CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Saturday, September 28, 2013

ஓநாயும் ஆட்டுக்குட்டியும்
நகைச்சுவைக்கு பெயர் போன ஜாம்பவான்கள் வீற்றிருந்த தமிழ் சினிமா தற்போது பொன் முட்டையிடும் வாத்தைப்போல ஒருபக்கம் அறுபட்டுக்கொண்டிருக்கிறது என்றால் மறுபக்கம் ‘வெறும் சிரிப்புதானா? சீரியஸ் படமே வரக்கூடாதா? ச்சே’ என்று கோடம்பாக்க பிரம்மாக்கள் சிலர் அந்து நொந்து சினிமா என்கிற பெயரில் மெகா சீரியல்/குறும்பட/ஆவணப்பட/பிரச்சார நெடி கலந்த சீரியஸ் படங்களை தந்து ரசிகனை திக்கெட்டும் முக்காட வைத்துக்கொண்டிருக்கும் பொற்காலமிது. எப்போதேனும் அங்காடித்தெரு, ஹரிதாஸ், பீட்சா போன்ற படங்கள் ஒளியை பாய்ச்சி விட்டு செல்லும். அப்படி நீண்ட இடைவெளிக்கு பிறகு இதோ வந்திருக்கிறது ஓநாயும், ஆட்டுக்குட்டியும்.  

'கொரிய/ஜப்பானிய படங்களை சுட்டெடுக்கும் சும்பன் மிஷ்கின் படத்திற்கு ஏன் போக வேண்டும்?' எனும் வைராக்யத்துடன் தவிர்த்தவை யுத்தம் செய், நந்தலாலா மற்றும் முகமூடி. அதையும் மீறி இப்படத்திற்கு செல்ல ஒரே காரணம் இளையராஜா. மொத்தம் ஆறே பக்க அளவிற்குதான் வசனம். மற்றபடி இதன் ஜீவநாடி மேஸ்ட்ரோவின் முன்னணி இசைதான் எனும் தகவல் காதில் விழ மறுகணம் ரிசர்வ் செய்த டிக்கட் தகவல் அலைபேசியில் விழுந்தது.
 
