CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Sunday, June 30, 2013

அஞ்சு சுந்தரிகள்


                                                                           

'டெஸ்ட்' மேட்ச் போல பொறுமையுடன் பாகவதர் டைப் 'தீன கருணாகரனே நடராஜா' பாடல்களை உள்ளடக்கிய காம்போ பேக் படங்களை பார்த்ததொரு காலம். கடந்த ஓரிரு ஆண்டுகளாக 2 மணி நேரத்திற்கு மேல் தியேட்டரில் படம் பார்க்க பொறுமையில்லை. 20/20 போல ஒரு முழுப்படத்தின் நேரத்தில் 4 வெவ்வேறு இயக்குனர்கள் இயக்கிய பேக்கேஜ் சினிமாக்கள் வரத்துவங்கி இருப்பது பாராட்டத்தக்கது. ஹிந்தியில் பாம்பே டாக்கீஸ் போல தற்போது கேரள நன்னாட்டிளம் இளைய படைப்பாளிகளிடம் இருந்து அஞ்சு சுந்தரிகள். ஒவ்வொன்றும் அரைமணிநேர குட்டிப்படங்கள் என்பதால் கதை அல்லது காட்சிகள் குறித்து பெரிதாக விளக்காமல் தொடர்கிறேன்... 

சேதுலக்ஷ்மி: 
சிறுமி சேதுலக்ஷ்மி பள்ளித்தோழனின் பேச்சைக்கேட்டு புகைப்படம் எடுக்க ஸ்டுடியோ ஒன்றிற்கு செல்கிறாள். அங்கு ஏற்படும் ஒரு நிகழ்வால்  மன அழுத்தத்திற்கு ஆளாகிறாள். அதனால் ஏற்படும் விளைவுகளை விவரிக்கிறது இப்படம். பேபி அனிகாவின் அணிற்பல் சிரிப்பும், பிரமாதமான நடிப்புத்திறனும் மெச்சத்தக்கது. எதிர்பாராத நிகழ்வு மீண்டும் மீண்டும் அவள் மனதை வாட்டியெடுக்க இரவில் பெற்றோரின் கால்களில் படுத்துறங்கும் காட்சி நம் மனதை நெகிழ வைக்கும் விசுவல் கவிதை.

இஷா:
பெரும் செல்வந்தர் வீட்டில் டிசம்பர் 31 நள்ளிரவு நேரத்தில் நுழைகிறான் திருடன் ஜினு(நேரம் ஹீரோ நிவின்). 'பெற்றோர்கள்' புத்தாண்டை கொண்டாட வெளியே சென்றுவிட தனிமையில் இருக்கிறாள் இஷா. அங்கே நடக்கும் முதல் திருப்பத்தை கண்டு புருவத்தை உயர்த்தும் நவீனின் நிலை என்ன என்பதே இந்த சோ ச்வீட் கதை. இரண்டாம் சுந்தரி இஷா சர்வானி நடிப்பிலோ/ அழகிலோ பெரிதாக கவரவில்லை. என்னைப்பொறுத்தவரை ஐந்தில் மிகச்சுமாராக இருந்தது 'இஷா'தான்.

கவுரி:
குழந்தைகள் இல்லாத தம்பதிகளான பிஜு மேனன் மற்றும் காவ்யா மாதவன் ஆகியோரின் திருமண நாளில் நடக்கும் துயர சம்பவத்தை விவரிக்கிறது இக்கதை. ஒரு சில நொடிகள் முன்னணி ஹீரோ ஜெயசூர்யா தலையை காட்டிவிட்டு போய்விடுகிறார். மனதில் அழுத்தமாக பதிய மறுப்பதால் இதற்கு நான்காவது ரேங்க் மட்டுமே.     
                                                            
   
குள்ளன்டே பாரியா:
'The tall woman and her short husband' எனும் சீனக்கதையின் தாக்கத்தில் இதனை உருவாக்கி இருக்கிறார்கள். விபத்தில் காலடி பட்டு வீல்சேரில் நாட்களை கடத்தும் துல்கரின் (மாடிப்)பார்வையில் விரிகிறது இப்படைப்பு. துல்கர் வசித்து வரும் காலனியில் புதுமணத்தம்பதிகள் குடியேறுகிறார்கள். மனைவியை விட கணவன் குள்ளமாக இருப்பதால் சுற்றி இருப்பவர்கள் கூடிப்பேசி கிண்டலடிக்கிறார்கள். மாடியில் இருந்தவாறு ஒவ்வொரு நிகழ்வையும் புகைப்படம் எடுப்பதோடு பின்னணிக்குரலில் கதையும் சொல்கிறார் துல்கர். இவரைப்போலவே வசனமே இன்றி தம்பதி கேரக்டரில் வாழ்ந்திருக்கும் ஜினு மற்றும் ரீனுவிற்கு போடலாம் சபாஷ். க்ளைமாக்ஸ் மழைக்காட்சி....இதயத்தை கனமாக்கும். 

