CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Saturday, November 23, 2013

பாம்பே ஞானத்தின் - எதுவும் நடக்கும்

தமிழ் மேடை நாடக ஆக்கத்தில் பெண்கள் இயக்குனர்களாக தடம் பதிக்க முடியாமல் போவதற்கான காரணம் என்ன எனும் கேள்விக்கு முன்பொரு காலத்தில் நாடக உலக ஜாம்பவான்களான ஆர். எஸ்.மனோகர் மற்றும் கோமல் ஸ்வாமிநாதனிடமிருந்து வந்த பதில்: 'அதற்கு சாத்தியமே இல்லை'.  அக்கூற்றை பொய்யாக்க பாம்பே ஞானம் 1989 ஆம் ஆண்டு துவக்கியதான் மகாலட்சுமி பெண்கள் நாடகக்குழு. இதுவரை 18 நாடகங்களை அரங்கேற்றி இருக்கும் இக்குழுவின் அனைத்து நாடகங்களுக்கும் கதை, வசனம், இயக்கம் பாம்பே ஞானம்தான். தற்போது டி.வி.சீரியல்களில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருக்கும் இவரது 'எதுவும் நடக்கும்' நாடகம் 26/10/13 அன்று மைலாப்பூர் பைன் ஆர்ட்ஸில் நடந்தது. 

சென்னையின் பழம்பெரும் சபாக்களுள் ஒன்றான மயிலை பைன் ஆர்ட்ஸில் நான் நாடகம் பார்ப்பது இதுதான் முதன் முறை. பெரிய அரங்கம். ஏசி கிடையாது. போதுமான அளவு மின்விசிறிகள் உண்டு. ஒரு மணி நேரத்திற்கு மேல் அமர்ந்தால் முதுகு/டிக்கியை சற்றே பதம் பார்க்கும் ப்ளாஸ்டிக் சேர்கள். நகரின் பெரும்பாலான சபாக்கள் சொகுசு இருக்கை, ஏசி, நவீன ஒலி/ஒளி அமைப்புகளுடன் தன்னை அப்க்ரேட் செய்து கொண்டாகிவிட்டன. செல்வாக்கு பெற்ற பள்ளிகளில் இருக்கும் உயர் ரக ஆடிட்டோரியங்களில் கூட நாடகங்கள் நடந்தேறி வரும் இக்காலத்தில் இன்னும் பழமையை தன்னுள் அடக்கி வைத்திருக்கும் மயிலை பைன் ஆர்ட்ஸ் அரங்கம் சம்திங் ஸ்பெஷல்தான்.

நாடகம் துவங்குவதற்கு முன்பு மினி ப்ரொஜெக்டரில் மகாலட்சுமி பெண்கள் நாடகக்குழு பற்றி ஞானம் பேசியதை ஒருநிமிடம் கூட தொடர்ச்சியாக கேட்கவிடாமல் இடையிடையே ஆச்சி மசாலா விளம்பரம் போட்டு தாளித்துக்கொண்டு இருந்தது.... இதுவும் நடக்கும் என்பதை அப்பாவி ரசிகர்களுக்கு நெடி தெறிக்க உணர்த்தியது. புகழ்பெற்ற நீதிபதி ஒருவர் தரும் தீர்ப்பை எதிர்த்து அவருடைய மகளே போர்க்கொடி தூக்குகிறார். இருவருக்குமான வாதத்தில் நீதிபதியின் முன்னாள் வாழ்க்கை நினைவு கூறப்படுகிறது. அது வழக்கின் தீர்ப்புடன் எப்படி ஒத்துப்போகிறது என்பதை சஸ்பென்ஸ் நிறைத்து சொல்லி இருக்கிறார்கள்.
                                                                         


நீதிபதியாக பாம்பே ஞானம்(இயக்குனரும் இவர்தான்). நாடகத்தின் பெரும்பகுதி ப்ளாஷ்பேக்கை வைத்தே நடைபோடுவதால் துவக்கம் மற்றும் இறுதியில் மட்டுமே வந்து செல்கிறார். இருப்பினும் தனக்கேயுரிய Cakewalk பெர்பாமன்சை வெளிப்படுத்தி இருப்பது நிறைவு. தாயின் கடந்த காலத்தை ஆய்வு செய்து வாதிடும் மகளாக அர்ச்சனாவின் துறு துறு நடிப்பும், தகிடுதத்தம் செய்யும் ரங்கா எனும் கதாபாத்திரத்தின் காதலி ரத்னமாக வரும் லலிதா விஸ்வநாதனின் அப்பாவித்தனமான முகபாவமும் சிறப்பு. தந்தை எழுதிவைத்த எடக்குமடக்கான உயிலின் நிர்பந்தத்தால் ரங்காவை மணக்கும் சுஷ்மிதா(சுசித்ரா ரவிச்சந்திரன்) மற்றும் இவரது தாயாராக மாலதி நாராயணன் என எவரது நடிப்பிலும் குறையில்லை. 