யார் ஓநாய், யார் ஆட்டுக்குட்டி என படம் பார்த்தவர்கள் சொல்வதை விட சிறுமி ஒருத்திக்கு மிஷ்கின் கதை சொல்வதை கேட்டுப்பாருங்கள். மனதை கூரிய நகங்களால் அழுத்தமாக வருடிச்செல்லும். வழக்கு எண் 18/9 ஸ்ரீக்கு இது சிறுத்தை பாய்ச்சல். மிரட்சியான கண்கள், குழம்பித்தவிக்கும் மனம் என சாமுராய் வாளாக இயக்குனரால் பட்டை தீட்டப்பட்டு ஜொலித்திருக்கிறார். நார்காடிக் கேஸ்ல தள்ளிடுவோம்என சி.பி.சி.ஐ.டி. அதிகாரி மிரட்டும்போது ஸ்ரீ தரும் டிபிக்கல் மாடர்ன் யூத் எக்ஸ்ப்ரஷன் பிரமாதம்.மிகச்சொற்பமான வசனத்துடன் அருமையான அன்டர்ப்ளே மற்றும் ஹீரோயிசம் கலந்த மிஷ்கினின் நடிப்பு சிம்ப்ளி ஆவ்சம். சூழ்நிலையின் கட்டாயத்தால் ஓநாய் ஆட்டுக்குட்டியாகவும், ஆட்டுக்குட்டி ஓநாயாகவும் மாறும் தருணங்கள் ஒவ்வொன்றும் மாற்றுசினிமாவுக்கான அடுத்த படிகள். புலனாய்வு அதிகாரியாக பிரபல இசை விமர்சகர் ஷாஜி. ‘நடிச்சுருவமா’ எனும் அகத்தின் அழகு முகத்தில் எட்டிப்பார்ப்பினும் அது கேரக்டரின் தேடலுடன் ஒத்துப்போவது sheer coincidence.  ‘டாக்டரை எந்த சட்டப்பிரிவில் உள்ளே போடலாம்’ வசனத்தின் மூலம் எப்படியோ பிரமோட் ஆகிறார்.        
ஓநாய் மற்றும் ஆட்டுக்குட்டிகளை அடையாளம் தேடி கரடி, புலிகள் மற்றும் நரிகள் பின்தொடர இருள் சூழ்ந்த சென்னையை உள்ளூர் ஆட்களுக்கு அணு அணுவாக அடையாளம் காட்டிக்கொண்டே பதுங்கிப்பாய்கிறது பாலாஜி ரங்காவின் கேமரா. ‘எந்த இடத்தில் தேவையற்ற இரைச்சலை தருகிறது’ என வீம்பாக காதுகளை கூர்தீட்டி வைத்திருக்கும்போதெல்லாம் ‘ராஜா கைய வச்சா அது ராங்கா போகுமாடா’ என புடரியில் அறைகிறது முன்னணி இசை கோர்ப்பு. ஓரிரு இடங்களில் மட்டும்(நிசப்த காட்சிகளுக்கு முன்பாக) பின்னணி இசை சட்டென நிறுத்தப்பட்டது போன்ற உணர்வைத் தந்தது. எத்தனை ஆண்டுகள் ஆனாலும்...ஒரு ஊர்ல ஒரே ராஜாதான். ‘என்ன ஆனாலும் நீங்கதான் என் படத்துக்கு ம்யூசிக் போடனும். எத்தனை நாளானாலும் காத்துட்டு இருப்பேன்’ என்று முதற்பட இயக்குனர் முதல் பிரசித்தி பெற்ற பிரம்மாக்கள் வரை இன்றும் ராஜாவை நச்சரித்து வருகிறார்கள். ஆனால் சிங்கத்திற்கு தேவை கறியே அன்றி தயிர் சாதமில்லை என்பதை அவர்கள் உணர்ந்ததில்லை. கவுதம் உட்பட. இங்கு மிஷ்கின் ராஜாவிற்கு படைத்திருப்பதோ கொழுத்த ஆட்டுக்கறி. இதைத்தான் ராஜாவும், அவரது ரசிகர்களும் எதிர்பார்க்கிறார்கள் என்பதை இனியாவது மற்ற படைப்பாளிகள் உணர்ந்தால் நலம்.

சிப்ஸ் சாப்பிட்டுக்கொண்டே இருப்பவன், சாமுராய் பாணியில் சண்டை போடும் இருவர், தம்பா நோயாளியாக இருக்கும் வார்டில் ஷுவுடன் இருக்கும் நபர்கள், வுல்ஃபை தேடும் படலத்தில் க்ளைமாக்ஸ் வரை அலையும் மங்குனி காவல்படை போன்ற திணிப்பு/குறைகளை மிஷ்கின் தவிர்த்து இருக்கலாம்.

மற்றபடி எந்த கூட்டத்திலும் சேராமல் தமிழ் சினிமா எனும் காட்டில் Loan Wolf ஆக வலம் வந்திருக்கும் மிஷ்கினை வெகுவாக பாராட்டலாம். இறுதியில் வித்யாசமான முறையில் போடப்பட்ட படக்குழுவினர் விவரங்கள் கூட மக்களை கட்டிப்போட்டது சுவாரஸ்யம். உருப்படியான சினிமாவை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த ரசிகர்கள் சிறந்த ஒலி/ஒளி அமைப்புள்ள தியேட்டரில் மட்டுமே இப்படைப்பை பார்க்குமாறு வலுக்கட்டாயமாக பரிந்துரைக்கிறேன்.  


ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - மிஷ்கினின் ப்ளாக் மேஜிக்   

.................................................................

12 comments:

rajamelaiyur said...

இசையின் ராஜா என்றுமே இளையராஜா தான். . . .

rajamelaiyur said...

மூடர்கூடம் போல் இல்லாமல் இந்த படமாவது வெற்றி பெற்றால்தான் இதுபோல படங்கள் அதிகம் வர வாய்ப்புள்ளது.

aavee said...

இந்தப் படத்திற்கும் ஓரிரு திரைகளே கிடைத்திருப்பது வருந்தத்தக்கது..

