CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Saturday, August 17, 2013

கூத்தபிரானின் - உன்னால் முடியும் தாத்தாதி.நகரில் இருக்கும் ஒய்.ஜி.பி. ஆடிட்டோரியத்தில் இம்மாத துவக்கம் முதல் ஆடி ஆவணி நாடகத்திருவிழா ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் நடைபெற்று வருகிறது.  அதில் நான் பார்த்த முதல்  நாடகம் நவபாரத்தின்  'உன்னால் முடியும் தாத்தா'. 

ஆல் இந்தியா ரேடியோவின் பாப்பா மலர் நிகழ்ச்சி மூலம் கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் குழந்தைகளுக்காக கதை சொல்லி புகழ் பெற்ற 'வானொலி அண்ணா' கலைமாமணி கூத்தபிரான் நடித்த இப்படைப்பிற்கு கதை, வசனம், இயக்கம் என்.ரத்னம். ஒப்பனை பெரம்பூர் குமார்.
                                                                   
                                                                      Image: madrasbhavan.com

மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தனது இரு மகன்களின் வீட்டில் மாறி மாறி வாசம் செய்கிறார் கூத்தபிரான். அலுவலகத்தில் வேலை செய்வோரின் பெற்றோர்களுக்கு அடிப்படை கணினிப்பயிற்சி அளித்து அதில் தேர்வு பெறுவோருக்கு சில ஆயிரங்கள் பணமும் தரப்படும் எனும் அறிவிப்பை கண்டு மகிழ்கிறார் மூத்த மகன். தந்தையை வற்புறுத்தி அப்பயிற்சியில் சேர்த்தும் விடுகிறார். பிறகு நடந்தது என்ன என்பதை கூட்டுக்குடும்ப தத்துவம் கலந்து மேடையேற்றி இருக்கிறார்கள்.                                                                       
 
முதுமையின் காரணமாக மைக் அருகே நின்று பார்வையாளர்கள் காதில் படும்படி பேச கூத்தபிரான் தடுமாறினாலும் நாடகம் முழுக்க அனைத்து வசனங்களையும் பிழையின்றி உச்சரிப்பது அபாரம். 'வாவ்' என பேரன் கூச்சலிடும்போது 'பூனை எதுனா குறுக்க போச்சா' போன்ற நகைச்சுவை வசனங்களில் புன்முறுவல் பூக்க வைக்கிறார். 

இதர கேரக்டர்கள் நடிப்பும் பாஸ்மார்க் வாங்கிவிடுகிறது. திடப்பொருள் ஒன்றை சுமப்பது போல வரும் காட்சிகளில் வெற்று பை அல்லது சூட்கேஸை கையில் வைத்திருப்பது, 'மாமி. உங்க வீட்டு காபியா எனக்கு வேண்டாம்' எனும் அரதப்பழசான வசனத்தை சலிக்காமல் இங்கும் பேசுவது நெருடல். பெரிதாக சொல்லிக்கொள்ளும்படி புதுமைகள் ஏதுமில்லாவிடினும் முதுபெரும் கலைஞர் கூத்தபிரானின் சிரத்தையான நடிப்பிற்கான ஒரு முறை பார்க்கலாம். 

நாடகம் முடிந்தபிறகு அவருடன் சிறிதுநேரம் அளவளாவியபோது 'சமீபத்தில் கோவையில் இந்நாடகத்தை மேடையேற்றியபோது சிறந்த வரவேற்பு கிடைத்தது. இன்று பெரிதாக கூட்டமில்லையே' என்று வருத்தப்பட்டார். போதுமான விளம்பரம் இல்லாததுதான் அதற்கு முக்கிய காரணம். இதற்கடுத்து நான் பார்த்த நாடகங்களான சபாஷ் மாப்ளே, ஜெயில் வீடு குறித்த விமர்சனங்கள் விரைவில்.                                                                  

                                                        
ஆடி ஆவணி நாடகத்திருவிழாவில் இனி அரங்கேறவுள்ள நாடகங்கள்:

17/08/13 சனி: காத்தாடி ராமமூர்த்தியின் சூப்பர் குடும்பம்.

18/08/13 ஞாயிறு: சந்திரமோகனின் தலைமுறைகள்.

24/08/13  சனி: டி.வி.ராதாகிருஷ்ணனின் காத்தாடி.

25/08/13 ஞாயிறு: மூர்த்தியின் அம்புப்படுக்கை.

30/08/13 வெள்ளி: மாலியின் நிழல் தேடும் மரங்கள்.

31/08/13 சனி: வரதராஜனின் ஆசைக்கும் ஆஸ்திக்கும்.

01/09/13 ஞாயிறு: நாகர்கோயில் கிருஷ்ணனின் பக்த ஆண்டாள்.

அனைத்து நாடகங்களும் மாலை 6.30 மணிக்கு தொடங்கும் என அறிவித்து இருப்பினும் இதுவரை நான் பார்த்த நாடகங்கள் 6.50 மணிக்கு முன்பு துவங்கவில்லை என்பது உபரி தகவல்.
...........................................................................              
               

                                                            

3 comments:

MANO நாஞ்சில் மனோ said...

நாடகத்துக்கும் விமர்சனம் போட ஆரபிச்சாச்சா நடக்கட்டும்.

! சிவகுமார் ! said...

அண்ணே.. இதுதானா உங்க டக்கு?

Unknown said...

மெல்ல,மெல்ல அழிந்து வரும் நாடகக் கலைக்கு உங்கள் பங்களிப்பு போற்றுதற்குரியது.உங்கள் பகிர்வின் மூலம் ரசிகர்கள் அதிகரிப்பதும் சாத்தியமானதே!

Related Posts Plugin for WordPress, Blogger...