CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Wednesday, November 20, 2013

ஸ்பெஷல் மீல்ஸ் (20/11/13)
ஹவுஸ்புல்:
                                                                               
                                                      Loc: Grand Mall, Velachery. Pic: madrasbhavan.com


வேளச்சேரி பேருந்து நிலையமருகே புதிதாக திறக்கப்பட்டிருக்கிறது க்ராண்ட் மால். பெயரில் இருக்கும் க்ராண்ட் உள்ளே இல்லை. குறுகலான வண்டி நிறுத்துமிடம், பெரம்பூர் வீனஸ் மாலை விட சற்றே அதிகமான பரப்பளவு என சாம்பிள் மாலாகத்தான் இருக்கிறது. அங்கே ஐந்து திரைகளுடன் துவக்க விழாவிற்கு தயாராகிக்கொண்டு இருக்கிறது பி.வி.ஆர். இதுபோக வேளச்சேரி பீனிக்ஸ் மாலில் ஓராண்டு காலமாக ரிலீசுக்கு காத்திருக்கும் சத்யம் குழுமத்தின் 11 திரைக்கதவுகள் 2014 ஜனவரியில் திறக்க உள்ளன மக்களே.
............................................................................ 


வில்லா:
பீட்சாவை மறந்துவிட்டு பார்த்தால் கூட வில்லா பெரிதாக ஈர்க்கவில்லை. என்னதான் அறிவியல், யதார்த்தம் பேசினாலும் பேய்ப்படம்/பேய்சார் படங்கள் என விளம்பரப்படுத்திவிட்டு ரசிகனுக்கு நான்கைந்து இடங்களில் கூட பயத்தை காட்டாவிட்டால்? 1408 எனும் ஆங்கில படத்தை சமீபத்தில் பார்த்தேன்.  அதை சற்றே மாற்றிப்போட்டு தோசை 'சுட்டிருக்கிறார்' இயக்குனர் தீபன். ஹில்டன் அறை எண் 1408 இல் நடக்கும் திகில் சம்பவங்களை பாண்டிச்சேரி வில்லாவில் காட்ட முயற்சித்து இருக்கின்றனர். அங்கே நாயகி இல்லை. இங்கே சூது கவ்வியிருக்கிறது. அசோக் செல்வனும், சஞ்சிதாவும் சந்திக்கும் காட்சியில் ஒரு தபா மட்டும் வந்து போகிறது பீட்சா. அது தவிர முந்தைய பீட்சாவிற்கும், இந்த பீட்சா-2விற்கும் வேறெந்த ஒற்றுமையும் இல்லை. அவர்கள் சூடாக பேசிக்கொண்டே இருக்க ஆறிப்போகிறது இப்பீட்சா. வில்லாவின் பாக்ஸ் ஆபீஸ் ரிசல்ட்டைப்போல. நேரம் கிடைத்தால் 1408 பாருங்கள். 
.......................................................................

சும்மா நச்சுனு இருக்கு:
நீள்முடி அடியாட்களின் துரத்தல், சொர்ணாக்கா, சீறும் சுமோக்கள் என கலவரம் செய்து கொண்டிருந்த தமிழ் சினிமாவின் ஜனரஞ்சக சூட்சுமங்களை அப்படியே பெயர்த்தெடுத்து மெகா சீரியல்களில் உலவ விட்டுக்கொண்டு இருக்கிறார்கள். பல் விளக்குதல், கொட்டாவி விடுதல் போன்ற காட்சிகளுக்கு கூட உலகம் அழியப்போகும் எபெக்ட் தந்து பரபரப்பாக இசை போடுவதில் ஜி த்தர்கள் சீரியல் மேஸ்ட்ரோக்கள். வெட்டு, குத்து,சேஸ்,மாஸ் என்றால் கேட்கவா வேண்டும்?  
...................................................................

எங்க சின்ன ராசா:
சென்னையில் அம்மா மினி பஸ் ஓடத்துவங்கி நாட்கள் சில ஆகிவிட்டது. சென்ற வாரம் பதிவர்கள் 'மின்னல் வரிகள்' பாலகணேஷ் மற்றும் சரவணர்(ஸ்கூல் பையர்)   ஆகியோருடன் கிண்டி ஆசார்கானா நிறுத்தத்தில் 'மினி'யேறினோம். மாநகரப்பேருந்துகளில் குறைந்தபட்ச டிக்கட் 3ரூ. இதிலோ 5 ரூ.  ஆசர்கானா டு ஆசர்கானா வினோத ட்ரிப்பை அடித்திறங்கினோம். பருமனான இருவர் சேர்ந்தாற்போல அமர்வது சிரமம்தான். வழித்தட விபரங்களை முன்னும், பின்னும் எழுதி வைத்திருப்பது நன்று. ஆனால் நிறுத்தத்தில் நிற்போருக்கு ஏதுவாக பக்க வாட்டில் எழுதினால் நலம். விடுமுறை நாட்களிலும் போதுமான இடைவெளியில் மினி பேருந்துகள் வந்து செல்வதால் ஆட்டோ & பங்கு ஆட்டோக்களுக்கு நஷ்டம்தான்.                      

