CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Thursday, November 28, 2013

மாதவ பூவராக மூர்த்தியின் - நாற்காலிக்கு இடமில்லை
சில நாட்களுக்கு முன்பு தி.நகர் ராமகிருஷ்ணா பள்ளி இன்போசிஸ் ஹாலில் குருகுலத்தின் 'நாற்காலிக்கு இடமில்லை' அரங்கேறியது. புகழ்பெற்ற கார்த்திக் பைன் ஆர்ட்ஸின் 2011 கோடை நாடக விழாவில் சிறந்த நாடகத்திற்கான விருதை வென்றதோடு மாதவ பூவராக மூர்த்திக்கு சிறந்த நடிகர், வசனகர்த்தா மற்றும் மாலதி சம்பத்திற்கு சிறந்த நடிகை ஆகிய கிரீடங்களை வென்று தந்தது இந்நாடகம் என்பது குறிப்பிடத்தக்கது.  

துரித கதியில் வாழ்வை நகர்த்திக்கொண்டிருக்கும் குடும்பம். பணி ஓய்வு பெற்றதால் ஹாலின் நடுவே அமர்ந்தவாறு அமைதி காக்கும் பெரியவர். அவரிடம் பேசக்கூட நேரமின்றி கடந்து செல்லும் நபர்கள். 'வெளியே செல்கிறோம். வீட்டை பார்த்துக்கொள்ளுங்கள்' என மனைவி உட்பட அனைவரும் கிளம்பி விட தனிமையின் துயரை நாடகம் பார்க்கும் மக்களிடம் பகிர்ந்து கொள்ள ஆரம்பிக்கிறார் கதை நாயகன் ஸ்ரீனிவாசன்/சீனு(மாதவ பூவராக மூர்த்தி). இளம்பிராயத்தில் தன் பெற்றோரிடம் வளர்ந்த முறை, கற்றுக்கொண்ட சங்கீதம், அவர்கள் நினைவாக வைத்திருக்கும் பொருட்கள் என நினைவலையில் மூழ்குகிறார். தந்தையின் காலம் முதல் குடும்பத்தின் அங்கமென தான் கருதி இருக்கும் நாற்காலியை தன் மகன் அகற்ற சொன்னதை எண்ணி கண் கலங்குகிறார். இறுதியில் என்ன கதிக்கு ஆளானது அந்நாற்காலி? உங்களுக்கான அமர்வு வாய்த்தால் கண்டு நெகிழ்க.

இவ்வாண்டு நான் பார்த்த நாடகங்களில் பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தது மா.பூ.மூர்த்திதான். 70 வயதை தாண்டிய நடிகர் ஒருவர் பல பக்க வசனங்களை தடையின்றி உச்சரித்து நம்மை அக்கதாபாத்திரத்துடன் ஒன்ற வைத்திருப்பது அபாரம். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ரசிகர்களை பார்த்த வண்ணம் யதார்த்தமாக மூர்த்தி கூறும் மலரும் நினைவுகள் சில வாரங்களுக்கேனும் மனதை விட்டு அகலாது. இக்கால இளைஞர்களின் உழைப்பு மற்றும் நவீன சாதனங்களின் அத்யாவசியத்தை தந்தைக்கு உணர்த்தும் பரத் ஆக வெங்கட். வெங்கட்டின் கெரியரில் மிக முக்கியமான கேரக்டர் இது. இரு தலைமுறைக்கான இடைவெளியை ஆரோக்யமான வாதங்கள் மூலம் பேலன்ஸ் செய்கிறது இந்த இறுதிக்காட்சி.
சீனுவின் மனைவியாக மாலதி சம்பத் சில நிமிடங்களே வந்தாலும் தமது முத்திரையை படித்து செல்கிறார். 'மணமான புதிதில் அசதியான நேரமொன்றில் அந்நாற்காலியில் அமர்ந்து விட்டேன். என் அப்பா உட்கார்ந்த நாற்காலியில் ஏன் அமர்ந்தாய் என நீங்கள் வலுவாக கடிந்து கொண்டீர்கள். அந்நாள் முதல் இன்றுவரை அதில் அமர்ந்ததில்லை. எனவே அதன் மீது எனக்கு எந்தப்பற்றும் இல்லை' என்று மாலதி பேசும் வார்த்தைகள் சாந்த சொரூபிகளாக மன அழுத்தங்களுடன் காலத்தை நகர்த்தும் பெண்களின் வலி.

