CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Thursday, August 15, 2013

பாசமலர் ரிட்டர்ன்ஸ்                                                                       
                                                                        Image: madrasbhavan.com

நீண்ட வருடங்களுக்கு பிறகு திரையில் தோன்றி வசூலில் 'கர்ணன்'தான் என்பதை கர்ணன் சென்ற ஆண்டு நிரூபித்தான். இப்போது பாசமலரின் மறுமலர்ச்சிக்கான தருணம். கர்ணன் டிஜிட்டல் வெர்ஷன் பெரிதாக சொல்லிக்கொள்ளும்படி இல்லாமல் ராஜ் டி.வி.யில் பார்ப்பதை விட சற்று சுமாராகத்தான் வெண்திரையில்  காட்சி அளித்தது. தற்போது 35mm கருப்பு வெள்ளை பாசமலரை முழுத்திரையில் தெளிவாக பார்க்கும் வண்ணம் ப்ரசாத் லாப் தொழில்நுட்ப கலைஞர்கள் உழைப்பை சிந்தி இருப்பதாக செய்திகள் வந்தன. ஒரு சில மங்கலான காட்சிகளைத்தவிர 95% பளிச்.  ஹாட்ஸ் ஆப் ப்ரசாத் & கோ. 30 நிமிட காட்சிகளை ட்ரிம் செய்து 3 மணி நேரப்படமாக தந்திருக்கிறார் பீம்சிங்கின் புதல்வர் (எடிட்டர்) லெனின்.  1961 ஆம் ஆண்டிற்கு பிறகு மீண்டும் மலர்ந்திருக்கும் பாசமலர் எப்படி இருந்தது? பார்க்கலாம்.

நான் இப்படம் பார்த்தது சத்யம் ஸ்டுடியோ 5 திரையில் (அறிந்தோ அறியாமலோ தியேட்டர் வாசலில் சிங்கம் 2 மற்றும் சொன்னா புரியாது பேனர்களுக்கு நடுவே பாசமலர். நடிப்புலக சிங்கங்களான சிவாஜி - சாவித்ரி வாழ்ந்திருக்கும் இக்காவியம் குறித்து சொன்னா புரியாது). ஆயிரம் அண்ணன் தங்கைப்பாச படைப்புகள் தமிழ் சினிமாக்களில் வந்து சென்றாலும், இனி வந்தாலும்...பாசமலரை அடித்துக்கொள்ள வாய்ப்பே இல்லை. 

படிக்காத மேதை ராஜசேகரனின் தங்கை ராதா. பார்த்தால் பசி தீரும் முகம். பாசமிகு பாவை விளக்கு. கூட்டுறவு பண்டக சாலை தொழிலாளியான ராஜசேகரன் கடின உழைப்பால் பலே பாண்டியாவாகிறான். தன் தங்கையை தோழன் ஆனந்தன் காதலிப்பது கண்டு முதலில் குமுறி பிறகு பச்சை விளக்கு காட்டுகிறான். ஆனந்தன் வீட்டிலிருந்து ராஜசேகரனின் இல்லம் புகும் அத்தையெனும் புதிய பறவையால் பாகப்பிரிவினை ஏற்பட நிலைகுலைகிறது அண்ணன் தங்கையின் நிம்மதி. செல்வமிழந்து நொடிந்து திரும்பும் மாமனைக்காட்டி பார் மகளே பார் என தங்கை அழ, உணர்வுபூர்வமாக நிறைவு பெறுகிறது இச்சித்திரம்.  

துவக்கத்தில் வெகுளித்தனமாக வாழும்போதாகட்டும், வசதி வந்த பிறகு காட்டும் கண்ணியம் மிக்க தோரணை ஆகட்டும் அல்லது இறுதியில் பாசத்திற்காக கண்ணீர் போராட்டம் நடத்தும்போதாகட்டும்.. சும்மாவா சொன்னார்கள் நடிகர் மற்றும் நடிகையர் திலகமென்று. சாவித்திரியிடம் நடிப்பதற்கு முன்பு சக கலைஞர்களிடம் சிவாஜி அவ்வப்போது சொல்வது 'இவ கிட்ட ரொம்ப ஜாக்ரதையா இருக்கணும்ப்பா. கொஞ்சம் அசந்தா நம்மள காலி பண்ணிருவா'. சத்தியம்!!
                                                                      


தங்கை சேர்த்து வைத்திருக்கும் பணம் குறித்து வியப்புடன் 'ஆயிரம் ரூபாயா?' என ஆரம்ப சீனில் நடிகர் திலகம் காட்டும் முகபாவத்தில் பறக்கின்றன முதற்கட்ட விசில்/கரவொலி சத்தங்கள். முதலாளி ஆன பிறகு நடந்து வரும் ஸ்டைல், 'எவருமில்லா ஆலையில் ஒரே ஒரு அகல்விளக்கின் ஒளியில் வேலை செய்துகொண்டிருப்பேன்' என்று விடும் சவால், துப்பாக்கியால் கண்ணீரை துடைக்கும் காட்சி, ஜெமினியிடம் கெஞ்சுவதும், மோதுவதும்...யாருய்யா சொன்னா நீ செத்துட்டன்னு???

