அட்டகாசம் இடைவேளையில் தியேட்டரை விட்டு ஓடி வந்தபிறகு தல பக்கம் தலை வைக்காமல்தான் கிடந்தேன். பிலாசபி பிரபாகர சகவாச தோஷத்தால் பில்லா - 2 எனும் காலத்தால் அழியா கோலத்தை கண்டு காண்டாகிய வடு இன்னும் ஆறாத நிலையில் இப்போது ஆரம்பம். மாஸ் ஹீரோ படங்களை பக்கா மாஸ் தியேட்டரில் முதல் நாள் முதல் காட்சி பார்க்கும் வாய்ப்பு இதுவரை கிட்டியதில்லை. ரஜினிக்கு பிறகு செமத்தியான ஓபனிங் அஜித்திற்கு மட்டும்தான் என்பதால் அவரது அல்டிமேட் ரசிகர்களுடன் முதல் ஷோ பார்க்கும் ஆவல் மேலிட்டது. நண்பர் ஆரூர் முனா செந்திலின் உபயத்தால் இன்று காலை 6 மணிக்கு வட சென்னை ஸ்ரீ பிருந்தாவில் டிக்கட் கன்பர் ஆனதால் அஞ்சாசிங்கம் செல்வின் மற்றும் ஆரூரார் நண்பர்களுடன் ப்ரசன்ட்.
மும்பையின் முக்கிய இடங்களில் ஆங்காங்கே குண்டு வெடிக்கிறது. யார் அந்த தீவிரவாதி என போலீஸ் தேடல் துவங்குகிறது. அந்த ஆன்ட்டி ஹீரோ அஜித்தன்றி வேறு யாராக இருக்கக்கூடும்? யெஸ். தல இஸ் பேக் வித் சேம் நரச்ச தல, கூலிங் கிளாசு!! அஜித் நடிக்கும் நடக்கும் ஆரம்பம் ஆரம்பம்லேய். கம்ப்யூட்டர் ஹாக்கிங் புலியான ஆர்யாவை மிரட்டி சில காரியங்களை சாதிக்கிறார்கள் அஜித்தும், நயனும். வெயிலுக்கு தெரியவே தெரியாமல் வளர்ந்த காதலி தாப்ஸியுடன் இருவரின் பிடியில் இருந்தும் தப்பிக்க நினைக்கிறார் ஆர்யா. 'அவரோட மறுபக்கம் என்னன்னு உனக்கு தெரியுமா?' என நயன் சோக வயலின் வாசிக்க அதன் பின் துவங்கும் விறுவிறுப்பான காட்சிகளை உள்ளடிக்கியதுதான் இவ்வாரம்பம்.
படம் துவங்கிய சில நிமிடங்களில் வரும் பாடலில் தலயோட நடன அசைவுகளை பார்த்ததும் ROFL. சில சமயங்களில் கவுண்டர் காமடியைக்கூட F1 வேகத்தில் முந்தி என்னை சிரிக்க வைப்பது அய்யாவின் டான்ஸ்தான். அதன்பின் ஆர்யாவின் படு திராபையான ப்ளாஸ்பேக் வேறு. பருமனாக இருப்பவர்களை வாயுபிரிக்கும் சங்கத்தின் தலைவர்களாகவும், எந்நேரமும் சிப்ஸ் பாக்கெட்டுடன் திரியும் சாப்பாட்டு ராமன்களாகவும் காட்டும் சொத்தையான கிச்சு கிச்சு யுத்தி இங்கும். சகிக்கவில்லை விஷ்ணு. படம் நெடுக அஜித்தின் துணை மாப்பிள்ளையாகவே வந்து போகிறார் ஆர்யா. ஆடிட்டர் வீட்டில் இவரை பார்த்து அஜித் கத்தும்போது 'யோவ் ..இருய்யா' என மிரட்டும் இடத்தில் ஆர்யா தி பாஸ். நயன் கவர்ச்சி (முதிர்)கன்னி(!) கம் ஆக்சன் ஜாக்சன். தப்ஸி..நடிப்பில் ஜஸ்ட் பேபி.
ரன்னில் சிக்ஸர் அடித்த அதுல் குல்கர்னி இங்கே சப்ஸ்டிட்யூட். அவருக்கும் காதோரம் சுண்ணாம்பு டை அடித்து ஓரங்கட்டி விட்டார்கள். அட்லீஸ்ட் நம்ம கிஷோர் ஆவது ஸ்கோர் செய்வார் என்று பார்த்தால் 'ஐ ஆம் தி ஹீரோ. ஐ ஆம் தி வில்லன். மேக் இட் சிம்பிள் ' என அஜித்தே மங்காத்தா ஆடியிருக்கிறார். 'தப்ப சரி செய்ய இன்னொரு தப்பு செய்யறது சரியில்ல', 'சாவக்கண்டு பயப்படுறவனுக்கு நித்தம் சாவு. பயப்படாதவனுக்கு ஒரு தரம்தான் சாவு' என தலைவர் பேசும்போதெல்லாம் 'தல தல' என தொண்டை விக்க அவர் நாமகரணத்தை சொல்லி ஓய்கிறது கலைத்தாலும் கலையாத ரசிகர் படை. 'கடன் வாங்குறதும் தப்பு. கடன் குடுக்குறதும் தப்பு' என்று பாட்சாவில் பெரிய தல சொல்லும் ஒலகமகா தத்துவத்திற்கு பிறகு என்னை இருக்கையில் இருந்து விழுமளவு விலா நோக சிரிக்க வைத்தது இத்தத்துவங்கள்தான். உஸ்கோல் வாத்யார் சொன்னதை எல்லாம் யூ மேட் இட் வெரி சிம்பிள் தல.
