CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Thursday, September 19, 2013

யாருடா இங்க அரசு? நீயா?                                                                         

உஸ்கோல் முதல் கல்லூரி வரை படித்ததெல்லாம் அரசு/அரசு சார்பு பாடசாலைகள் என்பதால் 'எல்லோரும் இந்நாட்டு மன்னர்' கிரீட சூட்டு விழாவில் க்யூவில் முந்தி நிற்கும் ஆட்களில் நானும் ஒருவன்  எனும் கனவு அப்பப்ப வந்து போவதுண்டு. காரியம் முடிய 'யாருடா இங்க அரசு?' என்று திருமலை வில்லன் போல ஒவ்வொரு அதிகாரியாக கேள்வி கேட்டு பிறகு 'அவர்தான் அரசு' என்று கை காட்டப்பட்டு, சுத்தலில் விடப்பட்டு இறுதியில் மூர்ச்சையாகி நமக்கு நாமே கோலி சோடா அடித்துக்கொண்ட வரலாறும் பலரைப்போல எனக்கும் இல்லாமலா போகும்? அந்த மகோன்னத அனுபவங்களை கடக்காமல் இருப்பவனை எப்படி இந்தியன்னு ஒத்துக்கனும்ங்கறேன்??

 கல்லூரி சான்றிதழ் வாங்க சென்னை பல்கலைக்கழகத்தில் காதல் பரத் ஆக சுற்றிய அனுபவம் என்றும் மறவாது. இல்லாத சப்ஜெக்டை சான்றிதழில் சேர்த்து அதில் நான் பாஸும் ஆனதாக ஒரு புண்ணியவான் செய்த பிழையை திருத்த அலைந்த நாட்களது. முதல் நாள் காலை 10 மணிக்கு ஷார்ப் அண்ட் கூர்ப்பாக குறிப்பிட்ட கட்டிடத்தை அடைந்தேன். 'இந்த சரித்திர பிழைய சரி செய்ய யார பாக்கணும் சார்?'. கேள்வி கேட்டது குத்தமா?. விஸ்தாரமான அறையில் பத்து பேர் தீவிரமாக விகடன் படிப்பது, மிக்சர் சாப்பிடுவது கருமமே கண்ணாக இருந்தனர். 

'அவரைப்பார்', 'அவரைப்பார்' 'அவரைப்பார்' என வலமிருந்து இடம் கை காட்டப்பட்டு இறுதியில் முதலில் கேட்டவரிடமே வந்து சேர்ந்தேன். 'கொஞ்ச நேரம் வைட் பண்ணு தம்பி. டீ குடிச்சிட்டு வந்துடறேன்'. பிறகு மதிய உணவு. மீண்டும் டீ. ஷிப்ட் முடிந்தே விட்டது. இதே திரைக்கதை மேலும் சில நாட்கள் நீடித்தது. பிறகு ஒரு வழியாக சான்றிதழ் கைக்கு வந்து சேர்ந்தது தனிக்கதை.

'இந்த ஆதார் அட்டைய வாங்க நாலு நாளா அலைய விடறாங்க. வேலைக்கு போவாம..நிம்மதி இல்லாம..கொடுமை சிவாம்மா' என்று பக்கத்து தெரு ஆன்ட்டி புலம்பி விட்டு சென்றார். மறுபடியும் கவர்மென்ட் மாப்ளைங்க சாவகாசமா என்று கிலி அடித்தது. 'மவனே...நீ நிக்கற. அவ்ளோதான்' அம்மா வேறு பொங்கிவிட.. நோ அப்பீல். ஆதார் டோக்கன் வாங்க தர்மப்படி க்யூவில் கால் கடுக்க நின்றிருந்தபோது 'எவன் க்யூல நிப்பான். எப்படி உள்ள பூந்து வேலைய காட்டறேன் பாரு' என்று பஜ்ஜிக்கடைக்காரர் மகன் சவடால் பேசிக்கொண்டு இருந்தான்.

