CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Thursday, July 18, 2013

Bhaag Milkha Bhaag                                                                     

காலனி ஆதிக்க விளையாட்டான க்ரிக்கெட் தவிர்த்து வேறு விளையாட்டுகளை மையமாக கொண்டு அவ்வப்போது சில ஹிந்தி சினிமாக்கள் வருவதுண்டு. உதாரணத்திற்கு சக் தே இண்டியா(ஹாக்கி), பான் சிங் தொமர் (தடகளம்)  மற்றும் பிரியங்கா சோப்ரா நடிப்பில் வெளிவரவுள்ள மேரி கோம் (குத்துச்சண்டை) போன்றவற்றை சொல்லலாம்.  அவ்வரிசையில் இன்னொரு முயற்சிதான் பன்முகக்கலைஞன் பரான் அக்தர் நடிப்பில் வெளியாகி இருக்கும் பாக் மில்கா பாக்.

யார் இந்த மில்கா சிங்? காலம் காலமாக க்ரிக்கெட்டை மட்டுமே கொண்டாடித்தீர்க்கும் ஒவ்வொரு  இந்தியனும் எழுப்பும் அபத்தமான கேள்வி. உலகின் மிகமுக்கிய மற்றும் பிரபலமான விளையாட்டுகளில் ஒன்றான ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் புகழை 1950 மற்றும் 1960 களில் எட்டுத்திக்கும் பரப்பிய முதல் மற்றும் ஒரே வீரர்தான் இந்த மில்கா. 1984 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் பி.டி. உஷா எப்படி வெண்கல பதக்கத்தை மயிரிழையில் தவற விட்டாரோ அதே போல 1960 ரோம் ஒலிம்பிக்கில் நான்காவது இடத்தை மட்டுமே பிடித்த துரதிர்ஷ்டசாலி இந்த மில்கா.

'பாக் மில்கா பாக்'கை இயக்கி இருப்பது ராகேஷ்(ரங் தே பசந்தி, டெல்லி -6). இந்திய -பாகிஸ்தான் பிரிவினையின்போது பெற்றோரை பறிகொடுத்தது, திருடனாய் சில காலம் நாட்களை நகர்த்தியது, ராணுவ மற்றும் தடகள வாழ்க்கை. அதோடு கொஞ்சம் காதலும். இப்படி பல்வேறு நிகழ்வுகளை கடந்து வந்த மில்கா சிங்கின் வாழ்க்கையை ஒரு Biopic ஆக பதிவு செய்ய 3 மணி நேரம் தேவைப்பட்டிருக்கிறது ராகேஷிற்கு. அது ஏற்புடையதும் கூட.
                                                                     


அகதிகள் முகாமில் கணவருடன் தனது சகோதரி உடலுறவு கொள்ளுதல், ஆஸ்திரேலிய வீராங்கனையுடன் தனக்கிருந்த உறவு உட்பட அனைத்து விஷயங்களையும் ஒளிவு மறைவு இல்லாமல் படமாக்க சம்மதம் தந்திருக்கும் மில்கா சிங்கை முதலில் பாராட்டியாக வேண்டும்.

சிக்ஸ் பேக் உடற்கட்டுடன் படம் நெடுக பிரமாதமாக ஓடியிருக்கிறார் பரான். இந்த கேரக்டருக்காக கடுமையான உழைப்பை தந்திருக்கும் பரானுக்கு ஹாட்ஸ் ஆப். ரொமான்ஸ், போட்டிகளில் வெற்றி தோல்வி, கோபம் என அனைத்திற்கும் 'செஞ்சி வச்ச செல' போல ஒரே முகபாவத்தை பிரதிபலிப்பது குறைதான். இவர் நடிப்பிற்கு குட்டி மில்கா பையன் ஒரு படி மேல்.

கொஞ்சமே வந்தாலும் கொஞ்சும் கிளி சோனம் கபூர் நெஞ்சை அள்ளுகிறார். மில்காவின் 'பார்ட் டைம்' காதலியாக வரும் ரெபெக்கா ஹாட்டோ ஹாட். பரான்...மச்சக்காரன்யா நீ. ராணுவ அதிகாரியாக தமாசு மீசையுடன் பிரகாஷ்ராஜ். வாங்கிய பணத்திற்கு வஞ்சனை இல்லா நடிப்பு. ஆல்மோஸ்ட் நேருவாக தலிப்பின் தோற்றப்பொருத்தமும் சிறப்பு.
                                                               

ஷங்கர் - எஹ்சான் - லாய் இசையில் பாதியில் ஒலிக்கும் பக்கா பஞ்சாபி பாடலான 'மஸ்தோ கா', தீப்பறக்கும்  'ஜிந்தா' இரண்டும் சிறப்பு. ஜாவேத் பஷீர் பாடிய 'மேரா யார்'   காதல் ஜிகர்தண்டா பாஸு. இணையத்தில் கேட்கிறேன். கேட்கிறேன். கேட்டுக்கொண்டே இருக்கிறேன். இடைவேளைக்கு பிறகு வரும் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம்தான்.

ஆவணப்படம், கமர்ஷியல் காவியம் ஆகிய இரண்டில் ஒன்றாகி விடக்கூடாது. அதேநேரத்தில் இரண்டாம் பாகத்திற்கு வழிவகுக்காமல் மில்காவின் வாழ்வை பதிவு செய்து விட வேண்டும். லேசாக தட்டுத்தடுமாறினாலும் எப்படியோ வெற்றிக்கோட்டை தொட்டுவிட்டார் இயக்குனர்.


