இன்சுரன்ஸ் நிறுவன அதிகாரியாக(இம்மானுவேல்), சுத்தத்தை போற்றும் சாப்ட்வேர் ஊழியனாக(நார்த் 24 காதம்) வெவ்வேறு அவதாரங்களை எடுத்து ஒரு இந்தியன் ப்ரணய கதாவில் 2013 ஐ நிறைவு செய்தார் ஃபகத். ஆனால் மூன்றே படங்களில் அவரை விட ஒரு படி சிறப்பாக நடித்து கேரள ரசிகர்கள் மற்றும் விமர்சகர்ளின் பார்வையை தன் பக்கம் திருப்பி விட்டார் ப்ரித்வி.

ஜே.சி. டானியலாக இளம் மற்றும் மூத்த பருவ நடிப்பை செல்லுலாய்டிலும், முன்னணி நடிகர்கள் சிந்திக்க கூட வாய்ப்பில்லாத ஓரினச்சேர்க்கையாளர் கதாபாத்திரத்தை மும்பை போலீஸிலும், நாசம் செய்யப்பட குடும்பத்து நினைவுகளை எண்ணி குடிக்கு அடிமையாகும் காவல் துறை அதிகாரியாக மெமரிஸிலும் கச்சிதமாக நடித்து மனதை தொட்டிருக்கிறது இந்த ப்ரித்வி ஏவுகணை.

பிடித்த இயக்குனர் - ஜீது ஜோசப்:

                                                           

2013 இல் இரண்டு வெற்றிப்படங்களுக்கு சொந்தக்காரர். மெமரிஸ் மற்றும் த்ரிஷ்யம். தனக்கு பிடிக்காத பெண்களை பழிவாங்க அவர்களுக்கு நெருங்கிய ஆண்களை பொது இடத்தில் இயேசுவை போல சிலுவையில் அறைந்து கொள்கிறான் ஒருவன். குறியீடாக அவன் விட்டுச்செல்வது பைபிள் வசனங்களை மட்டுமே. செய்வதறியாது திகைக்கும் காவல் துறை குடிக்கு ஆட்பட்டுப்போன அதிகாரி ப்ரித்விராஜை அணுகுகிறது. தொடர்கொலைப்புதிர் எப்படி விசாரணை செய்யப்படுகிறது என்பதை பரபரப்பாக படமாக்கி இருப்பார் ஜீது. 

அடுத்து மோகன்லாலை வைத்து எடுத்த த்ரிஷ்யம். எதிர்பாராமல் குடும்பத்தினர் செய்யும் செயலை காவல்துறை கண்ணில் இருந்து மறைக்க ஒரு நடுத்தர குடும்பத்தலைவன் எப்படி சாதுர்யமாக செயல்படுகிறான் என்பதைச்சொல்லும் சித்திரம். வருட இறுதியில் மோகன்லால் காலரை தூக்கி விட்டுக்கொள்ளும் வகையில் அமைந்த படமும் கூட. வசூல் ரீதியாகவும், விமர்சகர் வட்டத்தாலும் பேசப்பட்ட படைப்புகளை தந்த ஜீதுதான் நமது பேவரிட்.

பிடித்த திரைப்படம் - செல்லுலாய்ட்:


ஷட்டர், த்ரிஷ்யம், 5 சுந்தரிகள், நார்த் 24 காதம் போன்ற சிறந்த திரைப்படங்கள் இவ்வருடம் வெளியாகி இருப்பினும் அவற்றை விட ஒரு படி மேல் எனக்கருதுவது இந்த செல்லுலாய்டைத்தான். கேரளா சினிமாவின் பிதாமகன் ஜே.சி.டேனியலின் வாழ்க்கைச்சித்திரத்தை அருமையாக படமாக்கி இருக்கிறார் இயக்குனர் கமல். தமிழரான டேனியல் நாடார் கேரளத்தின் முதல் படத்தை எடுக்க பெரும் செல்வத்தை இழக்கிறார். ஆனால் சாதிப்பிரச்னையால் அப்படம் முடங்குவதோடு டேனியலையும் முடக்கிப்போடுகிறது. பல்வேறு ஆண்டுகளுக்கு பிறகு அவருக்கு எப்படி அங்கீகாரம் கிடைக்கிறது என்பதை இயல்பாக விளக்கும் சினிமா.  இந்த வாரம் தமிழில் டப் செய்து சென்னையில் ரிலீஸ் செய்துள்ளனர். சினிமாப்பிரியர்கள் தவற விட வேண்டாம்.

2013 ஹிந்தி திரைப்படங்கள் பற்றிய பார்வையுடன் அடுத்து சந்திக்கலாம்.
......................................................................


3 comments:

Unknown said...

சீமான் வீட்டு தம்பதிகளுக்கு................/////'சீமான்' சமீபத்துல தான கல்யாணம் பண்ணிக்கிட்டாரு?

aavee said...

நல்ல தேர்வு.. குறிப்பாய் ப்ரித்வி யின் தேர்வு..

கிரி said...

சிவா பல மலையாளப் படங்களின் அறிமுகங்கள் உங்கள் தளத்தில் இருந்தே எனக்கு கிடைக்கிறது. மற்ற மொழிப் படங்கள் பலர் எழுதுகிறார்கள் ஆனால் இவை கிடைப்பது சிரமமாகவே இருக்கிறது (தமிழில்).

நிறையப் படம் பார்க்க வேண்டியது உள்ளது :-)

Related Posts Plugin for WordPress, Blogger...