CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Friday, August 23, 2013

சந்திரமோகனின் தலைமுறைகள்


ஆடி ஆவணி நாடகத்திருவிழா,
YGP ஆடிட்டோரியம்,
திருமலை சாலை, தி.நகர்,
சென்னை - 600 017.
                                                                     

தலைப்பை பார்த்ததுமே 'என்னடா இது வழக்கம்போல கூட்டுக்குடும்ப வாழ்க்கையின் மகத்துவத்தை புதிய தலைமுறைக்கு உணர்த்தப்போகும் இன்னொரு நாடகமா?' என்று எண்ணியவாறே அரங்கினுள் நுழைந்தேன். அதுபோலத்தான் துவக்க காட்சிகளும் அமைந்தன. ஆனால் அதன் பிறகு மூன்று பேரின் சிறப்பான நடிப்பினால் தலைமுறைகள் தழைத்தோங்கியது என்பதே உண்மை. மதர் க்ரியேஷன் வழங்கும் தலைமுறைகள் நாடகத்தின் கதை, வசனம் மற்றும் இயக்கம் சி.வி.சந்திரமோகன். தயாரிப்பு ஜெயகுமார். பிரதான கேரக்டர் ஆர்யாவாக நடித்திருப்பதும் இவர்தான்.

தேசப்பற்று மிக்க முதியவர் ஆர்யா தமது மகன், மருமகள் மற்றும் பேரனுடன் வாழ்ந்து வருகிறார். பல்வேறு தேசத்தலைவர்கள் வந்து சென்ற இடமாதலால் தான் தங்கியிருக்கும் அந்தக்கால வீட்டின் மீது அதீத பாசம் கொண்டவர். ஒவ்வொரு சுதந்திர நாளன்றும் வீட்டிற்கு வெள்ளையடித்து, சிறார்களுடன் இணைந்து வீட்டு மாடியில் கொடியேற்றுவது வழக்கம். 

பேரன் மோகன்தாஸ் காந்திக்கு(விஷ்வஜெய்) அவ்வப்போது தேசாபிமான உணர்வை போதிப்பதும் ஆர்யாவின் கடமைகளுள் ஒன்று. தன் மகனை விஞ்ஞானி ஆக்க கனவு காணும் சுபாஷ்(மது) இதனால் வெறுப்படைகிறார். 'தயவு  செய்து என் மகனை சன்யாசி ஆக்கிவிட வேண்டாம்' என தந்தை ஆர்யாவிடம் மன்றாடுவதோடு ஒரு கட்டத்தில் வீட்டை இடித்து அபார்ட்மென்ட் கட்டவும் முயற்சிக்கிறார் சுபாஷ். அச்செய்தி கேட்டு பதறும் ஆர்யா 'புனிதமான இவ்வீட்டின் பெருமை தெரியாமல் இப்படி செய்வது நியாயமா?' என்று இடிப்பு முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்க மனஸ்தாபம் முற்றுகிறது. இறுதியில் நடந்தது என்ன என்பதை மேடையில் காண்க.


ஒரே நாடகத்தில் மூன்று சிறப்பான நடிப்பை நான் பார்த்தது இதுவே முதல்முறை. ஆர்யாவாக ஜெயக்குமார் வாழ்ந்திருக்கிறார் எனச்சொன்னால் அது மிகையில்லை. பிரமாதமான உடல்மொழி. கோரிக்கை ஒன்றை முன்வைத்து மகனின் கையைப்பற்றி அழும்போது ரசிகர்களிடமிருந்து கைத்தட்டல்களை அள்ளுகிறார். வழக்கமான தேசப்பற்று மிக்க கேரக்டர்களில் இருந்து ஜெயகுமார் தனித்து தெரிவதற்கு காரணம் பரிபூரண அர்ப்பணிப்பு. ஜெயகுமாருக்கு மேக் அப் போட்ட குமாருக்கும் வாழ்த்துகள்.

