CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Saturday, September 21, 2013

North 24 Kaatham                                                                      


ஓணம் பண்டிகையையொட்டி கணிசமான படங்கள் கேரளத்தில் ரிலீசாகி இருப்பினும் சென்னையில் வெளியானவை மூன்று மட்டுமே. மம்முட்டியின் தெய்வதிந்தே ஸ்வந்தம் கிளீடஸ், வினீத்தின் ஏழாமதே வரவு மற்றும் அறிமுக இயக்குனர் அனில் ராதாகிருஷ்ண மேனனின் நார்த் 24 காதம். முதலிரண்டின் ட்ரெயிலர்களும் படம் பார்க்கும் ஆவலை தூண்டவில்லை. நார்த் 24 காதம் பார்க்கும் ஆவல் ஏற்பட்டதற்கான ஒரே காரணம் ஃபஹத் மட்டுமே. என்னுடைய அபிமான நடிகர்கள் பட்டியலில் இருந்த நானா படேகர் மற்றும் நஸ்ருதீன் ஷா ஆகியோர் முன்பு போல தொடர்ந்து நடிப்பதை குறைத்துக்கொண்டு விட்டதால் எஞ்சி இருப்பது இர்பான் கான், மனோஜ் பாஜ்பாய் மற்றும் ஃபகத் மட்டும்தான். இம்முறையும் அவர் மீது வைத்திருந்த நம்பிக்கை நிச்சயம் வீண் போகவில்லை.

கதை: ஐ.டி.துறையில் வல்லுனராக இருக்கும் ஹரி பிறருடன் சகஜமாக பழகுவதில் உடன்பாடற்றவன். மிகவும் சுத்தமான சூழலை கடைப்பிடிக்க எண்ணுபவன். எர்ணாகுளத்தில் இருக்கும் அலுவலகத்தில் இருந்து திருவனந்தபுரம் சென்று தான் ப்ரோக்ராம் செய்த மென்பொருள் பற்றி ப்ரசென்டேசன் செய்ய ரயிலில் பயணிக்கிறான். பந்த்திற்கு பெயர் போன கேரளத்தில் துவங்குகிறது மீண்டும் ஒரு ஹர்தால். முன்னாள் மார்க்சிஸ்ட் தோழர் கோபாலன் (நெடுமுடி வேணு) NGO வில் பணி புரியும் நாராயணி(ஸ்வாதி) ஆகியோருடன் ஒரு காத தூர பயணத்தை அரசுப்போக்குவரத்தின் துணையின்றி எப்படி மேற்கொள்கிறான் ஹரி? இடையில் சந்திக்கும் இன்னல்கள், பாடங்கள் என்னவென்பதை பசுமை போர்த்திய கடவுளின் தேசத்தில் உலவியவாறே முன்னோக்கி நகர்கிறது நார்த் 24 காதம்.

உடல்நிலை சரியின்றி கிடக்கும் மனைவியை காண கோழிக்கோடு செல்லும் நெடுமுடி வேணுவிற்கு துணையாக தமது பயணத்தை ஒத்திப்போட்டு உடன் செல்கிறார்கள் ஃபஹத்தும், ஸ்வாதியும். ஆட்டோ, ஆம்புலன்ஸ், போலீஸ் ஜீப் என வெவ்வேறு வாகனங்களில் சின்ன சின்ன தூரத்தை கடக்கிறார்கள் மூவரும். கண்களை கொள்ளை கொள்ளும் கேரளத்தின் இயற்கை அழகை அதிகாலை முதல் நள்ளிரவு வரை பல்வேறு ஒளி அமைப்புகளுடன் உள்வாங்கி இருக்கும் ஜெயேஷ் நாயரின் கேமராவிற்கு முத்தங்கள் கோடி. இவ்வாண்டு வெளியான இந்தியப்படங்களில் சிறப்பாக ஒளிப்பதிவு செய்யப்பட படைப்புகளில் நார்த் 24 காதம் நிச்சயம் இடம்பெறும். கோவிந்த் மேனனின் அருமையான பின்னணி இசையும் பேசப்படும்.

'ஐ.டி.க்காரன், போலீசுக்கு மட்டும் பந்த் இருந்தாலும் வேலை இருக்கும்' உள்ளிட்ட வசனங்கள் ஆங்காங்கே மிளிர்கின்றன.  
      

