2008 ஆம் ஆண்டு வெளிவந்த சிவாஜி கணேசனின் சுயசரிதை நூல் தவிர அவரது முழு பங்களிப்புடன் வேறெந்த நூலும் வந்ததில்லை என்றெண்ணி இருந்தேன். ஆனால் கதாநாயகனின் கதை எனும் தலைப்பில் விஜயா பப்ளிகேஷன்ஸ் மூலமாக நடிகர் திலகத்தின் மற்றொரு படைப்பை படிக்கும் வாய்ப்பு கிட்டியது. பொம்மை இதழில் சிவாஜி எழுதிய சிறப்பு கட்டுரைகள் மற்றும் அவரது பேட்டிகளின் தொகுப்பாக அமைந்துள்ளது இப்புத்தகம்.
சிவாஜி குறித்து அவரது தாயார் ராஜாமணி, அறிஞர் அண்ணா, கருணாநிதி, நடிகர் சிவகுமார் ஆகியோரின் கருத்துகள் ஆரம்ப பக்கங்களை அலங்கரிக்கின்றன. அவற்றை தொடர்வது சிவாஜியின் சிறுவயது மற்றும் நாடக கால அனுபவங்கள். சங்கிலியாண்டபுரத்தில் சுட்டிப்பயலாக திரிந்த கணேசனுக்கு நாடகத்தின் மீது ஈர்ப்பு வருவதற்கான காரணம் அவரது தெருவில் நடந்த கட்டபொம்மன் கூத்துதான். பொன்னுசாமி பிள்ளையின் ஸ்ரீ பாலகான சபாதான் இம்மகா கலைஞனுக்கான கலைக்கதவை திறந்து விட்டது.
விடிய விடிய நாடகம், ஊர் ஊராக பயணம், சூழ்நிலை காரணமாக வெவ்வேறு நாடகக்குழுக்களில் தஞ்சம் புக வேண்டிய கட்டாயம்..இப்படி இளம் பிராயத்தில் நடிகர் திலகம் பட்ட பாடு சொல்லில் அடங்காது. நாடக உலகில் இணைந்த பிறகு சுமார் ஆறாண்டுகளுக்கு பிறகே தாயை சந்திக்க சந்தர்ப்பம் கிட்டியது அவருக்கு. தந்தையின் இறப்பிற்கு கூட ஊர் செல்ல அனுமதி கிட்டவில்லை. அந்நாளில் நாடக கலைஞர்கள் எப்படி வேலை வாங்கப்படுவார்கள்,சபாக்களின் கட்டுப்பாடுகள் என்ன, சக கலைஞரின் நட்பு என பல்வேறு தகவல்களை பரிமாறி இருக்கிறார் சிவாஜி.
எம்.ஆர். ராதாவின் குழுவில் இணைந்து இவர் நடித்த நாடகங்களில் ஒன்று 'இழந்த காதல்'. இதில்தான் முதன்முறையாக நாடக காட்சிகள் புகைப்படமாக எடுக்கப்பட்டது என் அனுமானிக்கிறார் நடிகர் திலகம். 'டப்பாச்சாரி' எனும் நாடகத்தில் அய்யர் என்பவர் ஒன்பது வேடங்கள் தாங்கி நடித்திருந்தாராம். 'இப்படி நடிப்பது தனக்கு சாத்தியமா' எனும் கேள்வி பல நாட்கள் கணேசனின் மனதில் தங்கியிருப்பினும் நவராத்திரி மூலம் விடையளித்துவிட்டார் என்பது நாமறிந்தது.
சிவாஜி நடித்த பல்வேறு நாடகங்களின் பட்டியல் மற்றும் அபூர்வ புகைப்படங்களை கொண்ட இப்புத்தகத்தின் விலை ரூ.100. மொத்த பக்கங்கள் 120. அக்காலத்தில் தமிழ் மேடை நாடகங்கள் எப்படி இயங்கின என்பதை அறிய விரும்பும் கலா ரசிகர்கள் தவறாமல் படிக்க வேண்டிய நூலிது.
கதாநாயகனின் கதையின் இரண்டாம் பாகம் முழுக்க தன்னுடைய திரைப்பட அனுபவங்களை பகிர்ந்திருக்கிறார். முதல் பாகத்தில் இருந்த வாசிப்பானுபவம் இந்நூலில் ஏனோ எனக்கு இல்லாமல் போனது. குறிப்பிட்ட படங்களில் நிகழ்ந்தேறிய சுவாரஸ்ய சம்பவங்களைப்பற்றி எழுதி இருப்பின் ஒருவேளை எனக்கு பிடித்திருக்கக்கூடும். ஆனால் சினிமா நடிப்பிலக்கணம் குறித்த சிவாஜியின் பார்வையே பெரும்பாலும் வியாபித்து இருப்பதால் வாசிப்பதில் அயற்சி ஏற்படுவதை தடுக்க இயலவில்லை.
எம்.ஜி.ஆர். பேட்டிகள் எனும் நூலில் சிவாஜியின் நடிப்பு/அரசியல் குறித்து எம்.ஜி.ஆர். மறைமுகமாக பகடி செய்திருப்பார். அதுபோலத்தான் சிவாஜியும். என்னதான் பொது இடங்களில் ஆரத்தழுவி நட்பு பாராட்டினாலும் உள்ளூர சிறு போட்டி/பொறாமைகள் இருவரிடையே இல்லாமலில்லை என்பதற்கு அவர்தம் நூல்களே சாட்சி.
...........................................................................
4 comments:
உள்ளூர சின்ன சின்ன போட்டிகள் இருந்ததினால் (இருந்தால்) தான் சுவாரசியமே...!
இவருக்கு அவரைப்போல நடிக்க முடியவில்லையே என்றும் அவருக்கு இப்படி மக்களிடம் ஒரு reach கிடைக்கவில்லையே என்றும் ஆதங்கம் இருக்கத்தானே செய்யும். எங்கேய்யா கிடைத்தது இந்த புத்தகம்?
நல்ல புத்தகம்.....
அறிமுகத்திற்கு நன்றி நண்பரே.....
நல்லதொரு புத்தக அறிமுகம். எனக்கும் முதல் பாகம் தந்த சுவாரஸ்யத்தை2ம் பாகம் தரவில்லை என்பதே நிஜம். ஸேம் பிளட்!
Post a Comment