இரண்டாம் நாயகனாக இருந்தாலும் சற்றும் விட்டுத்தராத நடிப்பு ஜெமினியுடையது. அமைதியாக வந்து செல்கிறார் நம்பியார். நம்பித்தான் ஆக வேண்டும். பொருத்தமான கேரக்டரில் எம்.என்.ராஜம். இம்மூவரின் இயல்பான நடிப்பு சிறப்பு.

நகைச்சுவைக்கு தங்கவேலு. செங்கல்வராயனாக அண்ணன் அடிக்கும் லூட்டிகளால் அரங்கில் குதூகலம் பொங்கி வழிகிறது. 'இவங்கப்பன் இருக்கானே நாய்த்தோல்ல வடிகட்டுன கஞ்சன்' என சந்தானத்தை(சந்தான பாரதியின் தந்தை) நையாண்டி செய்வது, காதலுக்காக உண்ணாவிரதம், நாய்க்கடத்தல் என டணால் அசத்தல். தமிழ் சினிமாவில் தலைவர் கவுண்டமணியை விட சற்றே அதிகமாக என் மனம் கவர்ந்த நகைச்சுவை சக்ரவர்த்தி தங்கவேலு. ஒரு சீனில் சந்தானத்தை பார்த்து 'ஆப்பத்தலையன்' எனும் வார்த்தையை பிரயோகித்து  இருப்பார் டணால். இதுபோல வேறு சில படங்களிலும் இவர் இம்மாதிரி 'தல' புராணம் பாடியதுண்டு. இதுதான் கவுண்டருக்கு பிரம்மாஸ்திரமாக பிற்காலத்தில் அமைந்தது என்பது வரலாறு.
                                                                      

பங்களா வீட்டு ஆஸ்தான வேலைக்காரர்களில் எஸ்.வி.சுப்பையாவிற்கு இணையாக அக்காலத்தில் ட்யூட்டி பார்த்தது கண்ணன்தான். சங்கரனாக இங்கும் அவருக்கு அதே வேடம்தான்.

முதலாளி சிவாஜிக்கு ஆங்கிலம் கற்பிக்கும் கேரக்டரில் வரும் ஆங்கிலோ இந்திய பெண்மணி பற்றிய தகவல் ஒன்றை என் தாயார் சொல்லக்கேட்டேன். நிஜத்திலும் அப்பெண்மணி தான் சிவாஜிக்கு ஆங்கிலம் கற்றுத்தந்தவராம். இப்படத்தில் சில ஆங்கில வார்த்தைகள் கற்றுத்தருமாறு சிவாஜி கேட்டபோது அப்பெண்மணி 'ஒரு சின்ன விண்ணப்பம். தங்கள் படங்களில் ஏதேனும் ஒரு காட்சியில் நடிக்க வாய்ப்பு தர வேண்டும்' என்றாராம். அக்கோரிக்கையை பாசமலர் உள்ளிட்ட வேறு சில படங்களிலும் நிறைவேற்றி இருப்பார் சிவாஜி.

என்னதான் மிகப்பெரிய நடிக பட்டாளம் இத்தோட்டத்தில் பூத்து குலுங்கினாலும், அதனை வேரறுக்க முற்படும் கோடாரி வேடத்தில் பி.எஸ். ஞானத்தின் நடிப்பு வெகு பிரமாதம். இவரில்லாத பாசமலரை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது.  படத்தை பொருத்தவரை மென்மையான இதயங்கள் வாழும் இல்லத்தில் வற்றா ஊற்றெடுக்கும் எரிமலையாக ஞானம் சுடுசொற்களை கொட்டி நடித்திருப்பினும், பாசமலரின் அழுத்தமான வேர்களில் முக்கியமானவர் என்பதில் ஐயமில்லை. தமிழ் சினிமாவில் பட்டையை கிளப்பிய வெகு சில வில்லி நடிகையர்களில் சி.கே.சரஸ்வதிக்கு இணையாக ஒரு பெயர் சொல்ல வேண்டுமெனில் அது இவருடையதாகவே இருக்கும். 
 
                                                                       பி.எஸ்.ஞானம் - கில்லி வில்லி 

படத்தில் குறைகள் இல்லாமலில்லை. கிட்டத்தட்ட அனைத்து ப்ரேம்களிலும் அண்ணாத்தை சிவாஜி தம் அடித்துக்கொண்டே இருக்கிறார். மனைவி, தங்கை உள்ளிட்ட பெண் கேரக்டர்கள் அருகில் இருந்தும் புகை மண்டலம் எட்டுத்திக்கும் நெடி பரப்புகிறது. சிவாஜியும், எம்.என்.ராஜமும் முதலிரவு அறையில் காத்துக்கொண்டு இருக்கும் வேளையில் டீசன்ஸி இல்லாமல் 'மயங்குகிறாள் ஒரு மாது' எனப்பாடி ஆட்டத்தை துவக்க விடாமல் கலைக்கிறார் தங்கை சாவித்ரி. சரி. அந்தப்பெண்தான் வெகுளி. அட்லீஸ்ட் ஜெமினிக்காவது புத்தி வேண்டாம். பொண்டாட்டி பாட..இவர் வீணை மீட்ட...சாம்பார்னு நிரூபிச்சிட்டீரு ஓய்!!