பல்பு பலவேசம் said...
This comment has been removed by the author.
Anonymous said...

வணக்கம் நண்பரே தங்களின் பதிவுகள் மிகவும் அருமை தங்களின் பதிவுகள் மேலும் பல வாசகர்களிடம் சென்றடைய இந்த தளத்தில் தங்களின் பதிவுகளை இணையுங்கள்

http://maatamil.com/

நன்றி \
மாதமிழ்

உலக சினிமா ரசிகன் said...

‘நச்’

வெங்கட் நாகராஜ் said...

நல்ல விமர்சனம்.

நிச்சயம் தில்லியில் திரையிட மாட்டார்கள்.....

கலியபெருமாள் புதுச்சேரி said...

வித்தியாசமானதொரு விளக்கமான விமர்சனம்...

Vadakkupatti Raamsami said...

‘எந்த இடத்தில் தேவையற்ற இரைச்சலை தருகிறது’ என வீம்பாக காதுகளை கூர்தீட்டி வைத்திருக்கும்போதெல்லாம் ‘ராஜா கைய வச்சா அது ராங்கா போகுமாடா’ என புடரியில் அறைகிறது முன்னணி இசை கோர்ப்பு. ஓரிரு இடங்களில் மட்டும்(நிசப்த காட்சிகளுக்கு முன்பாக) பின்னணி இசை சட்டென நிறுத்தப்பட்டது போன்ற உணர்வைத் தந்தது. எத்தனை ஆண்டுகள் ஆனாலும்...ஒரு ஊர்ல ஒரே ராஜாதான். ‘என்ன ஆனாலும் நீங்கதான் என் படத்துக்கு ம்யூசிக் போடனும். எத்தனை நாளானாலும் காத்துட்டு இருப்பேன்’ என்று முதற்பட இயக்குனர் முதல் பிரசித்தி பெற்ற பிரம்மாக்கள் வரை இன்றும் ராஜாவை நச்சரித்து வருகிறார்கள். ஆனால் சிங்கத்திற்கு தேவை கறியே அன்றி தயிர் சாதமில்லை என்பதை அவர்கள் உணர்ந்ததில்லை. கவுதம் உட்பட. இங்கு மிஷ்கின் ராஜாவிற்கு படைத்திருப்பதோ கொழுத்த ஆட்டுக்கறி. இதைத்தான் ராஜாவும், அவரது ரசிகர்களும் எதிர்பார்க்கிறார்கள் என்பதை இனியாவது மற்ற படைப்பாளிகள் உணர்ந்தால் நலம்.///
,.****************


கமல் சொல்வார் "சிவாஜி என்னும் சிங்கத்துக்கு தயிர் சாதம் போட்டே கொன்றுவிட்டார்கள்" என்று...அது மாதிரி இசையரஜாவிடம் "தயிர் சாதம் படைத்தால் போதும்" என பி.வாசு துவக்கி வைத்த அந்த டிரெண்டை உடைத்த மிஷ்கினுக்கு நன்றி(யப்பா மிஷ்கினை புகழ ஒரு விஷயம் கூடவா உங்களுக்கு கிடைக்கவில்லை என கேட்டவர்களுக்கு இதுதான் பதில்).அய்யா மிஷ்கினுக்கு ஒரு வேண்டுகோள் இசையராஜாவை ஒரு அறையில்(உங்களுக்கு அபிமான இருட்டு அறையாகவே இருந்துவிட்டு போகட்டும்) பூட்டி வைத்து தொடர்ந்து இது மாதிரி முழு விருந்தை படைக்க வைக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

ரூபக் ராம் said...

காட்சிகள் மிகக் குறைவாக இருப்பதால் திரையில் காண்பது சற்று கடினமாக இருந்தாலும், திரையில் தான் காண்பேன்

Unknown said...

விமர்சனத்துக்கு நன்றி!முகநூலில் தேறாது என்று காமெண்ட் பரவ விடப்பட்டதால்,மிஸ் பண்ணியோர் ஏராளமாம்!

dharmeshwar maheshwaran said...

சார் அது 'loan wolf' இல்ல 'lone wolf' :)

Related Posts Plugin for WordPress, Blogger...