ஆனால் இவர்கள் அனைவரையும் விட ஸ்கோர் செய்திருப்பது ரங்காதான். நாடகம் முடிந்த பிறகு தனது குழுவினரை ஞானம் அறிமுகம் செய்யும்போதுதான்  க்ளைமாக்ஸை விட மேலான ஆச்சர்யம் காத்திருந்தது. அக்மார்க் பெங்காலி ரங்காவாக  அருமையாக நடித்திருந்ததும் ஒரு பெண்மணி என்பதுதான் அது. இவர் பேசிய ஏகப்பட்ட வசனங்கள் அனைத்தும் ஆணின் குரலில் ஒலிப்பதிவு செய்யப்பட மேடையில் அதற்கேற்றாற்போல் வாயசைத்திருக்கிறார். இப்புகழ்ச்சிக்கு சொந்தக்காரர் நடிகை லலிதா விஸ்வநாதன். ஒற்றை வார்த்தையில் சொல்லவேண்டுமெனில் 'அவுட்ஸ் டாண்டிங்' மேடம்!!  ஒப்பனை செய்த கண்ணன் மற்றும் சேகருக்கு வந்தனங்கள்.
                                                   
கல்கத்தாவாழ் மக்களுக்கே உரித்தான பெங்காலி உடைகள் (நல்லி சில்க்ஸ் உபயம்), பிரத்யேக வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் அரங்க அமைப்பு(மோகன்பாபு)  என அந்நகரின் அம்சங்களை கண்முன் நிறுத்தியதற்கு பாராட்டுகள் அநேகம். குகபிரசாத்தின் பின்னணி இசையும் நன்று. வசனங்கள் தெளிவாக நமது காதில் விழ ஸ்டேஜின் மேலிருந்து மைக்கை தொங்கவிட்டிருந்தது குறிப்புணர்வு. முற்றிலும் பெண்களால் நடத்தப்படும் இவர்களது  படைப்புகளை பார்ப்பதற்கு முன்பு 'என்னத்த பெருசா..ஏதாவது பேமிலி டிராமாவா இருக்கும். அட்வைஸ் மழை பொழியும்' என எண்ணினால் அக்கூற்று தவிடி பொடியாகும். அடுத்தடுத்த நிமிடம் விறுவிறுப்பை அதிகரித்து உருப்படியான சஸ்பென்ஸ் த்ரில்லரை தந்திருக்கும் இம்மகளிர் அணிக்கு ஜெய் ஹோ!! 

குறிப்பு: மகாலட்சுமி பெண்கள் நாடகக்குழுவின் 25 ஆம் ஆண்டையொட்டி அடுத்த வருடம் ஒரு பிரம்மாண்ட சரித்திர நாடகத்தை ரசிகர்களுக்கு வழங்க இருக்கிறார்கள். வாழ்த்துகள்.   
 ......................................................................சமீபத்தில் எழுதியது:

6 comments:

தனிமரம் said...

நல்ல விடயத்தை பகிர்ந்து மேடை நாடகத்தை அலசி இருக்கின்றீர்கள்.

MANO நாஞ்சில் மனோ said...

நாடகத்துக்கும் விமர்சனம் எழுதி அவர்களையும் உற்சாக படுத்துகிற சிவா'வுக்கு வாழ்த்துக்கள்...!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

மேடை நாடகப் பிரியன் என்னும் பட்டம் கொடுக்கலாம் சிவகுமாருக்கு

Unknown said...

பெண்களாலும் முடியும் என்று நிரூபித்து வரும்,"மகாலட்சுமி நாடகக் குழு" வுக்குப் பாராட்டுக்களும்,விமர்சித்துப் புளகாங்கிதம் அடைய வைத்த உங்களுக்கும் நன்றிகள்!

வெங்கட் நாகராஜ் said...

பகிர்வுக்கு நன்றி சிவக்குமார்...

சமீரா said...

பாம்பே ஞானம் - மேடை நாடக குழு வச்சிருகறது இப்ப தான் தெரியும்.. கிரேட்!!

Related Posts Plugin for WordPress, Blogger...