CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Saturday, August 31, 2013

சென்னை பதிவர் சந்திப்பு 2013: நேரடி ஒளிபரப்பு
ஊர்/மாநிலம்/தேசம் கடந்து பதிவர் சந்திப்பிற்கு வருகை தரும் அன்பு உள்ளங்களே, ஒரு சில காரணங்களுக்காக சென்னை வர இயலாவிடினும் அங்கிருந்தபடியே சீரக சம்பா அரிசி தூவி வாழ்த்தப்போகும் அண்ணன், அக்கா, தாத்தா, பாட்டி மற்றும் ஆல் தி பெஸ்ட் சொந்தங்களே.  அனைவருக்கும் சென்னை விழாக்குழுவினர் சார்பாக மெட்ராஸ் பவன் ஓனரின் வாழ்த்துகளும், நன்றிகளும். நம்மள தவிர எல்லாரும் புக்கு போட்டுட்டாங்க, சினிமாவுக்கு போயிட்டாங்க. ஏதோ நம்மால  முடிஞ்ச வரைக்கும் இந்த லோக்கல் ஹோட்டலை அடிச்சி புடிச்சி நடத்துனா சந்தோசம்தான்.

செப்டம்பர் 1 சென்னை வாங்கங்கங்கோ. டீயை ஆத்திருவோம்!!  
                                                                     

_______________________________________________________செப்டம்பர் 1 ஞாயிறு அன்று காலை 9 முதல் மாலை 5 மணிவரை நடைபெறவுள்ள சென்னை பதிவர் சந்திப்பின் நேரடி ஒளிபரப்பை இத்தளத்தில் கண்டு மகிழலாம் நட்புகளே. என்சாய்!!Wednesday, August 28, 2013

சென்னை பதிவர் சந்திப்பு 2013: முன்னோட்டம்                                                               

* வரும் ஞாயிறு அன்று காலை முதல் மாலை வரை சென்னை பதிவர் சந்திப்பு நடைபெறவுள்ள இடம்: திரை இசைக்கலைஞர்கள் சங்கம், 297 ஆற்காடு ரோடு, வடபழனி, சென்னை - 26. கமலா தியேட்டர் அருகில். தமிழ் திரைப்பட கலைஞர்களுக்கு பல்வேறு சங்கங்கள் இருப்பினும் அதற்கெல்லாம் முன்னோடியாக உருவான முதல் சங்கமிது. ஏ.ஆர். ரஹ்மான் ஆஸ்கர் விருது வென்றதற்காக அவருக்கு திரை இசைக்கலைஞர்கள் பாராட்டு விழா நடத்தியது இங்குதான்.
                                                                   

 * பதிவர் சந்திப்பு, அதற்கான கலந்தாலோசனை, புத்தக வெளியீடு உள்ளிட்ட பதிவர் சார்ந்த பல்வேறு நிகழ்வுகளுக்கு தொடர்ந்து ஆதரவு தந்து வரும் டிஸ்கவரி புக் பேலஸ் உரிமையாளர் வேடியப்பன் அவர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். இலக்கியம், சினிமா, நாவல், சிறுகதை என பலவித தலைப்புகளில் புத்தகங்கள் கிடைக்கும் இப்புத்தக நிலையத்தின் முகவரி: 6, முனுசாமி சாலை, மேற்கு கே. கே. நகர், சென்னை - 78. அலைபேசி: 9940446650. ஆன்லைனில் புத்தகங்கள் வாங்க: http://discoverybookpalace.com. பதிவர் சந்திப்பன்று டிஸ்கவரியின் தனி ஸ்டால் ஒன்று அமைக்கப்பட உள்ளது. நண்பர்களை சந்திப்பதோடு புத்தகங்களையும் அள்ளிச்செல்ல ஒரு வாய்ப்பு.
                                                                 


* பதிவர் சந்திப்பன்று புத்தக வெளியீடும் நடைபெறவுள்ளது. சேட்டைக்காரன் எனும் பெயரில் நகைச்சுவையாக எழுதி வாசகர்களை சிரிக்க வைத்துக்கொண்டு இருக்கும் வேணு அவர்களின் 'மொட்டைத்தலையும், முழங்காலும்' புத்தகம் வழக்கம் போல சிரிப்புக்கு உத்தரவாதம் தருமென நம்பலாம். கங்க்ராட்ஸ் சேட்டை!!
                                                                    


* இதழில் எழுதிய கவிதைகள் எனும் நூலின் மூலம் நம்மை கவரவிருப்பது தோழர் சங்கவியின் வார்த்தைகள். முகநூலில் பதித்த கவிதை தொகுப்புகளையும் இணைத்து தமது முதல் நூலை வெளியிடும் சங்கவி அவர்களுக்கு பதிவர்கள் சார்பாக வாழ்த்துகள்.
                                                                     

 * 'வெற்றிக்கோடுகள்' எனும் தலைப்பில் இளைஞர்களுக்கான தன்னம்பிக்கை கட்டுரைகளை தொகுத்து தனது முதல் நூலை வெளியிடுகிறார் தோழர் மோகன்குமார்(வீடு திரும்பல்). No tagline. No problem என்று சேட்டைக்காரனும், சங்கவியும் எஸ்கேப் ஆகிவிட ' உயர்தலே வாழ்க்கை' எனும் கேப்ஷன் போட்டு வெளியாக உள்ள இந்நூல் பற்றிய தகவல் 'மே(லி)டத்திற்கு' போகாமல் இருந்தால் சரி. மனமார்ந்த வாழ்த்துகள் மோகன்குமார்.         
                                                                          

* பதிவர் சந்திப்பில் நமக்கான உணவு தயாரிப்பு மற்றும் பரிமாறும் பொறுப்பை ஏற்றிருப்பது Door No.27 உணவகம். குறுகிய காலத்தில் சென்னை உணவுப்பிரியர்களின் மனதில் இடம் பிடித்திருக்கும் இவ்வுணவகத்தின் முகவரி: 27, வாசு தெரு, ஈகா தியேட்டர் அருகில், கீழ்ப்பாக்கம், சென்னை. நமக்கான சிறப்பு மெனு:

சிக்கன்  & வெஜ் பிரியாணி
ஆனியன் ரைத்தா
கத்தரிக்கா கொஸ்து
சிக்கன் டிக்கா
தயிர் சாதம்
உருளைக்கிழங்கு சிப்ஸ்
பைனாப்பிள் கேசரி
ஐஸ்க்ரீம்
 
                                                                 


* இந்த பதிவர் சந்திப்பிற்கு பன்னிக்குட்டி வருகிறார் என்றொரு தகவல் வேறு காட்டுத்தீயாய் பரவிக்கொண்டு இருக்கிறது. மர்ம நபர்களை பதிவர்களை சந்திக்க அனுப்பிவிட்டு 'அது நாந்தான்' என்று ஜகஜ்ஜால வித்தை காட்டும் திறன் கொண்டவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே 'கண்டுபுடிச்சிட்டேன். நீங்கதான பன்னிக்குட்டி. விடமாட்டேன்' என்று ஆர்வக்கோளாறில் வேறேதேனும் நபரின் தோள் மீது தொங்கி தர்ம அடி வாங்கினால் நான் பொறுப்பல்ல என்று பன்னிக்குட்டி சார்பாக அவரது பினாமியின் 'அந்தரங்க' காரியதரிசி எச்சரிக்கை விடுத்துள்ளார். பீ கேர்புல்.... உங்களத்தான் சொன்னேன்!!
.......................................................


