ப்ளாக் திரைப்படம் தவிர பெரியளவில் பேசப்படாதவர் சஞ்சய் லீலா பன்சாலி. ஆனால் இவர் எடுக்கும் படங்கள் ஹிட்டோ காலியோ ஒரு பிரம்மாண்ட மேஜிக்கை திரையில் நிகழ்த்திவிடும். ரோமியோ ஜூலியட்டின் தாக்கத்தில் துக்கடா ஹீரோ ரன்வீர் மற்றும் செம ஹாட் தீபிகா படுகோனேவை நம்பி எடுத்திருக்கும் கனவுப்படம் தான் இந்த ராம் லீலா. ரிலீசுக்கு முன்பே அனைத்து பாடல்களும் அட்ரா சக்க ஹிட். 100% காதல் ரசம் பொங்கி வழியும் படைப்புகள் என்றாலே 10 ஸ்டெப் பின்னால் போய் விடுவேன். ஆனால் இந்தி சினிமா உலகமே எதிர்பார்த்து காத்திருந்த படமென நாளுக்கு நாள் பீட்ஸ் எகிறிக்கொண்டிருக்க தவிர்க்க இயலவில்லை.
கதை மிகவும் சிம்பிள். 500 ஆண்டு பகையுடன் பழிக்கு பழி வாங்குவதையே வாடிக்கையாய் கொண்டவர்கள் ரஜதா மற்றும் சனதா ஊர்க்காரர்கள். இல்லம் முழுக்க புல்லட் வாசம். ஒவ்வொரு ஆணின் தோள்களிலும் துப்பாக்கி, பெண்களின் இடுப்பில் குருங்கத்தி...ரத்த பூமி. சனதாவை ஆள்வது பா எனும் சொர்ணாக்கா டைப் பெண்மணி. அவரது மகள் தீபிகாவை காதலிக்கிறான் ரஜதாவின் மைந்தன் ராம். இவ்விருவரின் சகோதரர்களும் தோட்டாக்களுக்கு பலியாகிவிட ஊர்ப்பகை உச்சத்தை அடைகிறது. ரஜதாவின் டான் ஆகும் ராமின் காதல் என்னாகிறது? Guns & Roses தெறிக்க உதய்பூர் அரண்மையை சுற்றி அற்புதமாக படமாக்கி இருக்கிறார் சஞ்சய்.
'எப்போது பார்த்தாலும் துப்பாக்கி எதை சாதிக்க போகிறீர்கள்?' என உள்ளூர்க்காரர்களை கேட்கும் நல்ல மனசுக்காரன் ராமாக ரன்வீர். கஜ கஜா படங்களை நண்பர்களுடன் பார்ப்பதை தொழில்/பொழுதுபோக்காக வைத்திருப்பவனாகவும், கனல் கக்கும் கோபம், கண்ணீர் ததும்பும் காதல், தீபிகாவை வெகு அழுத்தமாக அணைத்து கட்டிப்பிடி வைத்தியம் செய்தலென ஆளு அட்டகாசம் செய்திருக்கிறார். 'ஐ ஹாவ் அரைவ்ட்' என 10 ரவுண்ட் விண்ணை நோக்கி சுட்டவாறே பாலிவுட் உலகிற்கு மெசேஜ் பாஸ் செய்திருக்கிறார். சிக்ஸ் பேக் உடற்கட்டு, குத்தாட்டம், நக்கல் என ஆல் ரவுண்ட் அதகளம்.
லீலா கேரக்டரில் நடிக்க கரீனா கபூர், பிரியங்கா சோப்ரா ஆகியோர் பலமுறை பன்சாலி வீட்டு கதவை தட்டினாலும் வென்றது என்னவோ தீபிகாதான். மிகச்சரியான தேர்வுதான். என்னதான் கரீனா & பிரியங்கா எல்லை மீறிய கவர்ச்சி காட்டி இருந்தாலும் சோகக்காட்சிகளில் கண்கள் பேச வாய்ப்பில்லை. அது தீபிகாவிற்கு மெகா ப்ளஸ். ரன்வீருக்கு கடும் சவால் தரும் வகையில் நடிப்பு, நடனம், வசனம் அடித்து நொறுக்கும் பெர்பாமன்சை தந்திருக்கும் தீபிகா..சியர்ஸ்.
