CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Tuesday, August 20, 2013

அகஸ்டோவின் ஜெயில் வீடுஆடி ஆவணி நாடகத்திருவிழா,
YGP ஆடிட்டோரியம்,
திருமலை சாலை, தி.நகர்,
சென்னை - 600 017. 

                                                                     

இம்மாதம் முழுவதும் வார இறுதி நாட்களில் நாடக ரசிகர்களுக்கு விருந்து படைத்துக்கொண்டிருக்கும் ஆடி ஆவணி நாடகத்திருவிழாவில் சென்ற வாரம் நான் பார்த்தது அகஸ்டோ க்ரியேஷன்ஸின் 39 வது படைப்பான ஜெயில் வீடு. தயாரிப்பு கீதாஞ்சலி ராஜா. எழுத்து மற்றும் இயக்கம் அகஸ்டோ.

பெரும்பாலும் கூட்டுக்குடும்பம், தலைமுறை இடைவெளி அல்லது தேசப்பற்று போன்ற களத்திலேயே சுழன்று கொண்டிருக்கும் மேடை நாடகங்களுக்கு மத்தியில் ஜெயில் வீடு தனித்துவமாக தெரிந்ததே முதல் ஆறுதல். அக்காலத்தில் கிராமத்து பின்னணியை மையமாக கொண்டு சக்கை போடு போட்ட நாடகம் கோமல் ஸ்வாமி நாதனின் தண்ணீர் தண்ணீர். அதை இவ்வாண்டு மீண்டும் அரங்கேற்றியபோது பார்த்து மகிழ்ந்தேன். அதற்குப்பின் கிராமச்சூழலில் சிறந்த வட்டார வழக்குடன் கலைஞர்கள் பேசி நடித்த நாடகமென ஜெயில் வீட்டை சொல்லலாம்.

அழகிய வள்ளியூர் எனும் கிராமத்தில் ஜெயில் போன்று வடிவமைக்கப்பட்ட வீட்டைக்காணும் பொறியாளர் மதிவாணன்(போத்தி லிங்கம்) மற்றும் அவருடன் பணியாற்றும் சிவகுமார்(கார்த்திகேயன்) அதற்கான காரணத்தை ஊர் மக்களிடம் கேட்கிறார்கள். அவர்கள் கை காட்டும் நபர்தான் 'கதை சொல்லி' தாமோதர வாத்தியார்(ஜெயகுமார்). 

மற்றவர்களைப்போல வரலாற்றை ஒப்புவித்து நடையை கட்டுவதல்ல அவர் பாணி. சின்ன சின்னதாக சம்பவங்களை சுவாரஸ்யப்படுத்தி அதற்கு ஒரு சஸ்பன்சையும் வைப்பதுதான் அவரது சிறப்பு. அதுபோலத்தான் ஜெயில் வீடு பற்றிய கதையையும் அவ்விருவருக்கும் சொல்கிறார். அழகிய வள்ளியூரில் பல ஆண்டுகளுக்கு முன்பாக நடந்த அக்கதையின் சுருக்கம்:  

அழகிய வள்ளியூரின் செழிப்பான பண்ணையார் சித்திரவேல்(ராஜ்). ஊர்த்திருவிழா ஏற்பாட்டில் அவர் மும்முரமாக ஈடுபட்டிருக்கும் போது மிலிட்டரியில் பணியாற்றும் தனது ஆருயிர் நண்பன் ராசக்கொடி(வெங்கட கிருஷ்ணன்) வந்திருக்கும் செய்தி அறிகிறார். தோப்போன்றில் சந்திப்பு நடைபெறுகிறது. ராசக்கொடி கொண்டுவந்திருக்கும் துப்பாக்கியால் குருவி ஒன்றை சுடச்சொல்லி வற்புறுத்துகிறார் சித்திரவேல். சற்று பொறுமை காக்குமாறு ராசக்கொடி கூறியும் சித்திரவேல் கேட்காமல் துப்பாக்கியை பிடுங்கி சுட குண்டு தவறுதலாக ஊரின் முக்கிய மரமேறி மீது பட்டு உயிரை பறிக்கிறது. 