இயல்பிலேயே பயந்த சுபாவம் கொண்ட கேரக்டரில் ஃபஹத் பட்டையை கிளப்பி இருக்கிறார். குறிப்பாக அசுத்தமான இடங்கள் மற்றும் மனிதர்களை கண்டு பதறும்போது...நடிப்பு ராட்சயன்யா நீ. கக்கத்தை துடைத்துக்கொண்டு வரும் நபர், வேறொருவனை துரத்தும் போலீஸ், பொது கழிப்பிடத்தில் தரப்படும் சில்லறை உள்ளிட்ட ஒவ்வொன்றிக்கும் இவர் தரும் ரியாக்சன்கள்..சிம்ப்ளி அவுட் ஸ்டாண்டிங். அற்புதமான துணை நடிகராக வந்து செல்கிறார் மூத்த நடிகர் நெடுமுடி வேணு. இறுதியில் தனது வீட்டை நோக்கி நடந்து செல்லும் காட்சியில் மனதை நெகிழ்த்தி விடுகிறார் மனிதர். சல்யூட் சாரே!!

சுட்டித்தனம் செய்யாமல் தெத்துப்பல் சிரிப்புடன் ஸ்வாதியும் படம் முழுக்க அழகாக பயணிக்கிறார். ஃபஹத்தின் தாயாக புதுப்புது அர்த்தங்கள் கீதா மற்றும் தலைவாசல் விஜய். வந்தார்கள். சென்றார்கள். மகாநதி உள்ளிட்ட பல்வேறு படங்களில் தனி முத்திரை பதித்த தலைவாசல் விஜய்யை கோடம்பாக்கம் மறந்து போனதா? யானைப்பசிக்கு சோளப்பொறி என்றாலும் பரவாயில்லை. சாம்பிள் பொறி மட்டும் கொறித்து விட்டு சென்றிருக்கிறார் விஜய். இனிவரும் மலையாள படங்களில் நல்ல கேரக்டர்கள் அமையும் என எதிர்பார்க்கலாம்.  

மூன்று முக்கிய கேரக்டர்களுக்கும் உதவும் கௌரவ வேடத்தில் வந்து செல்வது நம்மூர் பிரேம்ஜி அமரன். சில நிமிடங்களே வந்தாலும் மனதில் நிற்கிறார். வண்டியோட்டும் வடக்கத்தி பெண்ணை காதல் மணம் புரிந்த தமிழரான பிரேம்ஜி தம்பதியருக்கு இன்னொருவரின் மொழி புரியாது. 'பாஷை தெரியாமல் எப்படி குழந்தை?' என வினாவொன்று எழ அதற்கு பிரேம்ஜி அடிக்கும் சிக்ஸர் 'காதலுக்கு மொழி ஏன் சார்? எவ்வளவோ பண்ணிட்டோம். 'இத' பண்ண மாட்டமா?'. கெக்கே பிக்கே கேரக்டரில் தம்பியை அழகு பார்க்கும் வெங்கட் பிரபு...அவரது திறமையை விரைவில் வெளிக்கொண்டு வாருங்கள் சாமி.

பல்வேறு சிறப்பம்சங்கள் இப்படத்தில் இருப்பினும் சில கேள்விகள் எழாமல் இல்லை. கள்ளுக்கடைக்கு வரும் இளைஞர்களின் பைக்கில் பயணிக்கும் ஸ்வாதி சட்டென தனித்து விடப்படுகிறார். ஏனென்று விளங்கவில்லை. அடுத்து இதுதான் என நாம் எண்ணும் இடங்களில் யதார்த்தமாக வேறொரு காட்சி வைத்திருக்கிறார் இயக்குனர். சிறப்பு. ஆனால் ஹர்தால் பாதிப்பு குறித்து இன்னும் சில கோணங்களில் அழுத்தமாக திரைக்கதை அமைத் திருக்கலாம். மற்றபடி நார்த் 24 காதம் ஒரு இனிமையான நடைப்பயண அனுபவம். 

சமீபத்தில் வெளியான மலையாள ரோட் மூவிக்களில் குறிப்பிட்டு சொல்ல வேண்டியவை துல்கர் நடித்த நீலாகாசம் மற்றும் ஃபஹத் நடித்த அஞ்சு சுந்தரிகள். இவ்விரண்டையும் விஞ்சி நிற்கிறது நார்த் 24 காதம்.  
 
ஃபஹத் எனும் மிகச்சிறந்த நடிகனின் கிரீடத்தில் மற்றுமோர் வைரக்கல்.

 நார்த் 24 காதம் - டோன்ட் மிஸ். 
...............................................................


சமீபத்தில் எழுதியது:
2 comments:

கலியபெருமாள் புதுச்சேரி said...

நான் இதுவரை மலையாள படங்கள் பார்த்ததில்லை..ஆர்வமாக உள்ளது..

ஜெட்லி... said...

nalla print vara varaikkum wait pannanum... theatre kku porathae arithaagi pochu...

Related Posts Plugin for WordPress, Blogger...