ஸ்ரீ பிருந்தாவில் ரசிகர்களின் அட்டகாச அமர்க்களம்
இடைவேளைக்கு முன்பு வரை 'விட்டா போதும் ஓடிடலாம்' என எண்ணி இருக்கையில் 'இது முடிவல்ல...ஆரம்பம்' எனும் கர்ஜனை வேறு. 'என்னண்ணே..எப்படி இருக்கு?' என வினவினார் தோழர் அசோக்(அஜித் அல்ல). 'இதுவரைக்கும் பெருசா ஒன்னும் இல்ல. கடைசி அஞ்சி ஓவர்ல 50 ரன் அடிக்கற மாதிரி செகன்ட் ஆப் ஜிவ்வுன்னு இருந்தா நல்லாருக்கும்' என்றேன். முதற்பாதியில் பாதயாத்திரை சென்ற ஹீரோ அதன் பிற்பாடு கார், பைக், படகு என பட்டையை கிளப்ப ஆரம்பிக்க...(சிவ) குமாரு ஹாப்பி. மும்பை 26/11 குண்டு வெடிப்பில் போலீஸ் அதிகாரிகள் பலியானதற்கு முக்கிய காரணமான போலி புல்லட் ப்ரூப் ஆடைகளை மையமாக வைத்து ஜெட் வேகத்தில் பயணிக்கும் விறுவிறுப்பான காட்சிகள் செம. ஹரி பட ஹீரோ/வில்லன்கள் கையில் அருவாளுக்கு பதில் துப்பாக்கிகளும், சுமோவிற்கு பதில் டுகாட்டியும் இருந்தால் எப்படி பறக்குமோ அப்படி சீறுகின்றன சீன்கள். அல்டிமேட் என்டர் டெயின்மென்ட் பாஸ்.
அதிகாலை தியேட்டரில் ஆரூர் முனா மற்றும் செல்வினுடன் நான். 'நாங்க எங்க கடமையைத்தான செஞ்சோம்'
யுவனின் இசையில் பாடல்கள் எதுவும் மனதில் ஒட்டவில்லை. குறிப்பாக அமெச்சூர் தனமாக அவை படமாக்கப்பட்டிருப்பது...டொக் டொக். மலை உச்சியில் இருந்து நெஞ்சில் சுடப்பட்டு காட்டாறில் விழும் அஜித் எப்படி மீண்டு மோட்டாரில் சிறகடிக்கிறார், உலகின் மிகப்பெரிய வங்கி பரிமாற்ற மோசடிகள் உட்பட பற்பல ஹாக்கிங் வேலைகளை எப்படி சர்வம் ஆர்யாவால் சர்வ சாதாரணமாக செய்யக்கூடும் என எண்ணினால்..சாரி பாஸு. நீங்க ஒரு கம்ப்யூட்டர் சாம்பராணி. முதல் பாதியில் குஸ்காவும், அதன் பின் லெக் பீஸும் போட்டதே பெருசு. எந்த அரிசில செஞ்சா என்ன?
ஆரம்பம் - அட்வான்ஸ் தீபாவளி வெடி.
..............................................................
அவுட்டோர் ஷூட்:
பிருந்தா தியேட்டரை 100% ஆக்ரமித்து இருந்தது இளவயது ரசிகர்கள்தான். 'எப்படி மாஸ் காட்னாரு பாத்தியா தல' என இடைவேளையில் தளபதி ரசிகர் ஒருவரை வறுத்தெடுத்துக்கொண்டு இருந்தனர் சிலர். படம் முடிந்து வெளியே வந்தபோது காலை 9 மணிக்காட்சிக்கு காத்திருந்த பக்தர்கள் ஏக்கத்துடன் 'பாஸ்..எப்படி இருக்கு?' என ஆங்காங்கே விசாரிக்க ஜனாவின் ஜனத்திரளை தாண்ட திணற வேண்டி இருந்தது. பட்டாசு, குத்தாட்டம், பாலாபிஷேகம் என அமர்க்களப்பட்டது தியேட்டர் வாசல். 'எந்த படம் வந்தாலும் வரட்டும். தல படம் எப்போதுமே மிரட்டும்', 'தோனி அடிச்சா சிக்ஸர்டா, தல அடிச்ச ஸ்ட்ரெச்சர்டா' அதிரடி வாசகங்களுடன் பல்ப்பம் சாப்பிடும் பொடுசுகள் படங்கள் சேர்த்தடங்கிய பேனர்கள் நாலாபுறமும். எத்தனை அஜித் பாலாக்கள், பில்லா குமார்கள்....சும்மா சொல்லக்கூடாது. Simply Electrifying Atmosphere!!
........................................................................