சிறுவன் விஷ்வஜெய் ஒவ்வொரு காட்சியிலும் துளியும் மேடைப்பதற்றம் இன்றி அருமையாக வசனம் பேசியது பாராட்டத்தக்கது. நாடகம் முடிந்ததும் மாமிகள் பலர் தம்பியின் கன்னத்தை கிள்ளி 'அமர்க்களம்டா கொழந்தே. என்ன க்ளாஸ் படிக்கற?' என பாராட்டு பத்திரங்களை வாசித்த வண்ணம் இருந்தனர். சக கலைஞர்களிடம் விஷ்வா பற்றி விசாரித்ததில் ''ஏழாம் வகுப்பு படிக்கறான். 'இந்த கேரக்டரை நான் பெர்பெக்டா பண்றேன்'' என்று விரும்பி முன்வந்ததாகவும் கூறினார்.
 
தலைமுறைகளில் சுபாஷ் எனும் முக்கிய கதாபாத்தித்தில் நடித்திருப்பது மது. துவக்கம் முதல் இறுதி வரை அதிகப்படியான காட்சிகள்/வசனங்கள் இவருக்குத்தான். நாடகம் பார்க்கிறோம் எனும் உணர்வை மறக்கடித்து இயல்பாக பெர்பாமன்ஸ் செய்திருக்கிறார் மது. சீரியஸ் ரக மேடை நாடகங்களில் இப்படி ஒரு consistent பெர்பாமன்சை வெகு அரிதாகவே காண முடியும். ஹாட்ஸ் ஆப் மது.

கோகிலாவாக கற்பகம், கிருஷ்ணாவாக சி.வி.குமார் மற்றும் போராவாக சிவகுமார் ஆகியோரின் நடிப்பிலும் குறை சொல்ல ஏதுமில்லை. 

தலைமுறைகளில் அரங்கின் பின்னணியில் பங்கேற்ற குழு: இசை - குக பிரசாத், அரங்க வடிவமைப்பு - மோகன் பாபு(உஷா ஸ்டேஜ்), அரங்க நிர்வாகம் - சாய்ராம். ஒளி அமைப்பு - கிருஷ்ணன்.    

'நல்ல மார்க்கை விட நல்ல மார்க்கமும் முக்கியம்' என ஆங்காங்கே பளிச்சிடுகின்றன இயக்குனர் சந்திரமோகனின் வசனங்கள். அக்காலத்தில் தூர்தர்சனில் பிரதி செவ்வாய்க்கிழமை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த தமிழ் நாடகங்கள் சிலவற்றை இயக்கியும் இருக்கிறார் சந்திரமோகன்.

ஒவ்வோர் ஆண்டும் நாரத கான சபா கோடை நாடக விழாவில் புதிய நாடகங்கள் அரங்கேற்றப்படுவது வழக்கம். அவ்விழாவின் நிறைவாக கார்த்திக் பைன் ஆர்ட்ஸ் வழங்கும் விருதுகள் பிரசித்து பெற்றவை. இவ்வாண்டு 'தலைமுறைகள்' ஆறு விருதுகளை தட்டிச்சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது:

சிறந்த நடிகர் - மது 

சிறந்த நடிகை - கற்பகலட்சுமி 

சிறந்த வசனம் - சி.வி.சந்திரமோகன்

சிறந்த இயக்கம் - சி.வி.சந்திரமோகன்

சிறந்த குழந்தை நட்சத்திரம் - விஷ்வஜெய்

சிறந்த தயாரிப்பு - மதர் கிரியேஷன்ஸ்
 ...........................................................................


.........................................
சமீபத்தில் எழுதியது:

............................................


3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பதிவர் திருவிழாவில் உங்கள் நால்வரின் நாடகம் எதிர்ப்பார்க்கிறேன்...

திண்டுக்கல் தனபாலன் said...

யாருடைய தளத்திற்கும் செல்லாத (காசு அல்ல) உங்கள் நால்வரின் நாடகம் எதிர்ப்பார்க்கிறேன்...

கோவை நேரம் said...

நாடக விமர்சனம் அருமை..எங்க ஊர்லயும் போடறாங்க...இது வரைக்கும் போனதே இல்லை..மேடை நாடகம் பார்த்ததே இல்லை..பார்க்கனும்..உங்க விமர்சனத்துக்காவது ஏதாவது ஒரு நாடகம் பார்க்கனும்...

Related Posts Plugin for WordPress, Blogger...