.....................................
சமீபத்தில் எழுதியது:

பதிவர் சந்திப்பில் பாமரன்

மெட்ராஸ் கபே - விமர்சனம்
....................................
   
  

Tuesday, August 27, 2013

பதிவர் சந்திப்பில் பாமரன் - ஒரு பார்வை                                                                  

வரும் ஞாயிறு அன்று சென்னையில் நடைபெறவுள்ள பதிவர் சந்திப்பில் சிறப்பு பேச்சாளராக கலந்து கொள்ளும் எழுத்தாளர் திரு.பாமரன் பற்றிய சிறு குறிப்புகள் உங்கள் பார்வைக்காக. கோவைக்கே உரித்தான யதார்த்தம் கலந்த நக்கல் பேச்சுக்கும்/எழுத்துக்கும் சொந்தக்காரரான பாமரனின் நிஜப்பெயர் எழிற்கோ. 70 வீடுகளை மட்டுமே உள்ளடக்கிய வேலம்பாளையத்தில் துணிகளை நெய்து அவற்றை ஊர் ஊராக சென்று விற்பனை செய்து வந்தவர்  பாட்டனார் செங்கோடன். தந்தை சண்முக சுந்தரம் பி.காம் பட்டதாரி. 
 
கவுண்டமணியின் தீவிர ரசிகரான பாமரன் எழுதிய புத்தகங்கள்:

அன்புத்தோழிக்கு
புத்தர் சிரித்தார்
வாலி + வைரமுத்து = ஆபாசம்
அகிம்சாமூர்த்தி அமெரிக்கா.

நாளிதழ்/வார இதழ்களில் வெளியான தொடர் கட்டுரைகள்:

பகிரங்க கடிதங்கள்(குமுதம் 1997),
தெருவோர குறிப்புகள் (குமுதம், தீராநதி 2001),
சாட்டிலைட் சனியன்களுக்கு (நக்கீரன், தினமணி, ஆனந்த விகடன் 2003),
ஆரிய உதடுகள் உன்னது (புதிய பார்வை 2006).

செயல்பாடுகள்:

1983ல் உருவான உலக மனிதாபிமான கழக நிறுவனர், 2006ல் உருவான கோவை நாய்வால் திரைபட இயக்க முன்னோடி, ஈழ நண்பர் கழகம் - 1985 - 1990 வரையான செயல்பாடுகள், வீரப்பன் மரணம் குறித்த உண்மை அறியும் குழுவில் இடம் பெற்றவர், கோவை குண்டு வெடிப்பு குறித்து ஆராய போடப்பட்ட குழுவில் இடம் பெற்றவர், Amnesty International - 1987 - 1991 வரையான செயல்பாடுகள். 
                                                                

 2007 ஆம் ஆண்டு முதல் வலைப்பூவில் எழுதி வரும் பாமரனின் இணைய முகவரி:  pamaran.wordpress.com

அதிகாலை.காம் தளத்திற்கு பாமரன் அளித்த பட்டாசு பேட்டிகளின் தொகுப்பை காணொளியில் பார்க்க க்ளிக் செய்க:

பாகம் - 1

பாகம் - 2

பாகம் - 3

பாகம் - 4          

குமுதத்தில் பாமரன் எழுதிய 'படித்ததும் கிழித்ததும்' மூலம் ரசிகனாகிப்போன எனக்கு அவரின் ஒரு மணி நேர சிறப்புரையை கேட்கும் சந்தர்ப்பம் அமைந்திருப்பது மகிழ்ச்சி.

பதிவர்களுடன் சங்கமித்து எழுத்துலகம் பற்றிய பல்வேறு தகவல்கள் மற்றும் அனுபவங்களை பகிர வரும் பாமரன் அவர்களை உளமார வரவேற்கிறது தமிழ் வலைப்பதிவர் குழுமம்.
................................................................

.............................................
சமீபத்தில் எழுதியது:

மெட்ராஸ் கபே - விமர்சனம்
............................................
  


Friday, August 23, 2013

சந்திரமோகனின் தலைமுறைகள்


ஆடி ஆவணி நாடகத்திருவிழா,
YGP ஆடிட்டோரியம்,
திருமலை சாலை, தி.நகர்,
சென்னை - 600 017.
                                                                     

தலைப்பை பார்த்ததுமே 'என்னடா இது வழக்கம்போல கூட்டுக்குடும்ப வாழ்க்கையின் மகத்துவத்தை புதிய தலைமுறைக்கு உணர்த்தப்போகும் இன்னொரு நாடகமா?' என்று எண்ணியவாறே அரங்கினுள் நுழைந்தேன். அதுபோலத்தான் துவக்க காட்சிகளும் அமைந்தன. ஆனால் அதன் பிறகு மூன்று பேரின் சிறப்பான நடிப்பினால் தலைமுறைகள் தழைத்தோங்கியது என்பதே உண்மை. மதர் க்ரியேஷன் வழங்கும் தலைமுறைகள் நாடகத்தின் கதை, வசனம் மற்றும் இயக்கம் சி.வி.சந்திரமோகன். தயாரிப்பு ஜெயகுமார். பிரதான கேரக்டர் ஆர்யாவாக நடித்திருப்பதும் இவர்தான்.

தேசப்பற்று மிக்க முதியவர் ஆர்யா தமது மகன், மருமகள் மற்றும் பேரனுடன் வாழ்ந்து வருகிறார். பல்வேறு தேசத்தலைவர்கள் வந்து சென்ற இடமாதலால் தான் தங்கியிருக்கும் அந்தக்கால வீட்டின் மீது அதீத பாசம் கொண்டவர். ஒவ்வொரு சுதந்திர நாளன்றும் வீட்டிற்கு வெள்ளையடித்து, சிறார்களுடன் இணைந்து வீட்டு மாடியில் கொடியேற்றுவது வழக்கம். 

பேரன் மோகன்தாஸ் காந்திக்கு(விஷ்வஜெய்) அவ்வப்போது தேசாபிமான உணர்வை போதிப்பதும் ஆர்யாவின் கடமைகளுள் ஒன்று. தன் மகனை விஞ்ஞானி ஆக்க கனவு காணும் சுபாஷ்(மது) இதனால் வெறுப்படைகிறார். 'தயவு  செய்து என் மகனை சன்யாசி ஆக்கிவிட வேண்டாம்' என தந்தை ஆர்யாவிடம் மன்றாடுவதோடு ஒரு கட்டத்தில் வீட்டை இடித்து அபார்ட்மென்ட் கட்டவும் முயற்சிக்கிறார் சுபாஷ். அச்செய்தி கேட்டு பதறும் ஆர்யா 'புனிதமான இவ்வீட்டின் பெருமை தெரியாமல் இப்படி செய்வது நியாயமா?' என்று இடிப்பு முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்க மனஸ்தாபம் முற்றுகிறது. இறுதியில் நடந்தது என்ன என்பதை மேடையில் காண்க.