                                                                        ஸ்கூல் பையரும், நானும் 
.............................................................................தொடரும்:
தந்தியில் கன்னித்தீவு முடியலாம், மன்மோகன் கூட ராஜபக்சேவை சப்பென அப்பலாம். ஆனால் சென்னை ஆட்டோ கட்டணத்தில் ஏற்படும் கோளாறு மட்டும் முடிவுக்கு வர சாத்தியமே இல்லையென்று தோன்றுகிறது. மீட்டர் அவசியம் என சுப்ரீம் கோர்ட் கட்டளையிட்டாலும் கண்ணில் படும் பல ஆட்டோக்களில் மீட்டர் இல்லை. அப்படியே மீட்டர் இருப்பினும் பழக்க தோஷத்தில் 'எவ்ளோன்னு சொல்லுங்க?' என்று பேரம்பேசி விட்டுதான் பொதுமக்களில் பலரும் உள்ளே அமர்கிறார்கள். 'இந்த அநியாயத்தை தட்டிக்கேட்க யாருமே இல்லையா?' என்று ஒரு தரப்பு கதறி மீட்டர் கொண்டு வர போராடியதன் பலன் நீர்த்துக்கொண்டு இருப்பதாகவே தெரிகிறது. இனி எல்லாம் மாநில அரசு மற்றும் மக்கள் கையில்தான்.
.................................................................... 

முற்றுகை:
ஒருவழியாக பாண்டிபஜார் நடைபாதை வியாபாரிகளை மூட்டை கட்டி அருகில் இருக்கும் மாநில அரசு வணிக கட்டிடத்தில் அடைத்துவிட்டார்கள். தீப்பெட்டி சைஸ் அறைகளில் மூச்சு முட்ட வியாபாரம் நடந்து கொண்டிருக்கிறது. அடுத்த குறி உஸ்மான் ரோடு நடைபாதை வியாபாரிகள் மீதாம். அப்படியே மேம்பாலங்களுக்கு கீழே கொச  கொசவென கடைபோட்டு இருக்கும் நபர்களையும் பார்சல் செய்தால் புண்ணியம். இல்லாவிடில் 'மேம்பால அடிவார வியாபாரிகள் சங்கம்' சென்னையில் விஸ்வரூபம் எடுக்க வாய்ப்புகள் அதிகம்.   
......................................................................
  
இனிது இனிது:
சென்ற ஞாயிறு தினமணி கதிரில் வலைத்தள எழுத்தாளர்கள் பகுதியில் எனது மெட்ராஸ் பவன் மற்றும் தம்பி பிலாசபி பிரபாகரன் தளங்கள் பற்றி குறிப்பிடப்பட்டு இருப்பது மகிழ்ச்சி.நன்றி: தோழர் ம.பா 

                                                             


இந்தியாவின் முன்னணி வலைப்பூ திரட்டியான இன்டிப்ளாக்கர்.இன் 'டாப் 10 ப்ளாக்ஸ்' தர வரிசையை தேர்வு செய்து வெளியிட்டுள்ளது. தமிழ் வலைப்பூக்களில்  மெட்ராஸ்பவனுக்கு இந்திய அளவில் நான்காம் இடமாம். அடுத்த இடத்தில் அண்ணன் கே.ஆர்.பி.செந்தில் மற்றும் மதுமதி ஆகியோரின் தளங்கள். வாழ்த்துகள்.

                                                                         


........................................................................

கொண்டாட்டம்:
அறிவுபூர்வமான விஷயங்களை விட சினிமா சார்ந்த நிகழ்ச்சிகளை மட்டுமே அதிகம் ஒளிபரப்பி மக்களை தம் வசம் வைத்திருப்பதில் கலாநிதி உண்மையிலே ஒரு வியாபார காந்தம்தான். சன்னில் வரும் ஏதேனும் சில நிகழ்ச்சிகள் அதிகபட்ச நேயர்களை கவர்ந்து கொண்டேதான் இருக்கிறது. அதில் ஒன்று ஆதித்யாவில் 'கலக்கப்போவது யாரு' சாம்பியன்  ஆதவன் நடத்தும் கொஞ்சம் நடிங்க பாஸ்.  பொதுமக்களிடம் சினிமா வசனம் பேசச்சொல்லி அவர்களிடம் நடிப்பை வாங்க அவர் அடிக்கும் லூட்டி ரவுசு. 'ஒரே இருட்டு. தூரத்துல ஒரே ஒரு வெளக்கு மட்டும் அணஞ்சி அணஞ்சி எறிஞ்சிட்டு இருந்துச்சி. அந்தப்பக்கம் ஒரு நாய் கொலச்சிட்டு இருந்துது'.  இதற்கு மக்கள் பேசிய தமாஷான வசனங்கள்: 'அந்தப்பக்கம் ஒரு நாள் குளிச்சிட்டு இருந்துச்சி'. ஆதவன் 'நாய் குளிக்கறதை நீ ஏன் பாத்த?'. இன்னொருவர் 'ஒரே ஒரு வெளக்கு மட்டும் இருட்டா இருந்துச்சி'.

