விடியும்
முன்? கண்டிப்பா பேய்ப்படமாத்தான் இருக்கும் எனும் அனுமானம் ஒருபுறம்.
பூஜாவைத்தவிர பெரிய ஆர்டிஸ்ட் யாரும் இல்லாததால் நவீன சரஸ்வதி சபதம்,
ஜன்னல் ஓரம் ஏசிக்காற்று வாங்க பலர் சென்றது மறுபுறம். வழக்கம் போல லோ
பட்ஜெட் படங்களின் ஊக்க சக்தியான உண்மைத்தமிழன் அண்ணாச்சி
'கண்ட மசாலாவை எல்லாம் பாக்கறீங்க. இத பாருங்கலேய்' என்று கெனாவில் வந்து
ஆக்ஸா 'ப்ளேடை' சுழற்ற விடிந்தவுடன் விடியும் முன் பார்க்க
கிளம்பியாயிற்று. சரியாக வெட்டப்பட்ட ட்ரெயிலரும் வி.மு. பார்க்கும் எண்ணம்
வந்ததற்கான மறு காரணம்.
விலைமாது
ஒருத்திக்கு பழக்கமான ப்ரோ 'செல்வாக்கு மிக்க வாடிக்கையாளர் ஒருவருக்கு
சிறுமி வேண்டும். பார்த்து செய்' என பணத்தாசை காட்ட ஆவன செய்கிறாள் அவள்.
ஆனால் அச்சிறுமியை வேறொரு காரணத்திற்காக பயன்படுத்த நினைக்கிறான் அந்த
பெரிய மனிதன். மானும், மான் குட்டியும் அங்கிருந்து தப்ப ஓநாய்கள்
துரத்துகின்றன. மறுநாள் விடியும் முன் நடக்கும் சம்பவங்களை கோர்த்து
சஸ்பென்ஸ் த்ரில்லராக தந்திருக்கிறார்கள்.
வி.மு.வின்
மைய பாத்திரம் (சற்றே பழமையான) பூஜா. வழமையாக நாயகிகள் தேர்ந்தெடுக்கும்
இக்கிலி பிக்கிலி கேரக்டர்களை உதறிவிட்டு ரேகா எனும் விலைமாதாக
நடித்திருப்பது நல்ல மாற்றம். 'வயசாயிடுச்சில்ல' என வெளிப்படையாக
ஒப்புக்கொள்ளும் வசனம் பேசி இருப்பது ஒப்பனை கலை ப்பு. சிறுமி நந்தினியாக
மாளவிகா. மென்மையும், பிடிவாதமும் கலந்த கேரக்டரில் சிறப்பாய்
நடித்திருக்கிறாள். இருவருக்குமிடையேயான உரையாடல்களில் செயற்கைத்தனம்
இல்லாதது அவர்களுடன் ஒன்ற வைத்து விடுகிறது.
வித்யாசமான
சிறு பட்ஜெட் படங்களில் அவ்வப்போது தென்படும் ஜான் விஜய் இங்கும். தான்
தேர்ந்தெடுக்கும் படங்கள் ஒவ்வொன்றும் தனித்தன்மையுடன் இருக்க வேண்டும்,
தனது கேரக்டரும் மாறுபட்டிருத்தல் அவசியம் என்பதில் ஜான் கவனம்
செலுத்துகிறார் என்பது உண்மைதான். ஆனால் முந்தைய வேடங்களின் சாயல்
அப்பிக்கொள்வதை தவிர்க்க இயலவில்லை. எனினும் இம்முறையும் அசால்ட்
வில்லத்தனம் மூலம் பெயர் வாங்கி விடுகிறார். ஸ்ரீரங்கத்து மத்யம தேவதையாக
லட்சுமி ராமகிருஷ்ணன் சற்றே வந்தாலும் ஆள்/ல் இஸ் வெல். தாடி வைத்த
கோவக்கார சின்னையாவாக வினோத் கிஷன்('நந்தா'வில் குட்டி சூர்யா இவர்தேன்).
பஸ் டிக்கட் பின்புறம் எழுதும் அளவிற்குதான் தம்பிக்கு வசனமே. 'வில்லனுங்க
எல்லாமே இவ்வளவு வெறப்பாத்தான் இருக்கனுமா?' என வினவியது தத்துவ பதிவர்.
ஒப்புதல் புன்முறுவல் பூத்தது பயமில்லா சிங்கம். அதுவும் ரைட்டுதான்.
ஒரு
நாளில் நடக்கும் சம்பவங்கள் என்றாலும் திரை ஓரத்தில் அவ்வப்போது நேரத்தை
காட்டாமல் விட்டது இயக்குனரின் சாமர்த்தியமாகக்கூட இருக்கலாம். கருநாகத்தை
சுற்றி அடியாட்கள் விளையாடும் காட்சி சில நொடிகளே வந்தாலும் நல்ல விஷுவல்.
அதை க்ராபிக்ஸ் படுத்திய அணிக்கு தம்ஸ் அப். இளம் வரவு கிரீஷ்ஷின் இசை
சிறப்பு. சஸ்பென்ஸ் சினிமா என்பதற்காக அடிக்கடி தடதடக்காமல் அளவோடு
வார்த்திருக்கிறார். நல்லா வருவீக தம்பி. குறுகிய பட்ஜெட் படங்கள் என்னதான்
நன்றாக இருந்தாலும் பொதுவாக சொதப்புவது ஒளிப்பதிவு. ஆனால் அக்குறை ஏற்படா
வண்ணம் நிறைவாக வேலை பார்த்திருக்கிறார் சிவகுமார்.
திணிக்கப்படும்
திடுக் திருப்பங்கள், தேவையின்றி பயமுறுத்தும் வசனங்கள் ஆகியவற்றை
களைந்து மித வேகத்தில் களமாடியிருக்கிறார் இயக்குனர் பாலாஜி. ஸ்ரீரங்கத்தில்
ஜான் விஜய் முகவரி விசாரிக்கும் பொழுது சைக்கிள் ஓட்டிக்கொண்டே ஒரு மாமி
செல்வது பின்னணியில் அதிகபட்சம் இரண்டு நொடிகளே வரும். இந்த
பெர்பக்சனுக்காக மெனக்கெட்டு அக்மார்க் ஸ்ரீரங்கத்து மாமியை தேடி
சைக்கிளோட்ட வைத்திருக்கும் இயக்குனருக்கு ஸ்பெஷல் சபாஷ்.
முதல்
மூன்று குவார்ட்டர்கள் வரை 'நல்லாத்தான போயிட்டு இருக்கு?' என
என்னும்போது கடைசி ரவுண்டில் சினிமாத்தனம் எட்டிப்பார்க்கிறது. சிறுமி மீது
இரக்கப்படும் சின்னவரே அவள் முன் ரத்தக்காவு வாங்குவது முரண். ஓரளவு
யூகிக்க முடிந்த க்ளைமாக்ஸ். மற்றபடி மெச்சத்தக்க டீம் வொர்க்.
வாழ்த்துகள் பாலாஜி & கோ.
.................................................................