சென்ற ஆண்டு 'தட்டத்தின் மறயத்து' மூலம் யுவன் யுவதிகளை காதல் ரசத்தில் மூழ்கடித்த வினீத் ஸ்ரீனிவாசன் இம்முறை கையிலெடுத்து இருக்கும் சப்ஜக்ட் மனிதக்கடத்தல். கேரளாவில் முந்தைய வாரமே ரிலீஸ். ஆனால் அதே நாளில் லால் ஏட்டனின் 'கீதாஞ்சலி'யும் வெளியாக சென்னையில் திரா ஒரு வாரம் தள்ளியே திரை கண்டது. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு ஷோபனா நடிக்க வந்திருப்பதால் எதிர்பார்ப்புகள் அதிகமானது.
கோவாவின் புகழ் பெற்ற இருதய அறுவை சிகிச்சை மருத்துவரான ரோஹினி கைவிடப்பட்ட சிறுமிகளுக்கான ஆதரவு இல்லமொன்றை நடத்தி வருகிறார். மனிதக்கடத்தல் நெட்வொர்க்கை துப்பறிவதால் ரோஹினியின் கணவர் கொல்லப்பட, அங்கிருக்கும் சிறுமிகளும் கடத்தப்படுகிறார்கள். மறுபுறம் நவீனின் தங்கையும் அவன் கண்ணெதிரே கடத்தப்பட இரு தரப்பில் இருந்தும் தேடுதல் படலம் துவங்குகிறது. அம்முயற்சி வெற்றியடைந்ததா என்பதுதான் மிச்சக்கதை.
படம் துவங்கிய சில நிமிடங்களிலேயே 'டெம்போ'வை செட் செய்து விடுகிறார் வினீத். முன்பே இதுபோன்ற கடத்தல்களை முறியடித்து சிறுமிகளை மீட்டவர் என்பதால் சட்டென செயலில் இறங்குகிறார் ரோஹினி(ஷோபனா). 'இயக்கம் வினீத்' டைட்டிலுக்கு விழும் அதே கைத்தட்டல் ஷோபனா திரையில் தோன்றியதும் விழுகிறது. சிகப்பு நிறப்புடவை...ஒரே காஸ்ட்யூம்தான் 99% இவர் பரபரக்கும் காட்சிகளில். ராக் சாலிட் பெர்பாமன்ஸ். ஆறு மெழுகுவர்த்திகள் எனும் தமிழ்ப்படத்தில் ஷாமின் கேரக்டரும் இதே போலத்தான் வடிவமைக்கப்பட்டிருக்கும். வித விதமான வில்லன்களை துவம்சம் செய்து தன் மகனை மீட்க போராடுவார். ஆனால் குழந்தை கடத்தல் எம்மாதிரி நடக்கிறது என்பதற்கான விளக்கம் இல்லாமல் இருக்கும். அதற்கு நேரெதிராக அவ்விவரங்களை இங்கே அள்ளித்தந்திருக்கிறார் வினீத். ரட்சகியாக முன்னிருந்து தன் அணியை வழிநடத்தும் பாங்கில் ஷோபனாவின் நடிப்பு அபாரம்.
வினீத்தின் சகோதரன் த்யான் திராவின் அடுத்த முக்கிய கேரக்டர். பயம், குழப்பம் பொதிந்த முகத்தை கொண்ட நடிகனைத்தேட இயக்குனர் பெரிதாக மெனக்கெட தேவை இருந்திருக்காது. ஷோபனா எது சொன்னாலும் தலையை ஆட்டிவிட்டு செயலில் இறங்கும் த்யான் பொருத்தமான தேர்வுதான். பூவிலங்கு மோகன், தர்மம் குறும்படத்தில் உயர் போக்குவரத்து துறை அதிகாரியாக தோன்றியவர் என சின்ன சின்ன கேரக்டரில் சரியான ஆட்களை தேர்வு செய்திருக்கிறார் இயக்குனர்.
