CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Tuesday, October 8, 2013

வரதராஜனின் இது நம்ம நாடு

'சோ'வைத்தவிர அரசியல் நையாண்டி நாடகங்களை மேடையேற்றும் துணிச்சல் பொதுவாக எவருக்கும் வருவதில்லை. அதிகபட்சம் ஓரிரு வசனங்களில் பட்டும் படாமலும் 'இந்த நாடு இப்படி ஆகிடுச்சே' என்று புலம்புவதோடு சரி.  எஸ்.வி.சேகரின் அரசியல் சாடல்கள் அவரது அரசியல் நிலைப்பாட்டிற்கு ஏற்ப மேடையேறும். சமீபகாலமாக அக்கோதாவில் குதித்து இருப்பது வரதராஜன். 'என்று தணியும் இந்த சுதந்திர தாகம்' மூலம் மேம்போக்காக நையாண்டி செய்தவர் இம்முறை 'இது நம்ம நாடு' வாயிலாக நேரடியாக கருணாநிதியை போட்டு தாக்கி இருக்கிறார். யுனைடட் விசுவல்ஸ் வழங்கும் புதிய படைப்பான இது நம்ம நாடு நாடகத்தின் கதை மற்றும் வசனம் துக்ளக் சத்யா. நாடகமாக்கல் மற்றும் இயக்கம் டி.வி. வரதராஜன்.

மாத சம்பளத்திற்கு வேலை பார்க்கும் பட்டாபிக்கு தாத்தா எழுதி வைக்கும் உயில் மூலம் அடிக்கிறது யோகம். மொத்தம் 25 கோடி மதிப்புள்ள சொத்து. இப்பெரும் தொகையை வைத்து என்ன செய்யலாம் என பட்டாபி குழம்பும்போது ஆளுக்கு ஒரு யோசனை தருகிறார்கள். பத்திரிக்கை, சினிமா தயாரிப்பு, அரசியல் என ஒவ்வொரு தொழில்களிலும் ஈடுபட்டு இறுதியில் அவர் எங்கே போய் நிற்கிறார் என்பதுதான் கதை. 

'ப்ளாட்பாரம்' எனும் சினிமா தயாரிப்பதால் ப்ளாட்பார சங்கம் மூலம் ஏற்படும் பிரச்னைகள் சூப்பர் ஹ்யூமர். ஏழைகள் முன்னேற்ற கழக தலைவராக கருணாநிதி போன்று தோற்றமளிக்கும் கெட்டப்பில் சுகுமார் நடித்திருக்கிறார். நாடகம் முழுக்க கருணாநிதியை 'ஓட்டு' ஓட்டென்று ஓட்டி இருக்கிறார்கள்.அம்மா ஆட்சியின் குறைகள் குறித்து ஒரு வசனமும் இல்லை. ஓரிரு இடங்களில் மட்டும் பட்டும் படாமலும் ஆளுங்கட்சியின் அவலங்களின் டச் அப். அவ்வளவுதான். அமைச்சருக்கு மூக்கடைப்பு மூக்குடைப்பு என செய்தியாவது, குடிகாரர்கள் பொதுமக்களுக்கு தரும் இன்னலை தீர்க்க டாஸ்மாக் மாவட்ட அறிவிப்பு, மன்மோகனை வாருதல் என தொடர் சிரிப்பொலி வசனங்களுக்கு பஞ்சமில்லை. குறிப்பாக துணை பிரதமர் வரதராஜன் கையெழுத்திடும் பைலில் 'அப்ரூவ்ட்' எனும் வார்த்தையை வைத்துக்கொண்டு நடக்கும் பித்தலாட்ட காட்சி டாப் க்ளாஸ் காமடி. ரசிகர்களின் பலத்த கரகோஷத்தை தட்டிச்சென்றது இக்காட்சிதான்.

