CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Monday, October 21, 2013

Rush
சர்வதேச விளையாட்டுகள் பலவற்றின் மீதிருக்கும் ஆர்வம் ஏனோ  F1 ரேஸ் மீது மட்டும் எனக்கு இருந்ததில்லை. நாளிதழ் மூலம் F1 செய்திகளை படிப்பதோடு மட்டும் சரி. அவ்விளையாட்டு பற்றிய ஹாலிவுட் படமான ரஷ் உலகெங்கும் வசூலில் பட்டையை கிளப்பிக்கொண்டு இருந்தது. இரண்டு வாரங்கள் சத்யமில் டிக்கட் கிடைக்கவும் இல்லை. இம்முறை chequered flag என் பக்கம் காற்றை வீச தியேட்டரில் ஆஜர்.

படித்த நடுத்தர குடும்ப பின்னணி கொண்ட ஜேம்ஸ் ஹன்ட், கோடீஸ்வர வியாபார குடும்பத்தின் வாரிசான நிக்கி லவ்டா...இருவரின் ஒரே லட்சியம் ரேஸில் உலகப்புகழ் ஈட்டுதலன்றி வேறொன்றுமில்லை. ஜேம்ஸ் ஒரு ப்ளேபாய். முரட்டுத்தனமான நம்பிக்கையுடன் வெற்றியை நோக்கி பயணிப்பவன். நிக்கி படு புத்திசாலி. அமைதியுடன் அறிவு பூர்வமாக தனது வெற்றிக்கான காய்களை நகர்த்துவதில் வல்லவன்.

 1970 ஆம் ஆண்டு F3 ரேஸ்களில் இருவருக்கும் தொடங்கும் உரசல் 1976 இல் காட்டுத்தீயாய் பற்றி எரிகிறது.  அவ்வாண்டு நடக்கும் ஃபார்முலா ஒன் க்ராண்ட் ப்ரி போட்டிகளில் 68 புள்ளிகள் பெற்று உலக சாம்பியன் ரேஸில் முன்னே நிற்கிறான் நிக்கி. ஜேம்ஸிடம் இருப்பது 65 புள்ளிகள். கனமழை கொட்டித்தீர்க்கும் ஜப்பானில் இறுதி ரேஸ். உலக சாம்பியன் பட்டம் யார் வசமானது படம் பார்ப்போர் நகமல்ல..விரலை கடிக்க வைக்குமளவுக்கு பரபரப்பாக படமாக்கி இருக்கிறார்கள்.

ஜேம்ஸாக க்ரிஸ் ஹெம்ஸ்வொர்த். நிக்கியாக டேனியல் ப்ரஹ்ல். பொறாமையில் ஆரம்பிக்கும் மோதல்கள் அதன் பின்பு ஆரோக்யமான போட்டியாக மாறுகிறது. அவ்வுணர்வுகளை இவர்கள் வெளிப்படுத்தும் காட்சிகள் மெச்சத்தக்கவை. ரேஸ் ஒன்றில் சிக்கி தீக்கிரையாகி விடுகிறது  நிக்கின் முகம். பிறகொரு தினம் நடக்கும் ப்ரெஸ் மீட்டில் 'இந்த முகத்துடன் இருந்தால் உங்கள் மனைவி சேர்ந்து வாழ்வது சாத்தியமா?' என நிருபர் அவரது மனதை புண்படுத்தி விடுகிறார். அதை கவனிக்கும் ஜேம்ஸ் அந்நிருபரை தனி அறைக்கு அழைத்து முகத்தில் ரத்தம் சொட்ட அடித்துவிட்டு சொல்லும் வசனம்: "இந்த முகத்தை உன் மனைவி ஏற்றுக்கொள்வாளா என யோசி". சர்வதேச விளையாட்டு போட்டிகள் ஒவ்வொன்றிலும் முதல் இரண்டு இடத்தில் இருக்கும் போட்டியாளர்கள் மனதார நட்பு பாராட்டுவது மிக மிக அபூர்வம். மீடியா முன்பு 'நன்பேண்டா' என ஆரத்தழுவிக்கொண்டாலும் உள்ளூர நீரு பூத்த நெருப்பாக பகையுணர்வு கொழுந்து விட்டு எரிந்து கொண்டுதானிருக்கும். விதிவிலக்காக நிக்கி - ஜேம்ஸ், ரோஜர் பெடரர் - ரபேல் நடால் போன்ற சிலர் மட்டுமே இருக்க முடியும்.