ஒரே நாடகத்தில் மூன்று சிறப்பான நடிப்பை நான் பார்த்தது இதுவே முதல்முறை. ஆர்யாவாக ஜெயக்குமார் வாழ்ந்திருக்கிறார் எனச்சொன்னால் அது மிகையில்லை. பிரமாதமான உடல்மொழி. கோரிக்கை ஒன்றை முன்வைத்து மகனின் கையைப்பற்றி அழும்போது ரசிகர்களிடமிருந்து கைத்தட்டல்களை அள்ளுகிறார். வழக்கமான தேசப்பற்று மிக்க கேரக்டர்களில் இருந்து ஜெயகுமார் தனித்து தெரிவதற்கு காரணம் பரிபூரண அர்ப்பணிப்பு. ஜெயகுமாருக்கு மேக் அப் போட்ட குமாருக்கும் வாழ்த்துகள்.

சிறுவன் விஷ்வஜெய் ஒவ்வொரு காட்சியிலும் துளியும் மேடைப்பதற்றம் இன்றி அருமையாக வசனம் பேசியது பாராட்டத்தக்கது. நாடகம் முடிந்ததும் மாமிகள் பலர் தம்பியின் கன்னத்தை கிள்ளி 'அமர்க்களம்டா கொழந்தே. என்ன க்ளாஸ் படிக்கற?' என பாராட்டு பத்திரங்களை வாசித்த வண்ணம் இருந்தனர். சக கலைஞர்களிடம் விஷ்வா பற்றி விசாரித்ததில் ''ஏழாம் வகுப்பு படிக்கறான். 'இந்த கேரக்டரை நான் பெர்பெக்டா பண்றேன்'' என்று விரும்பி முன்வந்ததாகவும் கூறினார்.
 
தலைமுறைகளில் சுபாஷ் எனும் முக்கிய கதாபாத்தித்தில் நடித்திருப்பது மது. துவக்கம் முதல் இறுதி வரை அதிகப்படியான காட்சிகள்/வசனங்கள் இவருக்குத்தான். நாடகம் பார்க்கிறோம் எனும் உணர்வை மறக்கடித்து இயல்பாக பெர்பாமன்ஸ் செய்திருக்கிறார் மது. சீரியஸ் ரக மேடை நாடகங்களில் இப்படி ஒரு consistent பெர்பாமன்சை வெகு அரிதாகவே காண முடியும். ஹாட்ஸ் ஆப் மது.

கோகிலாவாக கற்பகம், கிருஷ்ணாவாக சி.வி.குமார் மற்றும் போராவாக சிவகுமார் ஆகியோரின் நடிப்பிலும் குறை சொல்ல ஏதுமில்லை. 

தலைமுறைகளில் அரங்கின் பின்னணியில் பங்கேற்ற குழு: இசை - குக பிரசாத், அரங்க வடிவமைப்பு - மோகன் பாபு(உஷா ஸ்டேஜ்), அரங்க நிர்வாகம் - சாய்ராம். ஒளி அமைப்பு - கிருஷ்ணன்.    

'நல்ல மார்க்கை விட நல்ல மார்க்கமும் முக்கியம்' என ஆங்காங்கே பளிச்சிடுகின்றன இயக்குனர் சந்திரமோகனின் வசனங்கள். அக்காலத்தில் தூர்தர்சனில் பிரதி செவ்வாய்க்கிழமை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த தமிழ் நாடகங்கள் சிலவற்றை இயக்கியும் இருக்கிறார் சந்திரமோகன்.

ஒவ்வோர் ஆண்டும் நாரத கான சபா கோடை நாடக விழாவில் புதிய நாடகங்கள் அரங்கேற்றப்படுவது வழக்கம். அவ்விழாவின் நிறைவாக கார்த்திக் பைன் ஆர்ட்ஸ் வழங்கும் விருதுகள் பிரசித்து பெற்றவை. இவ்வாண்டு 'தலைமுறைகள்' ஆறு விருதுகளை தட்டிச்சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது:

சிறந்த நடிகர் - மது 

சிறந்த நடிகை - கற்பகலட்சுமி 

சிறந்த வசனம் - சி.வி.சந்திரமோகன்

சிறந்த இயக்கம் - சி.வி.சந்திரமோகன்

சிறந்த குழந்தை நட்சத்திரம் - விஷ்வஜெய்

சிறந்த தயாரிப்பு - மதர் கிரியேஷன்ஸ்
 ...........................................................................


.........................................
சமீபத்தில் எழுதியது:

............................................


Tuesday, August 20, 2013

அகஸ்டோவின் ஜெயில் வீடுஆடி ஆவணி நாடகத்திருவிழா,
YGP ஆடிட்டோரியம்,
திருமலை சாலை, தி.நகர்,
சென்னை - 600 017. 

                                                                     

இம்மாதம் முழுவதும் வார இறுதி நாட்களில் நாடக ரசிகர்களுக்கு விருந்து படைத்துக்கொண்டிருக்கும் ஆடி ஆவணி நாடகத்திருவிழாவில் சென்ற வாரம் நான் பார்த்தது அகஸ்டோ க்ரியேஷன்ஸின் 39 வது படைப்பான ஜெயில் வீடு. தயாரிப்பு கீதாஞ்சலி ராஜா. எழுத்து மற்றும் இயக்கம் அகஸ்டோ.

பெரும்பாலும் கூட்டுக்குடும்பம், தலைமுறை இடைவெளி அல்லது தேசப்பற்று போன்ற களத்திலேயே சுழன்று கொண்டிருக்கும் மேடை நாடகங்களுக்கு மத்தியில் ஜெயில் வீடு தனித்துவமாக தெரிந்ததே முதல் ஆறுதல். அக்காலத்தில் கிராமத்து பின்னணியை மையமாக கொண்டு சக்கை போடு போட்ட நாடகம் கோமல் ஸ்வாமி நாதனின் தண்ணீர் தண்ணீர். அதை இவ்வாண்டு மீண்டும் அரங்கேற்றியபோது பார்த்து மகிழ்ந்தேன். அதற்குப்பின் கிராமச்சூழலில் சிறந்த வட்டார வழக்குடன் கலைஞர்கள் பேசி நடித்த நாடகமென ஜெயில் வீட்டை சொல்லலாம்.

அழகிய வள்ளியூர் எனும் கிராமத்தில் ஜெயில் போன்று வடிவமைக்கப்பட்ட வீட்டைக்காணும் பொறியாளர் மதிவாணன்(போத்தி லிங்கம்) மற்றும் அவருடன் பணியாற்றும் சிவகுமார்(கார்த்திகேயன்) அதற்கான காரணத்தை ஊர் மக்களிடம் கேட்கிறார்கள். அவர்கள் கை காட்டும் நபர்தான் 'கதை சொல்லி' தாமோதர வாத்தியார்(ஜெயகுமார்). 

மற்றவர்களைப்போல வரலாற்றை ஒப்புவித்து நடையை கட்டுவதல்ல அவர் பாணி. சின்ன சின்னதாக சம்பவங்களை சுவாரஸ்யப்படுத்தி அதற்கு ஒரு சஸ்பன்சையும் வைப்பதுதான் அவரது சிறப்பு. அதுபோலத்தான் ஜெயில் வீடு பற்றிய கதையையும் அவ்விருவருக்கும் சொல்கிறார். அழகிய வள்ளியூரில் பல ஆண்டுகளுக்கு முன்பாக நடந்த அக்கதையின் சுருக்கம்:  

அழகிய வள்ளியூரின் செழிப்பான பண்ணையார் சித்திரவேல்(ராஜ்). ஊர்த்திருவிழா ஏற்பாட்டில் அவர் மும்முரமாக ஈடுபட்டிருக்கும் போது மிலிட்டரியில் பணியாற்றும் தனது ஆருயிர் நண்பன் ராசக்கொடி(வெங்கட கிருஷ்ணன்) வந்திருக்கும் செய்தி அறிகிறார். தோப்போன்றில் சந்திப்பு நடைபெறுகிறது. ராசக்கொடி கொண்டுவந்திருக்கும் துப்பாக்கியால் குருவி ஒன்றை சுடச்சொல்லி வற்புறுத்துகிறார் சித்திரவேல். சற்று பொறுமை காக்குமாறு ராசக்கொடி கூறியும் சித்திரவேல் கேட்காமல் துப்பாக்கியை பிடுங்கி சுட குண்டு தவறுதலாக ஊரின் முக்கிய மரமேறி மீது பட்டு உயிரை பறிக்கிறது. 