நடிப்பு ராட்சசி ரிச்சா சட்டா இடைவேளை வரை வெறுமனே வருவதும் போவதுமாக இருந்தது ஏமாற்றம். ஆனால் அதற்கு சேர்த்து வைத்து மறுபாதியில் ஈடுகட்டி இருக்கிறார்.
ராம் லீலாவில் மிக முக்கியமாக குறிப்பிட வேண்டியது சுப்ரியா பதக்கின் வில்லித்தனம். பலியாடாக வரும் லண்டன் மாப்பிள்ளை இவரிடம் என்ன தொழில் செய்கிறீர்கள் என கேட்கும்போது 'ஷூட்டிங், ஸ்மக்ளிங் அன்ட் கில்லிங். வெல்கம் டு தி பேமிலி பிசினெஸ்' என அதிரடியாக துவங்கி ரஜதாவின் கடைசி வாரிசு தன்னை கட்டியணைக்கையில் பல ஆண்டுகள் கழித்து பாசத்தை உணர்வதை கண்களில் காட்டி மனதில் நிற்கிறார். இவ்வாண்டின் சிறந்த நெகடிவ் ரோலுக்கான போட்டியில் இவரை பீட் செய்ய தூம் -3 அமீர் கான் மிகக்கடுமையான உழைப்பை கொட்ட வேண்டி இருக்கும்.
ஒளிப்பதிவு நம்மூர் ரவிவர்மன். ஓவியர் ரவிவர்மனின் வண்ணத்தூரிகை இவரது கேமரா லென்சின் ஏதோ ஒரு ஓரத்தில் தீர்க்கமாக தீட்டப்பட்டிருக்க வேண்டும். வெகு பிரமாதம். சஞ்சய் லீலா பன்சாலி மற்றும் மான்டியின் குஜராத்தி பீட்களில் கிட்டத்தட்ட அனைத்து பாட்டுகளுமே ஒன்ஸ்மோர். டோல் பாஜே, இஷ்கியா, டட்டட் பாடல்களில் ரன்வீர் - தீபிகா ஆட்டம் கனஜோர். 'ராம் சாஹே' வில் பிரியங்கா சோப்ரா க்ளாமர் கொப்பளிக்கும் நளினத்துடன் நெஞ்சை அள்ள அப்பாடலில் 'ரகுபதி ராகவ ராஜாராம்' சொருகப்பட்டிருப்பதை கண்டித்து இதுவரை எவரும் போராடாதது அதிசயம். 'லஹு முன்' மயிலிறகின் வருடல்.
'கெமிஸ்ட்ரி.. கெமிஸ்ட்ரி' என்றொரு சப்ஜக்ட் இருக்கிறதே. அதில் பரீட்சை வைத்தால் நூற்றுக்கு நூற்று பத்து மார்க் வாங்கி பாஸாகி விடும் ரன்வீர் - தீபிகா ஜோடி. ராமும் லீலாவும் உடலாலும், மனதாலும் பின்னிப்பினையும் காதல் நவரசம், தோட்டாக்களின் பாய்ச்சல், ஒரு வாரத்திற்கு கண்களை விட்டு அகலாத வர்ண ஜாலங்கள்....காதல் கொண்டாட்டம்னா இது!!
ராம் லீலா - சஞ்சய் லீலா!!
..............................................................
5 comments:
அப்போ! நம்பி பார்க்கலாம் என்கிறீங்க!!! :o
நல்ல,விமர்சனத்துக்கு நன்றி!
பெண்கள் கூடவெல்லாம் எங்க அமீர்பாய் போட்டி போட மாட்டார் பாஸு..
பாஸு... வில்லா'ன்னு ஒரு படம் பார்த்தீங்களே... அதுக்கு எப்ப விமர்சனம் போடுவீங்க ?
good
Post a Comment