ஆமி:
மலையாள படவுலகின் அருமை நாயகன் பஹத் தேர்ந்தெடுத்து நடித்திருக்கும் சப்ஜக்ட். சொல்லவே வேண்டாம். தலைவர் வழக்கம்போல் டாப் க்ளாஸ் பெர்பாமன்ஸ். கொச்சியில் இடமொன்றை வாங்குவதற்காக இரவில் காரோட்டி செல்கிறார் செல்வந்தர் அஜ்மல்(பஹத்). சோர்வில் அவர் தூங்கிவிடாமல் இருக்க அலைபேசி வாயிலாக அவ்வப்போது விடுகதை போடுகிறார் மனைவி. பயணத்தின் இடையே ஏற்படும் சில சம்பவங்கள் அஜ்மலின் மனப்போக்கை மாற்றியமைக்கின்றன. 

ஒரு ரோட் மூவி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஆமி சிறந்த எடுத்துக்காட்டு. உதயம் NH4 படத்தையெல்லாம் நல்லதொரு ரோட் மூவி என தூக்கிவைத்து  முக்காபுலா ஆடிய நண்பர்கள் ஆமியை பார்க்காவிட்டால் துரதிர்ஷ்டம்தான்.   

ஐந்திலும் எனக்கு பிடித்த நடிப்பு பேபி அனிகாவினுடையது. பிடித்த படம் குள்ளன்டே பாரியா. 

இயக்குனர்கள் சிஜூ, சமீர்(டயமன்ட் நெக்லஸ்), ஆஷிக்(22 ஃபீமேல் கோட்டயம்), அமல் மற்றும் அன்வர்(உஸ்தாத் ஹோட்டல்) ஆகிய ஐவரும் 20 வருட நண்பர்கள் என்பது சிறப்பு தகவல். மகளிரின் பல்வேறு உணர்வுகளை இயல்பாக திரையாக்கம் செய்திருக்கும் ஐந்து  இயக்குனர்களின் இப்படங்கள் அரைமணி நேர பேக்கேஜ் சினிமாக்களின் புதிய கிரீடத்தில் மேலுமொரு கோஹினூர்.

அனைத்துமே பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் படைப்புகள் என்றாலும் நடிகைகள் எவருக்கும் உணர்ச்சி பொங்கும் முகபாவங்கள்/வசனங்கள் இல்லை. மலையாள திரைப்பட உலகில் புதிய அலைகளை உருவாக்கி வரும் நிவின், துல்கர் மற்றும் பஹத் மூவரும் கதையின் தன்மைக்கேற்ப தம்மை  முன்னிலைப்படுத்தாமல் நடித்திருப்பது பாராட்ட வேண்டிய விஷயம். இமானுவேல் மற்றும் ஆமென் படங்களுக்கு பிறகு இங்கும் பஹத்தின் வெற்றிக்கொடி பட்டொளி வீசி பறந்திருக்கிறது. 

வித்யாசமான திரைப்படத்தை விரும்பும் ரசிகர்களை கண்டிப்பாக ஏமாற்றாது இந்த அஞ்சு சுந்தரிகள். மனசிலாயோ? 
.................................................................. 

  

3 comments:

வெங்கட் நாகராஜ் said...

உங்கள் விவரிப்பிலேயே படத்தினை பார்க்க வேண்டும் எண்ணம் வந்துவிட்டது. பார்க்க வேண்டும்....

Unknown said...

ஞ்நான் மலையாளம் அறியில்லா

பால கணேஷ் said...

அஞ்சு சுந்தரிகளையும் அடர்குறுந்தகடாக வெளிவரும் போது அவசியம் பார்க்கிறேன் சிவா!

Related Posts Plugin for WordPress, Blogger...