சர்வர் சுந்தரம், எதிர்நீச்சல், மேஜர் சந்திரகாந்த் போன்ற பல்வேறு மேடை நாடகங்களால் அக்காலத்தில் தனக்கென முத்திரை பதித்த இயக்குனர் கே.பாலச்சந்தரின் கதையமைப்புடன் ஆகஸ்ட் 2013 இறுதியில் தொடர்ந்து நான்கு நாட்கள் அரங்கேற்றப்பட்ட நாடகம்தான் 'இடியுடன் கூடிய அன்பு மழை'. 'குறுக்கு வழியில் ட்ராபிக் ஜாம்' எனும் நகைச்சுவை நாடகத்தின் மூலம் ரசிகர்களை கட்டிப்போட்ட இயக்குனர் விவேக் ராஜகோபால் இந்நாடகத்தின் வசனகர்த்தா என்பதால் பார்த்தே ஆக வேண்டுமென்பதில் மாற்று சிந்தனை இல்லாமல் போனது.
கிட்டத்தட்ட தேவி தியேட்டருக்கு இணையான கொள்ளளவு கொண்ட ஆழ்வார்பேட்டை நாரத கான சபா நாடகம் தொடங்க சில நிமிடங்கள் ஆவதற்கு முன்பே நிரம்பி வழிந்தது. சில மாதங்களுக்கு முன்பாக 'சத்திய வாக்கு' கோவில் செட்டால் ரசிகர்களை பிரமிக்க வைத்தது பத்மா ஸ்டேஜ் கண்ணனின் அரங்க வடிவமைப்பு. அதுபோல இங்கு திரை விலகிய மறுகணமே நம் புருவத்தை உயர்த்த வைத்தது குமார் ஸ்டேஜ் கிருஷ்ணமூர்த்தியின் பிரம்மாண்ட செட். செல்வந்தர் வீட்டு வரவேற்பறை பொருட்கள் அனைத்தும் எவ்வித செயற்கையும் இன்றி அசலாக அலங்கரிக்கப்பட்டு இருந்தன. என் நாடக அனுபவத்தில் இத்தனை ரிச்சான செட்டை இதுவரை கண்டதில்லை. கலை ரவியின் ஒளி அமைப்பும் பாராட்டத்தக்கது.
கதை: செல்வந்தர் கணபதியின்(அருண் குமார்) ஒரே மகள் சந்தியா(ஷாலினி). மகளின் பிறந்த நாளன்று கூட நேரம் செலவிட முடியாமல் பிஸினஸே கதியென்று கிடக்கிறார் அவர். அவளது தோழியரே தமது பாய் ப்ரெண்ட் புராணம் பாடி வெறுப்பேற்ற தனக்கும் ஒரு பாய் ப்ரெண்ட் இருப்பதாக காட்டிக்கொண்டால்தான் அவர்களது வாயை மூட முடியும் என முடிவெடுக்கிறாள். குடிகார தந்தையுடன் காலத்தை கடத்தும் கல்லூரி மாணவன் சந்தோஷ்(ரோகன்). ஷாலினியின் நண்பனாக நடிக்க சம்மதிக்கிறான். அவனது மேல்படிப்பு மற்றும் வருமானத்திற்கு உதவி செய்கிறாள் ஷாலினி. பின்பொரு நாளில் இருவருக்கும் நடக்கும் ஈகோ யுத்தம் எங்கு போய் முடிகிறது? வாட்ச் இட் ஆன் ஸ்டேஜ்.
யார் இந்த ஷாலினி? நடிப்பில் அமர்க்களப்படுத்தி இருக்கிறார். டிபிக்கல் கே.பி. திரைப்பட நாயகிகள் போல தேர்ந்த வசன உச்சரிப்பு, முகபாவங்கள். அப்பாவி இளைஞனாக ரோகனின் போட்டி நடிப்பும் பலே. சில காட்சிகளே வந்தாலும் ட்ரங்கன் டாட் காத்தாடி ராமமூர்த்தி கொடி கட்டி பறக்கிறார். பரிக்ஷை எனும் நாடகத்தில் சிறப்பான பங்காற்றிய கார்த்திக் பட் இங்கு ஒரே ஒரு காட்சியில் மட்டும் வந்து சென்றுள்ளார். மூத்த நடிகர் முரளியும் அவ்வாறே.
கிரிதரன் மற்றும் அமுதனின் பொருத்தமான பின்னணி இசையும், சுந்தரராஜனின் இயக்கமும் அன்பு மழை சீராக பொழிய பெருங்காரணிகளாக இருந்தன. சத்யம் தியேட்டரில் படம் பார்க்கும்போது பாப்கார்ன் சாப்பிட 10 மகனிடம் ரூபாய் கேட்கிறார் காத்தாடி. 10 ரூபாய்க்கு யார் சார் பாப்கார்ன் விற்கிறார்கள். வசனகர்த்தா விவேக் ராஜகோபால்தான் பதில் சொல்ல வேண்டும். மற்றபடி பல்வேறு வசனங்கள் நாடகத்தை விறுவிறுப்புடன் கொண்டு செல்ல உதவுகின்றன.
தனிமை ஒருவரை பெருந்துயரில் ஆழ்த்துகையில் தனக்கென இருக்கும் தனித்திறமையின் துணைகொண்டு மன நிறைவு அடையலாம் என்பதை இலகுவாக சொல்கிறது இந்த இடியுடன் கூடிய அன்பு மழை. இளைய பட்டாளத்தின் சிறப்பான நடிப்பினால் மேடை நாடகத்தில் புது வசந்தத்தை வீசச்செய்து இருக்கும் கே.பாலச்சந்தர் அணிக்கு சியர்ஸ்!!
.....................................................................
3 comments:
நல்ல விமர்சனம்...
மேடை நாடகங்கள் எப்படி இருக்கும்னு நேர்ல பார்த்த அனுபவம் இல்லை.. ஒவ்வொருமுறை நீங்க மேடை நாடகங்கள் பத்தி பதிவு போடும் போதும் பார்க்கற ஆவல் அதிகமாகிட்டே போகுது...
இனி மேடை நாடகம் பார்த்தே ஆகனும்கிற முடிவுக்கு வந்திட்டேன்...
Post a Comment