இப்படத்தை பார்த்த பிறகு கண்ணீரில் மூழ்கிய மில்கா சிங் 'எனது வாழ்வை சிறப்பாக படமாக்கி உள்ளீர்கள். பரான்...என்னை நேரில் பார்ப்பது போன்றே இருந்தது உங்கள் உடல்மொழி' என பாராட்டி இருக்கிறார். அரசாங்கம், பத்திரிக்கை மற்றும் மக்களால் மறக்கப்பட்ட இந்தியாவின் தலைசிறந்த விளையாட்டு வீரனின் வாழ்வை படமாக்கி இருக்கும் 'பாக் மில்கா பாக்' அணிக்கு தங்க மெடலை தாராளமாக அணிவிக்கலாம்.
..........................................................

சமீபத்தில் எழுதியது:

Sixteen - விமர்சனம் 

  

7 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

துரதிர்ஷ்டசாலி ஆனாலும் மனதை கவர்ந்த மில்கா... பார்க்க வேண்டிய லிஸ்ட்ல் உள்ள முதல் படம்... நன்றி...

சாய்ரோஸ் said...

ரொம்ப அருமையான விமர்சனம்... அவசியம் பார்க்கவேண்டிய ஒரு சினிமாவைப்பற்றிய செய்திகளை விமர்சனமாகக்கொடுத்தது மிகச்சிறப்பு... உங்களது இந்த விமர்சனம் படம் பார்க்கும் ஆவலைத்தூண்டுகிறது...

ரூபக் ராம் said...

பார்த்திடுவோம்....

Sri said...

Thanks for your review..Wanna watch this movie..

வெங்கட் நாகராஜ் said...

இந்த ஞாயிறு படம் பார்க்கச் செல்ல வேண்டும்.... அலுவலகம் செல்லாதிருந்தால்!

வெங்கட் நாகராஜ் said...

தொடர....

சாய்ரோஸ் said...

சிவா சார்... ஒருவழியாக உங்களது விமர்சனம் தந்த ஆவலால் பாக் மில்க்கா பாக் படத்தை பார்த்துவிட்டேன்... என்ன சார் நீங்கள்... எவ்வளவு விஷயத்தை மறைத்துவிட்டீர்கள்... மில்க்கா சிங்கின் சிறுவயது கேரக்டருக்கு நடித்த குட்டிப்பையனின் நடிப்பென்ன?... அந்த குட்டிப்பையன் ஆற்று மணலில் வெறும் கால்களில் ஓடும்போதும், வளர்ந்த மில்க்கா சிங் தனது காதலிக்கு பக்கெட்டில் தண்ணீர் சுமந்து வர அதை காதலியிடமிருந்து பிடுங்கும்போது தளும்பிச்சிந்தும் வாளியைக்காட்டும்போதும், மில்க்கா சிங் காலில் ஏற்பட்ட காயத்தோடுகூட செலக்ஷனில் ஓடும் போதும், ஒவ்வொரு ஓட்டப்பந்தயக்காட்சியிலும் சினிமாத்தனம் இல்லாமல் காட்டும்போதும், மில்க்கா சிங்கின் தந்தையின் தலை துண்டிக்கப்படும்போதும் என அடுக்கிக்கொண்டே போக கடமைப்பட்ட ஒளிப்பதிவு பற்றி ஒன்றும் சொல்லாமல் விட்டுவிட்டீர்களே... நகைச்சுவை காட்சியாகட்டும், காதல் காட்சியாகட்டும், சோக காட்சியாகட்டும், சீரியஸ் காட்சியாகட்டும்... பிண்ணி எடுத்திருக்கும் பின்னனி இசை பற்றி ஒன்றும் சொல்லாமல் விட்டு விட்டீர்களே?... ஓப்பனிங்கிலேயே மில்க்கா சிங்கின் ஒலிம்பிக் தோல்வியையும் அதைத்தொடர்ந்த பத்திரிக்கை செய்திகளையும் காட்டி படத்தை தொடங்கியதும், மில்க்கா சிங்கின் சிறுவயது வாழ்க்கையையும், வளர்ந்த வாழ்க்கையையும் மாறி மாறி மிக்ஸ் செய்து காட்டியதும் திரைக்கதைக்கான மிகப்பெரிய பலம்...
இந்திய சிம்பலுடன் கூடிய கோட்டு சட்டையின் மீது மில்க்கா சிங்கின் காதலும், இந்திய-பாக் பிரிவினை காட்சிகளும், மில்க்கா சிங் பாகிஸ்தானில் போட்டிக்கு செல்லும்போது தான் வாழ்ந்த இடத்தை பார்க்கச்சென்று மண்டியிட்டு குலுங்கி அழுவதும், அங்கு தனது பழைய சிறுவயது நண்பனையும் அவனது குழந்தைகளையும் பார்க்கும்போது காட்டும் நெகிழ்ச்சியும் என படம் முழுக்க ஃபிரேம் பை ஃபிரேம் வித்தியாசப்பட்டிருக்கிறது...

மில்க்கா சிங்கோடு ஒப்பிடும்போது நமது சினிமாக்கள் போட்டி போட்டு ஓடவேண்டிய தூரம் நிறைய இருப்பதாகவே கருதுகிறேன்...

பாக் மில்க்கா பாக்... காலத்தால் காக்கப்பட வேண்டிய பொக்கிஷமே என்பதில் எனக்கு மாற்றுக்கருத்துக்கள் ஏதுமில்லை...
படம் என்னை மிகவும் கவர்ந்தது... கிரேட்...

Related Posts Plugin for WordPress, Blogger...