தான் செய்தது தவறுதான். போலீசிடம் சரணடைகிறேன் என சித்திரவேல் கூறினாலும் திருவிழா வேலைகள் பாதிக்கப்படும் என்பதை உணரும் ராசக்கொடி பழியை தானே ஏற்று சிறை செல்கிறார். அதனால் அதிர்ச்சிக்கு ஆளாகும் அவரது மனைவி பிரபாவதி(உமா சங்கர்) எடுக்கும் முடிவுதான் கதையின் மையப்புள்ளி. 
                                                                

இந்நாடகத்தின் சிறப்பென சொல்வதற்கு பல விஷயங்கள் உண்டு. நிலவொளியின் பின்னணியில் மோகன் பாபுவால் போடப்பட்ட செட் மற்றும் கலை அவர்களின் ஒளி அமைப்பு, பெரம்பூர் குமாரின் ஒப்பனை, குக பிரசாத்தின் பின்னணி இசையென அனைத்தும் கதை மற்றும் நடிப்பிற்கு பக்கபலமாக அமைந்துள்ளது பாராட்டத்தக்கது.

தாமோதர வாத்தியார் வைக்கும் ஒவ்வொரு சஸ்பன்சிற்கும் மதிவாணன் மற்றும் சிவகுமாருடன் சேர்ந்து ரசிகர்களும் 'அடுத்தது என்னவென்று சட்டென சொல்லுங்கள்' என பரிதவிக்குமாறு சம்பவங்களை கோர்த்திருக்கிறார்  இயக்குனர் அகஸ்டோ. அவ்வகையில் சிறந்த கதை சொல்லி தாமோதர் வாத்தியாரா அல்லது அகஸ்டோவா என்று ஒரு விவாதமே வைக்கும் அளவிற்கு சபாஷ் சரியான போட்டி!!

ஜெயில் வீட்டில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியது என்று என்னைக்கேட்டால் சந்தேகமின்றி சித்திரவேலாக நடித்த ராஜ் தான். இளம் பண்ணையாருக்கேற்ற தோற்றம், சாலப்பொருந்திய ஆடை. ஊர் வழக்கில் உரையாடும் பாங்கில் பிரமாதப்படுத்தி இருக்கிறார். குறிப்பாக மனசாட்சியுடன் அவர் பேசுவதாக வரும் காட்சி அருமை. உமா சங்கர் மற்றும் எஸ்.கே. ஜெயகுமார் இருவரின் தேர்ந்த நடிப்பும் ஜெயில் வீட்டிற்கு தூண்களாக அமைந்துள்ளன.

இவ்வாண்டு நடைபெற்ற கார்த்திக் பைன் ஆர்ட்ஸ் கோடை நாடக விழாவில் சிறந்த இயக்குனர்(அகஸ்டோ), சிறந்த நடிகர்(ராஜ்), சிறந்த குணச்சித்திர நடிகர்(ஜெயகுமார்) விருதுக்கான பிரிவில் ஜெயில் வீடு இரண்டாம் இடத்தை வென்றது குறிப்பிடத்தக்கது. இத்துடன் தனது இயல்பான நடிப்பிற்கு சிறப்பு விருதை உமா சங்கர் வென்றிருக்கிறார். தெலுங்கின் முன்னணி நாளிதழான 'ஈநாடு' சமீபத்தில் இந்நாடகத்தை பாராட்டி சிறப்புக்கட்டுரை ஒன்றையும் வெளியிட்டு உள்ளது. 

வித்யாசமான களத்தில் விறுவிறுப்பான கதையை எதிர்பார்க்கும் நாடக ரசிகர்கள் ஒரு இனிமையான ரிமான்ட் அனுபவத்திற்கு செல்ல விரும்பினால் உங்களுக்காக காத்திருக்கிறது இந்த ஜெயில் வீடு.
.................................................................................
      Saturday, August 17, 2013

கூத்தபிரானின் - உன்னால் முடியும் தாத்தாதி.நகரில் இருக்கும் ஒய்.ஜி.பி. ஆடிட்டோரியத்தில் இம்மாத துவக்கம் முதல் ஆடி ஆவணி நாடகத்திருவிழா ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் நடைபெற்று வருகிறது.  அதில் நான் பார்த்த முதல்  நாடகம் நவபாரத்தின்  'உன்னால் முடியும் தாத்தா'. 

ஆல் இந்தியா ரேடியோவின் பாப்பா மலர் நிகழ்ச்சி மூலம் கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் குழந்தைகளுக்காக கதை சொல்லி புகழ் பெற்ற 'வானொலி அண்ணா' கலைமாமணி கூத்தபிரான் நடித்த இப்படைப்பிற்கு கதை, வசனம், இயக்கம் என்.ரத்னம். ஒப்பனை பெரம்பூர் குமார்.
                                                                   
                                                                      Image: madrasbhavan.com

மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தனது இரு மகன்களின் வீட்டில் மாறி மாறி வாசம் செய்கிறார் கூத்தபிரான். அலுவலகத்தில் வேலை செய்வோரின் பெற்றோர்களுக்கு அடிப்படை கணினிப்பயிற்சி அளித்து அதில் தேர்வு பெறுவோருக்கு சில ஆயிரங்கள் பணமும் தரப்படும் எனும் அறிவிப்பை கண்டு மகிழ்கிறார் மூத்த மகன். தந்தையை வற்புறுத்தி அப்பயிற்சியில் சேர்த்தும் விடுகிறார். பிறகு நடந்தது என்ன என்பதை கூட்டுக்குடும்ப தத்துவம் கலந்து மேடையேற்றி இருக்கிறார்கள்.                                                                       
 
முதுமையின் காரணமாக மைக் அருகே நின்று பார்வையாளர்கள் காதில் படும்படி பேச கூத்தபிரான் தடுமாறினாலும் நாடகம் முழுக்க அனைத்து வசனங்களையும் பிழையின்றி உச்சரிப்பது அபாரம். 'வாவ்' என பேரன் கூச்சலிடும்போது 'பூனை எதுனா குறுக்க போச்சா' போன்ற நகைச்சுவை வசனங்களில் புன்முறுவல் பூக்க வைக்கிறார். 

இதர கேரக்டர்கள் நடிப்பும் பாஸ்மார்க் வாங்கிவிடுகிறது. திடப்பொருள் ஒன்றை சுமப்பது போல வரும் காட்சிகளில் வெற்று பை அல்லது சூட்கேஸை கையில் வைத்திருப்பது, 'மாமி. உங்க வீட்டு காபியா எனக்கு வேண்டாம்' எனும் அரதப்பழசான வசனத்தை சலிக்காமல் இங்கும் பேசுவது நெருடல். பெரிதாக சொல்லிக்கொள்ளும்படி புதுமைகள் ஏதுமில்லாவிடினும் முதுபெரும் கலைஞர் கூத்தபிரானின் சிரத்தையான நடிப்பிற்கான ஒரு முறை பார்க்கலாம். 