'பாதி மொளகால உங்கப்பன் போடற தத்துனூண்டு பஜ்ஜிய மூக்குல ஒழுக கால் மணி நேரம் திங்கற பய. இப்ப கொஞ்சம் வளந்ததும் ஆட்டமா போடுற. பலே வெள்ளையத்தேவா' என நான் கருவிக்கொண்டு நின்று கொண்டிருக்க 'அடிங்கு...பொம்பளைங்க காத்தால இருந்து நிக்கறது கண்ணுக்கு தெர்ல. தெனாவட்டா பேசினு கெடக்கற' என்று ஏரியா அக்காக்கள் தம்பியை தனியே வாரிக்கொண்டு போய் பின்னால் கடாசினார்கள்.       

நக சைஸ் பேப்பரில் நம்பர் எழுதி 'இந்த டோக்கன் பத்திரம். நாளைக்கி கொண்டு வாங்க.' என்றார் ஒரு அதிகாரி. இன்று காலை 8 மணிக்கு ஏரியா அரசுப்பள்ளி ஒன்றில் ஆதார் க்யூவில் சங்கமம். வேலைக்கு சென்ற நாள் முதல் மழைக்கு கூட பள்ளிக்கு ஒதுங்காததால் ஜன்னலோரம் சில வகுப்புகளை நோட்டம் பார்த்தேன். பெஞ்ச்/சேர்கள் ஒழிக்கப்பட்டு ஆங்காங்கே கம்பளம் விரிக்கப்பட்டு இருந்தது. ஒரே இடத்தில் சிலை போல் அமர்ந்த காலம் போய் சுதந்திரமாக குழந்தைகள் அமர்ந்து இருந்த காட்சி மனதிற்கு ஆறுதல்.

இங்கே ஆதார் கதவுகள் திறக்க சில நிமிடங்களே இருந்தன. எமக்கு பின்பிருந்த பாய் அம்மா 'டேய்..அடுத்து நாந்தான் நிக்கறேன். சீக்கிரம் வந்து தொலைடா. இப்ப போயி குளிக்க போறங்கிற' என்று மகனை அலைபேசியில் அதட்டிக்கொண்டு இருந்தார். எனக்கான அழைப்பு வந்ததும் உள்ளே நுழைந்தேன். லாப்டாப், மூன்று சூட்கேஸ் சகிதம் ஐ.டி. லுக்கில் ஒரு யூத் இருந்தார். எங்கே சபாரி சூட்/கோல்ட் ப்ரேம் கண்ணாடி போட்ட அதிகாரி இருப்பாரோ எனும் முன்பதட்டம் தணிந்தது. 'கண்ணை தெறங்க, பத்து வெரல் ரேகையையும் இந்த மிஷின்ல வைங்க. உங்க மொபைல் நம்பர்'...அரசிற்கு பலனளிக்கும் புலன் விசாரணை ஒருவழியாக முடிந்தது.

 'போட்டோ எடுக்கணும். நேரா பாருங்க' என்று கேட்டதோடு விட்டாலென்ன? 'தலை சீவலையா? அங்க இருக்கு பாருங்க சீப்பு' என லாப்டாப் முதுகிற்கு பின்னே புத்தம் புது சீப்பை வேறு எடுத்து தந்தார்(எனக்குன்னே வருவீங்களா?).'இவன் எப்பதான் தலை சீவி இருக்கான்'...அம்மா முறைக்க..அமோகம். அடுத்து தம்பி சொன்ன செய்தி 'இந்த சீட்டை வச்சிக்கங்க. அட்டை மூணு மாசத்துல வீடு தேடி வரும்'.   

பேசிக்கொண்டு இருக்கும்போதே பரபரப்பாக குடும்பத்துடன் உள்ளே நுழைந்து எமக்கு நடுவில் நின்றார் ஒரு குடிமகன் 'அடுத்து நாங்கதாங்க'. யூத்ததிகாரி அவரிடம் 'வாங்க. உங்கள்ல மதன் யாரு?'. 'அவன் இப்ப வீட்டு வாசல்ல நிக்கறான். வந்துருவான்'....தலையில் கை வைத்தவாறு பெருமூச்சு விட்டார் ஐ.டி. தம்பி. இன்று மாலைக்குள் அந்த சீப்பு தம்பிக்கு அவசியம் தேவைப்படும்.