                                                                 
                                                                       அசல் நிக்கியும், ஜேம்ஸும்      

நடிப்பில் க்ரிஸ்ஸை விட ஒரு படி முன்னே நிற்பது நிக்கியாக நடித்த டேனியல்தான். ரேஸ் நடக்கும் நேரங்களில் தனது எதிரிக்கு சவால் விடுதல், தனது F1 கார் எப்படி இருக்க வேண்டும் என்பதில் காட்டும் பிடிவாதம், வாழ்வின் யதார்த்தத்தை உணர்ந்து முடிவெடுத்தல் என ஒவ்வொரு கட்டத்திலும் பிரமாதமான நடிப்பு. "நீ தந்த கடும் சவால்கள்தான் என்னை இந்த உயரத்திற்கு கொண்டு வந்துள்ளது" என தனது எதிரியும், தோழனுமாகிய ஜேம்ஸ் சொல்லும்போது அதற்கு நிக் சொல்லும் வசனம்: "நல்ல நண்பர்கள் இருந்தாலும் முட்டாள்கள் முன்னுக்கு வருவதில்லை. சிறந்த எதிரிகளால் மட்டுமே புத்திசாலிகள் வெற்றி பெறுகிறார்கள்".

ரஷ் எனும் இந்த அற்புத படைப்பின் வெற்றிக்கு பின்னே நிற்பவை இசை, எடிட்டிங் மற்றும் ஒளிப்பதிவு. குறிப்பாக கடும் மழை பெய்யும் ஜப்பான் க்ரான்ட் ப்ரி ரேஸ் சீன்களில் ஆன்டனியின் கேமரா ஸ்டன்னிங். 

ஜேம்ஸ் மற்றும் நிக்கின் வாழ்வில் நடந்த உண்மைச்சம்பவங்களை படமாக்க 30 க்கும் மேற்பட்ட முறை பலர் அனுமதி கேட்டும் மறுத்திருக்கிறார் நிக்கி(ஜேம்ஸ் தற்போது உயிருடன் இல்லை). இறுதியில் அந்த வாய்ப்பு இயக்குனர் ரான் ஹோவார்டிற்கு கிடைத்தது. ரஷ் பார்த்த பிறகு நிக்கி கூறிய வார்த்தைகள்: "யார் இந்த டேனியல்? அப்படியே என்னைப்போலவே உடல்மொழி மற்றும் உச்சரிப்பு... அசத்தி இருக்கிறார். வணிக நிர்பந்தங்களுக்காக  உண்மைச்சம்பவங்களை திரித்து இருப்பார்களோ என பயந்தேன். ஆனால் பெர்பெக்டாக வெளிவந்துள்ளது ரஷ்".

ஆஸ்கர் போட்டியில் ரஷ்ஷுக்கு வாய்ப்புகள் அதிகம் என எதிர்பார்க்கப்படுகிறது. படம் துவங்கும் முன்பு வாங்கி வைத்த குளிர்பானத்தை ஒரு சிப் கூட உறிஞ்ச விடாமல் இறுதி வரை F1 ஸ்பீடில் சீட்டின் நுனியில் அமர்ந்து பார்க்க வைத்த டீம் 'ரஷ்'...1000 Thanks' for all!!

நிக்கி - ஜேம்ஸ் குறித்து பி.பி.சி. எடுத்த ஆவணப்படத்தின் காணொளி பார்க்க:
.............................................................................


சமீபத்தில் எழுதியது:

ஷாஹித் - விமர்சனம்


3 comments:

aavee said...

இந்த குளிர்பானங்களுக்கும் உங்களுக்கும் எதோ ராசியில்லைன்னு நினைக்கிறேன்.. போன முறை "காதலர்களால் கவரப்பட்ட கோக்", இந்தமுறை "சுவாரஸ்யத்தால் சிப்ப மறந்த பெப்சி".. அடுத்த முறை வாங்கும்முன் யோசிங்க!! ;-)

கலியபெருமாள் புதுச்சேரி said...

நல்ல ஒரு படத்தை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி..

Vetirmagal said...

One of the best sports movie I ever watched.

Related Posts Plugin for WordPress, Blogger...