நாடகம் முடிந்தபிறகு அவருடன் சிறிதுநேரம் அளவளாவியபோது 'சமீபத்தில் கோவையில் இந்நாடகத்தை மேடையேற்றியபோது சிறந்த வரவேற்பு கிடைத்தது. இன்று பெரிதாக கூட்டமில்லையே' என்று வருத்தப்பட்டார். போதுமான விளம்பரம் இல்லாததுதான் அதற்கு முக்கிய காரணம். இதற்கடுத்து நான் பார்த்த நாடகங்களான சபாஷ் மாப்ளே, ஜெயில் வீடு குறித்த விமர்சனங்கள் விரைவில்.                                                                  

                                                        
ஆடி ஆவணி நாடகத்திருவிழாவில் இனி அரங்கேறவுள்ள நாடகங்கள்:

17/08/13 சனி: காத்தாடி ராமமூர்த்தியின் சூப்பர் குடும்பம்.

18/08/13 ஞாயிறு: சந்திரமோகனின் தலைமுறைகள்.

24/08/13  சனி: டி.வி.ராதாகிருஷ்ணனின் காத்தாடி.

25/08/13 ஞாயிறு: மூர்த்தியின் அம்புப்படுக்கை.

30/08/13 வெள்ளி: மாலியின் நிழல் தேடும் மரங்கள்.

31/08/13 சனி: வரதராஜனின் ஆசைக்கும் ஆஸ்திக்கும்.

01/09/13 ஞாயிறு: நாகர்கோயில் கிருஷ்ணனின் பக்த ஆண்டாள்.

அனைத்து நாடகங்களும் மாலை 6.30 மணிக்கு தொடங்கும் என அறிவித்து இருப்பினும் இதுவரை நான் பார்த்த நாடகங்கள் 6.50 மணிக்கு முன்பு துவங்கவில்லை என்பது உபரி தகவல்.
...........................................................................              
               

                                                            

Thursday, August 15, 2013

பாசமலர் ரிட்டர்ன்ஸ்                                                                       
                                                                        Image: madrasbhavan.com

நீண்ட வருடங்களுக்கு பிறகு திரையில் தோன்றி வசூலில் 'கர்ணன்'தான் என்பதை கர்ணன் சென்ற ஆண்டு நிரூபித்தான். இப்போது பாசமலரின் மறுமலர்ச்சிக்கான தருணம். கர்ணன் டிஜிட்டல் வெர்ஷன் பெரிதாக சொல்லிக்கொள்ளும்படி இல்லாமல் ராஜ் டி.வி.யில் பார்ப்பதை விட சற்று சுமாராகத்தான் வெண்திரையில்  காட்சி அளித்தது. தற்போது 35mm கருப்பு வெள்ளை பாசமலரை முழுத்திரையில் தெளிவாக பார்க்கும் வண்ணம் ப்ரசாத் லாப் தொழில்நுட்ப கலைஞர்கள் உழைப்பை சிந்தி இருப்பதாக செய்திகள் வந்தன. ஒரு சில மங்கலான காட்சிகளைத்தவிர 95% பளிச்.  ஹாட்ஸ் ஆப் ப்ரசாத் & கோ. 30 நிமிட காட்சிகளை ட்ரிம் செய்து 3 மணி நேரப்படமாக தந்திருக்கிறார் பீம்சிங்கின் புதல்வர் (எடிட்டர்) லெனின்.  1961 ஆம் ஆண்டிற்கு பிறகு மீண்டும் மலர்ந்திருக்கும் பாசமலர் எப்படி இருந்தது? பார்க்கலாம்.

நான் இப்படம் பார்த்தது சத்யம் ஸ்டுடியோ 5 திரையில் (அறிந்தோ அறியாமலோ தியேட்டர் வாசலில் சிங்கம் 2 மற்றும் சொன்னா புரியாது பேனர்களுக்கு நடுவே பாசமலர். நடிப்புலக சிங்கங்களான சிவாஜி - சாவித்ரி வாழ்ந்திருக்கும் இக்காவியம் குறித்து சொன்னா புரியாது). ஆயிரம் அண்ணன் தங்கைப்பாச படைப்புகள் தமிழ் சினிமாக்களில் வந்து சென்றாலும், இனி வந்தாலும்...பாசமலரை அடித்துக்கொள்ள வாய்ப்பே இல்லை. 

படிக்காத மேதை ராஜசேகரனின் தங்கை ராதா. பார்த்தால் பசி தீரும் முகம். பாசமிகு பாவை விளக்கு. கூட்டுறவு பண்டக சாலை தொழிலாளியான ராஜசேகரன் கடின உழைப்பால் பலே பாண்டியாவாகிறான். தன் தங்கையை தோழன் ஆனந்தன் காதலிப்பது கண்டு முதலில் குமுறி பிறகு பச்சை விளக்கு காட்டுகிறான். ஆனந்தன் வீட்டிலிருந்து ராஜசேகரனின் இல்லம் புகும் அத்தையெனும் புதிய பறவையால் பாகப்பிரிவினை ஏற்பட நிலைகுலைகிறது அண்ணன் தங்கையின் நிம்மதி. செல்வமிழந்து நொடிந்து திரும்பும் மாமனைக்காட்டி பார் மகளே பார் என தங்கை அழ, உணர்வுபூர்வமாக நிறைவு பெறுகிறது இச்சித்திரம்.  

துவக்கத்தில் வெகுளித்தனமாக வாழும்போதாகட்டும், வசதி வந்த பிறகு காட்டும் கண்ணியம் மிக்க தோரணை ஆகட்டும் அல்லது இறுதியில் பாசத்திற்காக கண்ணீர் போராட்டம் நடத்தும்போதாகட்டும்.. சும்மாவா சொன்னார்கள் நடிகர் மற்றும் நடிகையர் திலகமென்று. சாவித்திரியிடம் நடிப்பதற்கு முன்பு சக கலைஞர்களிடம் சிவாஜி அவ்வப்போது சொல்வது 'இவ கிட்ட ரொம்ப ஜாக்ரதையா இருக்கணும்ப்பா. கொஞ்சம் அசந்தா நம்மள காலி பண்ணிருவா'. சத்தியம்!!
                                                                      


தங்கை சேர்த்து வைத்திருக்கும் பணம் குறித்து வியப்புடன் 'ஆயிரம் ரூபாயா?' என ஆரம்ப சீனில் நடிகர் திலகம் காட்டும் முகபாவத்தில் பறக்கின்றன முதற்கட்ட விசில்/கரவொலி சத்தங்கள். முதலாளி ஆன பிறகு நடந்து வரும் ஸ்டைல், 'எவருமில்லா ஆலையில் ஒரே ஒரு அகல்விளக்கின் ஒளியில் வேலை செய்துகொண்டிருப்பேன்' என்று விடும் சவால், துப்பாக்கியால் கண்ணீரை துடைக்கும் காட்சி, ஜெமினியிடம் கெஞ்சுவதும், மோதுவதும்...யாருய்யா சொன்னா நீ செத்துட்டன்னு???

