CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Tuesday, October 15, 2013

ஒய்.ஜி.மகேந்திரனின் இரண்டாம் ரகசியம்


             
                                                                  


1952 ஆம் ஆண்டு ஒய்.ஜி.பார்த்தசாரதியால் துவக்கப்பட்ட யுனைடட் அமெச்சூர் ஆர்ட்டிஸ்ட்ஸ் நாடக கம்பனியின் மிகவும் வெற்றிகரமான படைப்பு என்று எடுத்துக்கொண்டால் அது 'ரகசியம் பரம ரகசியம்'தான். 1975 ஆம் ஆண்டு அரங்கேறி 750 க்கும் மேற்பட்ட முறை ரசிகர்களின் ஆதரவுடன் இன்று வரை வெற்றி நடை போட்டுக்கொண்டு இருக்கிறது. தற்போது புதிதாக அரங்கேறி இருக்கும் நாடகத்தின் பெயர் 'இரண்டாம் ரகசியம்'. சென்னைக்கு விஜயம் புரிந்திருந்த கோவை பதிவர் ஆவி(ஆனந்த் விஜயராகவன்) மற்றும் 'மின்னல் வரிகள்' பாலகணேஷ் ஆகியோருடன் சில நாட்களுக்கு முன்பு வாணி மஹாலில் இந்நாடகம் பார்க்கும் சந்தர்ப்பம் அமைந்தது. மேடைத்திரை விலகுவதற்கு முன்பாக ஒய்.ஜி.எம்மின் குரல் ஓர் அறிவிப்பினை செய்தது. விசில் சத்தம் மூலம் தான் பாடிய அக்கால பாடல்களை ஒலிக்க விட்டார். 'யார் அந்த நிலவு' மனதை தாலாட்டியது. இவ்வயதிலும் இப்படி ஒரு வித்யாசமான முயற்சியை மெற்கொண்டிருக்கும் ஒய்.ஜி.எம்.மிற்கு வாழ்த்துகள்.

கதை: ஆந்திர ரயில்வே ஸ்டேஷன் ஒன்றில் சென்னை செல்லும் ரயிலுக்காக காத்திருக்கும் டாக்டர், அரசியல்வாதி மற்றும் ஒரு பெண்மணி. 'எப்ப வரும் எப்படி வரும்னு யாருக்கும் தெரியாது' என ரயில் வருகை பற்றி இவர்களுக்கு அவ்வப்போது சொல்லும் ஸ்டேஷன் மாஸ்டர். மேற்சொன்ன மூவரின் அமைதியை குலைக்க வருகிறாள் ஒரு மர்மத்தாரகை. 'யாரவள்? இவர்களைப்பற்றிய ரகசியங்கள் அனைத்தும் எப்படி இவளுக்கு தெரியும்?' என்பதை சஸ்பன்ஸ் கலந்த காமடியாக இயக்கி இருப்பது ஒய்.ஜி.மகேந்திரன். கதை வசனம் வெங்கட். UAA வின் 61 ஆம் ஆண்டு, 63 வது படைப்பு, ஒய்.ஜி.எம்மின் நாடக வாழ்வின் 52 ஆம் ஆண்டு என குறிப்படத்தக்க மைல்கற்களும் உண்டு.

நீண்ட நேரம் ரயிலுக்கு காத்திருக்கும் சாந்தாபாய்(சுபா கணேஷ்) மற்றும் டாக்டர் நஞ்சுண்டன் ஆகியோருடன் சேர்ந்து கொள்வது நல்லதம்பி(ஒய்.ஜி.எம்). சென்னையின் 'சிறப்பு' தமிழில் கூடுமானவரை பேசி சமாளிக்கிறார். ஐயராத்தில் உபயோகிக்கும் 'பேத்தல்' எனும் வார்த்தை அவரை அறியாமல் வந்து விழுகிறது. டூசன் பத்தாது வாஜ்யாரே. இரட்டை அர்த்த வசனங்கள் பேசுவதில் கில்லியான எஸ்.வி.சேகரையே அசால்ட்டாக ஓவர் டேக் செய்திருக்கிறார் அண்ணாத்த ஒய்.ஜி. அர்த்தமுள்ள நாடகங்களை ஜனரஞ்சகமாக ரசிகர்களுக்கு வழங்குவதில் முன்னோடியான UAA விடமிருந்து இப்படி ஒரு இரண்டாம்/மூன்றாம் தர வசனங்களை ரசிகர்கள் நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் என்பதற்கு ஆங்காங்கே ஒலித்த 'உச்' கொட்டல்களே சாட்சி. 

உதாரணத்திற்கு சுபா கணேஷை பார்த்து 'உன்னையெல்லாம் எவன் ரேப் பண்ண போறான்?' என்பதும், 'இருதய அறுவை சிகிச்சை நிபுணர் தனது ஹாஸ்பிடலை இருதய வடிவில் கட்டி இருக்கிறார்' என ஒரு கேரக்டர் சொல்ல அதற்கு ஒய்.ஜி. 'எனக்கு தெரிஞ்ச ஒரு டாக்டர் பிரசவ ஸ்பெஷலிஸ்ட். அவங்க..." என கேப் விடுவதும் நாடகம் பார்ப்போரிடம் சுத்தமாக எடுபடாமல் போகிறது. வழக்கம்போல இங்கும் சுப்புணியும் குள்ளமான உருவத்தை சகட்டு மேனிக்கு நையாண்டி செய்கிறார் மகேந்திரன். 'உயரம் குறைவானவர்களை இப்படி பேசலாமா?' என ஒரு கட்டத்தில் சுப்புணி கோபமாக பேசுவது 'அட' போட வைத்தாலும் அதன்பிறகும் தொடர்கிறது நல்லதம்பியின் நக்கல்கள். வாய் கொப்பளித்த நீரை ஜெயகுமார் முகத்தருகே மகேந்திரன் உமிழும் காட்சி மட்டரக காமடி அட்டம்ப்ட்.மாத்திக்கனும் மகேந்திரன் மாத்திக்கனும்.
                                                                