தான் செய்தது தவறுதான். போலீசிடம் சரணடைகிறேன் என சித்திரவேல் கூறினாலும் திருவிழா வேலைகள் பாதிக்கப்படும் என்பதை உணரும் ராசக்கொடி பழியை தானே ஏற்று சிறை செல்கிறார். அதனால் அதிர்ச்சிக்கு ஆளாகும் அவரது மனைவி பிரபாவதி(உமா சங்கர்) எடுக்கும் முடிவுதான் கதையின் மையப்புள்ளி. 
                                                                

இந்நாடகத்தின் சிறப்பென சொல்வதற்கு பல விஷயங்கள் உண்டு. நிலவொளியின் பின்னணியில் மோகன் பாபுவால் போடப்பட்ட செட் மற்றும் கலை அவர்களின் ஒளி அமைப்பு, பெரம்பூர் குமாரின் ஒப்பனை, குக பிரசாத்தின் பின்னணி இசையென அனைத்தும் கதை மற்றும் நடிப்பிற்கு பக்கபலமாக அமைந்துள்ளது பாராட்டத்தக்கது.

தாமோதர வாத்தியார் வைக்கும் ஒவ்வொரு சஸ்பன்சிற்கும் மதிவாணன் மற்றும் சிவகுமாருடன் சேர்ந்து ரசிகர்களும் 'அடுத்தது என்னவென்று சட்டென சொல்லுங்கள்' என பரிதவிக்குமாறு சம்பவங்களை கோர்த்திருக்கிறார்  இயக்குனர் அகஸ்டோ. அவ்வகையில் சிறந்த கதை சொல்லி தாமோதர் வாத்தியாரா அல்லது அகஸ்டோவா என்று ஒரு விவாதமே வைக்கும் அளவிற்கு சபாஷ் சரியான போட்டி!!

ஜெயில் வீட்டில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியது என்று என்னைக்கேட்டால் சந்தேகமின்றி சித்திரவேலாக நடித்த ராஜ் தான். இளம் பண்ணையாருக்கேற்ற தோற்றம், சாலப்பொருந்திய ஆடை. ஊர் வழக்கில் உரையாடும் பாங்கில் பிரமாதப்படுத்தி இருக்கிறார். குறிப்பாக மனசாட்சியுடன் அவர் பேசுவதாக வரும் காட்சி அருமை. உமா சங்கர் மற்றும் எஸ்.கே. ஜெயகுமார் இருவரின் தேர்ந்த நடிப்பும் ஜெயில் வீட்டிற்கு தூண்களாக அமைந்துள்ளன.

இவ்வாண்டு நடைபெற்ற கார்த்திக் பைன் ஆர்ட்ஸ் கோடை நாடக விழாவில் சிறந்த இயக்குனர்(அகஸ்டோ), சிறந்த நடிகர்(ராஜ்), சிறந்த குணச்சித்திர நடிகர்(ஜெயகுமார்) விருதுக்கான பிரிவில் ஜெயில் வீடு இரண்டாம் இடத்தை வென்றது குறிப்பிடத்தக்கது. இத்துடன் தனது இயல்பான நடிப்பிற்கு சிறப்பு விருதை உமா சங்கர் வென்றிருக்கிறார். தெலுங்கின் முன்னணி நாளிதழான 'ஈநாடு' சமீபத்தில் இந்நாடகத்தை பாராட்டி சிறப்புக்கட்டுரை ஒன்றையும் வெளியிட்டு உள்ளது. 

வித்யாசமான களத்தில் விறுவிறுப்பான கதையை எதிர்பார்க்கும் நாடக ரசிகர்கள் ஒரு இனிமையான ரிமான்ட் அனுபவத்திற்கு செல்ல விரும்பினால் உங்களுக்காக காத்திருக்கிறது இந்த ஜெயில் வீடு.
.................................................................................
      3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சிறப்புக்கட்டுரை வெளியிடும் அளவிற்கு...! சிறப்பான நாடகம் தான்...

கலியபெருமாள் புதுச்சேரி said...

எங்களுக்கு கொடுத்துவைக்கவில்லை இதையெல்லாம் பார்க்க.

Unknown said...

விமரசனத்துக்கு நன்றி.மேடையில் நாடகம் மனக்கண்ணில் தோன்றியது!

Related Posts Plugin for WordPress, Blogger...