இரண்டாம் நாயகனாக இருந்தாலும் சற்றும் விட்டுத்தராத நடிப்பு ஜெமினியுடையது. அமைதியாக வந்து செல்கிறார் நம்பியார். நம்பித்தான் ஆக வேண்டும். பொருத்தமான கேரக்டரில் எம்.என்.ராஜம். இம்மூவரின் இயல்பான நடிப்பு சிறப்பு.

நகைச்சுவைக்கு தங்கவேலு. செங்கல்வராயனாக அண்ணன் அடிக்கும் லூட்டிகளால் அரங்கில் குதூகலம் பொங்கி வழிகிறது. 'இவங்கப்பன் இருக்கானே நாய்த்தோல்ல வடிகட்டுன கஞ்சன்' என சந்தானத்தை(சந்தான பாரதியின் தந்தை) நையாண்டி செய்வது, காதலுக்காக உண்ணாவிரதம், நாய்க்கடத்தல் என டணால் அசத்தல். தமிழ் சினிமாவில் தலைவர் கவுண்டமணியை விட சற்றே அதிகமாக என் மனம் கவர்ந்த நகைச்சுவை சக்ரவர்த்தி தங்கவேலு. ஒரு சீனில் சந்தானத்தை பார்த்து 'ஆப்பத்தலையன்' எனும் வார்த்தையை பிரயோகித்து  இருப்பார் டணால். இதுபோல வேறு சில படங்களிலும் இவர் இம்மாதிரி 'தல' புராணம் பாடியதுண்டு. இதுதான் கவுண்டருக்கு பிரம்மாஸ்திரமாக பிற்காலத்தில் அமைந்தது என்பது வரலாறு.
                                                                      

பங்களா வீட்டு ஆஸ்தான வேலைக்காரர்களில் எஸ்.வி.சுப்பையாவிற்கு இணையாக அக்காலத்தில் ட்யூட்டி பார்த்தது கண்ணன்தான். சங்கரனாக இங்கும் அவருக்கு அதே வேடம்தான்.

முதலாளி சிவாஜிக்கு ஆங்கிலம் கற்பிக்கும் கேரக்டரில் வரும் ஆங்கிலோ இந்திய பெண்மணி பற்றிய தகவல் ஒன்றை என் தாயார் சொல்லக்கேட்டேன். நிஜத்திலும் அப்பெண்மணி தான் சிவாஜிக்கு ஆங்கிலம் கற்றுத்தந்தவராம். இப்படத்தில் சில ஆங்கில வார்த்தைகள் கற்றுத்தருமாறு சிவாஜி கேட்டபோது அப்பெண்மணி 'ஒரு சின்ன விண்ணப்பம். தங்கள் படங்களில் ஏதேனும் ஒரு காட்சியில் நடிக்க வாய்ப்பு தர வேண்டும்' என்றாராம். அக்கோரிக்கையை பாசமலர் உள்ளிட்ட வேறு சில படங்களிலும் நிறைவேற்றி இருப்பார் சிவாஜி.

என்னதான் மிகப்பெரிய நடிக பட்டாளம் இத்தோட்டத்தில் பூத்து குலுங்கினாலும், அதனை வேரறுக்க முற்படும் கோடாரி வேடத்தில் பி.எஸ். ஞானத்தின் நடிப்பு வெகு பிரமாதம். இவரில்லாத பாசமலரை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது.  படத்தை பொருத்தவரை மென்மையான இதயங்கள் வாழும் இல்லத்தில் வற்றா ஊற்றெடுக்கும் எரிமலையாக ஞானம் சுடுசொற்களை கொட்டி நடித்திருப்பினும், பாசமலரின் அழுத்தமான வேர்களில் முக்கியமானவர் என்பதில் ஐயமில்லை. தமிழ் சினிமாவில் பட்டையை கிளப்பிய வெகு சில வில்லி நடிகையர்களில் சி.கே.சரஸ்வதிக்கு இணையாக ஒரு பெயர் சொல்ல வேண்டுமெனில் அது இவருடையதாகவே இருக்கும். 
 
                                                                       பி.எஸ்.ஞானம் - கில்லி வில்லி 

படத்தில் குறைகள் இல்லாமலில்லை. கிட்டத்தட்ட அனைத்து ப்ரேம்களிலும் அண்ணாத்தை சிவாஜி தம் அடித்துக்கொண்டே இருக்கிறார். மனைவி, தங்கை உள்ளிட்ட பெண் கேரக்டர்கள் அருகில் இருந்தும் புகை மண்டலம் எட்டுத்திக்கும் நெடி பரப்புகிறது. சிவாஜியும், எம்.என்.ராஜமும் முதலிரவு அறையில் காத்துக்கொண்டு இருக்கும் வேளையில் டீசன்ஸி இல்லாமல் 'மயங்குகிறாள் ஒரு மாது' எனப்பாடி ஆட்டத்தை துவக்க விடாமல் கலைக்கிறார் தங்கை சாவித்ரி. சரி. அந்தப்பெண்தான் வெகுளி. அட்லீஸ்ட் ஜெமினிக்காவது புத்தி வேண்டாம். பொண்டாட்டி பாட..இவர் வீணை மீட்ட...சாம்பார்னு நிரூபிச்சிட்டீரு ஓய்!!

துவக்கம் முதல் இறுதிவரை தொய்வின்றி படத்தை இயக்கி இருக்கும் பீம்சிங், தேன்மழை பொழியும் பாடல்களை தந்த எம்.எஸ்.வி, காலத்தை கடந்து நிற்கும் வசனங்களை எழுதிய ஆரூர்தாஸ் அனைவருக்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். என்னதான் டி.வி.யில் பலமுறை பார்த்த படமாக இருப்பினும், க்ளைமாக்ஸில் சிவாஜி கரம் பற்றி சாவித்திரி மரித்து போவதை பார்க்கும் அந்த ஒரு நொடியில் அறியாமல் கலங்கிப்போகிறது இதயம்.  

க்ளாஸ்ஸிக் பட ரசிகர்களுக்காக 70 தியேட்டர்களில் வெளியாகி இருக்கிறது இக்காவியம். தவற விடாதீர்.
...................................................................Monday, August 12, 2013

புல்லுகட்டு முத்தம்மா                                                                        
                                                            ஆரூர் முனா, முத்தம்மா மேடம், நான் 

பிரபல நட்சத்திரங்கள் நடித்திராத  திரைப்படங்கள் அவ்வளவு எளிதாக என்னை தியேட்டருக்கு இஸ்ததாக வரலாறு இல்லை.அதையும் மீறி வெறும் டைட்டிலால் மட்டுமே சுண்டி இழுத்த படங்கள் சில: சக்கரவர்த்தி திருமகன், பாரசீக மன்னன், திருமதி தமிழ். ஆனால் இவற்றையெல்லாம் அலாக்க தூக்கி மலாக்க போடும் டைட்டில் தாங்கி  சென்ற வாரம் வெளியான சினிமாதான் இந்த புல்லுகட்டு முத்தம்மா. வெற்றிகரமாக 2 வது வாரம் என தினத்தந்தியில் விளம்பரம் கண்ட மறுகணம் மனம் சொன்னது: 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் சிவகுமாரா'. அண்ணாசாலை அண்ணா தியேட்டரில் நேற்று மதிய காட்சிக்கு ஆரூர் முனா செந்திலுடன் 'கிரக' பிரவேசம் செய்தேன்.

வி.சேகரின் பொங்கலோ பொங்கலுக்கு பிறகு அண்ணாவில் காலடி எடுத்து வைக்க காலம் கனிந்தது. தனது 4 வயது மகனுடன் நைனா ஒருவர் சீட்டில் அமர்ந்து இருந்தது..டபுள் க்ரேட்.