துவக்கம் முதல் இறுதிவரை தொய்வின்றி படத்தை இயக்கி இருக்கும் பீம்சிங், தேன்மழை பொழியும் பாடல்களை தந்த எம்.எஸ்.வி, காலத்தை கடந்து நிற்கும் வசனங்களை எழுதிய ஆரூர்தாஸ் அனைவருக்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். என்னதான் டி.வி.யில் பலமுறை பார்த்த படமாக இருப்பினும், க்ளைமாக்ஸில் சிவாஜி கரம் பற்றி சாவித்திரி மரித்து போவதை பார்க்கும் அந்த ஒரு நொடியில் அறியாமல் கலங்கிப்போகிறது இதயம்.  

க்ளாஸ்ஸிக் பட ரசிகர்களுக்காக 70 தியேட்டர்களில் வெளியாகி இருக்கிறது இக்காவியம். தவற விடாதீர்.
...................................................................8 comments:

கோவை நேரம் said...

சிறு வயதில் பார்த்தபடம்..அதற்கப்புறம் எவ்ளோ தடவை டிவியில் பார்த்தாச்சு...
இருந்தாலும் பார்க்கணும்..

பால கணேஷ் said...

பின்பாதியில் வரும் சோகக் காட்சிகளால் படம் முடிகையில் கனத்துப் போய்விடும் இதயம். இருந்தாலும் இப்ப... ரீ மிக்ஸிங்கில் ஒரு முறை பாத்துடணும்னு ஆசையும் இருக்கு. தங்கவேலுவின் டயலாக் டெலிவரி டைமிங் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதில் மன்னன்!

Unknown said...

அருமை...படமும் நீங்கள் விமர்சனம் செய்துள்ள பாணியும்......வாழ்த்துக்கள்.....

வெங்கட் நாகராஜ் said...

அருமை.....

திரையரங்கில் காண காத்திருக்கிறேன்....

உலக சினிமா ரசிகன் said...

ஆடியோவை டிஜிடல் ரீ மிக்ஸ் செய்யாமல் விட்ட புண்ணியவான்களுக்கு கொடி நமஸ்காரம் செய்ய வேண்டும் சிவா.

நாடோடி மன்னனை விட வீடியோவை டிஜிடலில் அற்புதமாக புதுப்பித்து இருக்கிறார்கள்.

பாசமலரை டிஜிடலில் மலரச்செய்த அத்தனை கரங்களையும் முத்தமிடத்தோன்றுகிறது.

கோவையில் அர்ச்சனா தியேட்டரில் 4கே புரொஜக்‌ஷனில் சிவாஜி நேரிடையாக இறங்கி வந்து விட்டார்.
அந்த அற்புத அனுபவத்தை பதிவாக்குகிறேன்.

இப்பதிவை எழுதிய சிவாவுக்கு...
உலகசினிமா ரசிகன் என்ற பெயரில் உலாவரும்...
இந்த சிவாஜி ரசிகனின் ராயல் சல்யூட்.

சென்னை பித்தன் said...

//அந்த ஒரு நொடியில் அறியாமல் கலங்கிப்போகிறது இதயம். //
சத்திய வாக்கு!
இன்றைய இளைஞர்கள் சிவாஜியை மிகையாக நடித்தார் என்று குற்றம் சாட்டும்போது அந்த மகா நடிகனைப் பற்றிப் பாராட்டியதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது
சிவாஜி மிகை நடிப்பை வெளிபடுத்திய படங்கள் உண்டு.குறிப்பாக பி.மாதவன் படங்களில். ஆனால் அவரை மிகை நடிப்பு என்று கூறி ஒதுக் குவது தவறு.
இன்றைய நல்ல நடிகர்கள்-கமலும்தான் -உயரமாகத் தோன்றக்காரணம் அவர்கள் சிவாஜி யின் தோளில் மீது ஏறி நிற்பதே.அந்தத் தோள் இல்லையென்றால்?!

aavee said...

சில காட்சிகளை பார்த்திருந்தாலும் முழு படத்தை பார்த்ததே இல்லை. பார்க்க வேண்டும்.

sathishbabu said...

Thank you Siva for wonderful writing about our NT's "Pasa Malar". What a move and perfection by NT and N.Thilagam and other crew. Hats off to each and every one contributed their task so well.

Above all our NT. What can we say about NT, other than Long live NT fame. We miss you and we live with your movies for generations to come.

Thanks,
Sathish

Related Posts Plugin for WordPress, Blogger...