CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Sunday, September 22, 2013

The Lunch Box
ஆஸ்கர்...கமலுக்கு பிறகு  அவ்விருது வாங்க திராட்சை தோட்டத்தில் அதிகமுறை எம்பியது அமீர்கான். இந்திய அரசும் அவருக்கு கூடுமானவரை தோள் கொடுத்தது. லகான், தாரே ஜமீன் பர், பீப்ளி லைவ் என அண்ணனின் படைப்புகள் ஆஸ்கருக்கு இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்டன. ஒன்றும் நடக்கவில்லை. ஆனால் ஒரே நேரத்தில் ரெட்டை ஆஸ்கரை அள்ளி வந்தார் தமிழ்மகன் ரஹ்மான். தற்போது அத்திராட்சைக்கு குறி வைக்கும் பாலிவுட் நபர்களில் முக்கியமானவர் நடிகர் இர்பான் கான். இந்தியா - ப்ரான்ஸ் - ஜெர்மனியுடன் கரன் ஜோஹர், அனுராக் காஷ்யப் மற்றும் இர்பான் இணைந்து தயாரித்திருப்பதுதான் இந்த லஞ்ச் பாக்ஸ். 'ஆஸ்கர் தந்தே தீரனும்' பிரச்சாரத்தை முழுவீச்சில் மேற்கொண்டிருக்கிறார் இர்பான். அந்த அளவிற்கு ஒர்த்தா இப்படம்? பார்க்கலாம்.

மும்பை மாநகரின் பிரசித்தி பெற்ற டப்பாவாலாக்கள் பற்றி பலருக்கு தெரியும். வீட்டில் இருந்து சமைத்து தரப்படும் உணவுகளை சரியான இடத்தில்/அலுவலகத்தில் டெலிவெரி செய்வதில் பல்லாண்டுகளாக பெயர் பெற்றவர்கள். சர்வதேச சான்றிதழும் அவர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. மிக அரிதாக மட்டுமே டப்பாக்கள் இடம் மாறும். அப்படி மாறும் ஒரு டப்பா மத்திய வயதுடைய இருவரின் வாழ்வில் நிகழ்த்தும் மாற்றங்களை சொல்கிறது கதை.

அரசு அலுவலகம் ஒன்றில் அக்கவுன்டன்ட் ஆக வேலை பார்ப்பவர் சாஜன் பெர்னான்டஸ்(இர்பான்). இன்னும் ஒரு மாதத்தில் ஓய்வு பெறப்போகும் நபர். அவருடைய மனைவி இறந்து ஆண்டுகள் 30 ஆகி விடுகிறது. வீட்டருகே இருக்கும் உணவகத்தில் இருந்து இவருக்காக உணவு தயாரிக்கப்பட்டு டப்பாவாலாக்கள் மூலம் அலுவலகம் வந்து சேர்கிறது. ஆனால் ஏதோ ஒரு தவறினால் இலா(நிம்ரத்)  எனும் குடும்பத்தலைவி தன் கணவருக்கு அனுப்பும் டிபன் பாக்ஸ் இர்பானுக்கு டெலிவரி செய்யப்படுகிறது. அந்நிகழ்வு தொடரவும் செய்கிறது. டிபன் பாக்ஸ் மூலம் இருவரும் 'காதல் கோட்டை' டைப்பில்  கடிதப்பரிமாற்றம் செய்து கொள்கிறார்கள். அதன்பின் நடந்ததென்ன? திரையில் காண்க.
                                                            


முதலைந்து நிமிடங்களுக்கு டப்பாவாலாக்கள் எப்படி குறிப்பிட்ட இடத்திற்கு உணவினை கொண்டு செல்கிறார்கள் என்பதை காட்டி விட்டு அத்தோடு க்ளைமாக்சில் மட்டும் ரயிலில் பாட்டு பாடுவதாக காட்டி இருக்கிறார்கள். அரசாங்க ஊழியராக இர்பான். பெரும்பாலும் நடிப்பில் ஏமாற்றாதவர் இம்முறை யதார்த்தத்தை பேணிக்காக்க அநியாயத்திற்கு அண்டர்ப்ளே செய்திருக்கிறார். கேங்க்ஸ் ஆப் வாசேபூர் மூலம் இந்திய சினிமா ரசிகர்களை திரும்பிப்பார்க்க வைத்த நவாசுதீன் சித்திக்கி ஸ்டார் வேல்யூவை கூட்ட மட்டுமே பயன்பட்டிருக்கிறார். இர்பானின் பணியை தொடர வரும் இவர் முதல் சில காட்சிகளில் பம்மி பேசுவது படு செயற்கை. பெரிய ஸ்கோப் இல்லாததால் சட்டியில் இருப்பதை விட மிகக்குறைவாகவே அகப்பையில் கொண்டு வந்திருக்கிறார்.