கன்னடம் தெரியாமல் பேருந்தில் விழிக்கும் த்யானிடம் ஓட்டுனர் பேசும் வசனம், 'சார் கிரிமினல் வெளிய நிக்கறாங்க' எனும் கான்ஸ்டபிளிடம் 'யோவ்..அது விக்டிம்யா' எனப்புலம்பும் அதிகாரி, 'அந்த வண்டிய எப்படி எரி ச்சீங்க?' என்று வினவும் த்யானுக்கு ஷோபனா தரும் பதில் 'கேரளாவில் எத்தனை ஹர்தால்களை பார்த்திருப்பேன்'. இப்படி திரைக்கதைக்கு குந்தகம் விளைவிக்காமல் தூவப்பட்டிருகின்றன நகைச்சுவை காட்சிகள்.
ஹேஷம், நேஹா குரலில் 'தாழ்வாரம்', வினீத் ஸ்ரீனிவாசன் பாடிய 'தீராதே' இரண்டும் ஒன்ஸ்மோர். ஜோமோனின் ஒளிப்பதிவும், ஷானின் பின்னணி இசையும் ஆன் டார்கெட். இறுதிவரை விறுவிறுப்பிற்கு பஞ்சமின்றி திரைக்கதை திகுதிகுத்தாலும் கடத்தல்காரர்கள் கண்களில் பொடிகளைத்தூவி ஷோபனாவும், த்யானும் தொடர்ந்து தப்பிப்பது அக்மார்க் இந்திய சினிமாத்தனம். கடத்தலில் ஈடுபடும்போது சிக்கியவர்களின் கண்களை கட்டி விடுவது வழக்கம் என்று சொல்லும் அதே வேளையில் ஷோபனாவை கடத்தும்போது வாயை மட்டும் கட்டி இருப்பதேன் என்று தெரியவில்லை.
சோமாலி மாம் எழுதிய 'The road of Lost Innocence' சுயசரிதையின் தாக்கத்தால்தான் இப்படத்தை எடுத்தேன் என திரா ரிலீஸ் ஆன பிறகு வினீத் ஒப்புதல் வாக்குமூலம் தந்திருப்பினும், 'The Whistleblower' எனும் ஆங்கில படத்தின் மறுபதிப்புதான் என தெரிகிறது. அப்படத்தில் நாயகி ஒரு போலீஸ் அதிகாரி. ஆனால் அப்படியே எடுத்தால் காப்பி என சொல்லிவிடுவார்கள் என்பதாலும், 'பெண் மருத்துவர் இந்த அளவிற்கு துப்பு துலக்கி சாகசங்கள் புரிய வாய்ப்புள்ளதா?' என்று ரசிகர்கள் துளைத்தெடுக்க மாட்டார்கள் எனும் அசாத்திய நம்பிக்கை இருந்ததாலும் வினீத் நினைத்ததை முடித்திருக்கிறார். 'அமர்?' என ஷோபனா ஒரு நபரை பார்த்து விளிக்கும்போது இரண்டாம் பாகம் உறுதியாகிறது.
Protagonist ஆக நாயகர்களையே கண்டு பழகிய இந்திய சினிமா ரசிகர்கள் ஒரு மாறுதலுக்காக ஷோபனாவின் அற்புதமான நடிப்பை திரா மூலம் பார்க்கலாம். மொத்தம் 112 நிமிடங்களுக்கு கொஞ்சமும் போரடிக்காத படைப்பை தந்திருக்கிறார்கள். தவற விட வேண்டாம். ஷோபனா உம்மை ரட்சிப்பார்.
.................................................................
சமீபத்தில் எழுதியது:
எதுவும் நடக்கும் - நாடக விமர்சனம்
5 comments:
சொந்த மொழி விமர்சகர்கள் கடிக்கு குதறிய படத்தைக்கூட "நடுநிலையா" விமர்சனம் பண்றீங்க. வாழ்த்துக்கள்
சிவா அண்ணா. விமர்சனம் அருமை..பார்த்துவிடுகிறேன்.
கணேஷ்குமார்.ராஜாராம்.
நன்றி விமர்சனத்துக்கு!///ஷோபனா ரட்சிப்பாங்கன்னா பாத்துடலாம்!
நல்ல விமர்சனம்.... பார்க்க முயல்கிறேன்...
வினீத் கேரள சினிமாவின் ஒரு பொக்கிஷம்.. நல்ல பாடகர், நடிகர் எல்லாவற்றையும் விட நல்ல இயக்குனர் என்ற பெயரும் பெற்று விட்டார்..
Post a Comment