கதை என்ன? 'கசமுசா' செய்வதில் கைதேர்ந்த கல்லூரி மாணவன்-கம்-பண்ணையார் மகன் ராஜாவிற்கு கால் கட்டு போடுகிறார்கள் பெற்றோர்கள். Debut ராவில் தலைவலி என்று சுணங்கிப்போகிறான் பயபுள்ள. மறுநாள் மனைவி ராதாவிடம் 'இன்னைக்கி சரவெடிதான்' என குஷியாக கூறி பிஸியாகும் நேரத்தில் மீண்டும் புஷ்வாணமாகிறான். 50 ரூபாய் டிக்கட் வாங்கிய ஏ தில் மாங்கே மோர் ரசிகர்களை ஏமாற்றிய அக்கொடூர கிராதகனை ஆஸ்பத்திரியில் சேர்க்கிறார்கள் சொந்த பந்தங்கள்.

டாக்டர் நளினி(மிஸஸ் ராமராஜன்) 'டாக்டர் கிட்டயும், வக்கீல் கிட்டயும் பொய் சொல்லக்கூடாது. உன் பிரச்னை என்ன சொல்லுப்பா' என்றதும் அந்த 'இஸ்கலக்கடி லாலா சுந்தரி கோலா கொப்பற கொய்யா' ப்ளாஷ்பேக் ஆரம்பம். சொல்கிறேன். கேளுங்கள்:

கல்லூரி லீவில் ஊருக்கு செல்லும் ராஜா பக்கத்து வீட்டு ரவா லட்டிடம் வேலையை காட்ட செவுலில் அவுல் வாங்குகிறார். 'என்ன மாரியான சமூகத்ல பொயக்கிறோம் நாம' என நொந்தவாறு வயக்காட்டில் நடந்து செல்லும்போது அவன் கண்ணில் படுகிறாள் நமது நாயகி. ஆம். அதோ. அதோ. அங்கே வயல் நடுவே. சரியாக 41 வது நிமிடத்தில் புல்லுகட்டு முத்தம்மா ஆன் ஸ்க்ரீன். 'உய்ய் உய்ய்' பறக்கிறது விசில். மூன்று வேளையும் அன்லிமிடட் மீல்ஸ் சாப்பிட்டு செல்லமாக வளர்ந்த தோற்றப்பொலிவுடன் புல்லறுக்கும் முத்தம்மாவை கண்டு புல்லரித்து போகிறான் ஆன்ட்டி ஹீரோ ராஜா.

முத்தம்மாவுடன் ராஜா 'விளையாடியதை' சித்ரா பார்க்கும்போது வந்துவிடுகிறது இன்டர்வல். 'என்னடா ஒண்ணுமே இல்ல' அங்கலாய்ப்புடன் கேண்டீனை நோக்கி ஓடிய பக்த கோடிகளில் யாமும் இருவராக. அப்போது சீட்டில் அமர்ந்திருந்த 'திருநங்கை' அடித்த கமன்ட்: 'இன்னா படம் எடுத்துருக்கான். சப்பையா. செல் போன்லயே இதவிட சூப்பரா நெர்ய மேட்டர் கீதே' .   

                                                                          


வெறும் 20 ரூபாய்க்கு 300ml கோக் வழங்கும் அண்ணாவை மனதார வாழ்த்திவிட்டு மறுபாதி காண குத்த வைத்தோம். சரி யார் அந்த சித்ரா? துபாய்க்கு சென்று நான்கு ஆண்டுகள் ஆகியும் ஊர் திரும்பாத கணவனை கட்டிக்கொண்டு கட்டிக்கொள்ளாமல் அழும் அபலை. பராசக்தி சிவாஜி பத்து நாள் டைபாய்டில் படுத்து எழுந்ததுபோல் இருக்கும் ராஜாவிற்கு ப்ராக்கெட் போடுகிறாள் சித்ரா. மிஷன் சக்சஸ்.

ஒரு அகால தினத்தில் சித்ராவிற்கு சர்ப்ரைஸ் தர சொல்லாமல் கொள்ளாமல் துபாயில் இருந்து வரும் சோனகிரி புர்ஷன் அந்த துன்பியல் சம்பவத்தையும் பார்த்து விடுகிறான். 'டேய்..டெட்டடேய்' என ஆக்ரோஷத்துடன் நம்ம ஆன்ட்டி ஹீரோவை அடித்து துரத்த...வேணாம் சார் நெஞ்சு வலிக்குது.


ஒட்டுமொத்த படத்தில் என்னை மெர்சலாக்கிய வசனத்தை பேசியது  நம்ம ராதாவின் அண்ணிதான்: 'வீட்டுக்கு போயி சமச்சி வீட்டு சாப்பாடு கொண்டு வர்ரம்மா' (பின்ன வீட்ல சமச்சி ஹோட்டல் சாப்பாடா கொண்டு வர முடியும்? என்னமோ போடா மாதவா).
 
ப்ளாஷ்பேக் ஓவர். 'உங்க நரம்பு மண்டலம் ஹெவியா டேமேஜ் ஆகி இருக்கு. ஆனா சரி பண்ணிறலாம். எலே டோன்ட் வொர்ரி பீ ஹாப்பி' என டாக்டர் சொன்னதுதான் தாமதம்...

நர்சக்கா ஒரு குண்டை தூக்கி போடுகிறார்: 'டாக்டர் ராதா ப்ரெக்னன்டா இருக்காங்க?'. ராதாவை நோக்கி ஓடுகிறார் நளினி: 'இதுவரைக்கும் எல்லாமே நோ பால் தான? எப்படி?'. இப்போது ராதாவின் ப்ளாஷ்பேக் ஆரம்பம். அதாவது ஊரில் தங்கி இருந்தபோது அக்கா புர்சர் செய்த சேட்டையால் ராதா இப்படி ஆகிட்டாங்கப்பா. க்ளைமாக்ஸ் என்ன? அண்ணா, கிருஷ்ணவேணி, கே.கே. நகர் விஜயா, எம்.எம். தியேட்டர்...எங்கயாச்சும் அமுக்கமா தலைல போர்வைய போத்திட்டு கமுக்கமாக பாருங்கப்போய்!!

'பிறர் பொருளுக்கு ஆசைப்படுபவன் தன் ''பொருளை இழப்பான்', 'அசத்த போவது யாரு?' போன்ற பிரமிக்க வைக்கும் விளம்பரங்களின் துணை கொண்டு 2 வது வாரம் வீர நடை போடும் புல்லுகட்டு முத்தம்மாவை ஹாலிவுட்டில் 'Grassbundle Pearl Mother' என பெயரிட்டு படமாக்க இருக்கிறார்கள் என்பது 'குறி'ப்பிடத்தக்க செய்தி.

சமகால தமிழ் ஹிந்தி சினிமாக்களில் வரும்  கவர்ச்சி/ஆபாச காட்சிகளில் 25% கூட இல்லாமல் 'ஓவர் மாத்திர ஒடம்புக்கு ஆகாது தம்பி' எனும்  தத்துவத்தை (விடிய விடிய) 'விழி'ப்'புணர்வு' சித்திரா வடிவில் நமக்கு தந்திருக்கும் இயக்குனர் முத்துபாண்டி மற்றும் தாட்டியான ஆன்ட்டி முத்தம்மா....