இவ்விருவரை விட நடிப்பில் முந்தி நிற்பது 'கேட்பரி டேரி மில்க்' புகழ் நிர்மத் கவுர்தான். அழகிலும், நடிப்பிலும்...ஹாட் ஹாட்டர். இர்பானுக்கு கடிதம் போட உசுப்பேற்றுவது மேல் வீட்டு ஆன்ட்டி. கே.பாலச்சந்தர் பட ஸ்பெஷல் பெண் கேரக்டர் போல கடைசி வரை முகத்தை காட்டாமலே போய் விடுகிறார். 
                                                               

  
முன்னணி ஊடகங்கள் மூலம் பெரும் ஆதரவு பெற்றிருக்கிறது இந்த லஞ்ச் பாக்ஸ். அதேசமயம் எதிர்க்கேள்விகள் எழுப்பப்படாமலும் இல்லை. மிக அரிதான சந்தர்ப்பத்தில் டப்பாவாலாக்கள் டிபன் கேரியரை இடம் மாற்றுவது நடந்திருக்கிறது என்றாலும் 15 நாட்கள் தொடர்ந்து ஒரே டிபன் கேரியரை தவறான நபருக்கு டெலிவரி செய்ததாக வரலாறு இல்லை. ஆனால் ஹிந்தியில் காதல் கோட்டை கட்ட டப்பவாலக்களின் தொழில் சிரத்தையை இயக்குனர் காவு வாங்கி இருப்பது ஏன் என்பதுதான் முக்கியமான கேள்வி. சாதாரண திரைப்படங்கள் என்றால் பரவாயில்லை. மூன்று தேசம் மற்றும் தி க்ரேட் படைப்பாளிகளின் கூட்டு தயாரிப்பில் இப்படி ஒரு லாஜிக் ஓட்டை இருப்பதை எப்படி நியாயப்படுத்த முடியும்? 'ஆஸ்கர் தந்தால்தான் ஆச்சு' என்று குதிக்கும் இர்பான்தான் பதில் சொல்ல வேண்டும்.

15 நாட்கள் தனக்கு இர்பான் வீட்டருகே இருக்கும் உணவகத்தில் இருந்து உணவு வந்தாலும் அம்மாறுபட்ட சுவை குறித்து சின்ன கேள்வி கூட எழுப்பாமல் இருக்கிறார் இலாவின் கணவர். பிரமாதம். அதிகபட்சம் 3 ஸ்டார் அளவிற்கு தகுதியான படத்தை 4 அல்லது அதற்கு மேற்பட்ட ஸ்டார்கள் தந்து உச்சத்தில் ஏற்றிவிட்டிருக்கிறார்கள் விமர்சகர்கள். என்னைப்பொருத்தவரை சிறந்த food based movie வரிசையில் ஸ்டான்லி கா டப்பா(ஹிந்தி) மற்றும் உஸ்தாத் ஹோட்டல்(மலையாளம்) படங்களுக்கு அடுத்ததாக வெண்கலக்கிண்ணம் மட்டுமே பெற தகுதியுடையது இந்த எவர் சில்வர் லஞ்ச் பாக்ஸ்.
.................................................

சமீபத்தில் கிடைத்த தகவலின்படி தி குட் ரோட் எனும் குஜராத்தி திரைப்படம் இந்தியா சார்பாக ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பாக் மில்கா பாக், காய் போ சே, இங்க்லீஷ் விங்க்லீஷ், விஸ்வரூபம்(தமிழ்), செல்லுலாய்ட்(மலையாளம்), ஷப்தோ(பெங்காலி) மற்றும் லஞ்ச் பாக்ஸ் ஆகிய படங்கள் இறுதிக்கட்டம் வரை சென்று ஆஸ்கர் கனவு நிறைவேறாமல் திரும்பியுள்ளன.
................................................


சமீபத்தில் எழுதியது:

யா யா


  

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...