'என்னடா இது நாட்ல எந்த தொழில் செஞ்சாலும் அரசியல்வாதிங்க தலையீடு இல்லாம நடக்காதா?' என புலம்பும் அப்பாவி பட்டாபி கேரக்டரில் அம்சமாக பொருந்துகிறார் வரதராஜன். நண்பனாக ராமசேஷன் நடிப்பும் குறிப்பிடத்தக்கது. எதிர்க்கட்சி தலைவராக ஆஜானுபாகு அனந்தபத்மனாபன் அருமையான சாய்ஸ். அடியாள் குப்புசாமியாக ரவிகுமார் சென்னை சிறப்பு பாஷையில் வழக்கம்போல் வெளுத்து வாங்கியிருக்கிறார். அபே சிங்காக ராமானுஜம். பிரதமர் அலுவலகத்தில் வேலை செய்யும் ஊழியராக இரண்டாம் பாதியில் கலக்கி எடுத்திருக்கிறார் மனிதர். வடக்கத்தி பாஷை கலந்த தமிழ் உச்சரிப்பு  மற்றும் சிறப்பாக sink ஆகும் சிங் பாடி லாங்குவேஜ்...சூப்பர் ஜீ.


தேசத்தில் அரசியல் பெயரால் நடக்கும் கொடுமைகளை கோர்ட் க்ளைமாக்ஸ் சீன் மூலம் வாதிடுகிறார்கள். தவறிழைத்த முக்கிய கட்சி தலைவர்களுக்கு தண்டனை தரும்போது 'இதெல்லாம் நம்ம நாட்ல நடக்குற கதையா?' என பெருமூச்சு விட்டவாறு நாடகம் பார்த்தவர்கள் வந்திருக்கலாம். ஆனால் 'அதற்கு ஏன் வாய்ப்பில்லை' என உணர்த்தும் விதமாக தற்போது லாலு பிரசாத் தண்டனை பெற்றிருப்பது கச்சிதமான கோ இன்ஸிடன்ஸ்.

நட்சத்திர செய்தி வாசிப்பாளர்களான ஷோபனா ரவி, பாத்திமா பாபு, செந்தமிழ் அரசு மற்றும் பாடகர் வீரமணி ஆகியோரின் குரல் பங்களிப்பு நாடகத்திற்கு கூடுதல் சிறப்பு. தந்த பணத்திற்கு வஞ்சனை இல்லாமல் சிரித்து மகிழ இப்புதிய நாடகத்தை அரங்கேற்றி இருக்கும் வரதராஜன் & கோவிற்கு வாழ்த்துகள்.
.................................................................     

7 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ரசனைக்கு வாழ்த்துக்கள்...

உலக சினிமா ரசிகன் said...

தொடர்ந்து ‘நாடகங்களை’ எழுதி இணைய ரசிகர்களுக்கு கொண்டு சேர்க்கும் மகத்தான பணிக்கு வாழ்த்துக்கள்.

உலக சினிமா ரசிகன் said...

கலைஞர் கருணாநிதி அராஜகமாக ஆட்சி நடத்திய எழுபதுகளில்...
அவரது அரசியலை விமர்சித்து நாடகம் நடத்தியவர் ‘சோ’.

இன்று அம்மாவின் அரசியலை விமர்சித்து யாராவது நாடகம் போட்டால், ‘இந்த நூற்றாண்டின் இணையற்ற மாவீரன்’ பட்டத்தை உடனே வழங்கி விடலாம்.

கோவை நேரம் said...

தல...ஒரு நாள் உங்ககூட நாடகம் பார்க்கணும்...

கலியபெருமாள் புதுச்சேரி said...

உங்களின் மூலம் நாங்களும் நாடகம் பார்த்தது போல் உணர்கிறோம்..

”தளிர் சுரேஷ்” said...

நாடகம் பார்க்க எல்லாம் கூட்டம் வருதா? ஆச்சர்யம்தான்! நல்லதொரு விமர்சனம்!

Unknown said...

அழிந்து போகுமோ என்று அச்சப்படும் நாடகக் கலைக்கு அவ்வப்போது உயிரூட்டி வரும் அத்தனை நாடகக் கலைஞர்களுக்கும் சிரம் தாழ்ந்த வணக்கம்.மேடையேறும் நாடகங்களைப் பார்த்து விமர்சிக்கும் உங்களுக்கும் கோடானு கோடி நன்றிகள்!

Related Posts Plugin for WordPress, Blogger...