'பரவால்ல. சட்டுன்னு முடிச்சிட்டு பட்டுன்னு வந்துட்டோம்' என ஆசுவாசப்படுத்தியவாறே 'தி ஹிந்து' (ஆங்கில) பேப்பரை புரட்டினால் பக்கம் ஒன்பதில் முழுப்பக்க அரசு விளம்பரம்.  செக்க செவேல் ஆன்ட்டி கையில் ஒரு அட்டையுடன் நிற்க அருகில் சமையல் எரிவாயு படம். 'கேஸ் மானியம் இனி உங்கள் வங்கி அக்கவுன்ட்டிலேயே..உங்க காசு உங்களுக்கே. இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்வீர் மக்களே'.             

ஓட ஓட தூரம் கொறையல...

.................................................................

11 comments:

aavee said...

ஹஹஹா.. இவிங்க எப்பவுமே இப்படித்தான் பாஸு, நம்மள ஓட விட்டு வேடிக்கை பாக்குறதே பொழப்பா போச்சு!!

aavee said...

இவ்வளவு சிரமப்பட்டு, சின்னப்பட்டு, சின்னாளப்பட்டு நீங்க வாங்கியது ஆதார் கார்டு இல்ல நல்ல தம்பி.. அது வெறும் டம்மி தான்.. ஆதார் கார்டு இனிமே தான் அடிச்சு தருவாங்க..இன்னொரு முறை ஓட தயாரா இருங்க!!

உலக சினிமா ரசிகன் said...

தம்பி அலுத்துக்க வேண்டாம்.
வருங்காலத்தில் ‘ஆதார்’ இல்லாமல்
அமைஞ்சிகரை கூட போக முடியாது.

‘ஆதாரை’ அவசரத்துக்கு அடகு வைக்க முடியுமா?

திண்டுக்கல் தனபாலன் said...

இது கொசுறு... இனிமேல் தான் ஆரம்பம்...!!!

சசிமோஹன்.. said...

யாருடா இங்கே அரசு என திருப்பாச்சி வில்லன் போல //////

பாஸ் அது திருப்பாச்சி படம் இல்ல திருமலை - சென்ரல் நாலேச்சு ;-)

”தளிர் சுரேஷ்” said...

ஆதார் அட்டை சுவாரஸ்ய பகிர்வு சிறப்பு!

கோகுல் said...

மொத சிலிண்டர் எடுக்கும் போது சிலிண்டர் பதிவு செய்யும் போது மான்ய பணம் போட்டாங்க,அடுத்த சிலிண்டர் பதிவு பண்ணி டெலிவரிக்கும் வந்துடுச்சு,இன்னும் பணம் வரலயேனு கேட்டா டெலிவரி முடிஞ்சு ஏழு நாளைக்குள்ள போடுவாங்கலாம்,இன்னியோட மூணு நாளாகுது,பாப்போம்.

arasan said...

ஆதார் அட்டைன்னா சும்மாவா ?...

வெங்கட் நாகராஜ் said...

அட ஆதார்.... :)

ரொம்பவே படுத்தறாங்க! :(

சீனு said...

அதான இவன் என்னிக்குத்தான் தல சீவி இருக்கான்.. அம்மான்னா சும்மா இல்ல :-)

அண்ணன் மெட்ராஸ் அதீத புத்திசாலி என்பதை மெட்ராஸ் யுனிவர்சிட்டியே ஒத்துக் கொண்டது... அவனவன் படிச்ச பாடத்துல பெயில் ஆகும் போது நீங்க மட்டும் எப்படின்னே ஜாதகத்துலையே இல்லாத படத்துல பாசானீங்க :-)))))

! சிவகுமார் ! said...

கருத்திட்ட அனைவருக்கும் நன்றி. 'திருமலை' மாற்றிவிட்டேன் சசி. நன்றி.

Related Posts Plugin for WordPress, Blogger...