 'புத்தகத்தில் இருக்கும் மயிலிறகு குட்டி போடாது. ஏமாறாதே' என மகனுக்கு சீனு அறிவியல் பூர்வமாக பாடமெடுக்க அவர் சென்றபின் 'அப்பா அப்படித்தான் சொல்வார். எல்லாரும் பாக்கறாப்ல புக்கை திறந்து மயிலிறகை பாக்காதே. புத்தகத்த கண்ணுக்கு கிட்ட வச்சிட்டு கைகளை கூப்பி வச்சி மெல்ல திறந்து பாருடா. கண்டிப்பா குட்டி போடும்' என்று மாலதி சொல்லுமிடம் அன்பின் ஆராதனை. என்னை மிகவும் ரசிக்க வைத்த காட்சியிது.

பரத் நண்பன் மகேஷாக கார்த்திக், சீனுவின் இளம்பிராய பக்கத்து வீட்டு பெரியவர் சிவாவாக ரமேஷ் ஓரிரு முறை கண்ணில் பட்டு மறைந்தாலும் நடிப்பில் குறையில்லை. சீனுவின் பேரனாக மாஸ்டர் புவனேஷ். ஒத்திகை செய்ததை வஞ்சனை இல்லாமல் வெளிப்படுத்தி இருக்கிறான். எளிய அரங்கை அமைத்திருப்பது குமார். சீரியசான கதையின் தன்மை புரிந்து அளவாக பின்னணியை ஒலிக்க விட்டிருப்பது இசையமைப்பாளர் கிச்சா.     
 
'இப்போது வீட்டில் என்னிடம் பேச யாருமில்லை. உத்தரத்தில் எத்தனை பல்லிகள் ஓடுகின்றன என எண்ணிக்கொண்டு இருக்கிறேன்', 'என்னது பேங்க் லோனா? எனக்கு இப்ப தேவை நல்ல ஆஸ்பத்திரி, ஆம்புலன்ஸ், சுடுகாடு விவரங்கள்தான். அது இருந்தா சொல்லு' போன்ற இயல்பான நகைச்சுவை வசனங்கள் மாதவ பூவராகமூர்த்தியின் எழுதுகோல் வாயிலாக மிளிர்கிறது. இப்படைப்பின் பெரும்பலம் இவரது சிறந்த நடிப்பும், வசனங்களும்தான். நாடகம் முடிந்ததும் ரசிகர்கள் மேடையேறி விமர்சிக்குமாறு அழைப்பு விடுத்தார் ஒருங்கிணைப்பாளர் முத்ரா பாஸ்கர். முதன் முறை மேடையேறி பேசும் வாய்ப்பு கிட்ட எனது விமர்சனத்தை சில நிமிடங்கள் அங்கே வைத்துவிட்டு சுபம் போட்டேன். மாதவ பூவராக மூர்த்தி எனும் அற்புதமான கலைஞரின் ஆக்கம் மற்றும் நடிப்பில் வைரம் தீட்டப்பட்டிருக்கும் இந்நாடகம் மறுமுறை அரங்கேறினால் தவற விட வேண்டாம் என்பதை நாடக விரும்பிகளுக்கு கூறிக்கொள்கிறேன். 

Images: madrasbhavan.com
 ...........................................................
  
சமீபத்தில் எழுதியது:


  

1 comments:

MANO நாஞ்சில் மனோ said...

சிவா நீங்க ரொம்பவும் பொறுமைசாலி'ய்யா....!

Related Posts Plugin for WordPress, Blogger...