இரண்டாம் ரகசியத்தின் உயிர்நாடி சந்தேகமின்றி ஐஸ்வர்யாதான். நள்ளிரவில் மற்ற மூன்று பேரையும் பயமுறுத்தி நடப்பதும், அவர்களின் மனதை உலுக்குவதுமாக அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இவருக்கிது முதல் நாடகம் என்பது ஆச்சர்யம்தான். கேரக்டருக்கு மிகப்பொருத்தமான தேர்வு. சினிமாவில் மார்க்கெட் போன அல்லது அதிலிருந்து விலகி மெகா சீரியல் பக்கம் தஞ்சமடைந்து இருக்கும் தேர்ந்த கலைஞர்கள் அவ்வப்போது மேடை நாடகங்களின் பக்கமும் தங்கள் பார்வையை திருப்பினால் நாடகக்கலை மேலும் சிறக்கும் என்பதற்கு ஐஸ்வர்யாவே (மன) சாட்சி. 

வாஷ்பேஷினில் டாக்டர் DTS எபெக்டில் வாய் கொப்பளிக்கையில் "உடம்பே கொப்பளிக்கிற மாதிரி இருக்கே', 'ரெஸ்ட்டே எடுக்க முடியாத எடத்துக்கு எவன்யா ரெஸ்ட் ரூமுன்னு பேர் வச்சான்?' போன்ற நகைச்சுவை வசனங்கள் மற்றும் மனசாட்சி குறித்த உரையாடல்களில் வெங்கட்டின் எழுத்து மிளிர்கிறது. சுமாராக நடிக்கும் சுபா கணேஷிற்கு இங்கும் பொருத்தமான வேடம்தான். டாக்டர் ஜெயக்குமாரும் ஓக்கே. ஸ்டேஷன் மாஸ்டராக சுப்புணி தனிமுத்திரை பதிக்கிறார். ஒரே காட்சியில் வந்து சென்றாலும் மூத்த நடிகை பிருந்தா எப்போதும் போல நெகிழ்வான நடிப்பு. ஸ்டேஷனுக்கு பின்புறம் ஒளிரும் கோவில் செட்..பத்மா ஸ்டேஜ் கண்ணனின் கை வண்ணம். பிரமாதம் கண்ணன் சார். இரவு நேர திகிலை அரங்கினுள் பரப்பிய அலெக்ஸின் பின்னணி இசையும் பாராட்டத்தக்கது.
 
                                                                               கோவை ஆவியுடன்...

இந்நாடகம் குறித்து குமுதம், தி இந்து உள்ளிட்ட சில நாளிதழ் மற்றும் பத்திரிக்கைகள் எழுதியிருந்த விமர்சனங்களை படித்தேன். அனைத்திலும் பாராட்டு மழைதான். 'குறையொன்றுமில்லை கோவிந்தா' ரேஞ்சுக்கு புகழ்ச்சி மழை. மிச்சம் மீதி இருக்கும் நாடக ரசிகர்களையும் ஏமாற்றி ஏனய்யா இப்படி 'அல்வா' தருகிறீர்கள்?
 
டபுள்/ நேரடி அர்த்தத்தில் அசைவமாக பேசுவது அனைவருக்கும் கை வந்த கலையல்ல ஒய்.ஜி.எம். இட்ஸ் யெ ஸ்பெஷல் கிப்ட்(!). அதை எஸ்.வி.சேகர் பார்த்துக்கொள்ளட்டும். சிறந்த கருத்துடன் சஸ்பன்ஸ் இணைத்து எம்மை ஆவலுடன் பார்க்க வைத்த இரண்டாம் ரகசியத்தின் (தேனாம்பேட்டை சிக்னல் சைஸ்) திருஷ்டி பொட்டாக அமைந்து போனது உங்கள் ஓவர் தி டாப் டயலாக்குகள்தான். தங்கள் ஸ்டைலில் மற்றுமொரு சிறந்த நாடகத்தினை காண காத்திருக்கிறோம். இட்ஸ் அ ஓப்பன் சீக்ரெட் தலிவா!!
................................................................

  
சமீபத்தில் எழுதியது:

ஸ்பெஷல் மீல்ஸ்(14/10/13)  
                                                                 

2 comments:

பால கணேஷ் said...

nice review siva! I wonder the co-incidence that we both published this drama criticism in the same day. Mostly our point of views are also alike - this is the 'Second Surprise' to me! I missed some details like ygm's 63rd drams and 52nd year. In that angle, this is the better review than mine. Superb!

Unknown said...

நல்ல விமர்சனம்!///இந்நாடகம் குறித்து குமுதம்,தி இந்து உள்ளிட்ட 'சில' நாளிதழ்கள்...............///அவாளுக்கு ரொம்ப வேண்டியவா!!!

Related Posts Plugin for WordPress, Blogger...