You deserve a pat in the back!!
 .....................................................

சமீபத்தில் எழுதியது:

துல்கர் நடித்த...
Neelakasham Pachakadal Chuvanna Bhoomi - விமர்சனம் 

.........................................................................


 


Wednesday, August 7, 2013

ஸ்பெஷல் மீல்ஸ் (07/08/13)


கண்ணா லட்டு தின்ன ஆசையா:

                                                                       
                                                                       Image: madrasbhavan.com

அண்ணாசாலை(நந்தனம்) பெட்டிக்கடை ஒன்றினருகே தென்பட்ட கழக கல்வெட்டு. கோவில்களுக்கு 10 வாட்ஸ் பல்ப் அன்பளிப்பு தந்துவிட்டு அந்த வெளிச்சம் மறைய 'உபயம்' போடுபவர்களையும்  மிஞ்சி விட்டார்கள் இங்கே. 'இனிப்பு வழங்கிய' சென்னை மேயர் சைதை துரைசாமியின் பெயர் கல்வெட்டில் காலத்திற்கும் நிலைக்கும் வண்ணம் என்னமா சிந்திக்கறாங்க. இந்த மாதிரி தீவீர தொண்டர்கள் இருக்குற வரைக்கும் தமிழ்நாட்ல உங்கள யாரும் அசச்சிக்க முடியாது..அசச்சிக்க முடியாது.
...................................................................

The Conjuring:
பீட்சாவிற்கு பிறகு தியேட்டரில் ரசித்து பார்த்த பேய்ப்படம் The Conjuring. சத்யம் தியேட்டரின் மிரட்டும் ஒலி அமைப்பில் 100% நிரம்பி வழிந்த ரசிகர்களுடன் இம்மாதிரி திகில் படங்களை இரவுக்காட்சி பார்ப்பதே தனி த்ரில்தான். உண்மைச்சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு சிறிதளவே க்ராபிக்ஸ் பயன்படுத்தி போதுமான அளவு பயமூட்டி இருக்கிறார்கள். ஐ லைக் இட்.
......................................................................

மறந்தேன் மன்னித்தேன்: 
                                                                
                                                                         Image: madrasbhavan.com

ஆழ்வார்பேட்டை சிக்னல் அருகே கண்ட ப்ளெக்ஸ். டெங்கு இல்லா சென்னையை உருவாக்க 'அனு' தினமும் தொடர்ந்து செயல்படுவதாக உறுதி அளித்திருக்கிறார்!!!
..............................................................................

அடிதடி:
சென்னை எக்ஸ்ப்ரஸ், தலைவா ட்ரெயிலர்கள் அடிவயிற்றில் புளியை கரைத்து விட்டதால் இவ்வாரம் இரண்டிற்குமே ஒரு பெரிய கும்பிடு. ஆகஸ்ட் 23 ஆம் தேதி ஒரு சுவாரஸ்யமான சினிமா திரைக்கு வருகிறது. அதன் பெயர் Local Kung Fu. வெறும் 95,000 ரூபாய் பட்ஜெட்டில் சண்டைப்படமொன்றை எடுத்திருக்கிறார் அஸ்ஸாமின் ஜாஃப்ரி. ''இந்திய சினிமாவில் உருப்படியாக ஒரு மார்சியல் ஆர்ட்ஸ் படம் கூட வந்ததில்லை. அக்குறை இப்போது நீங்கும். எனக்கு தெரிந்த அடிப்படை தொழில்நுட்ப அறிவை வைத்து இப்படைப்பை உருவாக்கி இருக்கிறேன்" எனச்சொல்கிறார் ஜாஃப்ரி. அமர்க்களமான The Raid Redemption படத்திற்கு பிறகு நான் பார்க்கவுள்ள அசல் சண்டைப்படம் இது.  

வாங்கண்ணா வணக்கங்கண்ணா!!
.............................................................................

சென்னையில் ஒரு நாள்:  
செப்டம்பர் 1 ஆம் தேதி நடக்கவுள்ள  சென்னை பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ள உற்சாகமாக வருகையை உறுதி செய்துவரும் உள்ளங்களுக்கு வாழ்த்துகளும், நன்றிகளும். சந்திப்பு குறித்த விபரங்கள் பற்றி மேலும் அறிய கீழுள்ள தளத்தை விசிட் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்: 

http://www.tamilbloggers.info/ 
............................................................................

வித்தகன்:
சென்ற வெள்ளியன்று ப்ரசன்னா இயக்கி நடித்த 'கல்யாண சமையல் சாதம்' படத்தின் ஆடியோ வெளியீட்டிற்கு செல்லும் வாய்ப்பு நல்கியது. சினேகா, பாலுமகேந்திரா, கே.எஸ்.ரவிகுமார், கிரேசி மோகன் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்ட நிகழ்வை தொகுத்து வழங்கியது ஆர்.ஜே. பாலாஜி. 'நானும் காமடி செய்கிறேன்' என்று தமிழ் சினிமா/ஊடகம் மற்றும் பத்திரிக்கைகளில் போடப்படும் அசுர மொக்கைகளுக்கு நடுவே பாலாஜி ஒரு விதிவிலக்கு. ஒட்டுமொத்த அரங்கும் வாய் விட்டு சிரிக்கும் வண்ணம் டைமிங் சென்ஸுடன் நகைச்சுவையாக பேசி விழாவை சிறப்பாக்கி விட்டார். வாழ்த்துகள் நண்பா.
.........................................................................

அச்சமுண்டு அச்சமுண்டு: 
புத்தகத்திற்கு வித்யாசமான தலைப்பு வைப்பதற்கான எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள் என்பதை புத்தகக்கண்காட்சிகள் மூலம் பெருமளவு அறிந்து கொள்ளலாம். சமீபத்தில் புத்தகக்கடையொன்றில் வினோதமான புத்தக தலைப்புகளை வாசிக்கும் பாக்கியம் பெற்றேன். அவை: ஓநாயின் புத்தாண்டு கொண்டாட்டம், உப்புக்கடலை குடிக்கும் பூனை, அத்திப்பழங்கள் இன்னும் சிவப்பாய்த்தான் இருக்கின்றன, பகல் தண்டவாளத்தில் ரயில். விதிவசத்தால் நானொரு புத்தகம் எழுதினால் இப்படி ஒரு எடக்கு மடக்கான பெயரைத்தான் வைக்க வேண்டும். 
.............................................................................. 

புகைப்படம்: 
நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 'இமேஜ் டுடே' கண்காட்சிக்கு சென்றிருந்தபோது வளாகத்தினுள் எடுத்த புகைப்படம்:
                                                                     
                                                                         Image: madrasbhavan.com  
 ..........................................................................
 
துள்ளி விளையாடு:
ஆர்ப்பாட்ட 'கொலைவெறி'க்கு பிறகு கமுக்கமாக யூ ட்யூப்பில் ஹிட்டடித்து கொண்டு இருப்பது 'குற்றாலம்' திரைப்படத்தின் லவ் பெயிலியர் ஆந்தம் பாடல்தான். 

'காதல கண்டு புடிச்சவன் யாரு? அவன் கையில கெடச்சா மவனே செத்தான்'. நல்லாத்தான் இருக்கு.காணொளி பார்க்க க்ளிக் செய்க: 


https://www.youtube.com/watch?v=PtAr5gVVqk0

........................................................................ 
  
Related Posts Plugin for WordPress, Blogger...