'ஆதின்னா பொட்டு வச்சி பொங்கல் சாப்புடறவன்னு நெனச்சியா?'விற்கு ஒருவர் பேசிய மாஸ் பீஸ்:' ஆதின்னா பழைய பொங்கல் வச்சி பொட்டு சாப்புடறவன்னு நெனச்சியா?'. என்னுடைய அபிமான நகைச்சுவை நிகழ்ச்சிகளில் இப்போதைக்கு இதுதான் முதலிடத்தில். நன்றி ஆதவன் & வசனம் பேசும் ரகளை சிட்டிசன்கள்.   
............................................................... 
     
பையா:
'போக்கிரி'யில் தண்ணி லாரி ட்ரைவராக வரும் கிங் காங் ஸ்டியரிங் அடியில்  இருந்து எட்டிப்பார்க்க 'டேய்...நீயெல்லாம் டிரைவரா?' என பிரமிப்பார் வடிவேலு. அதுபோல 'ராஜா ராணி'இயக்குனர் அட்லீயை பார்த்து பிரமித்தவர்கள் பலர். 2011 இல்  சிவகார்த்திகேயன், 'நான் கடவுள்' ராஜேந்திரன் ஆகியோரை வைத்து அட்லீ எடுத்த குறும்படம்தான் 'முகப்புத்தகம்'. திரைப்பட இயக்குனருக்கான ஸ்பார்க் அப்போதே ஒளிவீசி இருக்கிறது அட்லீயிடம்:

                                                                     
  ...............................................................
  

சமீபத்தில் எழுதியது:


...............................................


12 comments:

MANO நாஞ்சில் மனோ said...

எலேய் அண்ணன் வந்தால் எல்லா இடத்தையும் சுற்றி காட்டனும் ஓகே...

திண்டுக்கல் தனபாலன் said...

வாழ்த்துக்கள் இரண்டு...!

MANO நாஞ்சில் மனோ said...

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்...

MANO நாஞ்சில் மனோ said...

ஸ்கூல் பையனை தள்ளி நிக்க சொல்லுய்யா வண்டியை தூக்கி அப்பாலிக்கா எறிஞ்சிறம...

கோகுல் said...

கொஞ்சம் நடிங்க பாஸ் மொபைல்ல நிறைய டவுன்லோட் பண்ணி வச்சு லூசு மாதிரி தனியா சிரிச்சுட்டு இருக்கேன்.,

கார்த்திக் சரவணன் said...

ஸ்பெஷல் மீல்ஸ்ல இனிப்பு கொஞ்சம் ஜாஸ்தி....

ராஜி said...

இரண்டு இடத்துல பேர் வந்ததுக்கு வாழ்த்துகள் சிவா!

ராஜி said...

தினமணி புத்தகத்துல சிவா, பிரபா, வா.மணிகண்டன் பேரை பார்த்ததும் ரொம்ப சந்தோசப்பட்டேன்.

Unknown said...

மீல்'ஸ் நல்லா இருந்திச்சு,நன்றி!!!///(Small Bus)ஸ்மால் பஸ்-'சிற்றுந்து' ன்னு எழுதியிருக்கே,கரெக்டா?(சிற்றூந்து?)(Big Bus)பிக் பஸ்- பேரூந்து.

ஜீவன் சுப்பு said...

Congrats Siva & Superb meals ...!

I love Aditya - Very funny program ...!

வெங்கட் நாகராஜ் said...

முதலில் வாழ்த்துகள்.....

கொஞ்சம் நடிங்க பாஸ் - நானும் அவ்வப்போது பார்க்கும்/ரசிக்கும் நிகழ்ச்சி....

வவ்வால் said...

சிவா,

எந்த திரட்டியிலும் பதிவக்காணோமேனு பார்த்தால் ,தனியா வண்டி ஓடுதா, இன்டிபிலாகரில் மட்டும் இணைக்கிறிங்க போல, சிறப்பான இடங்களுக்கு வாழ்த்துக்கள்.
-------------

சுப்ரமணியம்,

//(Small Bus)ஸ்மால் பஸ்-'சிற்றுந்து' ன்னு எழுதியிருக்கே,கரெக்டா?(சிற்றூந்து?)(Big Bus)பிக் பஸ்- பேரூந்து.//

சிற்றுந்து என்பதே சரியானது, அதே போல பேருந்து தான்,பேரூந்து அல்ல.

சின்ன + உந்து = சிற்றுந்து.

சிறிய + உந்து அல்ல.

இணையும் போது "ன" "ற" வாகும்.

பொன் + தாமரை = பொற்றாமரை என திரிந்து இணைவது போல.

பேர்+ உந்து = பேருந்து.

பெரிய + உந்து என இணைவதில்லை.

பேர் என்றாலே பெரிய என்று தான் பொருள்.

Related Posts Plugin for WordPress, Blogger...